அன்றைய தினம், மித்ரா வீட்டுக்கு உறவினர்கள் வந்திருந்தனர். அவர்களை உபசரித்துக் கொண்டே, பேச்சை துவக்கினாள்.
""நம்மூர் அதிகாரிகள் எப்படியெல்லாம் சம்பாதிக்கிறாங்க பாருக்கா,'' என கூறியபடி, சித்ராவுக்கு, இஞ்சி டீயும், பஜ்ஜியும் கொடுத்து உபசரித்தாள் மித்ரா.
""டாலர் சிட்டியாச்சே! பணம் கொட்டாமலா இருக்கும்? நீ, எந்த அதிகாரியை சொல்ற,'' என சித்ரா, விளக்கம் கேட்க, ""மாவு அரைக்கும் கடைகள் ஒவ்வொன்றும் மாசம், ஆயிரம் ரூபாய் கொடுக்கணும்னு உத்தரவு போட்டிருக்காங்க,'' என்றாள் மித்ரா.
""மாவு அரைக்கிறதுல என்ன லாபம் கெடைக்கும்; எதுக்கு லஞ்சம் கொடுக்கணும்?,'' என, சித்ரா மீண்டும் அப்பாவியாய் கேட்க, ""அக்கா, இதுக்கு முன்னாடி கோதுமை, மிளகாய் அரைச்சுக் கொடுத்தாங்க. இப்ப, பல கடைகள் ரேஷன் அரிசி அரைக்கற இடமா மாறிடுச்சு. ரேஷன் அரிசி வாங்கும் விவசாயிகள், மாட்டுக்கு தீவனமா கொடுக்க அரைக்கிறாங்க. தள்ளுவண்டிக்காரங்க, இரவு நேர கடை நடத்த அரைக்கிறாங்க. இது, "புட் செல்' அதிகாரிகளுக்கு நல்லாவே தெரியும். அதனால, மாவு அரைக்கும் கடை ஒவ்வொன்றிலும், மாசம், ஆயிரம் ரூபாய் வாங்கிடுறாங்க. கொடுக்காம "லேட்' பண்ணுனா, விசாரணைக்கு வரச்சொல்லி, அரை நாள் நிக்க வச்சிடுறாங்க. நிக்கற நேரத்துல மாவு அரைச்சு சம்பாதிச்சிடலாம்னு, மாசம் பிறந்தா பணத்தை கொடுத்திடுறாங்க,'' என்றாள் மித்ரா.
""நம்மூரிலும் அரசு பொருட்காட்சி நடத்த, தீவிரமா இடம் தேடுறாங்களாமே,'' என, அடுத்த கேள்வியை எழுப்பினாள் சித்ரா.
""ஆமாக்கா, வருமானம் கொழிக்குமே! ஒவ்வொரு துறை சார்பிலும் அரங்கு அமைப்பாங்க. பஜ்ஜி கடை போடுவாங்க; ராட்டினம் அமைப்பாங்க. எல்லா விஷயத்திலும் "கரன்சி' விளையாடுமே. அதனால, ஏகத்துக்கும் அக்கறை காட்டுறாங்க. போதுமான இடம் இல்லாததால, பள்ளிக்கூட மைதானங்களை தேர்வு செய்ய முயற்சிக்கிறாங்க.
""கொஞ்ச நாளைக்கு முன்னாடி, நஞ்சப்பா ஸ்கூலில் "வாக்கிங்' செல்வோரை கூப்பிட்டு, அரசு பொருட்காட்சி நடத்தப்போறோம்; ஒங்களிடம் ஆலோசனை கேக்கலை; தகவல் சொல்ல கூப்பிட்டேன்னு, கலெக்டர் சொல்லியிருக்கார். அதிர்ச்சியான அவர்கள், "சிட்டி மம்மி'யிடம் முறையிட்டிருக்காங்க. அவரோ, "அது மாநகராட்சி சொத்து; "கவுன்சில்' முடிவு செய்தால் மட்டுமே கொடுக்க முடியும்; அப்படியெல்லாம் விட மாட்டேன்,'னு ஆறுதல் சொல்லி அனுப்பியிருக்காங்க. இதேபோல், பல தரப்பிலும் எதிர்ப்பு கௌம்பியிருக்கு. அதுக்கப்புறம், சர்வதேச தரத்துல ஓடுதளம் அமைய உள்ள, அனுப்பர்பாளையம் அரசு பள்ளி மைதானத்தில் நடத்த ஆலோசனை செஞ்சாங்க. அந்த ஏரியாவுக்குள் அரசாங்க அதிகாரிகளின் கார்களை பார்த்ததும், ஜனங்க கொதிச்சிட்டாங்க,'' என்றாள் மித்ரா.
""அடடே, மக்கள் எந்தளவுக்கு விழிப்புணர்வோடு இருக்காங்க. இதே அனுப்பர்பாளையத்துல, மதுக்கடை வேணாம்னு போராட்டம் நடத்துனாங்க. மாற்று இடம் கிடைக்கலைன்னு அதிகாரிகள் நழுவுனாங்க. இப்ப, பாக்கெட்டை நிரப்புறதுக்காக, எந்தளவுக்கு முயற்சி பண்றாங்க பாரு,'' என, "டென்ஷன்' ஆனாள் சித்ரா.
""அக்கா, எல்லா துறையிலும் இப்படித்தான் இருக்காங்க,'' என, மித்ரா ஆறுதல் சொன்னாள்.
""அது சரி, கவுன்சிலர்களெல்லாம், "அப்செட்'டுல இருக்காங்களாமே,'' என, சித்ரா, மாநகராட்சி சப்ஜெக்ட்டுக்குள் நுழைந்தாள்.
""அதுவா, குப்பை அள்ளும் பணியை, ரெண்டு மண்டலத்துல மட்டும் தனியார் வசம் ஒப்படைச்சிருக்காங்க. அப்ப, சில கவுன்சிலர்கள் ஏகத்துக்கும் "சவுண்டு' விட்டாங்க; "கரன்சி'யை தள்ளியதும், அமைதியானாங்க. இப்ப, "கரன்சி' சப்ளையை "கட்' பண்ணிட்டாங்க. கவுன்சிலர்கள் புலம்பிக்கிட்டு இருக்காங்க,'' என்றாள் மித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE