என்பார்வை: தங்கமான உணவு... தவிடு!

Added : ஜூலை 10, 2015 | கருத்துகள் (5)
Advertisement
 என்பார்வை: தங்கமான உணவு... தவிடு!

உலகின் முக்கிய தானியங்களில் தலைசிறந்த ஒன்று நெல். நெல்லில் இருந்து அரிசியை பிரிக்கும் போது உமியும், தவிடும் கிடைக்கின்றன. உமி எரிபொருளாகிறது. தவிடு மிகச்சிறந்த உணவு. ஆனால் அதன் பயன் இன்னும் நமக்கு முழுமையாக தெரியவில்லை.
சமையல் எண்ணெய்க்கும் இணை உணவு தயாரிக்கவும் தவிடு அதிகளவில் பயன்படுகிறது. தவிடு உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்து இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது. தவிடு மற்றும் தவிட்டு எண்ணெயில் நம் உடலுக்கு தேவையான பைட்டோ கெமிக்கல்ஸ் அதிகளவு உள்ளது. இந்த வேதிப்பொருட்கள், உடலில் உள்ள நல்ல கொழுப்பை அதிகரிக்கின்றன. நார்ச்சத்து மிகுந்த தவிட்டை உணவில் சேர்த்தால் இருதய நோய்கள், சர்க்கரை, குடல் புற்றுநோய் மற்றும் குடல் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. இதன் நார்ச்சத்துகளில் அதிகளவிலான நீர் உறிஞ்சும் தன்மை இருப்பதால், மற்ற உணவுகளுடன் கலக்கும் போது மலச்சிக்கலை தவிர்க்கிறது; கொழுப்பை குறைக்கவல்ல ஆற்றலும் பெறுகிறது.
இளமை தரும் பொருள்
இதிலுள்ள 'டோக்கோ ட்ரை ஈனோல், டோக்கோ பிரால்' இரண்டும் விட்டமின் இ யை விட அதிக ஆற்றலுடன் நம் உடலில் செயல்படுகிறது. இதனால் தோல் பளபளப்புடன் சுருக்கங்கள் இன்றி இளமையுடன் திகழலாம். பல அழகு சாதனப் பொருட்களில் அரிசி தவிட்டில் இருந்து எடுக்கப்பட்ட 'டோக்கோ ட்ரை ஈனோலை' அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இவற்றை சத்துநிறைந்த இணை உணவாக மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்துகின்றனர். விட்டமின் மற்றும் அதிலுள்ள சத்துப்பொருட்கள் எளிதாக உடலால் உறிஞ்சப்படுகிறது. பலவிதமான நார்ச்சத்து இல்லாத உடனடி மற்றும் துரிதஉணவுகளில் சேர்க்கப்படுகிறது. தையாமின், ரைபோபிளேவின் எனப்படும் விட்டமின் பி சத்துகளும் தவிட்டில் உள்ளது.
ஆய்வில் நிரூபணம்
இத்தகைய ஊட்டச்சத்துக்கள் மிகுந்த அரிசி தவிட்டை பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நவீன முறையில் நெல்லில் இருந்து அரிசியை பிரிக்கும் போது உமி கலக்காத சுத்தமான தவிடு கிடைக்கின்றது. ஆனால் தவிட்டில் அதிகப்படியான லைப்பேஸ் என்ற நொதிப்பொருள், காற்றுபடும் போது உமியில் உள்ள கொழுப்பு சத்தில் வேதியியல் மாற்றத்தை ஏற்படுத்தி காரல் ஏற்படுத்துகிறது. இதனால் தவிட்டை நீண்டநாட்கள் சேமித்து வைக்க முடியாது.
தவிட்டை சுத்தம் செய்தபின் மிதமான சூட்டில் நிலைப்படுத்தும் போது லைப்பேஸ் செயலிழந்துவிடும். இதன்பின் தவிட்டை அதிகநாட்கள் வரை சேமித்து வைக்கலாம்.
மதுரை மனையியல் கல்லுாரியில் பல நெல் ரகங்களில் இருந்து இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஏடிடி 39 மற்றும் ஏடிடி 43 ரகங்களில் இருந்து எடுக்கப்பட்ட நிலைப்படுத்தப்பட்ட அரிசி தவிட்டில் சத்துக்களை பட்டியலிடலாம்.

சத்துக்களின் அளவு (100 கிராமில்)
ஏடிடி 39 ஏடிடி 43
நீர்ப்பதம் 10 9
புரதம் 13.50 15
கொழுப்பு 21 19.80
நார்ச்சத்து 9 8.40
மாவுச்சத்து 10 7.80

ஏடிடி 39 ரக தவிட்டின் புரதச்சத்தை தவிர மற்ற சத்துக்கள் ஏடிடி 43ஐ விட கூடுதலாக உள்ளது. இதன் ஒவ்வொரு ரகங்களில் இருந்து கிடைக்கும் தவிட்டின் சத்துக்கள் மாறுபடுவது கண்டறியப்பட்டது.
சுடச்சுட பேக்கரி பொருட்கள்
நவீன அரிசி ஆலையில் இருந்து புதிதாக பிரித்தெடுக்கப்பட்ட அரிசி தவிட்டை
சேகரித்து சுத்தம் செய்து
கல் மற்றும் உமியை நீக்கிவிட்டு மைக்ரோ ஓவனில் சூடுபடுத்தி காரல் தன்மை அடையாமல் நிலைப்படுத்தப்பட்டது. இதில் இருந்து நுாடுல்ஸ், பேக்கரி பொருட்கள், உடனடி உணவுகள் தயார் செய்யப்பட்டன.
20 முதல் 30 சதவீதம் வரை அரிசி தவிடு சேர்த்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயார் செய்யப்பட்டது. 30 சதவீதத்திற்கு மேல் சேர்க்கப்படும் போது உணவின் தன்மை, நிறம், தொடு உணர்வு, சுவை அனைத்தும் முற்றிலும் மாறுபடுகிறது. 30 சதவீதம் வரை மட்டுமே அரிசி தவிடு கலந்த உணவு தயாரிக்கப்பட்டது.
அரிசி தவிடு கலந்த உணவு வகைகளின் பண்பு, சத்துப்பொருட்களின் அளவு, சேமிக்கப்படும் நாட்களில் ஏற்படும் மாற்றங்கள் கண்டறியப்பட்டன.
தவிடு கலக்கப்பட்ட நுாடுல்ஸ், பிரட், பன், பிஸ்கெட், ரஸ்க், உடனடி உணவுகளில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்துகள் அதிகமானது நிரூபிக்கப்பட்டது. உணவாக பயன்படுத்துவதன் மூலம் தவிடு வீணாவதும் தடுக்கப்படுகிறது. இதை கல்லுாரியில் தயாரித்து நிரூபித்துள்ளோம்.
சத்தான உணவுகளுக்கு முக்கியத்துவம் தரும் காலகட்டத்தில் இருக்கிறோம். தவிட்டை பயன்படுத்துவதன் மூலம் மக்களின் ஆரோக்கியமும் அதிகரிக்கும். விவசாயிகளின் வாழ்க்கைத்தரமும் உயரும்.
-பா.சு. கீதா, உதவி பேராசிரியை,மனையியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை.
96553 27328.

வாசகர்கள் பார்வை

தாலாட்ட நேரமில்லை
என் பார்வையில் வெளியான 'ஏட்டில் முடங்கும் தாலாட்டு' கட்டுரை படித்தேன். நவீன விஞ்ஞான உலகத்தில் நகரம் முதல் கிராமம் வரை குழந்தைகள் உள்ள வீடுகளில் இன்று தாலாட்டைக் கேட்கவே முடியவில்லை. அவசரகதியில் ஓடிக் கொண்டிருக்கும் தாய்மார்களுக்கு தாலாட்ட நேரம் இல்லை. தாலாட்டு பாடவும் தெரியவில்லை.
குழந்தைகளுக்கு நல்ல கருத்துக்களை சொல்லும் வழிகாட்டி தாலாட்டு என்பதை கட்டுரை உணர்த்தியது.- வி.எஸ்.ராமு, செம்பட்டி.

தமிழ் தொண்டு
என் பார்வையில் வெளியான 'பாரதிதாசனும் தமிழிசையும்' கட்டுரை இனிமை. தமிழின் பெருமைகளை
அழகாக படம் பிடித்துக் காட்டியது. தாலாட்டு, ஆன்மிகம், பகுத்தறிவு குறித்து கட்டுரையாளர் சுரேஷ்சிவன் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். பாரதி, பாரதிதாசன் தமிழுக்கு ஆற்றிய தொண்டு பற்றி படித்த போது மனதுக்கு மகிழ்சியை தந்தது. எங்களின் இதயத்தை வருடிச் செல்லும் தென்றல் என் பார்வைக்கு நன்றி.
- சே.மணிகண்டன், பெரியகுளம்.

உணவு அறிவுரை
என் பார்வையில் வந்த 'காலையில் வயிறு காலியா' கட்டுரை அருமை. காலையில் மாணவர்கள் சாப்பிடாமல் சென்றால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டியது கட்டுரை. காலை, மதியம், இரவு சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்தும் பட்டியலிட்டது
பயனுள்ளதாக இருந்தது. வயிற்றை காயவிட்டால் உடல் ஆரோக்கியம் கெடும் என்பதை அறிவுரையாக சொன்ன கட்டுரையாளருக்கு வாழ்த்துக்கள்.
- ச.கண்ணன், வத்தலக்குண்டு.

என் பார்வை நுாலகம்
என் பார்வையில் வெளிவரும் கட்டுரைகள் அனைத்தும் ஒரு நுாலகமாக நம் வீட்டிற்கு வந்து சேர்கிறது. தேடி, தேடி படிக்க வேண்டிய விஷயங்களை எல்லாம் தேடி கொண்டு வந்து வாசகர்களை
நாடி வருகிறது என் பார்வை. அற்புதமான கட்டுரைகளை தரும் என் பார்வை
மேலும் தொடர்ந்து பல தகவல்களை தாங்கி வர வாழ்த்துக்கள்.- எம்.வீ.மதுரைச்சாமி, மதுரை.

ஊட்டி வளர்த்த பாட்டு

என் பார்வையில் வெளியான 'ஏட்டில் முடங்கும் தாலாட்டு' படித்தேன். எங்கே போயின அவை என வருந்தினேன். ஒரு தாலாட்டு பாடலிலேயே குழந்தை வளர்ப்பு, உறவு முறை, இல்லற வாழ்வு என எல்லாவற்றையும் சொல்லிவிடலாம். உணவோடு நல்ல விஷயங்களையும் ஊட்டி வளர்த்த தாலாட்டு முடங்கி போனது சரியல்ல. தாய்மார்கள்
மீண்டு தாலாட்டு பாடி குழந்தைகளை வளர்க்க வேண்டும்.- கே.வி.செண்பகவள்ளி, காரைக்குடி.

பெற்றோர்களின் கடமை

என் பார்வையில் வெளியான 'காலையில் வயிறு காலியா' கட்டுரை படித்தேன்.
இன்றைய அவசர யுகத்தில் பள்ளி மாணவர்கள் பலர் காலையில் சாப்பிடாமல் செல்கின்றனர். இதனால் ஏற்படும் உடல் ஆரோக்கிய குறைபாடு பற்றி உணர்த்த வேண்டிய கடமை பெற்றோர்களுக்கு இருக்கிறது. வயிறு காலியாக இருப்பதால் நோய்கள் உண்டாகும்
என்பதையும் எடுத்துரைத்தார் டாக்டர் கணேசன். மாணவர்கள் இனியாவது இந்த ஆலோசனையை பின்பற்றிட வேண்டும்.
- ப.அண்ணாமலை, ஒட்டன்சத்திரம்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Sinniah - toronto,கனடா
30-ஆக-201507:54:40 IST Report Abuse
Amirthalingam Sinniah தான் தின்னி பிள்ளை வாழ்வாள் , தவிடுதின்னி தீனி வாழ்வாள். தமிழ் பழமொழி.
Rate this:
Share this comment
Cancel
Mohamed Fa - Chengalpattu,இந்தியா
22-ஆக-201501:24:17 IST Report Abuse
Mohamed Fa அருமையான கட்டுரை. ஆனால் எப்படி உணவாக பயன்படுத்துவது என்பதையும் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். நன்றி
Rate this:
Share this comment
Cancel
poongothaikannammal - chennai 61,இந்தியா
15-ஜூலை-201519:59:48 IST Report Abuse
poongothaikannammal கால்நடைகளுக்கான இந்த தவிட்டைக் கூட மனிதன் விட்டு வைக்கவில்லை. பஹாசுரர்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X