தலை காக்கும் தர்மம்: அப்சல்,எழுத்தாளர், சிந்தனையாளர்

Updated : ஜூலை 11, 2015 | Added : ஜூலை 11, 2015 | கருத்துகள் (8)
Share
Advertisement
சந்தோஷமாகத் தான் இருக்கிறது. 'டூ - வீலர்' ஓட்டும் பெரும்பாலானோர், 'ஹெல்மெட்' அணிந்து கொண்டு செல்வதை பார்க்க. காலுக்கு செருப்பு அவசியம் என்பதைப் போல, தலைக்கு ஹெல்மெட் முக்கியம் என்பது, நம்மைப் போன்ற பாமரர்களுக்கு தாமதமாகத்தான் புரிகிறது. ஆனால், இறுகக் கண்ணாடிகளை மூடிய கார்களில் பவனி வருவோருக்கு அது எப்பவோ தெரிந்திருக்கிறது. அவர்கள் போதையில் வாகனம் ஓட்டலாம், இரவு
தலை காக்கும் தர்மம்:  அப்சல்,எழுத்தாளர், சிந்தனையாளர்

சந்தோஷமாகத் தான் இருக்கிறது. 'டூ - வீலர்' ஓட்டும் பெரும்பாலானோர், 'ஹெல்மெட்' அணிந்து கொண்டு செல்வதை பார்க்க. காலுக்கு செருப்பு அவசியம் என்பதைப் போல, தலைக்கு ஹெல்மெட் முக்கியம் என்பது, நம்மைப் போன்ற பாமரர்களுக்கு தாமதமாகத்தான் புரிகிறது.

ஆனால், இறுகக் கண்ணாடிகளை மூடிய கார்களில் பவனி வருவோருக்கு அது எப்பவோ தெரிந்திருக்கிறது. அவர்கள் போதையில் வாகனம் ஓட்டலாம், இரவு பார்ட்டிகளுக்கு
சென்று விட்டு தாமதமாக திரும்பும்போது பாதசாரிகள் மீதோ, டூ - வீலர் ஓட்டுவோர் மீதோ தன் வாகனத்தால் இடித்து விபத்து ஏற்பட்டால், அது அவர்கள் தவறல்ல; ஹெல்மெட் போடாமல், டூ - வீலர் ஓட்டுவோரின் தவறு தான் என, வாதிடலாம். அந்த விதத்தில் தங்களை பாதுகாத்துக் கொள்ள, பாதசாரிகளும் கூடிய சீக்கிரம் ஹெல்மெட் அணிவது அவசியம் என்ற நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.சமீபத்தில், சென்னை ஆலந்துார் அருகே, இரண்டு இளைஞர்கள் ஹெல்மெட் அணியாமல், 'பைக் ரேஸ்' போனதால் விபத்தில் இறந்தனர். புழல் அருகே, மேம்பாலத்தில் டூ - வீலர் மோதி, மேலிருந்து கீழே விழுந்த இளைஞர் பரிதாபமாக இறந்து போனார். ஹெல்மெட்டின் அவசியத்தை இவை உணர்த்தினாலும், இளைஞர் கள் டூ - வீலரை ராக்கெட் போலவே நினைத்து செலுத்தும் வெறியை கைவிட வேண்டும்.

சாலை விதிகளை மீறி வாகனங்களை வேகமாக ஓட்டுவது, ஒருவரை ஒருவர் முந்திக் கொள்ள போட்டி போடுவது; போதையில் வாகனங்கள் ஓட்டுவது; மொபைல் போனில் பேசியபடி வாகனங்களை ஓட்டுவது என, ஒவ்வொருவரும் தம் உயிரைப் பற்றிய கவலையின்றி, மற்றவர்களுடைய உயிரையும் பயமுறுத்தி வாழும் மனோபாவத்தை கைவிட வேண்டும்.
ரயில், பேருந்து நிலையங்களில், 'டூ - வீலர் பார்க்கிங்' குத்தகைக்கு எடுத்துள்ள குத்தகைத்தாரர்கள், ஹெல்மெட் வைப்பதற்கு தனி கட்டணம் வசூலிப்பதை நிறுத்தினால், அது
ஹெல்மெட் அணிவோருக்கு உதவி யாக இருக்கும். மேலும், காசை தண்டம் அழ வேண்டியதிருக்கிறது என்று, அவர்கள் மன உளைச்சல் இல்லாமல் ஹெல்மெட்
அணிவர்.ஹெல்மெட் கட்டாயம் என்ற சட்டம், இதற்கு முன் வந்து கொஞ்ச நாளில் மறைந்து போனது. ஆட்டோ மீட்டர் கட்டணம் மாதிரி தான். ஆனால், இந்த முறை சென்னை உயர் நீதிமன்றம், 'கட்டாயமாக ஹெல்மெட் அணிந்தே ஆக வேண்டும்; இல்லாவிடில் லைசென்சை பறிமுதல் செய்யுங்க' என்று உறுதியாக சொல்லி விட்டது.

தமிழக அரசும் இந்த சட்டத்தை செயல்முறைப்படுத்த மிகவும் தீவிரமாக கவனம் செலுத்துவது நல்ல விஷயம் தான். சாலை விபத்துகளில் மரணம் என்பது, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம். டூ - வீலர் ஓட்டுவோர் தான் ஹெல்மெட் அணிந்து இருக்கின்றனரே என்ற தைரியத்தில் லாரி, பஸ், கார் ஓட்டுவோர் தன்னிச்சையாக வாகனங்களை ஓட்டுவதற்கு அது வழிவகுக்கக் கூடாது. அவர்களுக்கும் தங்கள் கடமைகளும், பொறுப்புகளும் புரியும் விதத்தில் அரசு, விதிகளை ஏற்படுத்த வேண்டும்.தன் உயிரைப் போல, இன்னொரு உயிரைப் பற்றிய மதிப்பு நமக்கு வரவேண்டும். ஏனென்றால், ஒரு உயிர் இழப்பால் அந்த குடும்பமே நிலை குலைந்து விடுகிறது.

அதேபோல, வாகனம் ஓட்டுபவர் விபத்துகளை உருவாக்கி, அது மரணங்களை ஏற்படுத்தினால், அதை கொலையாகத் தான் கருத வேண்டும். வாழ்நாள் முழுக்க அவர் வாகனம் ஓட்டக் கூடாது. அது மட்டுமின்றி கடுமையான சிறைத் தண்டனையும் வழங்க வேண்டும். மும்பை பெண் வழக்கறிஞர் ஒருவர், சென்ற மாதம் குடிபோதையில் கார் ஓட்டியதில் இருவர் கொல்லப்பட்டனர். அந்த வழக்கறிஞர் இப்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். சட்ட அறிவை பெற்ற வழக்கறிஞர், சமூக அக்கறை இருக்கவேண்டிய பெரிய மனிதர்கள், மற்றவர்களின் உயிரை அநியாயமாக பறிக்கும் இதுபோன்ற விபத்துகளை, கொலை வழக்காக கருதி, அதற்கான கடுமையான தண்டனை வழங்கினால் தவிர, இந்த அக்கிரமத்திற்கு ஒரு முடிவு கிடைக்காது.

ஆளுக்கு ஒரு நீதி என்ற பாரபட்சம் இருக்கக் கூடாது. 15 ஆண்டுகளுக்கு முன், பிரபல இந்தி நடிகர் சல்மான் கான், குடிபோதையில் கார் ஓட்டி, சாலையோரத்தில் படுத்திருந்த, பல ஏழைகளின் உயிரை பறித்தார். சினிமாவில், ஏழைகளுக்காக போராடும் இந்த ஹீரோக்களின் நிஜ வாழ்க்கை எத்தனை எதிர்மறையாக இருக்கிறது பாருங்கள். இவர்களுடைய அந்தஸ்து, செல்வாக்கு, தொடர்பு எல்லை இதைப் பற்றி கவலைப்படாமல் சட்டம் இவர்களை தண்டித்தால் தான். எல்லாருக்கும் பயமும், பொறுப்பும் கூடும். இல்லையெனில், விபத்துக்கு காரணமாக இருப்போர், 'நான் யார் தெரியுமா?' என்று சொல்லி தப்பித்து செல்வர். 'நீ யார் என்று உனக்கே தெரியாவிட்டால், என்னிடம் ஏன் கேட்கிறாய்' என்று திருப்பி அடித்தால் தான், அந்த குற்றங்கள் குறையும்.

வெளிநாடுகளில் எல்லாம் சைக்கிளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, பெரிய பணக்காரர்களும் இப்போது சைக்கிளில் செல்ல ஆரம்பித்து விட்டனர்; உடல் நலத்திற்கும் நல்லது. பெட்ரோல் செலவும் மிச்சம். சுற்றுச்சூழலுக்கும் மாசு கிடையாது. காலமெல்லாம் பஸ் நெரிசலில் பயணம் செய்யும் ஒரு தந்தை, சமயங்களில் நடந்தே செல்லும் அந்த தந்தை, தன் பிள்ளையாவது டூ - வீலரில் செல்லட்டும் என்று எத்தனை ஆசையுடன் வண்டி வாங்கிக் கொடுக்கிறார். இளைஞர்கள் அதைப் பற்றி கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். குடித்து விட்டு வண்டி ஓட்டுவது, மொபைல் போனில் பேசியபடி வண்டி ஓட்டுவது, இதெல்லாம் ஆபத்து என்பதை உணர வேண்டும். நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மக்கள் தான் டூ - வீலர் ஓட்டுகின்றனர். அவர்களின் உயிரை பாதுகாக்கவும், விபத்துகளில் காயம் ஏற்படாமல் இருக்கவும், ஹெல்மெட் அவசியம் தான். அதை அவர்களும் உணர்ந்து ஹெல்மெட் அணிய ஆரம்பித்து விட்டனர்.ஆனால், அந்த மக்களுக்கு தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வழிகாட்டும் நாம்,
அதேசமயம் விதிகளை மீறி, வாகனங்களை ஓட்டி விபத்துகளை உருவாக்கும் மேல்தட்டு மக்களுக்கு என்ன செய்யப் போகிறோம்?
இ - மெயில்: affu16.in@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
lakshmanakumar - madurai,இந்தியா
15-ஜூலை-201516:42:19 IST Report Abuse
lakshmanakumar ஹெல்மெட் போடவில்லை என்றால் உயிர் போய்விடும் என கவலை படும் நீதிபதி, டாஸ்மார்க் மூட அரசு உத்தரவை மீற முடியாது என கூற வெக்க பட வேண்டும் . ஹெல்மெட் போடுவதால் வேர்த்து நீர் கோர்த்து தலைவலி தினம் ஒரு மருந்து எடுத்து கொள்கிறேன். அதனால் என் கிட்னி பாதிப்பு ஆகிறது. எதனால் என் உயிர் போனால் பரவாயில்லையா ? நீதிபதி தைரியும் இருந்தால் ஹெல்மெட் போடாமல் வண்டி ஒட்டி இறந்தால் இன்சூரன்ஸ் கிடையாது என அறிவிக்க தைரியும் இருக்கிறதா? இது கவர்மென்ட்க்கு லாபம் தானே ?
Rate this:
Cancel
vinojan - tuticorin,இந்தியா
14-ஜூலை-201513:46:04 IST Report Abuse
vinojan அனைத்து சட்டங்களும் விவாதத்துக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். மேலும் அதை கட்டாயம் ஆக்கும் முன் அரசு நிறுவன அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு நடைமுறை படுத்தப்பட்ட பின்னரே பொது மக்களுக்கு அமல் படுத்த வேண்டும்.
Rate this:
Cancel
Chandrasekaran Balasubramaniam - ERODE,இந்தியா
14-ஜூலை-201512:22:45 IST Report Abuse
Chandrasekaran Balasubramaniam தலைக்கவசம் கட்டாய சட்டத்தை அமுல்படுத்த அரசுக்கு உத்தரவு வழங்க ருபாய் 2 கோடி பெற்றுக்கொண்டதாக பத்திரிக்கையில் செய்தி வந்ததை இன்றைய நாளிதழ்களில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது இதனை பொதுமக்களாகிய நாங்கள் வரவேற்கிறோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X