தெற்கில் ஓர் இமயம் :இன்று காமராஜர் பிறந்த தினம் | Dinamalar

தெற்கில் ஓர் இமயம் :இன்று காமராஜர் பிறந்த தினம்

Added : ஜூலை 15, 2015 | கருத்துகள் (26)
 தெற்கில் ஓர் இமயம் :இன்று காமராஜர் பிறந்த தினம்


'தெற்கில் ஓர் இமயம் இல்லையே என்பதால் பெருந்தலைவர் காமராஜரை
விருதுபட்டியில் பிறக்கவைத்தாள் இணையில்லா பாரதத்தாய்'
தெலுங்குக் கவிஞர் வேணு கோபால்ரெட்டி காமராஜரின் பிறப்பை பற்றிக் கூறும் ஒரு கவிதையின் சாராம்சம் இது...பிரம்மா ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்தான் மன்மதன். இந்தக் குழந்தைக்கு பேரழகைத் தருகிறேன் என்றான். தேவையில்லை என்றார் பிரம்மா. லட்சுமி வந்து பெருஞ்செல்வத்தை தருகிறேன் என்றாள். தேவையில்லை என்றார் பிரம்மா. இவ்வளவும் இல்லாமல் பிறகு எதற்காக இந்தக்குழந்தையை உருவாக்குகிறீர்கள்? என்று கேட்டபோது, பேரழகும் இல்லாமல், பெருஞ்செல்வமும் இல்லாமல், பெரிய கல்விச் செல்வமும் இல்லாமல் ஒருவனால் உலகப்புகழ்பெற முடியும் என்று காட்டுவதற்கு இந்தக் குழந்தையை உருவாக்குகிறேன் என்றாராம். அந்தக்குழந்தை தான் விருதுபட்டியில் காமராஜராகப் பிறந்ததாம்.
இறைவன் வானத்திலிருந்து பூமிக்கு அவ்வப்போது சில கடிதங்கள் எழுதுவாராம். அந்த கடிதங்களே மகான்களாகவும், மாபெரும் தலைவர்களாகவும் பிறக்கிறார்கள். அப்படி ஒரு கடிதம் விருதுபட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
1903 ஜூலை 15ல் குமாரசாமி நாடார், சிவகாமி அம்மையார்தம்பதிகள் பத்திரமாக டெலிவரி செய்தார்கள். கழுத்தில் கயிறு, கையில் காப்பு, தலையில் குடுமி, இப்படி காட்சியளித்த சிறுவன் காமாட்சி என்றும் ராஜா என்றும் அழைக்கப்பட்டு பிறகு காமராஜ் என்ற பெயர் நிலைத்தது. தடபுடலாக பள்ளியில் சேர்க்கப்பட்டாலும், ஆறாம் வகுப்போடு படிப்பு நிறுத்தப்பட்டது. திருடனைப் பிடித்த தீரர் விருதுபட்டியில் திருடன் ஒருவன் கைவரிசையைக் காட்டிக் கொண்டிருந்தான். பெரியவர்களே பயந்து நடுங்கி இருட்டத் துவங்கியதும் வீட்டைப் பூட்டி படுக்கத் தொடங்கிவிடுவர். சிறுவனாக இருந்த காமராஜர் துணிச்சலோடு அவனைப் பிடிக்கத் திட்டம் போட்டார். நண்பர்களை சேர்த்துக் கொண்டார். முக்கிய வீதியில் இருட்டில் பதுங்கியிருந்தார்கள். வீதியின் குறுக்கே கயிறை கட்டி இருபுறமும் பிடித்துக் கொண்டிருந்தார்கள். ஓடிவந்த திருடன் கயிறு தடுக்கி விழுந்தான். கண்ணில் மிளகாய் பொடி துாவப்பட்டது. அகப்பட்ட அவனையும் குண்டுக்கட்டாகக் கட்டிவிட்டார்கள். காமராஜர் திட்டப்படியே எல்லாம் நடந்தது. பெரியவர்கள் பாராட்டினார்கள்.
தீண்டாமையை எதித்த வீரர் விருதுநகர் மாரியம்மன் கோவில் தீச்சட்டி விழாவில் தீச்சட்டி எடுத்த குமரன் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவன் என்று சொல்லி கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்தனர். காமராஜர் கொதித்தெழுந்தார். அன்று மாலை வீடு வீடாக பால் கொண்டு கொடுத்தான் அந்த சிறுவன். சிறுவன் தந்த பாலால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யலாம், ஆனால் அவன் மட்டும் கோயிலுக்குள் நுழையக் கூடாதா? என்று கேட்டு மேல் ஜாதிக்காரர்களின் கண்களை திறந்தார்.
அவர் முதலமைச்சர் ஆனதும் தன்னுடைய அமைச்சரவையில் அறநிலையத்துறையை யாருக்கு கொடுத்தார் தெரியுமா? தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பரமேஸ்வரன் என்பவருக்குக் கொடுத்தார். கோயிலுக்குள் நுழையக் கூடாது என்று சொன்னவர்கள் எல்லாம் இப்போது
கும்ப மரியாதை கொடுத்து அமைச்சர் பரமேஸ்வரனை அழைத்துப் போனார்கள். இதுதான் மவுனப்புரட்சி. அரசியல் பிரவேசம் காந்தியத்தால் கவரப்பட்டு பதினாறு வயதில் காங்கிரசில் இணைந்தார். 'காந்தி உண்டியல்' தயார் செய்து கட்சிக்காக பணம் சேர்த்தார். ஒரு காசைக் கூட வீணாக்காமல் கட்சி பணிகளுக்குச் செலவிட்டார். தலைவர்களை அழைத்து பேச வைத்தார். அவரும் தொண்டர் மத்தியில் உயர்ந்தார்.
நாட்டு விடுதலைக்காக போராடுவதும் சிறை செல்வதுமே அவரது வாழ்க்கையானது. உப்பு சத்தியாகிரகம் தமிழ் நாட்டில் வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் நடந்தது. அதில் தீவிரம் காட்டியதால் காமராஜருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. 1932ல் சட்ட மறுப்பு இயக்கம், ஓராண்டு சிறைவாசம். வைக்கம் போராட்டத்திலும் கலந்து கொண்டார். 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டதற்காக கைதாகி ஓராண்டு சிறை தண்டனை அனுபவித்தார். இப்படி ஏறக்குறைய 3000 நாட்கள் சிறையில் வாடினார்.
முதல்வரா முதல்வர் முதல்வர் பதவியை அவர் நாடிச் செல்லவில்லை. பதவி அவரை நாடிவந்தது. எளிமையான, நேர்மையான நியாயமான ஆட்சி நடத்தியவர். சிபாரிசுகளை துாக்கி எறிந்தவர். அவரது தங்கை மகன் கனகவேல், மருத்துவக் கல்லுாரிக்கு விண்ணப்பித்து இருப்பதாகவும், அவர் சிபாரிசு செய்தால் இடம் கிடைக்கும் என்றும் கெஞ்சினார். சிபாரிசு செய்ய காமராஜர் மறுத்துவிட்டார். தகுதி இருந்தால் கிடைக்கும் என்று கூறி அனுப்பிவிட்டார்.
அனைவருக்கும் கல்வி வழங்கல் என்பதை ஒரு சபதம் போலவே ஏற்றார் அவர். '௨௦௦ ஆண்டு காலத்தில் பெற்ற கல்வி வளர்ச்சிக்கு மேலான வளர்ச்சியை எட்டாண்டு காலத்தில் வழங்கியவர் காமராஜர்' என்று அறிஞர் நெ.து.சுந்தரவடிவேலு கூறுகிறார்.
காமராஜர் காலத்தில் மட்டும் தோன்றிய பள்ளிகள் 6 ஆயிரம். 300 பேர் ஜனத்தொகை கொண்ட ஒரு ஊருக்கு ஒரு பள்ளி என்று முறையில் திட்டங்கள் நிறைவேறின. 4 லட்சமாக இருந்த கற்றோர் எண்ணிக்கை 13 லட்சமாக உயர்ந்தது. இலவச கல்வித் திட்டமும், மதிய உணவுத் திட்டமும் நடைமுறைக்கு வந்தன.
தொழில் வளம் காமராஜர் காலத்தில் தான் இன்று நாம் கண்டு வியக்கும் பல தொழிற்சாலைகளும் உருவாயின. செக்கோஸ்லேவியா நாட்டிலிருந்து வந்த நிபுணர் குழு தமிழகத்தில் மின் கொதிகலன் ஆலையை உருவாக்க வேண்டும், அதற்கு ௧௨ தகுதிகள் கொண்ட ஓர் இடம் வேண்டும் என்றார்கள். தமிழகத்தை ஆராய்ந்த குழு அப்படியொரு இடம் இல்லை என்று காமராஜரிடம் சொல்லிவிட்டார்கள். கொஞ்சம் சிந்தித்த பிறகு, 'திருச்சிக்கு அருகிலுள்ள திருவெறும்பூர் பகுதியை பார்த்தீர்களா' என்று காமராஜர் கேட்டார். இல்லை என்றார்கள். கடைசியில் காமராஜர் சொன்ன அந்த இடமே பொருத்தமாக அமைந்தது. அங்கு பெல் நிறுவனம் உருவானது. இப்படி பூகோளத்தை தன் மூளையில் வைத்திருந்தவர் காமராஜர்.
பெற்ற தாய்க்கு கூட மாதம் 120 ரூபாய் தான் அனுப்பி வைத்தாராம். உதவி செய்ய பலர் முன்வந்த போது மறுத்து விட்டாராம். காமராஜருக்கு உதவியாளராகவும் சமையல்காரராகவும் இருந்த வைரவன், 'ரேஷன் கடை அரிசியை தான் தலைவர் சாப்பிடுவார். லேசாக நாற்றம் அடிக்கிறதே என்று சொன்னால் சேமிச்சு வச்சா அப்படித்தான் இருக்கும். மக்களே அதை சாப்பிடும்போது நாம்மட்டும் உசத்தியா? என்று கேட்பார்,'' என்கிறார். காமராஜர் காலமானபோது அவரது வீட்டை வருமான அதிகாரிகள் சோதனையிட்டபோது கிடைத்தவை, ஐந்து கதர் வேட்டிகள், சட்டைகள் மற்றும் துண்டுகள்.
காந்தியத்தோடு கலந்த காந்தியம்
காந்தியடிகளைப் போலவே எளிமையாக, அகிம்சை உணர்வோடு தியாக உள்ளத்தோடு நாட்டுக்கே தன்னை அர்பணித்த உணர்வோடு காந்திய சீடராக வாழ்ந்த காமராஜர், காந்தியடிகள் பிறந்த அக்டோபர் இரண்டாம் தேதியிலேயே காந்தியத்தோடு கலந்து அமரராகிவிட்டார். அவர் வாழ்ந்த வாடகை வீட்டை வீட்டுக்குச் சொந்தக்காரர் எடுத்துக் கொண்டார். பெருந்தலைவருக்கு கொடுத்திருந்த காரை டி.வி.எஸ்., நிறுவனம் எடுத்துக் கொண்டது. அவர் உடலை இந்த மண் எடுத்துக் கொண்டது. அவரது புகழை இந்த உலகம் எடுத்துக் கொண்டது.- முனைவர். இளசை சுந்தரம்,
மதுரை வானொலி நிலைய முன்னாள் இயக்குனர்.98430 62817

வாசகர்கள் பார்வை
தவிடு மகத்துவம்
என் பார்வையில் வந்த 'தங்கமான உணவு தவிடு' கட்டுரை படித்தேன். சிறு வயதில் ஏர் உழும் காளைகளுக்கு கற்களில் செய்த தொட்டிகளில் நீர் நிரப்பி அதில் தவிட்டை கொட்டி கலக்கி குடிக்க கொடுப்பவர். கோழிகளுக்கும் தவிடு தான் உணவாக கொடுக்கப்படும். இப்படிப்பட்ட சத்துள்ள தவிடு மனிதனுக்கும் நல்லது என்பதை குறிப்பிட்டு, உணவின் மகத்துவத்தை வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி விட்டீர்கள்.
- வி. கார்மேகம், தேவகோட்டை.
சுதந்திர சிந்தனை
என் பார்வையில் வெளியான
'மாணவர்களுக்கு நம்பிக்கை தாருங்கள்' கட்டுரை படித்தேன். சிறந்த கல்வி என்பது மாணவர்களுக்குக் கொடுக்கும்
நம்பிக்கையே என்று கூறியிருப்பது
யதார்த்தமான உண்மை. இன்றையக்
கல்வி முறை மாணவர்களின் அறிவைத் சோதிக்கிறது. மாணவர்களின்
சுதந்திரத்தைப் பறிப்பது போல உள்ளது. அவர்களுக்கு கல்வி வலுக்கட்டாயமாகத் திணிக்கிப்படுகிறது. மாணவர்களை
சுதந்திரமாக சிந்திக்க விட வேண்டும்
என்பதை வலியுறுத்தியது கட்டுரை.
- ரா.ரங்கசாமி, வடுகப்பட்டி.
சத்துள்ள தகவல்கள்
என் பார்வையில் வெளியான
'தங்கமான உணவு தவிடு' கட்டுரை படித்தேன். தவிட்டில் இவ்வளவு சத்துக்கள் உள்ளதா என்பதை படித்து வியந்தேன். தவிடு உற்பத்தியில் நம் நாடு 2ம் இடத்தில் உள்ளது என்பதையும் அறிந்து மகிழ்ந்தேன். அருமையான சத்துள்ள
தகவல்களை வாசகர்களுக்கு கொண்டு வந்து சேர்த்த என் பார்வையில் இது
போல பல கட்டுரைகள் வெளிவர
வாழ்த்துக்கள்.
- கே.வி.செண்பகவல்லி, காரைக்குடி.
ஆரோக்கிய கல்வி
என் பார்வையில் வந்த 'மாணவர்களுக்கு நம்பிக்கை தாருங்கள்' கட்டுரை படித்தேன். குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்று சொல்லி மதிப்பெண்களே
குறிக்கோளாக மாற்றப்பட்டது இன்றைய மாணவர்கள் பொதி சுமக்கும் கழுதையாகவே மாற்றப்பட்டுள்ளனர்.
விளையாட்டு என்பத இல்லாமல் போனது.
பள்ளி சென்றாலும், வீட்டிற்கு
வந்தாலும் 'படி, படி' என்ற வார்த்தைகள் தான் தொடர்ந்து ஒலித்து கொண்டி
ருக்கின்றன. இந்நிலையை மாற்றி
மாணவர்களுக்கு ஆரோக்கிய கல்வியை அளிக்க வேண்டும் என்பதை உணர்த்தியது கட்டுரை.
- எஸ்.பி.சத்யநாராயணன், மதுரை.
அற்புத கருத்துக்கள்
என் பார்வை என்ற பகுதி வெளியான
நாள் முதல் இன்று வரை பல நல்ல
தகவல்களை சமூகத்திற்கு வழங்கி
வருகிறது. சிந்தித்துப் படிக்க வேண்டிய அற்புத கருத்துக்களை வெளியிடுவதில் என் பார்வைக்கு நிகர் என் பார்வை தான்.
- எஸ்.கவிதா, விருதுநகர்.
மலரட்டும் என் பார்வை
அழகான பார்வையாக தினமலர்
நாளிதழில் தினம் மலரும் என்
பார்வை ஒரு பொக்கிஷம். எத்தனை
கட்டுரைகள் அதில் தான் எத்தனை
தகவல்கள் எல்லாம் காலத்தால் போற்றி பாதுகாக்க வேண்டிய ஒன்று. திறமையான எழுத்தாளர்களை உருவாக்கும் ஒரு சேவையை செய்து வருகிறது
என் பார்வை. இன்னும் பல பயனுள்ள
தகவல்களை தாங்கி வாசகர்களை
மகிழ்விக்க மலரட்டும் என் பார்வை.
- கே. சுப்புராம், திண்டுக்கல்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X