அன்பு மகளிர் சங்கம்... அள்ளிக் கொடுத்தது தங்கம்!| Dinamalar

அன்பு மகளிர் சங்கம்... அள்ளிக் கொடுத்தது தங்கம்!

Added : ஜூலை 15, 2015
Share
வடிவேலுவின் 'எவர் க்ரீன்' காமெடியைப் பார்த்துக் கொண்டு, தனியாக சிரித்துக் கொண்டிருந்தாள் சித்ரா.அழைப்பு மணி சப்தம் கேட்டு, கதவைத் திறந்தால்...வாசலில் மித்ரா.''ஹேய்...மித்து! என்னடி...ஃபிரண்ட்ஸ்சோட, துாத்துக்குடி, கன்னியாகுமரி டூர் போறேன்னு சொல்லிட்டு இருந்தியே. போகலையா?'' என்று ஆச்சரியத்தோடு வரவேற்றாள் சித்ரா.''இல்லக்கா...இன்னும் ரெண்டு ஃபிரண்ட்ஸ் வர்றாங்க.
அன்பு மகளிர் சங்கம்... அள்ளிக் கொடுத்தது தங்கம்!

வடிவேலுவின் 'எவர் க்ரீன்' காமெடியைப் பார்த்துக் கொண்டு, தனியாக சிரித்துக் கொண்டிருந்தாள் சித்ரா.
அழைப்பு மணி சப்தம் கேட்டு, கதவைத் திறந்தால்...வாசலில் மித்ரா.
''ஹேய்...மித்து! என்னடி...ஃபிரண்ட்ஸ்சோட, துாத்துக்குடி, கன்னியாகுமரி டூர் போறேன்னு சொல்லிட்டு இருந்தியே. போகலையா?'' என்று ஆச்சரியத்தோடு வரவேற்றாள் சித்ரா.
''இல்லக்கா...இன்னும் ரெண்டு ஃபிரண்ட்ஸ் வர்றாங்க. அவுங்களுக்காக, ரெண்டு நாள் தள்ளிப் போட்டுட்டோம்'' என்றபடியே, உள்ளே நுழைந்தாள் மித்ரா.
ஹாலில் சத்தமாய், வடிவேலுவின் குரல் எதிரொலித்தது....'என்ன...கையப்பிடிச்சு இழுத்தியா?'
''என்னக்கா! கவுன்சிலர் காமெடி பாத்துட்டு இருக்க...இதே மாதிரி, நம்மூர்ல போன வாரம் ஒரு பஞ்சாயத்து நடந்துச்சு தெரியுமா?'' என்று பலமாய்ச் சிரித்தாள் மித்ரா.
''இன்ஸ்பெக்டரைப் பத்தி, கமிஷனர்ட்ட டிஎம்கே கவுன்சிலரம்மா கொடுத்த 'கம்ப்ளைன்ட்'டைச் சொல்றியா?'' என்றாள் சித்ரா.
''ஆமாக்கா...'என்னோட கையில இருந்த வளையலெல்லாம் உடைஞ்சிருச்சு'ன்னு, அந்தம்மா 'மீடியா'கிட்ட சொன்னது மாதிரியே, கமிஷனர்ட்டயும் சொல்லிருப்பாங்கள்ல...அப்டின்னா, அந்த இன்ஸ்பெக்டரைக் கூப்பிட்டு, அவரு இதே கேள்வியைத்தான கேட்ருப்பாரு...''
''நடந்ததென்னங்கிறது, சம்மந்தப்பட்டவுங்களுக்கு மட்டும் தான் தெரியும். ஆனா, நாலு வருஷத்துக்கு அப்புறமா, இப்பதான் டிஎம்கேகாரங்க அரசியல் பண்ண ஆரம்பிச்சிருங்காங்கிறது நல்லாத் தெரியுது''
''அவுங்க மட்டுமா...அங்கங்க சின்னச் சின்ன பிரச்னைக்கெல்லாம், எல்லா எதிர்க்கட்சிக்காரங்களும் சேர்ந்து போராட ஆரம்பிச்சிட்டாங்க...கவனிச்சியா?''
''டெக்ஸ்டூல் பாலம் வேலைக்காக, எல்லாக் கட்சிக்காரங்களும் சேர்ந்து போராடுனத்தைச்
சொல்றியா?''
''அதே தான்...எலக்ஷன் வருதுன்னதும், ரோட்டுக்கு வர்றாங்களே. நாலு வருஷமா, இவுங்கள்லாம் எங்க போனாங்க?'' என்றாள் மித்ரா.
'சேது' படத்தைக் கலாய்க்கும் விவேக் காமெடி 'டிவி'யில் ஓடிக் கொண்டிருந்தது...எங்கே செல்லும் இந்த பாதை...
''மித்து! இப்போதைக்கு நம்மூருக்கு ஏத்த பாட்டு இதுதான். ஏழாங்கிளாஸ் புள்ளைங்க, மொபைல்ல 'தப்பான' படம் பாக்குறாங்க. பிளஸ்டூ பொண்ணு, தண்ணிடியச்சிட்டு, ரோட்டுல கலாட்டா பண்றா... என்னடி
நடக்குது இங்க?'' என்று பொங்கினாள் சித்ரா.
''நிஜமாவே, பயமா இருக்குக்கா...முதல்ல...சின்னப்பசங்களுக்கு சரக்கு விக்கிறவுங்களை பிடிச்சு, ஜெயில்ல போடணும்''
''அதெல்லாம் நடக்கிற காரியமேயில்லைடி. நம்மூர்ல டாஸ்மாக்ல மட்டுமா சரக்கு கிடைக்குது...சத்தி ரோட்டுலயும், பொள்ளாச்சி ரோட்டுலயும் பல 'தாபா'க்கள்ல, 24 மணி நேரமும் சரக்கு விக்கிறாங்கன்னு எக்கச்சக்கமா 'கம்ப் ளைன்ட்' வருது. ஒரு கடை மேலயாவது நடவடிக்கை எடுத்து இருக்காங்களா?''
''அதெப்பிடி எடுப்பாங்க. எல்லாக் கடையில இருந்தும், ஸ்டேஷன்களுக்கு மாமூல் போகுது. சரக்கு, சாப்பாடு எல்லாமே 'சப்ளை' ஆகுது'' என்றாள் மித்ரா.
''பாட்டில் மட்டுமில்லை மித்து...கஞ்சாவும், நம்ம காலேஜ்பசங்ககிட்ட எக்கச்சக்கமா புழங்குது. சுந்தரின்னு ஒரு 'லேடி'தான், சிட்டி முழுக்க ஆளுங்களை வச்சு, இந்த பசங்களுக்கு கஞ்சா விக்கிறாங்கன்னு போலீசுக்கே தெரியும்''
''அப்புறம் ஏன்க்கா, அவுங்களை 'அரெஸ்ட்' பண்ணாம இருக்காங்க?''
''அந்த பொம்பளை மேல, 'குண்டாஸ்' போடச் சொல்லியே, பெரிய ஆபீசர் 'ரெகமண்ட்' பண்ணிட்டாரு. ஆனா, இப்போ வரைக்கும் அந்தம்மாவை காப்பாத்திட்டு இருக்கிறது...ஒரு ஏ.சி.,யும், ரெண்டு இன்ஸ்பெக்டரும் தான்னு சொல்றாங்க. அவுங்க ஏரியாவுல தான், கஞ்சா சேல்ஸ் அதிகமாம். மாமூலும் லட்சக்கணக்குல வருதாம்''
''அக்கா...கவுண்டம்பாளையம் ஹவுசிங் போர்டுல அரையும் குறையுமா இடிச்சிருக்கிற வீடுகள்ல தான், பசங்க கும்பல் கும்பலா கஞ்சா போட்டு ஆடுறதா, கேள்விப்பட்டேன். சாயங்காலமானா, ஸ்கூல், காலேஜ் பொண்ணுங்களைக் கூட, அந்த கட்டிடங்களுக்குள்ள பாக்க முடியுதாம்''
''மித்து! நீ ஹவுசிங் போர்டுன்னு சொன்னதும் தான், ஞாபகம் வந்துச்சு. கோயம்புத்துார்லயிருந்து, மதுரைக்கு 'புரமோஷன்'ல போயிருக்காரே, ஒரு ஆபீசர். அவருக்கு ரயில்வே ஸ்டேஷன் எதிர்ல இருக்கிற ஒரு ஓட்டல்ல, செம 'கிராண்ட்'டா, 'சென்ட் ஆஃப்' பார்ட்டி நடந்திருக்கு. இதுல என்ன கூத்துன்னா, அதை நடத்துனதே, அவர்தானாம்'' என்றாள் சித்ரா.
''ஓ...கனிவானவர், கண்டிப்பானவர், நேர்மையானவர்ன்னு 'பன் முகம்' காட்டுவாரே...அந்த ஆபீசரா?'' என்றாள் மித்ரா.
''அவரே தான்...அவர் ஏற்பாடு பண்ணுன அந்த 'பார்ட்டி'ல, மகளிர் அணி கூட்டம் தான் அதிகமாம். அவர் காலத்துல, சம்பாதிச்சவுங்க எல்லாம் அவருக்கு பவுன் பவுனா நன்றிக்கடன் செலுத்திருக்காங்க. அதுல 'பேச்சுலர்' பேரைக் கொண்ட சேஜ்ஜி ஒருத்தவுங்க, அஞ்சு பவுன் காயினும், இன்னொரு லேடி ஆபீசர், மோதிரமும் கொடுத்தாங்களாம்'' என்றாள் சித்ரா.
''அவரைப் பத்தி, இன்னொரு விஷயம் கேள்விப்பட்டேன். காளப்பட்டி ஏரியாவுல, 'லேண்ட்'களுக்கு, 'என்ஓசி' வாங்கிக் கொடுக்கிறேன்னு லட்சம் லட்சமா வாங்கிருக்காரு. ஆனா, வாங்கிக் கொடுக்கலை. இவரு, மதுரை போறார்ன்னு தெரிஞ்சதும், அவுங்க எல்லாம் சுத்திட்டாங்க. எல்லாருக்குமே 'கரெக்ட்'டா காசைத் திருப்பிக் கொடுத்துட்டாராம். ரெண்டு மாசத்துல, கோயம்புத்துாருக்கு வந்துருவேன். வந்து, நானே 'என்ஓசி' வாங்கித் தர்றேன்னு 'கேரண்டி' கொடுத்துட்டும் போயிருக்காராம்'' என்றாள் மித்ரா.
''இவர் போன பிறகு, மதுரை மன்னன் பேரைக் கொண்ட ஒரு ஆபீசர் நாலே நாளு இருந்தாரே...அதுக்குள்ள அவரு, ஏகப்பட்ட 'பைல்'கள்ல கையெழுத்தைப் போட்டு, வசூல் தட்டி எடுத்துட்டாராமே'' என்றாள் சித்ரா.
'டிவி'யில், 'டேய்...ங்கொய்யால...கொடுத்த காசுக்கு மேல கூவுறான்'டா என்று வடிவேலுவிடம் 'ஃபீலிங்ஸ்' காட்டிக் கொண்டிருந்தார் லிவிங்ஸ்டன்.
''அக்கா! இந்த 'டயலாக்' பாத்ததும், நம்மூர்ல இருக்கிற ஒரு ஆர்டிஓ ஞாபகம் தான் வந்துச்சு. அவர் தான், மேட்டுப்பாளையம் பிரைவேட் பஸ்காரங்களுக்கு ஆதரவா, கொடுத்த காசுக்கு மேல கூவிட்டு இருக்காராம்'' என்றாள் மித்ரா.
''அந்த டிக்கெட் மேட்டரா? அதான்...கலெக்டரே, 'புரசீடிங்ஸ்' போட்டு, டிக்கெட்டை 16லயிருந்து 13.50ன்னு குறைச்சிட்டாங்களே. அப்புறம் எதுக்கு இவரு கூவுறாரு?''
''கலெக்டர் ஆர்டர் போட்டது, ஜூன் 29ல. உடனே, கவர்மென்ட் பஸ்ல எல்லாம் 'ரேட்'டை குறைச்சிட்டாங்க. ஆனா, பிரைவேட் பஸ்காரங்க குறைக்கவேயில்லை. பத்து நாளாகியும், இவரும் ஒரு வண்டி மேலயும் 'ஆக்ஷன்' எடுக்கலை. இத்தனைக்கும், ரெண்டு ஊருக்கும் இவரு தான், இப்போ ஆபீசர்''
''இவரு நடவடிக்கை எடுக்கலேன்னா, இவருக்கு மேல இருக்கிற ஆபீசர்க என்ன பண்றாங்க. கலெக்டர் என்ன பண்ணுனாங்க?''
''என்னக்கா பேசுற...அவுங்களா ரோட்டுல நின்னு, 'ஆக்ஷன்' எடுக்க முடியும். அவுங்க சொல்லியும், இவரு கேக்கலைங்கிறது தான் மேட்டரே. மேட்டுப்பாளையம் பிரைவேட் பஸ்கள்ல, 'ஏன்யா நீங்க ரேட்டை குறைக்கலை'ன்னு பாசஞ்சர் கேட்டா, 'எங்களையெல்லாம் ஒருத்தனும் ஒண்ணும் செய்ய முடியாது. லட்சம் லட்சமா எங்ககிட்ட வாங்குறானுகள்ல'ன்னு கண்டக்டர்களே எகிர்றாங்களாம்''
''அப்டின்னா, பிரைவேட் பஸ்காரங்க, 'ஸ்டே' வாங்குறுதுக்காக, 'வெயிட்' பண்றாரோ?'' என்ற சித்ரா, ''மித்து! நீ துாத்துக்குடி போறேன்னு சொன்னியே...அங்க எப்பிடி குப்பை அள்ளுறாங்கன்னு பாத்துட்டு வா'' என்றாள்.
''ஏன்க்கா...நான் டூர் போறனா, குப்பை அள்ளுறதைப் பாக்கப்போறனா?'' என்றாள் மித்ரா.
''ஹய்யோ மக்கு...மக்கு...நான் என்ன சொன்னேன்னு புரியலையா. இங்க குப்பை மேட்டர்ல, கோடிக்கணக்குல அள்ளுன அந்த இன்ஜினியர் அங்க தான போயிருக்காரு. அதான் மறக்காம பாத்துட்டு வரச்சொன்னேன்''
''ஓ...அவரா...அவருக்கு உதவியா இருந்தவரை மட்டும், இங்க விட்டு வச்சிருக்காங்க. அவரென்ன... குறையாவா சம்பாதிச்சிருக்காரு. அவரும் தான, இதுக்காக 'சஸ்பெண்ட்' ஆனாரு''
''அதென்னவோ உண்மை தான். ஆனா, இப்போ, ஆளும்கட்சி மாவட்ட வி.ஐ.பி.,யை அவர் 'கரெக்ட்' பண்ணிட்டாராம். அவருக்கு, அவுங்க கேட்டதைக் கொடுக்க முடியலையாம். அதனால தான், அங்க துாக்கி விட்டாங்களாம்'' என்றாள் சித்ரா.
''அக்கா! சிட்டிக்குள்ள வட்டிக்காரங்க 'அட்ராசிட்டி' ரொம்ப அதிகமாயிருச்சு''
''ஆமா மித்து! நானும் கேள்விப்பட்டேன். இதைத் தட்டிக் கேட்ட ஒரு லேடி போலீஸ் இன்ஸ்பெக்டரையே, மெரட்டுறாங்களாமே''
''நான் அப்புறமா, டீட்டெய்லா சொல்றேன்... இப்போ, எனக்கு ஒரு சூடா ஒரு 'கப் காஃபி' வேணும்'' என்று மித்ரா கேட்க, 'சாரிடி... பேச்சுவாக்குல மறந்துட்டேன்' என்று வேகமாக எழுந்தாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X