சென்னை சென்று திரும்பிய சித்ராவை அழைத்துச் செல்ல, ரயில்வே ஸ்டேஷனுக்கு மித்ரா சென்றிருந்தாள்.
லக்கேஜ்களை தள்ளிக்கொண்டு வந்த சித்ராவை வரவேற்ற மித்ரா, ""பயணம் நல்லபடியா இருந்துச்சா'' என, விசாரித்தாள்.
""பயணம் நல்லபடியா இருந்துச்சு. ஊத்துக்குளி பக்கத்துல ரெண்டு ரயில்கள் நேருக்கு நேர் சந்திச்சதுக்கு அப்புறம், ரயில்வே அதிகாரிகளுக்கு "ரெட் சிக்னல்' போட்டுட்டாங்களாமே,'' என, கேட்டாள் சித்ரா.
""ஆமாக்கா, ஊத்துக்குளியில் எப்படி இப்படியாச்சுன்னு உயரதிகாரிகள் விசாரிச்சாங்க. ஸ்டேஷனுக்கு வரும் அதிகாரிகள் விவரம், ரயில்கள் லேட், துறை ரீதியான தகவல்னு எதுவா இருந்தாலும், எப்படி தகவல் வெளியே போகுது. இதெல்லாம், யார் சொல்றதுன்னு துளைச்சு எடுத்துட்டாங்க. இனி, ரயில்வேயில் நடக்குற எந்த விஷயமும் அலுவலகம், ஆபீசர்களை தாண்டி, வெளியே போகக்கூடாதுன்னு கண்டிப்போடு சொல்லியிருக்காங்க. அதோடு விட்டுடாம, சுற்றறிக்கையும் அனுப்பியிருக்காங்க.
"ரெட் சிக்னல்' போட்டதால, ரயில்வேயில் அனைத்து தரப்பு அதிகாரிகளும்
"கப்-சிப்' னு அடங்கியிருக்காங்க,'' என்றபடி, "பார்க்கிங்'கில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டரை வெளியே தள்ளிக்கொண்டு வந்தாள் மித்ரா.
போலீசார் சிக்னல் காட்டியதும், ஸ்கூட்டரை கிளப்பிய மித்ரா, ""போலீஸ்காரங்களுக்கு ரொம்ப ஞாபக மறதியா போச்சுக்கா,'' என்றாள்.
""அவங்களும் சாதாரண மனுஷங்க தானே? ஞாபக மறதி இருக்காதா, என்ன?'' என்றாள் சித்ரா.
""அவங்க மறதியால, மக்களுக்கு பாதிப்பு வரக்கூடாதுல? பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தப்ப, கூட்டத்தை கண்காணிக்கறதுக்காக, தேர்நிலை பக்கத்துல, "வாட்ச் டவர்' வச்சாங்க. தேரோட்டம் முடிஞ்சு ரெண்டு மாசமாச்சு. "வாட்ச் டவரை' இன்னும் எடுத்துட்டு போகலை. அந்த ஏரியாவுல, தெனமும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுது. மக்களும், கடைக்காரங்களும் புலம்புறாங்க,'' என்றாள் மித்ரா.
""புது கலெக்டர் ஆபீஸ் கட்டுறாங்களே, திறப்பு விழா தேதி குறிச்சிட்டாங்களா,'' என, சித்ரா, அடுத்த கேள்வியை எழுப்பினாள்.
""கலெக்டருக்கு தெனமும் அதுதான் வேலை. ஒரு நாளைக்கு இரண்டு தடவை ஆஜராகிடுறார். இந்த மாசத்துல திறக்கறதுக்காக, வேலையை வேகப்படுத்துனாங்க. "போர்டிகோ'வுல இரண்டு "பில்லர்' மட்டும் இருக்கற மாதிரி "டிசைன்' பண்ணியிருந்தாங்க. இப்போ, நாலு "பில்லர்' வர்ற மாதிரி செஞ்சிருக்காங்க. நுழைவாயிலை எப்படி அமைக்கணும்னு, முதல்வர் அனுமதிக்கு "டிசைன்' அனுப்பியிருக்காங்க. "பில்லர்' சும்மா "ரவுண்டா' இருந்தா போதாது; கலைநயத்தோட இருக்கனும்னு சொன்னதுனால, ஒரு பில்லருக்கு, 70 ஆயிரம் ரூபாய் செலவுல, திருமலை நாயக்கர் மஹால் தூண்கள் மாதிரி, "டிசைன்' செஞ்சிருக்காங்க,'' என்ற மித்ரா, ""மதுக்கடைகளை எதிர்த்து, பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்துனாங்களே, தெரியுமா,'' என, கேட்டாள்.
""ஆமாம், கேள்விப்பட்டேன். வழக்கமா, எல்லா கட்சிக்காரங்களும் நடத்துற போராட்டம்தானே? அதுல என்ன விசேஷம்,'' என, "அசால்ட்'டா கேட்டாள் சித்ரா.
""ஒரு இடத்துல ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கொடுத்தா, கூட்டம் அதிகமா தெரியும்; ஆட்களும் அதிகமா ஒன்று சேர்ந்தா, முடியறதுக்கு வெகுநேரமாகும். சிட்டிக்குள் போக்குவரத்து பிரச்னை வந்துடும். இதை தவிர்க்க, புதுசா ஒரு பாணியை போலீஸ்காரங்க பின்பற்றியிருக்காங்க,'' என, புதிர் போட்டாள் மித்ரா.
"அப்படி என்ன பண்ணிட்டாங்க,'' என, அப்பாவியாய் கேட்டாள் சித்ரா.
""ஆர்ப்பாட்டம் நடத்த, ஏழே ஏழு இடங்களில் அனுமதி கேட்டிருக்காங்க. ஆனா, போலீஸ்காரங்களோ, தாராளமா,
16 இடங்களுக்கு அனுமதி கொடுத்தாங்க. அதனால, ஆர்ப்பாட்டம் நடந்ததே வெளியே தெரியாமல், எல்லா இடத்திலும், 10 நிமிஷத்துல முடிஞ்சிடுச்சு. ஒவ்வொரு இடத்திலும், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்குதான் தொண்டர்கள் வந்திருந்தாங்க,'' என்றாள் மித்ரா.
""மதுக்கடைகளை ஒழிச்சிட்டாங்கன்னா, அவுங்களுக்கு வருமானம் போயிடு மோன்னு நெனைச்சு, கூட்டத்தை கம்மியா காட்ட, இந்த வேலையை போலீஸ்காரங்க செஞ்சிருப்பாங்க,'' என, சித்ரா கிண்டலடிக்கவும், வீடு வரவும் சரியாக இருந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE