அடம் பிடிக்கும் குறும்புக்கார குழந்தைகள்! என் பார்வை| Dinamalar

அடம் பிடிக்கும் குறும்புக்கார குழந்தைகள்! என் பார்வை

Added : ஜூலை 17, 2015 | கருத்துகள் (1)
 அடம் பிடிக்கும்  குறும்புக்கார குழந்தைகள்!  என் பார்வை

கற்கை நன்றே கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற அவ்வையாரின் சொல்லை மதித்து பெற்றோர் கஷ்டப்பட்டாவது தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர். ஆனால் சில குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மறுத்து, பெற்றோரின் கடின முயற்சிக்கு சவாலாக உள்ளனர்.பள்ளி செல்ல விருப்பமில்லாத குழந்தைகள், எல்லா நாடுகளிலும் உண்டு. குழந்தைகள் புதிதாக பள்ளிக்கு செல்லும் போதும், நன்றாக சென்று கொண்டிருக்கும் போதும் சிறிது சிறிதாக அந்த மனநிலைக்கு மாறலாம்.பெரும்பாலான குழந்தைகள் அழுதோ, முரண்டு பிடித்தோ, மவுனம் சாதித்தோ தங்கள் மறுப்பை நேரடியாக தெரிவிப்பர். செல்லமாக வளர்ந்த குழந்தைகள் அழுது ஆர்ப்பாட்டம் செய்து முரண்டு பிடிப்பர். பயந்த சுபாவமுள்ளவர்கள் கவலைபடர்ந்த முகத்தோடு காட்சியளிப்பர்.சில குழந்தைகள் உடல் உபாதைகளை வெளிப்படுத்துவர். பெரும்பாலும் அவை தலைவலி, வயிற்றுவலி, வாந்தி போன்ற தொந்தரவுகளாகவே இருக்கும். அக்குழந்தைகள் வேண்டுமென்றே
நடிக்கலாம். அல்லது அவர்களுக்கு அறியாமலே அவர்கள் மனதில் ஏற்படும் பயம், வெறுப்பு, மறுப்பு போன்ற உணர்வுகள், உடல் உபாதையாக மாறி வெளிப்படலாம்.சில குழந்தைகள் பல நாட்களில் நோய்வாய்ப்பட்டு விடுமுறை எடுக்க நேரிட்டால், 'ருசி கண்ட பூனை போல்' பள்ளிக்கு செல்ல மறுத்து, தொடர்ந்து உடல் உபாதைகளை கூறிக்கொண்டே இருப்பர். பெற்றோர் நோயுற்று இருப்பின் அவர்களை தனியேவிட்டு பிரிய சில குழந்தைகள் பள்ளியை விரும்ப மாட்டார்கள். பெற்றோர் மீது அளவு கடந்த பிரியம் கொண்ட குழந்தைகள் அவர்களுடன் எந்நேரமும் வீட்டில்கூட பார்த்துக் கொள்ள ஆசைப்படுவர்.
காரணங்கள் என்ன தமிழ் தவிர பிறமொழியை தாய்மொழியாக கொண்ட குழந்தைகள் பள்ளியில் சேர்ந்த புதிதில் தமிழில் பேசவும், புரிந்துக்கொள்ளவும் சிரமப்படுகின்றனர். இச்சூழலில் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு, அதன் காரணமாக பள்ளி மீது வெறுப்புணர்வு வளர வாய்ப்புண்டு.பள்ளி மாற்றத்தின்போதும், தமிழ் மீடியத்தில் இருந்து ஆங்கில மீடியத்தில் மாறும்போதோ கிராமங்களில் இருந்து நகர்பள்ளிக்கு மாறும்போதோ பிரச்னை ஏற்படும் வாய்ப்புண்டு. நல்ல காற்றோட்டம், வெளிச்சம் உள்ள வீடுகளில் வளர்ந்த குழந்தைகள், இவைபோதுமான அளவில் கிடைக்காத பள்ளி அறைகளை வெறுக்கவும் வாய்ப்புண்டு.
பள்ளி வாகனத்தில் சில குழந்தைகளுக்கு பிரச்னை ஏற்படலாம். உதாரணமாக கேலி, கிண்டல், மற்றவர்களை சீண்டிபார்த்து துன்புறுத்துவது போன்றவை குழந்தைகளுக்கு பள்ளிக்கு செல்ல ஒரு தடையாக மாறி, பள்ளிக்கு செல்ல அச்சம் ஏற்படுத்தலாம். பள்ளி வாகனங்களின் சில டிரைவர்களின் வக்கிரபுத்தி, குழந்தைகள் மனதில் அச்சத்தையும், வெறுப்பையும் உண்டாக்கும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. சில பள்ளிகளில் மாணவர்களுக்கு தரும் தண்டனை, ஏளனப்படுத்துதல் போன்றவை குழந்தைகளை படிப்பே வேண்டாம் என முடிவுக்கு தள்ளிவிடும்.சாதாரணமாக குழந்தைகள் முதன்முதலில் பள்ளிக்கு செல்ல ஆரம்பிக்கும்போது, தாயை பிரியும் ஏக்கம், புது சூழ்நிலை போன்ற விஷயங்களால் பள்ளி செல்ல மறுப்பது இயல்பு. இதை தவிர்க்க பள்ளி ஆரம்பிக்கும் முன்னரே பள்ளிக்கு செல்வதால் ஏற்படும் நன்மைகளையும், அதன் சுவாரஸ்யங்களையும் பிஞ்சு மனதில் குதூகலத்தை ஏற்படும் வண்ணம் நல்லவிதமாக சொல்லவேண்டும். அச்சுறுத்தும் வார்த்தைகளை விளையாட்டாக கூட சொல்லக்கூடாது. நட்பாக மாற்றுவது எப்படி
சில பள்ளிகளில் செய்வது போல் சீனியர் மாணவர்கள் சிறிய வயது குழந்தைகளை பள்ளி வாசலிலேயே பெற்றோரிடமிருந்து அழைத்துக்கொண்டு, அவரவர் வகுப்பறையில் அழைத்துச் சென்றுவிட்டால், நாளடைவில் அக்குழந்தைகள் நண்பர்களாகி, ஜாலியாக சிரித்துக்கொண்டே பெற்றோருக்கு 'டாட்டா' காண்பிப்பர்.இளைய குழந்தை வீட்டில் இருந்து, மூத்த குழந்தை பள்ளிக்கு செல்ல ஆரம்பிக்கும்போது, தன்னைவிட தன் தம்பியோ, தங்கையோ தாயிடம் அதிகநேரம் இருந்து தாயின் கவனிப்பை பெறுவர் என்ற பொறாமையால் பிரச்னை ஏற்படலாம். மனச்சோர்வு, மனஅழுத்தம், ஆர்வமின்மை, தன்னம்பிக்கையின்மை போன்ற காரணங்களால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மறுக்கலாம். விடலைபருவத்தில் தொடங்கும் ஒருவித மனசிதைவு நோய், இதுபோன்ற ஆரம்பக்கட்டத்தில் வெளிப்படலாம்.கற்றல் குறைபாடுகள், அதிக சுறுசுறுப்பு போன்ற குழந்தைகள் பருவத்திலேயே தொடங்கிவிடும் தொந்தரவுகளால், அவர் தம் படிப்பில் பின்தங்கலாம். அதனால் ஆசிரியரிடம் திட்டு, தண்டனை பெற வேண்டியிருக்கும். நிர்ப்பந்தம் ஏற்பட்டு அதன் பொருட்டு பள்ளி செல்வதை தவிர்க்க நினைப்பர். இதனால் அக்குழந்தைகள்
மனச்சோர்வு ஏற்பட்டு கஷ்டப்படுவர்.

அரும்புகளின் குறும்பு

குழந்தைகள் அவ்வப்போது பள்ளிக்கு செல்ல மறுப்பதை அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு மறுக்க மேற்கொள்ளும் அந்த அரும்புகளின் குறும்பு நடவடிக்கைகளை கண்டு காணாதது போல் இருந்து, அவர்கள் மனதை திசைதிருப்பி சாமர்த்தியமாக பள்ளிக்கு அனுப்பிவிடவேண்டும்.வீட்டில் தாய், தந்தை இடையே மனக்கசப்பு, சண்டை போன்றவை அடிக்கடி நடக்கும்போது, தான் வீட்டில் இருந்தால் அது குறைந்து காணப்படுகிறது என புரிந்துக்கொண்டு சில புத்திசாலி குழந்தைகள் பள்ளி செல்வதை தவிர்ப்பர். அச்சண்டைகளின் மேல் ஏற்படும் கோபத்தை தன் மறுப்பால் வெளிக்காட்ட பெற்றோரை தண்டிக்கும் வகையில் பள்ளிக்கு செல்ல மறுக்கலாம். சில வீடுகளில் குடித்து வந்து கொடுமைப்படுத்தும் தந்தையிடம் இருந்து தன் தாயை காப்பாற்ற எண்ணி, துணையாக வீட்டில் தங்க இருப்பர்.பள்ளிக்கு செல்வதில் மறுப்பு
என்பது வழக்கமாகிவிட்டாலோ, பள்ளிக்கு சென்று வரும் குழந்தைகள் மனச்சோர்வுடனோ, கலகலப்பின்றி,
பதட்டத்துடனோ காணப்பட்டால் பெற்றோர் கவனிக்க வேண்டும். தேவையான சத்தான உணவு வகைகள் கொடுப்பது அவசியம். அவர்கள் உடல் ஆரோக்கியத்தையும் கவனிக்க வேண்டும்.
அமைதியாகவும், நட்புடனும் அவர்களிடம் பேச வேண்டும். சிறுமாற்றங்கள் தெரியவரின் தயக்கப்படாமல் மனநல மருத்துவரிடமோ, ஆலோசகரிடமோ அழைத்துச்செல்ல வேண்டும். பெற்றோருக்கும், குழந்தைக்கும் அதுவே மிகச்சிறந்த மாற்றத்தை கொடுக்கும்.- டாக்டர் ஆர்.பாஹே ஸ்ரீதேவிமனநல மருத்துவர்மதுரை. 93806 98125
வாசகர்கள் பார்வை
மனித கடவுள்

என் பார்வையில் வெளியான 'தெற்கில் ஓர் இமயம்' கட்டுரை படித்தேன். உண்மையான ஒருவர்
செய்கின்ற செயல் மட்டும் தான் மாறாத அழகு. சுயநலமில்லாமல் வாழ்வு ஒருவரை தெய்வத்திற்கு இணையாக வைக்கிறது. மனித உருவில் மக்களுக்கு நல்லது செய்த கடவுள் காமராஜர்
என்பதை கட்டுரை உணர்த்திவிட்டது. இவரை போல அர்ப்பணிப்பு உணர்வுடன் இனி ஒருவர் பிறக்கவே முடியாது.- சே. மணிகண்டன், பெரியகுளம்.

தமிழ் பற்றாளர்

என் பார்வையில் வெளியான 'திருவள்ளுவராண்டு தந்த திருமகன்' கட்டுரை படித்தேன். தனித் தமிழ் இயக்கம் வளர தன் பெயரையே மறைமலை அடிகள் என்று மாற்றிய தனித்தமிழ் இயக்க தந்தையை பற்றி அறிய முடிந்தது. தமிழர்களின் திருமண சடங்கு முறைகளிலும் கூட தமிழ் முறையைபின்பற்ற விரும்பிய தமிழ் பற்று கொண்டவர் என்பதை அறிந்து வியந்தேன்.- த.கிருபாகரன், நிலக்கோட்டை.

அடிகளார் வள்ளல்

என் பார்வையில் வெளியான 'திருவள்ளுவராண்டு தந்த திருமகன்' கட்டுரை படித்தேன். தமிழுக்கு பெரும் புகழ் சேர்த்த அற்புதமான மனிதர் என்பதை தெரிந்து கொண்டோம். தமிழ் மொழி மீது உள்ள பற்றால் தன் பெயரை மறைமலை அடிகளார் என மாற்றிக்கொண்டவர். திருவள்ளுவராண்டு என்ற ஒரு ஆண்டையே கொடுத்த வள்ளல் இவர் தான் என்பதை அறியும் போது மகிழ்ச்சியாக இருந்தது.- வி.நித்யாகாயத்ரி, அருப்புக் கோட்டை.

வாழ்க்கை வரலாறு

என் பார்வையில் வெளியான 'தெற்கில் ஓர் இமயம்' கட்டுரை படித்தேன். பெருந் தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை அற்புதமாக தொகுத்திருந்தார் கட்டுரையாளர். தெலுங்கு கவிஞர் வேணுகோபால் ரெட்டி காமராஜரை பற்றி கவிதை எழுதிய செய்தி புதிய செய்தியாக இருந்தது. அவரது பிறந்த நாளில் கட்டுரை வெளியிட்டு பெருமை படுத்திவிட்டீர்கள் நன்றி.- அனப்புச்செல்வன், வீரபாண்டி.

கல்வி தந்த உத்தமர்
என் பார்வையில் வெளியான 'தெற்கில் ஓர் இமயம்' கட்டுரை படித்தேன். பொது நலமே தன் உயிர் மூச்சு என வாழ்ந்த காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை பற்றி தெரிந்து கொண்டோம். மாணவர்களுக்கு இலவச கல்விக்கும், மதிய உணவுக்கும் வித்திட்ட அந்த உத்தமரை கவுரப்படுத்தியது கட்டுரை.- ப.அண்ணாமலை, ஒட்டன் சத்திரம்.

காமராஜர் கவிதைஎன் பார்வையில்

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு இளசை சுந்தரம் எழுதிய 'தெற்கில் ஓர் இமயம்' கட்டுரை படித்தேன். காமராஜரின் பிறப்பைப் பற்றிய தெலுங்கு கவிஞர் வேணுகோபால் ரெட்டியின் கவிதையின் சாரம்சம் பிரமாதம். சிறு வயதிலேயே திருடர்களை பிடித்த துணிச்சல்காரர் காமராஜர். தன் அக்கா மகனின் மருத்துவ கல்லூரியில் சேர அனுமதி கேட்ட போது 'தகுதி இருந்தால் தரப்படும்' என, உத்தரவு பிறப்பித்து நேர்மையாக நடந்து கொண்டவர் என்பதை நினைக்கும் போது பெருமையாக உள்ளது.- எம்.வீ.மதுரைச்சாமி, மதுரை.

நெஞ்சம் நிறைந்தது

என் பார்வையில் நம் நாட்டின் தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாள் அன்று வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் அருமை. தலைவர்களின் வாழ்வில் நடந்த வித்தியாசமான நிகழ்வுகளை பதிவு செய்யும் எழுத்தாளர்களின் எழுத்துக்கள் பாராட்டுக்குரியது. தொடர்ந்து நல்ல பல கட்டுரைகளை வெளியிட்டு வாசர்கள் நெஞ்சங்களில் நிறைந்த என் பார்வை பகுதிக்கு வாழ்த்துக்கள்.- கே. செல்வம், ராமேஸ்வரம்.We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X