பெட்ரிஷியா
திருச்சி சிந்தாமணி பஜார் அந்தோணியார் கோவில் தெருவில் சின்னதாய் காணப்படுகிறது நியூ வெம்புலி சலுான்.
இந்த சலுானுக்கு முடிவெட்டிக்கொள்ள மற்றும் முகச்சவரம் செய்துகொள்ள உள்ளே நுழைந்து அதற்கான இருக்கைகளில் அமர்பவர்களுக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருக்கும்.
பெண் ஒருவர் கழுத்துவரையிலான வெள்ளைத்துணியை போர்த்திவிட்டு, ''முடிவெட்டணுங்களா? அல்லது முகச்சவரம் செய்யணுங்களா?'' என்று கேட்டு அதற்கேற்ப கத்தி,கத்திரியுடன் களத்தில் இறங்கி கடகடவென வேலையை முடித்துவிட்டு காசை வாங்கி கல்லாவில் போட்டுவிட்டு அடுத்துவரும் வாடிக்கையாளரின் தேவையை கவனிக்க தயராகிறார்.
அடுத்த வாடிக்கையாளர் வருவதற்குள் யார் இந்த பெண் என்பதுபற்றிய ஒரு அறிமுகம்.
நியு வெம்புலி சலுான் என்பது நீண்ட காலமாக இயங்கிவருகிறது, இதனை பல வருடங்களுக்கு முன் தன்ராஜ் என்பவர் ஆரம்பித்து நடத்திவந்தார் அவரது நீண்ட நாள் வாடிக்கையாளர் மற்றும் நண்பர் ஆனந்தராஜ்.
இருவரும் தங்களது குடும்ப விவரங்களை பரிமாறிக்கொண்டதன் பலனாக இருவரும் சம்பந்தியாவது என முடிவு செய்தனர், அதன்படி தன்ராஜ் மகன் ரூபனை ஆனந்த்ராஜ் மகள் பெட்ரிஷியா திருமணம் செய்துகொண்டார்.அன்பும் பாசமும் நட்பும் காதலும் பொங்க தம்பதிகள் சந்தோஷமாய் குடும்பம் நடத்தினர்.
சில வருடங்களில் அப்பா தன்ராஜ் இறந்துவிட மகன் ரூபன் சலுானின் முழுப்பொறுப்பை எடுத்துக்கொண்டு பொறுப்பாக செயல்பட்டார்.எல்லாம் நல்லபடியாகவே சென்று கொண்டிருக்கும் போதுதான் எதிர்பாரத ஒரு விபத்து ரூபனின் கையை உடைத்துவிட்டது தொழில் செய்யவிடாமல் முடக்கிபோட்டது.
தொழிலின் ஆதாரமே கைதான் அந்தக்கை இல்லாமல் என்ன செய்வது, கடை வாடகை கொடுக்கணும் பிள்ளைகள் ரஞ்சனி மற்றும் ரஞ்சித் ஆகியோரை படிக்கவைக்கணும், எல்லாவற்றுக்கும் மேலாக அன்றாடம் சாப்பிடணும்.
ஆறுதலும் தேறுதலும் வாழ்க்கைக்கு உதவாது என்ற தீர்மானத்துடன்,'' மாமா நான் இனிமேல் வர்ரவங்களுக்கு கட்டிங் சேவிங் செய்யறேன்'' என்று பெட்ரிஷியா கூற அவரது குரலில் இருந்த உறுதியை பார்த்து ரூபன் மறுபேச்சு பேசாமல் சம்மதம் தெரிவித்தார்,கூடவே பயிற்சிக்கு தனது தலையையும் கன்னத்தையும் தந்தார்.
வாழ்ந்துகாட்டவேண்டும் என்ற நிர்ப்பந்தம் பெட்ரிஷியாவின் கைகளுக்கு உறுதியும் உன்னதமும் கொடுக்க வேடிக்கையாளர்களாக வந்தவர்கள் நாளடைவில் கடையின் வாடிக்கையாளர்களானார்கள்.
இரண்டு குழந்தைகளோடு மூன்றாவது குழந்தையாக அன்பு கணவர் ரூபனை பார்த்துக்கொண்டே கடையை நடத்திக்கொண்டிருந்தவருக்கு அடுத்த அதிர்ச்சி கணவர் ரூபன்
எதிர்பாரமல் இறந்துபோனார்.
எதையும் தாங்கும் இதயத்தோடு பெட்ரிஷியா தற்போது தனிமரமாக கடையையும் பிள்ளைகளையும் கவனித்துகொள்கிறார்.
உடம்புக்கு முடியவில்லை என்றால் பெண் டாக்டர்களிடம் உடம்பை சோதித்துக்கொள்வது இல்லையா? அதுபோல எண்ணி என்னிடம் முடிவெட்டிக்கொள்ள தாராளமாக ஆண்கள் வரலாம்.நான் முடிவெட்டுவதில் முகசவரம் செய்வதில் ஹேர்டை அடிப்பதில் ஓரு சிறு குறை கூட இருக்காது, அந்த அளவிற்கு நேர்த்தியாக என் தொழிலை செய்வேன் இருந்தாலும் என்னிடம் முகத்தை காட்ட தலையை காட்ட தயங்கும் வாடிக்கையாளர்களுக்காக ஒரு ஆண் ஒருவரையும் தற்போது வேலைக்கு அமர்த்தியிருக்கிறேன்.
மேலும் நான் டெய்லரிங் டிப்ளமோவும் படித்திருப்பதால் கடைக்கு உள்ளேயே மெஷின் போட்டு முடிவெட்டும் வேலை இல்லாத நேரத்தில் பெண்களுக்கான உடைகள் தைத்து கொடுக்கிறேன்.
வரவிற்கும் செலவிற்கும் சரியாக இருக்கிறது ஆனாலும் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் நானே உழைத்து என் குழந்தைகளை படிக்கவைப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. கொஞ்சம் கூடுதல் வருமானம் வரும்போது கடையை விரிவுபடுத்தி பெண்களுக்கான பியூட்டி பார்லர் வைக்கவேண்டும் என்ற எண்ணமும் உள்ளது.
இப்படி நான் எதைச்செய்தாலும் இந்த சலுான் கடையை மட்டும் விட்டுவிடமாட்டேன் காரணம் இது என் கணவர் வாழ்ந்த இடம் எனக்கு வாழ்க்கையை சொல்லிக்கொடுத்த இடம் என்னை வாழவைத்துக்கொண்டு இருக்கும் இடம் என்று கூறும் பெட்ரிஷியாவிடம் பேசுவதற்கான எண்:9788486183.
-எல்.முருகராஜ்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE