தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை சிந்தனை| Dinamalar

தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை சிந்தனை

Updated : ஜூலை 20, 2015 | Added : ஜூலை 20, 2015
தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை சிந்தனை

இன்று உலகெங்கிலும் பரவலாகப் பேசப்பட்டு வருவது உடன்பாட்டுச் சிந்தனை. இந்த நேர்மறை சிந்தனையை புலப்படுத்தும் விதத்தில் ஆங்கிலத்தில் பல நுால்கள் வெளிவந்துள்ளன. எதையும் உடன்பாட்டு நோக்கில் பார்ப்பது, நம்பிக்கையோடு அணுகுவது என்பது தமிழ் மண்ணுக்குப் புதியது அல்ல.
தொல்காப்பியர் முதல் இன்றைய ஹைகூ கவிஞர் வரை தமிழைப் பொறுத்த வரையில் பெரும்பாலானோர் உடன்பாட்டுச் சிந்தனையாளர்களாகவே விளங்குகின்றனர்.தொல்காப்பியமே தமிழில் முழுமையாகக் கிடைக்கும் பழைய இலக்கண நுால். இந்நுாலில் கூட உடன்பாட்டுச் சிந்தனையின் பதிவை ஆங்காங்கே காணமுடிகிறது.
சங்க இலக்கியத்தில் தமிழில் தொன்மையான இலக்கியம் சங்க இலக்கியம். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எனப் பதினெட்டு நுால்களின் தொகுப்பு அது.பக்குடுக்கை நன்கணியார் என்ற புறநானுாற்றுப் புலவரின் உலகப் பார்வை இங்கே கவனிக்கதக்கது.
“இன்னாது அம்ம, இவ் வுலகம்;இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே”என்பது அவரது வாக்கு.'இந்த உலகம் கொடியது தான்' எனினும் இதன் இயல்பினை உணர்ந்தவர்கள் இதிலும் இனிமையைக் காணக் கற்றுக்கொள்ள வேண்டும்' என்பது அருமையான உடன்பாட்டுச் சிந்தனையின் எதிரொலி ஆகும்.
'எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே!' என்றனர் சங்கச் சான்றோர். திருக்குறளில் ஆல்பர்ட் சுவைட்சரில் இருந்து அப்துல் கலாம் வரை திருவள்ளுவரை வானளாவப் போற்றிப் புகழ்வதற்குக் காரணம் அவரது உடன்பாட்டுச் சிந்தனையே. வள்ளுவர் எங்கும் உலகையோ, வாழ்க்கையையோ, இல்லறத்தையோ, பெண்மையையோ மருந்துக்குக் கூட இழித்தோ பழித்தோ பேசவில்லை; எதிர்மறையான சிந்தனைகளை மொழியவில்லை; உயர்த்தியும் போற்றியுமே உரைத்துள்ளார். 'அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை', 'பெண்ணிற் பெருந்தக்க யாவுள?' என்கிறது குறள்.
“தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும்”என வள்ளுவர் ஊழ்வினையைப் புறந்தள்ளி, மனித முயற்சிக்கு மகுடம் சூட்டியிருக்கிறார். சிலப்பதிகாரத்தில் தமிழில் தோன்றிய முதல் காப்பியம் சிலப்பதிகாரம். அவலக் காப்பியமான சிலப்பதிகாரம் மங்கல நிகழ்ச்சியான கோவலன்-கண்ணகி திருமணத்தில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது. இது, இளங்கோவடிகளின் உடன்பாட்டுச் சிந்தனையை காட்டுகிறது.
கணிகையர் குலத்தைச் சார்ந்த மாதவிக்குக் காப்பியத்தில் கண்ணகிக்கு நிகரான ஓர் இடத்தி னைத் தந்திருப்பதும், இல்லறத்தைப் புகழ்ந்து கண்ணகியின் கற்பு வாழ்வை உயர்த்திக் கூறியிருப்பதும், கொடியவன் என எவரும் இல்லாமலே காப்பியத்தைச் சுவையாக நடத்திச் சென்றிருப்பதும் ஒரு வகையில் பார்த்தால் உடன்பாட்டுச் சிந்தனையின் தாக்கமே எனலாம்.
பக்தி இயக்கக் காலத்தில் :பக்தி இயக்கத்தின் முன்னோடியான திருமூலர் திருமந்திரத்தில் 'நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்று தாயுள்ளத்தோடு பாடியுள்ளார். உடம்பினை இழித்தும் பழித்தும் பாடாமல்- 'உடம்பினுள்ளே உறுபொருள் கண்டேன்' என்றும், 'உடம்பினை யான் இருந்து ஓம்புகிறேன்' என்றும் உடம்பின் இன்றியமையாமையை உணர்த்தும் வகையில் பாடியிருக்கிறார்.
ஆதிசங்கரரால் 'திராவிட சிசு' எனப் பாராட்டப் பெற்றவர் திருஞானசம்பந்தர். குழந்தை ஞானியான அவருடைய பாடல்களில் சோர்வையோ, கலக்கத்தையோ, துயரத்தையோ காண்பது அரிது; ஊக்கமும் நம்பிக்கையும் எழுச்சியுமே ததும்பி நிற்கும்.உதாரணமாக“மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலைகண்ணில் நல்லதுறும் கழுமல வளநகர்ப்பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே” என பாடினார்.
“ நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம் இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை”என்னும் அப்பர் பெருமானின் வாக்கு.ஏழாம் நுாற்றாண்டில் பிறந்த அழகிய உடன்பாட்டுச் சிந்தனையின் வெளிப்பாடு ஆகும்.
பாரதியாரின் சிந்தனை :இருபதாம் நுாற்றாண்டின் விடியலில் தமிழால் தகுதி பெற்று, தமிழுக்குத் தகுதி சேர்த்த தனிப்பெருங் கவிஞர் பாரதியார். வாழ்ந்த காலமெல்லாம் வறுமைத் துன்பத்தில் வாடினாலும், 'ஒன்று பரம்பொருள், நாம் அதன் மக்கள், உலகு இன்பக் கேணி' என்றே நம்பிக்கையுடன் முழங்கினார் அவர்; 'எத்தனை கோடி இன்பம் வைத்தாய் - எங்கள் இறைவா! இறைவா! இறைவா!' என்றே மூன்று முறை இறைவனை விளித்துப் பாடினார் அவர்;
'நம்பினார் கெடுவதில்லை, நான்குமறைத் தீர்ப்பு; அம்பிகையைச் சரண் புகுந்தால், அதிக வரம் பெறலாம்' என்று தன்னம்பிக்கை சிந்தனையை வெளிப்படுத்தினார்.“ இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டுதின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்!”'காட்சி' என்னும் தலைப்பில் பாரதியார் எழுதிய வசன கவிதையிலும் அவரது உடன்பாட்டுச் சிந்தனை அழகுற வெளிப்பட்டிருக்கிறது.“இவ்வுலகம் இனியது… மனிதர் மிகவும் இனியர்.ஆண் நன்று. பெண் இனிது. குழந்தை இன்பம். இளமை இனிது. முதுமை நன்று. உயிர் நன்று. சாதல் இனிது”இவ்வுலகில் பிறப்புத் தொடங்கி மனிதனுடைய மூச்சுத் தொடரின் முற்றுப் புள்ளியான மரணம் வரைக்கும் அனைத்திலும் இனிமையைக் காணும், -நன்மையை நாடும் - அற்புதமான மனநிலையின் ஆற்றல் மிக்க வெளிப்பாடு இக்கவிதை.
புதிய தமிழ்க் கவிதையில் இருபதாம் நுாற்றாண்டுக் கவிதை வடிவங்களான புதுக்கவிதை, ஹைகூ ஆகியவற்றிலும் ஆங்காங்கே உடன்பாட்டுச் சிந்தனைகள் தலைகாட்டுகின்றன. படிப்பவர் நெஞ்சில் நம்பிக்கை ஒளியைப் பாய்ச்ச வல்ல இத்தகைய கவிதைகள் ஒன்றிரண்டை இங்கே காண்போம்.
“இளம்பிறையே! உனது ஏழைமையைநினைத்து வருந்தாதே! ஏனென்றால்உன்னுள்ளேதான் பூர்ணசந்திரன்புதைந்து கிடக்கிறான்”என்பது இக்பால் படைத்துள்ள புதுக்கவிதை.ஈரோடு தமிழன்பனின் கவிதையில்“பத்தாவது தடவையாக விழுந்தவனுக்குமுத்தமிட்டுச் சொன்னது பூமி:ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ?”'ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் தவறி விழுவது என்பது அவ்வளவு முக்கியம் அன்று; விழும் போதெல்லாம் அவன் விடாமல் எழ நினைப்பதும், முயல்வதும் தான் முக்கியம்' என்று தன்னம்பிக்கை விதை துாவுகிறார் கவிஞர்.
இங்ஙனம் தமிழ் இலக்கியத்தில் காலந்தோறும் உடன்பாட்டுச் சிந்தனையின் தாக்கத்தினைக் காண முடிகிறது.
- முனைவர் நிர்மலா மோகன்தகைசால் பேராசிரியர்காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்காந்திகிராமம். 94436 75931We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X