கவர்னர் பதவி ஆசை... காசைப் பறிச்ச மீசை!

Added : ஜூலை 21, 2015
Advertisement
கவர்னர் பதவி ஆசை... காசைப் பறிச்ச மீசை!

கையில் கட்டோடு, சுந்தராபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனை ரிசப்ஷனில் மித்ரா உட்கார்ந்திருக்க, பதறியபடி வந்த சித்ரா, ''என்னடி மித்து...என்ன ஆச்சு, பெருசா ஒண்ணும் 'ஃப்ராக்சர்' ஏதுமில்லையே?'' என்று விசாரித்தாள்.
''எனக்கு ஒண்ணுமில்லக்கா...என் வண்டிக்கு முன்னால, 'பைக்'ல போன பையனுக்கு தான், நல்ல அடி. அநேகமா, ரெண்டு மூணு எலும்பு முறிஞ்சிருக்கும். நல்லவேளை, 'ஹெல்மெட்' போட்டதால தலை தப்பிச்சது. ஆக்சிடென்டுக்கு காரணம் தெரியுமா?'' என்று
நிறுத்தினாள் மித்ரா.
''என்னடி...ஓவர் ஸ்பீடா?''
''இல்லக்கா...யாரோ ஒரு கடைக்காரங்க, ரோட்டுல பூசணிக்காயை உடைச்சிருக்காங்க. இந்த ரோட்டுல, இன்னும் டியூப்லைட் தான இருக்கு...இருட்டுல ஒண்ணும் தெரியலை. முன்னாடி போன அந்த பையன் வண்டி, பூசணிக்காய்ல வழுக்கி விட, பின்னாடி வந்த நானும், ரெண்டு மூணு வண்டிக்காரங்களும் தடுமாறி விழுந்துட்டோம்''
''நம்மாளுங்க எப்ப தான் திருந்துவாங்களோ தெரியலை. ரோட்டுல தேங்காயே உடைக்கக்கூடாதுன்னு சொல்றாங்க. பூசணிக்காயை ரோட்ல உடைச்சா, டூவீலர்களுக்கு வழுக்கும்னு தெரியாதா... வர வர நம்ம மக்களுக்கு சமூக அக்கறையும் இல்லை. சட்டத்தைப் பத்தின பயமும் இல்லை'' என்றாள் சித்ரா.
''சட்டத்தை அமல்படுத்த வேண்டிய பொறுப்புல இருக்கிறவுங்களே, சட்டத்தை மதிக்கலைன்னா, மத்தவுங்க எப்பிடி பயப்படுவாங்க'' என்றாள் மித்ரா.
''நான் பொதுவாச் சொன்னேன். நீ யாரையோ குறிப்பிட்டுச் சொல்ற மாதிரி இருக்கே''
''ஆமாக்கா! நம்மூர்ல ரெவின்யூ டிபார்ட்மென்ட்ல பெரிய பொறுப்புல இருக்கிற 'பேச்சிளர்' மேடம், எந்த சிக்னலையும் மதிக்கிறதேயில்லை. அன்னிக்கு அவிநாசி ரோட்டுல, நானே என் கண்ணால பார்த்தேன். ஒவ்வொரு சிக்னலா, துரத்திப் பார்த்தேன். ம்ஹூம்...எதுலயுமே நிக்கலை. சிக்னலுக்காக காத்திருந்த மக்களையும் ஹாரன் அடிச்சு, அலற விட்டு, இவுங்க வண்டி மட்டும் பறந்திருச்சு''
''நல்லாப் பார்த்தியா, அவுங்க இருந்திருக்க மாட்டாங்க'' என்றாள் சித்ரா.
''அவுங்க தான் முன்னாடி உக்காந்திருந்தாங்க. மக்கள் எல்லாருமே பார்த்தாங்க. இதே மாதிரி, அவிநாசி ரோட்டுல 'சிக்னலை' மதிக்காமப் போனவரோட கதி என்னாச்சுன்னு இவுங்களுக்குத் தெரியாதுல்ல'' என்றாள் மித்ரா.
''அக்கா! ட்ரீட்மென்ட் முடிஞ்சது. கிளம்பலாம். எனக்கு ரொம்ப 'டயர்டா' இருக்கு. ஒரு ஜூஸ் குடிச்சா நல்லாயிருக்கும்'' என்று மித்ரா சொல்ல, இருவரும் வெளியே வந்தார்கள்.
''மித்து! நீ சொன்னியே, யாரையுமே மதிக்காம இருந்த பழைய 'டவுன் டாடி', இப்போ பெருசா ஒரு குரூப் 'பார்ம்' பண்ணிட்டு இருக்காராமே''
''நானும் அப்பிடித்தான் கேள்விப்பட்டேன்க்கா...அவரைப் பத்தி, மாஜி 'துணை மேயர்' சின்னதுரை லெட்டர் பேடுல, அவரு கையெழுத்தைப் போட்டு, பகீர் புகார், பல பேருக்குப் போயிருக்கு தெரியுமா?''
''ஆமா மித்து! இவரு பதவியைப் பறிச்சு, சேஜ்ஜிகிட்ட கொடுத்ததே, அவர் தான்னு சொல்லுவாங்களே'' என்றாள் சித்ரா.
''ரெண்டு பேருக்கும் இடையில பிரச்னை இருந்ததெல்லாம் உண்மை தான். ஆனா, அந்த புகாரை அனுப்புனது சின்னதுரை இல்லையாம். அவரோட லெட்டர் பேடு மாதிரியே போலியா தயாரிச்சு, அவரை மாதிரியே கையெழுத்துப் போட்டு, சி.எம்.,செல்லுக்கு அனுப்பிருக்காங்க'' என்றாள் மித்ரா.
''அதுல அப்பிடி என்ன தான் 'கம்பிளைன்ட்' இருந்துச்சு?''
''எல்லாம் பழைய கதை தான். யாரையும் மதிக்காம கேவலமா பேசுனது, கார்ப்பரேஷன் வண்டியை பல்லடம் எடுத்துட்டுப் போய், 'ஒன் வே'ல போய், ஒருத்தரை அடிச்சுத் துாக்குனது, அந்த பையன் குடும்பத்துக்கு, பைசா காசு கொடுக்காதது, பூ பேர்ல இருக்கிற ஹாஸ்பிடலை வாங்குனதுன்னு ஆறேழு பக்கத்துக்கு இருக்கு அந்த புகாரு''
''கையெழுத்தே பொய்ன்னா, அதுல இருக்கிற புகாரெல்லாம் பொய்யின்னு தானே அர்த்தம்'' என்றாள் சித்ரா.
''அதெல்லாம் விசாரிச்சாத்தான் தெரியும். சிஎம் ஆபீஸ்ல இருந்து விசாரிக்கணும்னு தான், இப்பிடி 'பெட்டிஷன்' போட்ருப்பாங்கன்னு நினைக்கிறேன்'' என்றாள் மித்ரா.
பழக்கடைக்கு வந்து, இரண்டு மாதுளை ஜூஸ் சொல்லிவிட்டு, காத்திருந்தார்கள் இருவரும். ஜூஸ் கடையில், பண்பலையில் 'என் பேரு மீனா குமாரி....என் ஊரு கன்யாகுமரி' என்று டிஎஸ்பி இசையில், மாலதி மிரட்டிக் கொண்டிருந்தார்.
பாட்டைக் கேட்டதும், ஏதோ நினைவுக்கு வந்ததைப்போல, பேச்சை தொடர்ந்த சித்ரா, ''மித்து, திடீர்ன்னு பதிவுத்துறை ஞாபகம் வந்துருச்சு. அங்கயிருக்கிற ஒரு மேடம், ஜெனரல் டிரான்ஸ்பர்ல, பத்துப் பதினைஞ்சு லட்சம் கலெக்ஷன் பாத்துட்டாங்களாமே'' என்றாள்.
''இவுங்களுக்கு மேல ஒரு ஆபீசர் இருக்காரே... அவர் சும்மாவே 'மணியம்' பண்றவராச்சே. எப்டி விடுவாரு?''
''ஆனா...இந்த மேடம் யாரு சொன்னாலும் கேக்க மாட்டாங்களாம். பெரிய ஆபீசர் சொன்னதுக்காக, ரெண்டு மூணு டிரான்ஸ்பர் தான் போட்ருக்காங்க. மத்தபடி, 29 அசிஸ்டென்ட் டிரான்ஸ்பரு, ஏகப்பட்ட ஓ.ஏ., டிரான்ஸ்பரு எல்லாமே, அவுங்க இஷ்டப்படி தான், 50 ஆயிரம், ஒரு லட்சம்னு வாங்கிட்டு போட்ருக்காங்களாம்''
''நீ வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைக்காதக்கா...அவரும் சாதாரண ஆளு இல்லை. அவரு தான், டிரான்ஸ்பருக்கு எக்கச்சக்கமா வசூல் பண்ணிட்டு, இவுங்களை மிரட்டுறதா கேள்விப்பட்டேன்'' என்றாள் மித்ரா.
''அதை விடு...நாலு தாசில்தார்களை மட்டும் ஏன் மாத்துனாங்கன்னு உனக்குத் தெரியுமா?'' என்றாள் சித்ரா.
''வழக்கமான டிரான்ஸ்பர்ன்னு தான் சொன்னாங்க''
''யாரு சொன்னது...ஒரு வருஷம் ஆவுறதுக்குள்ள தூக்குறாங்கன்னா என்ன அர்த்தம்? பயங்கர கம்பிளைன்ட்டு... லேண்ட் மேட்டர்ல புகுந்து விளையாடிருக்காங்க. விசாரிச்சா, பல விவகாரம் வெளிய வரும்''
''அந்த போலி டிஐஜியை விசாரிச்சதுல, ஒரு விவகாரம் வெளிய வந்துருக்கு பார்த்தியா?'' என்றாள் மித்ரா.
''அறநிலையத்துறையில 'சஸ்பெண்ட்' ஆன ஜேசி ஒருத்தரு, இவர்ட்ட ஏமாந்து பணம் கொடுத்த மேட்டரா?'' என்றாள் சித்ரா.
''அதில்லை...நம்மூர்ல பிரபலமான டாக்டர் ஒருத்தரோட 'புரஃபைல்' அந்த ஆள்ட்ட இருந்திருக்கு. விசாரிச்சப்ப, கோவா கவர்னரா ஆகணும்னு ஆசைப்பட்டு, அந்த டாக்டரே என்கிட்டக் கொடுத்தாருன்னு சொன்னாராம். பணம் கொடுத்தாரான்னு தான் தெரியலை''
''அந்த மீசை ஆசாமி, 'நானே டம்மி பீசு. என்னைய நம்பி, இத்தனை பேரு வந்து, அவுங்களோட ஆசைய சொல்லிட்டுப் போயிருக்காங்க'ன்னு சொன்னாராமே''
''நல்ல கூத்து தான். நீ டம்மி பீசுன்னு சொன்னதும், நம்மூர்ல முக்கியமான பொறுப்புல இருக்கிற 'மாண்புமிகு டாக்டர்' ஞாபகம் வந்துச்சு. அவரையும் அப்பிடியே 'டம்மி'யாத்தான வச்சிருக்காங்க'' என்றாள் மித்ரா.
''கார்ப்பரேஷன்ல அவரைத் தவிர, எல்லாரும் வளைச்சு சம்பாதிக்கிறாங்க. இவரு ஏதோ, இடைத்தேர்தல் செலவுக்கு வாங்குன கடனுக்கு, சொந்தப்பணத்துல வட்டி கட்றாருன்னு, அவரோட ஆளுங்க சொல்றாங்க. நிஜமாவா?'' என்றாள் சித்ரா.
''அது தெரியலை. ஆனா, கார்ப்பரேஷன்ல நடக்குற எந்தத் தப்பையுமே அவரால தட்டிக் கேக்க முடியலைன்னு மட்டும் நல்லாத் தெரியுது'' என்றாள் மித்ரா.
''கார்ப்பரேஷன்ல முன்னாடி இருந்த ஆபீசர்ங்க, பெரிய அளவுல நிதியை வச்சிட்டுப் போனாங்க. அதை எடுத்து, இப்போ தாறுமாறா 'எஸ்டிமேசன்' போட்டு, அள்ளித் தட்றாங்க'' என்றாள் சித்ரா.
''கார்ப்பரேஷன்...நிதின்னு சொன்னதும், ஆளும்கட்சி கவுன்சிலர் ஒருத்தரு போதையில சிக்குன மேட்டர் ஞாபகம் வந்துச்சு'' என்றாள் மித்ரா.
''நம்ம தமிழ்நாட்டுல தான், போதைக்கும், நிதிக்கும் நிறையா சம்மந்தமிருக்கே'' என்று சிரித்தாள் சித்ரா.
''அதே தான்... அந்த கவுன்சிலர், அடிக்கடி தண்ணியப் போட்டுட்டு, 'பைக்'ல போறப்ப, ரத்தினபுரி போலீஸ்ல பிடிபட்ருக்காரு. பல முறை 'வார்ன்' பண்ணி அனுப்பிருக்காங்க. போன வாரம், ஒரு 'ஸ்ரிக்ட்' எஸ்ஐட்ட சிக்கிட்டாரு. அவரு அலெக்ஸ்பாண்டியன் ஸ்டைல்ல, வண்டியைப் பிடிச்சு நிறுத்தி, இவரை 'டிடி'யில பதிவு பண்ணிட்டாரு. அப்புறம், அபராதம் கட்டிட்டு தான், வண்டியை எடுத்திருக்காரு'' என்றாள் மித்ரா.
''மித்து! நம்ம மருதமலை மாமன்னரைப் பத்தி, ஒரு நியூஸ்...வர்ற செப்டம்பர்ல 'ரிட்டயர்டு' ஆன பிறகு, வேற ஒரு பதவியைப் பிடிக்கணும்னு தீவிரமா முயற்சி பண்ணுனாரே. எல்லாமே ஊத்திக்கிச்சாம். அது மட்டுமில்லாம, அவர் போட்ட 'போஸ்ட்டிங்'குக்கும் சிக்கல் வந்துருச்சாம். அவரு மேல இருக்கிற புகார்களை விசாரிக்க, 'என்கொயரி கமிட்டி'யும் சீக்கிரமே போடப்போறாங்களாம்''
''ரொம்ப சந்தோஷமான சேதி...நிச்சயம் கிடைக்குமா நீதி'' என்று டிஆர் பாணியில் மித்ரா வசனம் பேச, 'அம்மா, ஜூசைக் குடிச்சிட்டு, தெம்பாப் பேசுங்க' என்று கடைக்காரர் 2 கிளாஸ்களை நீட்ட, இருவரும் சிரித்துக் கொண்டே வாங்கி, மாதுளை பழரசத்தை உறிஞ்ச ஆரம்பித்தார்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X