ரேஷன் கடைக்கு சென்றிருந்த சித்ரா, வழக்கம்போல், பொருட்கள் "ஸ்டாக்' இல்லைன்னு சொல்லிட்டாங்க என, புலம்புடன் வீட்டுக்கு திரும்பினாள்.
வெறுங்கையுடன் திரும்பிய சித்ராவை வரவேற்ற மித்ரா, ""அதான், மூட்டை மூட்டையா கடத்துறாங்களே, அப்புறம் எப்படி? கடைகளில் பொருட்கள் கெடைக்கும்,'' என, அங்கலாய்த்தாள்.
""எங்கப்பா, கடத்துனாங்க? ரேஷன் கடையில இருந்தா?'' என சித்ரா கேட்க, ""கொஞ்ச நாளைக்கு முன்னாடி, வாணிப கழக குடோனில் இருந்து, மகளிர் குழு நடத்தும் ரேஷன் கடைக்கு அரிசி மூட்டை ஏத்திட்டு, ஒரு வேன் போயிருக்கு.
15 நிமிஷத்துல கடக்க வேண்டிய ஒரு பகுதிக்கு, ஒரு மணி நேரம் கழிச்சு வந்துருக்கு; போலீஸ்காரங்க தடுத்து நிறுத்துனா, 62 மூட்டைகளை காணோம். வழக்கை விசாரிச்சு, மூன்று பேரை கைது செஞ்சு சிறையில் தள்ளிட்டாங்க. ஆனா, இன்னும் மூட்டைகளை கண்டுபிடிக்கலை. ரேஷன் கடை நடத்தும் மகளிர் குழு உரிமத்தையும் ரத்து செய்யாம இருக்காங்க. இதுதான் மர்மமா இருக்கு. ரேஷன் கடை நடத்துறது யார்? பெரிய புள்ளிக்கு சம்பந்தம் இருக்கா? எதைப்பத்தியும் விசாரிக்காம, மாவட்ட நிர்வாகம் வேடிக்கை பார்த்துட்டு இருக்கு,''
என்றாள் மித்ரா.
""மாவட்ட நிர்வாகம்னு சொன்னதும், நானும் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். உண்மையா?,'' என, சித்ரா கேட்க, ""என்னது,'' என, மித்ரா, புருவத்தை உயர்த்தினாள்.
""வீதி, வீதியா கலெக்டர் சுத்தினாராமே,'' என்றாள் சித்ரா.
""ஆமாக்கா, முன்னறிவிப்பு ஏதுமின்றி, சுகாதாரத்துறை சிறப்பு செயலர் செந்தில்குமார், திடீருன்னு திருப்பூருக்கு வந்துட்டார். ஒவ்வொரு துறை அலுவலர்களையும், ஒரு பிடி பிடிச்சிட்டார். அதுக்கப்புறம், டெங்கு பாதிப்புக்குள்ளாகி, ரெண்டு குழந்தைங்க இறந்த பகுதிக்கு, கௌம்பி போனார். வீதி வீதியா நடந்து சென்ற அவர், வீட்டுக்குள் நுழைந்து, குடிநீர் சப்ளையாகும் விவரத்தை கேட்டு தெரிஞ்சிக்கிட்டார். "லேட்'டா வந்த கலெக்டர், எந்த வீதியில் சிறப்பு செயலர் இருக்காருன்னு தெரியாமல் குழம்பினார். கார் டிரைவரும், உதவியாளரும், ஜனங்ககிட்ட விசாரிச்சாங்க. "இந்தப்பக்கம்தானுங்க போனாரு' என, ஒவ்வொருவரும் அப்பாவியாய் சொல்ல, காரை நிறுத்திட்டு, வேகமா நடந்து போயி, அவுங்களோடு இணைச்சிட்டார். படபடப்புடன் இருந்த அவர், "ஒழுங்கா தண்ணீ கொடுக்கிறோம்; கொசுமருந்து தெளிக்கிறோம்'னு சொல்லிக்கிட்டு இருந்தார்,'' என, நீண்ட விளக்கம் கொடுத்தாள் மித்ரா.
""அதெல்லாம் சரி, குளத்தை தூர்வாரி, பூங்கா அமைக்கும் பணி இழுத்துக்கிட்டே இருக்கே; சண்டை இன்னும் ஓயலையா?'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.
""மாவட்ட எல்லையில் இருக்குது, அந்த குளம்; கிட்டத்தட்ட, நான்கு கோடி ரூபாய் மதிப்புல மேம்படுத்த திட்டமிட்டிருக்காங்க. பெரிய "புராஜெக்ட்'. நம்மூருக்கும், பக்கத்து ஊருக்கும்னு கணக்கு சொல்லி ரெண்டு தரப்புக்கு கமிஷன் பங்கிடுவதில் பிரச்னை. வனத்துக்கு ராஜாவா இருந்தவர், எங்க மாவட்டத்துக்குள் குளம் வருதுனு சொல்லியிருக்கார். அதனால, பணியை கெடப்புல போட்டுட்டாங்க. பதவி காலியான பின்னால, பிரச்னை பண்ணாம ஒதுங்கிட்டார். இப்ப என்னடான்னா, சேத்துக்குள்ள தூர் வாரும் இயந்திரம் சிக்கியிருக்கு; ஒரு அதிகாரி கூட எட்டிப்பார்க்காம, இருக்காங்க,'' என்றாள் மித்ரா.
""வாக்காளர் பட்டியல் வெளியிட்டிருக்காங்களாமே. இப்ப, என்ன அவசரம்?,'' என, சித்ரா, கடைசி மேட்டருக்கு தாவினாள்.
""ஆதார் எண், மொபைல் எண் வாங்குனாங்கள்ல, அதை சரிபார்த்து, கள ஆய்வு செஞ்சு, நம்ம மாவட்டத்துல மட்டும், 52 ஆயிரம் வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்க, "லிஸ்ட்' ரெடி பண்ணியிருக்காங்க. அவகாசத்துக்குள், ஆதாரம் கொடுக்கலைன்னா, 2016 தேர்தல்ல, நெறைய்யா பேரு ஓட்டு போட முடியாது,'' என்றபடி, சமையலறைக்குள் நுழைந்தாள் மித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE