அறநெறி உணர்த்தும் இலக்கியங்கள் | Dinamalar

அறநெறி உணர்த்தும் இலக்கியங்கள்

Added : ஜூலை 22, 2015 | கருத்துகள் (3)
Advertisement
அறநெறி உணர்த்தும் இலக்கியங்கள்

ஜெர்மன் மொழியை விஞ்ஞான மொழி என்றும், ஆங்கிலத்தை வியாபார மொழி என்றும், தமிழ் மொழியை 'பக்திமொழி' என்றும் பல அறிஞர்கள் பாராட்டுகின்றனர். மற்ற மொழி இலக்கியங்களை காட்டிலும், தமிழில் அறம் உணர்த்தும் இலக்கியங்கள் மிகுதி. தமிழ், இயற்கையோடு இணைந்த இனிய மொழி. முயன்று வெளிப்படுத்த வேண்டிய தேவையின்றி, வாயை திறந்தவுடன் சிறு முயற்சியால் பிறப்பன. பல்லாயிரக்கணக்கான ஆண்டு வழிவழியே தொடர்ந்து இலக்கிய செறிவுடையதாய், இலக்கண கட்டுக்கோப்பு சிதையாமல் வளர்ந்து வருகிறது நம் தமிழ் மொழி.
அற ஒழுக்கம் :தமிழ் மொழியில் அமைந்துள்ள இலக்கியங்கள் மனித குலத்தை இன்புறுத்தி அதன் வழியே அற ஒழுக்கத்தை உணர்த்தும் வலிமை உடையதாக விளங்குகிறது. மக்கள் ஆறறிவு உடையவர்கள். விலங்கு, பறவை முதலியன ஐந்தறிவு உடையன. மக்களுக்குரிய ஆறாவது அறிவினால் உண்டாவது தான் அற ஒழுக்கம். அற ஒழுக்கமே மக்களுக்கும், விலங்குகளுக்கும் உள்ள வேறுபாடு. விலங்குகள் கண்ட இடத்தில் கண்டதையெல்லாம் மனம் போனபடி செய்யும். மனிதன் அவ்வாறு செய்வதில்லை. இன்னவை இன்ன முறையில் செய்ய வேண்டுமென்று வரையறுத்து வாழ்கின்றான். இலக்கியங்கள் இவ்வாழ்க்கை முறையைத்தான் மனித மனத்திற்கு உணர்த்துகின்றன.
மக்களாக பிறந்தவர்கள் எல்லோரும் உயர்வாக மதிக்கப்படுவதில்லை. அவர்களில் அற ஒழுக்கம் உடையவர்களே உயர்ந்தவர்கள் என மக்களால் மதிக்கப்படுகிறார்கள். அற ஒழுக்கம் உள்ள ஒருவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு உண்டாகிறது. அவன் வாழ்க்கையில் மென்மேலும் உயர்கிறான். போற்ற தவறுவதில்லை அற ஒழுக்கம் என்றால் என்ன? என்று நாம் வரையறுத்து கூற முடியாது. நம் இலக்கியங்களில் பெரியோர்களால் நல்ல செயல்கள் எது, எதுவென்று கூறப்பட்டிருக்கின்றனவோ அவையெல்லாம் அற ஒழுக்கம் என்று கருதிட வேண்டும். மனம், மொழி, மெய்களை தீய நெறியில் செல்ல விடாமல் தடுத்து நன்னெறியில் நிறுத்த, நம் இலக்கியங்கள் துணை புரிகின்றன. துாய்மையான பழக்க வழக்கங்கள், எண்ணம், செயல், பொய் சொல்லாதிருத்தல், திருடாதிருத்தல், பிறருக்கு தீங்கு செய்யாதிருத்தல், இன்னா சொற்களை சொல்லாதிருத்தல், பிறரிடத்தில் அன்பும், அருளும் கொண்டிருத்தல், இவைபோல என்னென்ன செயல்கள் உண்டோ, அவ்வளவையும் நம்முடைய இலக்கியங்கள் நம்மை செய்யப் பழக்குவதே அற ஒழுக்கம் என்று கூறலாம்.
“அறஒழுங்கு ஊரை ஆளும்” என்பது பழமொழி. அற ஒழுக்கத்தின் படி நடந்தவர்களை நாடு போற்ற தவறுவதில்லை.மனிதன் படித்த பாடத்தை மறந்து விட்டால் மீண்டும் படித்து அறிவை பெற முடியும். அற ஒழுக்கத்தை தவறவிட்டால் அவனது குடிப்பிறப்பு எவ்வளவு உயர்ந்ததாகினும் அதன் பெருமை மங்கி விடும். கல்வியைக் காட்டிலும் அற ஒழுக்கமே சிறந்தது. அற ஒழுக்கமும், பண்பாடும் வளர்ந்தால் தான் வாழ்க்கை முழுமையாக நிறைவு பெறும் என்பதை உணர வேண்டும். அந்த அற ஒழுக்கத்தை போதிக்க கூடிய, மனதிற்கு இன்பத்தை தரக்கூடிய இலக்கியங்களை கற்று அதன் வழி அற ஒழுக்கத்தோடு வாழ வேண்டும். இலக்கியம் என்பது யாது? 'இலக்கினை இயம்புவதே இலக்கியம்'. பொன்னாலும், பொருளாலும் நாம் அடையும் இன்பங்கள் எல்லாம் நிலையற்றது. நிலையான இன்பத்தை தருவது இலக்கியத்தினால் அடையும் இன்பமே குறிக்கோள் இல்லாதது இலக்கியம் ஆகாது. 'இலக்கியம்' என்பது 'வாழ்வின் கண்ணாடி'. வாழ்க்கையை பிரதிபலிப்பது இலக்கியமானால், வாழ்வுக்கு வழிகாட்டிட வேண்டியதும் இலக்கியம். கலை, கலைக்காகவே என்பர் சிலர். அதற்கு மாறாக, கலை வாழ்க்கைக்கே என்பர் சிலர். நம் இலக்கியங்களை நாம் ஆராய்ந்தால், கலை வாழ்க்கைக்காகவே என்பது தெரிய வரும்.ஒரு இலக்கியத்தின் குறிக்கோள் எதுவோ அதுவே இலக்கியம் தரும் இன்பங்களுள் தலை சிறந்தது. சிலப்பதிகாரத்தை எடுத்துக்கொண்டால் அதில் உணர்த்தப்படும் கற்பின் சிறப்பு, செங்கோலின் இயல்பு அந்நுாலால் நாம் பெறும் இன்பம் ஆகும். -----பாண்டியன் நெடுஞ்செழியன் தான் செய்தது குற்றம் என உணர்கிறான். தான் இழைக்க கூடாத துன்பத்தை இழைத்து விட்டதாக எண்ணி நிலை குலைகின்றான்.“பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்டயானோ அரசன்? யானே கள்வன் !மன்பதை காக்கும் தென்புலம் காவல்என் முதல் பிழைத்தது ! கெடுகஎன் ஆயுள்''சிலம்பில் வரும் துன்ப வரிகள் இவை. ஆனால் கற்பவருக்கு இன்பத்தை அளிக்கும். இதுவே இலக்கிய இன்பத்தின் சிறப்பும், பயனும்.
ராமனும் குகனும் ராமன், குகனுடன் நட்பு கொண்டான். கங்கை ஆற்றை ராமன் கடந்து செல்ல காரணமானான். ராமனிடம் பக்தி கொண்ட குகன், பரதன் படையோடு வருகிறான் என்று உணர்ந்தான். அவன் ராமனை நாட்டிற்கு அழைத்து செல்ல வருகிறான் என்பதை உணரவில்லை. ராமனுடன் போரிட்டு ராமனை அழிக்கவே பரதன் வருகிறான் என உணர்ந்து சினங்கொண்டான். ஆழமான இந்த கங்கை ஆற்றை கடந்து இவர் போவாரோ? அவ்வாறு போவாரானால் என்னை வீரமற்ற வேடன் என்று சொல்ல மாட்டார்களோ? ராமன் என்னை நோக்கி தோழன் என்று கூறியது ஒப்பற்ற சொல்லன்றோ? என்கிறான். இதை கம்பர் அழகுற புனைந்துரைக்கிறார்.“ஆழ நெடுந்திரை ஆறுகடந்து இவர் போவாரோ?வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ?தோழமை யென்றவர் சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ?ஏழமை வேட னிறந்தில னென்றனை ஏசாரோ?”குகனின் இந்த சினம் நமக்கு இலக்கிய இன்பத்தை அளிக்கிறது. சகோதர வாஞ்சையையும் காட்டுகிறது. இப்படிப்பட்ட இலக்கிய இன்பத்திற்கு எல்லையில்லை. எண்ணும் தோறும் இன்பம் பயந்து துன்பத்தை போக்குகின்றது. அற ஒழுக்கத்தை உணர்த்தும் நுால்கள் இருவகை. ஒன்று நேரிடையாக அறம் உணர்த்துவது. மற்றொன்று மறைமுகமாக உணர்த்துவது.
அற ஒழுக்கத்தை நேரிடையாக உணர்த்தினால் அதை கற்பவருக்கும், கேட்பவருக்கும் சற்று கடினமாக இருக்கும். ஏற்று கொள்வதும் அரிதாகும். ஆதலால் மறைமுகமாக சான்றோர் உரைத்தனர். “அறம் செய விரும்பு” என்பது அவ்வையார் வாக்கு. இதை ஒருவர் ஏற்று கொள்ளலாம். மற்றவர் மறுக்கலாம். ஆனால் ஒரு கதையை சொல்லி அதன் மூலமாக அறப்பயனையும், அறத்திற்கு மாறுபட்டு நடந்தவர் எய்தும் துன்பத்தையும் வெளிப்படுத்துகின்றபோது, “அறமே மேலானது அதுவே வெல்லும்” என்று கற்பவர் நெஞ்சில் நிற்கும். ஒரு மருந்தை நேரிடையாக உண்பதை விட, அதன் மேல் இனிப்பு பூசப்பட்டு உண்பது எளிதன்றோ!மனித இனத்தின் கூட்டு வாழ்க்கை சமுதாயம். அதன் அங்கமாக விளங்குகின்ற தனி மனிதனுக்கு இன்பத்தையும், இன்பம் சார்ந்த அற ஒழுக்க நெறியையும் உணர்த்துவதே நல்ல இலக்கியத்தின் பண்பாகும். இது போன்ற பற்பல இலக்கியங்களை நம் தமிழ்மொழி பெற்று உலக சமுதாயத்திற்கே வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகவும், இலக்கியத்தின் நற்களமாகவும் விளங்குகிறது.எம்.பாலசுப்பிரமணியன்செயலாளர், வள்ளல் அழகப்பர் தமிழ் இலக்கிய பேரவைகாரைக்குடி. 94866 71830.alagaunibalu@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naga - Edmonton,கனடா
22-ஜூலை-201520:22:52 IST Report Abuse
Naga கம்ப ராமாயணத்தை பக்தி நூலாக அல்லாமல் இலக்கியமாகவே பார்க்கலாம். அந்த அளவுக்கு இலக்கிய செறிவு உள்ளது. நீதியரசர் எம். எம். இஸ்மாயில் போன்றவர்கள் பல பட்டி மன்றங்கள், நடுவர் மன்றங்களை கம்ப ராமாயண தலைப்புகளில் நடத்தியிருக்கிறார்கள். திருக்குறள் எந்த மதம் சார்ந்த போதனையையும் செய்யவில்லை. அற நூல் வரிசையில் திருக்குறளுக்கு முக்கிய இடம் உண்டு. இன்றைய தலைமுறைக்கு தமிழ் இலக்கியத்தின் மாண்பை எடுத்து கூறுவது வருங்கால சந்ததிக்கு மிகவும் அவசியம்.
Rate this:
Share this comment
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
22-ஜூலை-201510:16:25 IST Report Abuse
Rameeparithi பக்தி மொழியை வைத்து அரசியல் செய்து பிழைக்கும் மஞ்சள் துண்டை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
ulaganathan.maa - Thiruneelakudi ,இந்தியா
22-ஜூலை-201507:12:16 IST Report Abuse
ulaganathan.maa இலக்கியத்தை இன்றைய தலைமுறை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.அன்பும், அறமும்,ஆக்கமும் ஊக்கமும் தரும் ஏராளமான செய்திகள் இலக்கியங்களில் புதைந்து கிடப்பதை உங்களைப் போன்றோர் எழுதும் கட்டுரைகள் துலக்கிப் புலப்படுத்துகின்றன.இளையவர்கள் படித்தால் எதிர்காலம் ஒழுக்கமானதாக மிளிரும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X