வாழ்வை ரசிப்போம்... நிறைவாய் வசிப்போம் : என்பார்வை| Dinamalar

வாழ்வை ரசிப்போம்... நிறைவாய் வசிப்போம் : என்பார்வை

Added : ஜூலை 23, 2015 | கருத்துகள் (6)
 வாழ்வை ரசிப்போம்... நிறைவாய் வசிப்போம் : என்பார்வை

நாம் மட்டும் ஏன் இப்படி வாழ்கிறோம்? பல நேரங்களில் சகமனிதர்களின் புலம்பல்கள் புதிராய் இருக்கின்றன. மணித்துளிகளைப் பணித் துளிகளாகவும், பணத் துளிகளாகவும் மாற்றி வாழ்ந்ததுபோதும். மனத்துளிகளை ரசிக்கவும் இனி நம் காலத்தைச் செலவிடலாமே. ஒரு சிறு நலம் விசாரிப்பு, ஒரு சிறு புன்னகை, ஒரு சிறு உதவி என மலர்ச்சி மயமாக்கலாமே! உயிரோடிருத்தல் மட்டுமே வாழ்தலின் அடையாளமாகாது. புன்னகையோடு தொடங்கும் நாள் மலர் மணத்தோடு இரவில் உறங்கச்செல்கிறது. கவலை மறந்த மனங்களில்தான் இறைவன் இருக்கிறான் எப்போதும். மகத்தான மானுட சமுத்திரத்தில் தோன்றி இயந்திரங்களைப்போல் எதற்காக நாம் ஆகவேண்டும்?. சிறுதுன்பங்களுக்கு எதற்கு மனம் உடைந்து உயிரை மாய்த்துக் கொள்ளவேண்டும்? எத்தனை கோடி இன்பம் அழகான வண்ண மலர்கள், நிலம் பார்த்து இறங்கும் ஆலம் விழுதுகள், அதில் தொங்கி ஆட்டம்போடும் அன்புக்குழந்தைகள், பசுமையான வயல்கள், கிணற்றில் அடிமண் தேடும் சிறுவர்கள், அற்புதமான வரப்புகள், வானை எட்டும் உயரமான மருதமரங்கள், அழகான குளக்கரைகள், அசையும் அழகுச்சிற்பங்களாய் அழகான ஆடுமாடுகள், பஞ்சாரத்தை விட்டுக் கொக்கரித்து வெளியேறும் கோழிகள், அதன் உடன்உறையும் அழகான கோழிக் குஞ்சுகள், கொய்யா மரத்திலிருந்து பயத்தோடு மிளகுக் கண்களால் எட்டிப் பார்க்கும் அணில் குஞ்சுகள், பசுஞ்சாணி மெழுகிய மண் வீடுகள், வைக்கோற்போரில் தலை நுழைக்கும்
கன்றுக்குட்டிகள், பூவரச இலையில் செய்த பீப்பிகள், நோண்டித்தின்றாலும் நொடியில் விழாது ஓடும் நுங்கு வண்டிகள், மார்கழி மாதத்துப் பனித்துளி,
சித்திரை மாதத்துக் கத்தரி வெயில், கசந்த காலத்தை மறக்கவைக்கும் வசந்தகாலம், ஆண்டின் முதல்மழை, குட்டிக் குழந்தையின் முத்தம், வானொலியில் வழிந்தோடிவரும் பழைய மனம்கவர் பாடல்கள், மண்பானைத் தண்ணீர், ஓலைக்குடிசை வீடுகள், பழைய சோறு, அம்மாவின் அன்பு, நிலாப் பார்த்த
நிமிடங்கள், இவற்றை எல்லாம் ரசிக்கும்போது எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா! என்று சப்தமாய் பாடத்தோன்றுகிறது.
தாகூரின் ரசனை கவிஞர்கள் எப்போதும் ரசனையின் ரசிகர்களாகவே திகழ்கின்றனர். நோபல்பரிசுபெற்ற கீதாஞ்சலியில், தாகூர் இந்த இனிய வாழ்வைக் கொண்டாடுகிறார். இறைவனை வெகுநெருக்கத்தில் வைத்துப் பார்க்கிறார். திருவருளை நோக்கிய ஆன்ம பயணத்தை அவர் கவித்திறனோடு காட்சிப்படுத்துகிறார்.
“என் இலக்கான உன்னைத் தரிசிக்க நான்சுற்றித்தான் வரவேண்டியிருக்கிறது” என்கிறார். அவரது விஸ்வபாரதி பல்கலைக் கழகத்தில் இயற்கையே பாடம், ரசித்தலே கற்றல். தாகூரின் மழைக்காலக்கவிதையில் நனைகின்றன அவரது எல்லா எழுத்துகளும் குடையின்றி!
வெள்ளைச் சலவை மொட்டாய் பவுர்ணமி நிலவில் ஒளிரும் தாஜ்மகாலை யாரேனும் ரசிக்காமல்
இருக்கமுடியுமா? தம் வீட்டில் தவழும் குழந்தைகளின் இனிமையான மழலைமொழி கேட்டவர்கள் இனிமையான இசைக் கருவிகளின் இசையை உன்னதமானதென்று கூறுவார்களா?
யாவற்றையும் இனிமையாய் ரசிக்கப் பழகுங்கள். அனுபவிக்காத வாழ்க்கை அண்டமுடியா சுவர்க்கம். உங்கள் போக்கில் வளைப்பதற்கு வாழ்வு ஒன்றும் கான்கிரிட் கம்பி அல்ல. புரிந்து கொள்ளப்படாப் புலப்படல்களோடு நம் நாட்கள் நகர்கின்றன. உள்ளும் வெளியும் உள்ளபடி பயணப்பட்டால் நம் இலக்குகள் நமக்கு இலகுவாகப் புலப்படும்.
“உதிர்ந்த மலர் கிளைக்குத் திரும்புகிறது வண்ணத்துப்பூச்சி” என்ற ஜப்பானிய ஹைகூ, அற்புதமான பறக்கும்மலராக வண்ணத்துப்பூச்சியை நமக்குக் காட்டுகிறது. உயரங்களில் ஏறவேண்டியவன் ஏன் துயரங்களில் ஏறிக்கொண்டிருக்கிறான்? எனக் கேட்கிறார் உலகக்கவிஞர் கீட்ஸ்.“அறுவடை முடிந்துவிட்டது, அணிலின் நெற்களஞ்சியங்கள் கூட நிரம்பி வழிகிறது. மனிதர்களே நீங்கள் ஏன் துயரத்தால் நிரம்பி வழிகிறீர்கள்” என்று ஆதங்கத்தோடு கேட்கிறார் கீட்ஸ்.
அடுத்தவேளை உணவுக்கு வழியில்லாத சூழலிலும் மகாகவி பாரதி, கைவசமிருந்த அரிசியையும் தானியங்களையும் பறவைகளுக்கு வாரி இறைத்து “காக்கை குருவி எங்கள் சாதி, நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்” என்று பாடினான். எந்த வலைக்குள்ளும் அகப்படா சுதந்திரக்கலையே வாழ்க்கை.
இயல்பாய் இருங்கள் சிரிக்கும் புத்தர் சிலையைப்போல் எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கப் பழகுங்கள். சிரிப்பின் சிறப்பு என்னவென்றால் அது இறப்பை வெல்லும். சோர்வு உனக்குள் தேர்வு எழுதிவிடக் கூடாது. சேர்த்து வை உன்னைப் பார்த்து வந்த அம்புகளை.. தடையாளக் கற்பதே நம் அடையாளம் என்று புரிந்துகொள்வோம்.
தானியங்கிப்பணம் தரும் இயந்திரத்தின் எண்ணிக்கை ஓட்டம் முடிவதற்குள் பணத்திற்காகக் கைநீட்டி நிற்கும் மனிதர்களின் அவசரம் நம்மைச் சங்கடப்படுத்துகிறது.
மூடப்பட்ட ரயில்வேகேட் முன் பொறுமை இல்லாமல் சைக்கிளோடு கஷ்டப்பட்டு தலைநுழைக்கிற சில மனிதர்களின் அவசரம் நம்மைச் சங்கடப்படுத்துகிறது. நிதானமாய் மூச்சுகூடவிடாமல் நிதானமாய் நித்திரைகூடப்புரியாமல் செத்துக்கொண்டிருக்கிறார்கள் சீக்கிர
சீக்கிரமாய் சிலபேர்.
மேலெழும்பிக் கிளைபரப்பி வானம் நோக்கி வளரும் ஆலமரம், தன் விழுதனுப்பி வேர்களை விசாரிப்பது போல, நம் அக மனக்கண்ணாடியைத் தினக் கண்ணாடியின் முன்னிறுத்தித் தொடர்ச்சியாகத் தெரியும் பிம்பங்களைப் பிரமிப்புடன் பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது?
கற்பாறைகள் மீதும் துணிச்சலாய் அலைவீசி நீர்க்கரங்களால் தனைக் காட்டும் அலைபோல் இந்தவாழ்வியலின் கணங்களை ரசித்து எதிர்கொள்வதில் என்ன தவறு? எத்தனை முறைபார்த்தாலென்ன? ஆறு பார்க்க யாருக்குத்தான் அலுக்கும்? ஆறு பார்ப்போம் அவசரமில்லாமல்.
கதிரா இருக்கும் போதே புதிராய் இருக்கும் பச்சைப்பசேல் என்றிருக்கும் வயல் வெளிகளைப் பார்ப்போம். வாசித்தால் நேசிக்கத் தோன்றும் அழகான புத்தகங்கள் குழந்தைகள், பல நேரங்களில் நாம் அவர்களை வாசிக்காமல் விட்டுவிடுகிறோம், இல்லை சிலநேரங்களில் கிழித்துவிடுகிறோம், நம்வீட்டுக் குழந்தைக் குறும்புகள் ரசிப்போம்.
நல்லதை விதைப்போம் கால அட்டவணையோடு எப்போதும் காலத்தை எதிர்கொள்ளமுடியாது. உடைந்தஉறவுகள், வலி தாங்கா விழிகள், கசப்பான சம்பவங்கள் இவற்றோடு நம் நாட்களை நகர்த்திவிட முடியாது. இருப்பதைக் கொண்டு வெறுப்பதைப்போக்கி நதியாய்
நகர்ந்துகொண்டே இருக்க வேண்டியதுதான்.
பயணப்படும் கால்களே பக்குவப்படுகின்றன. வேகஉலகில் சுக சோக சம்பவங்கள் அடுத்தடுத்து வரலாம், எனவே வெற்றிகண்டு துள்ளுவதோ, தோல்விகண்டு துவண்டு போவதோ தேவையில்லை, எதுவுமே வேடிக்கைதான் நமக்கு நடக்காமல் இருக்கும்வரை!
எனவே கடமையை நிறைவாய் செய்வோம், பலன் தானாய் வரும். இரும்பாய் இருந்து துருப்பிடித்துப் போவதைவிடக் கரும்பாய் இருந்து சக்கையாவது மேல். நம் துன்பத்தை நம்மோடு வைத்துக்கொண்டு மற்றவர் மகிழ்ச்சியில் மனமிசைந்து ஒன்றுபடுவோம்.
சிறகைநம்பி வானத்தில் வலம்வரும் பறவைபோல் சகமனிதஉறவுகளை நம்பி வலம்வருவோம் வாழ்வுவானத்தில். இருக்கும்வரை யாரையும் வெறுக்கும்மனம் வேண்டாம்.
“எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன்
பராபரமே” என்ற தாயுமானவரின் நெறி அற்புதமானதன்றோ!
சிரிக்க மறந்த நாள் இப்புவியில் வசிக்க மறந்தநாள் என்பதைத்தெரிந்து கொள்ளுங்கள். நல்லதை விதைத்திருந்தால் நல்லதே அறுவடையாகும். அன்பிற் சிறந்ததவமில்லை என்றார் பாரதி.அன்பை விதைத்து, உள்ளதைச் சொல்லி, நல்லதைச் செய்து ரசித்துவாழ்வோம்.--முனைவர் சௌந்தர மகாதேவன்தமிழ்த்துறைத் தலைவர்சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லுாரி, திருநெல்வேலி. 99521 40275
வாசகர்கள் பார்வை

பெற்றோர்களுக்கு பாடம்

என் பார்வையில் வெளியான 'அடம் பிடிக்கும் குறும்புக்கார குழந்தைகள்' என்ற கட்டுரை படித்தேன். வீட்டுச் சூழலில் இருந்து பள்ளிச்சூழலுக்கு ஒரு குழந்தை மாறும் போது ஏற்படும் சூழ்நிலைகளை விளக்கமாக கூறியிருந்தார் கட்டுரையாளர்.
படிப்படியாக அடக்கு முறை இன்றி அடம் பிடிக்கும் குழந்தைகளை பள்ளிக்கு எப்படி அனுப்ப வேண்டும் என்று பெற்றோர்கள் கற்றுக் கொள்ள வழிகாட்டியது இக்கட்டுரை.- வி.எஸ்.ராமு, செம்பட்டி.

நம்பிக்கை சிந்தனை

என் பார்வையில் வெளியான 'தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை சிந்தனை' கட்டுரை படித்தேன். வெற்றியும், தோல்வியும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றது. வெற்றி பணம் தரும், தோல்வி அனுபவம் தரும். வெற்றி எதை செய்ய வேண்டும் என சொல்லித் தரும். தோல்வி எதை செய்யக் கூடாது என சொல்லித் தரும். தன்னம்பிக்கை உடையவன் வாழ்ந்து கொண்டு இருக்கிறான். தன்னம்பிக்கை இல்லாதவன் வீழ்ந்து கொண்டிருக்கிறான் என்பதை உணர்த்தியது கட்டுரை.
- சே. மணிகண்டன், பெரியகுளம்.காமராஜர் சேவைஎன் பார்வையில் வெளியான 'தெற்கில் ஓர் இமயம் கட்டுரை படித்தேன்'. கல்விக் கண் திறந்தகாமராஜரின் வாழ்க்கை வரலாற்றை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது. தமிழகத்தின் மறக்க முடியாத முதலமைச்சராக திகழ்ந்த காமராஜரின் சேவை பாராட்டுக்குரியது. இவரை போன்ற தலைவர்களை பற்றி கட்டுரை வழங்கும் என் பார்வைக்கு வாழ்த்துக்கள்.- வி.கார்மேகம், தேவகோட்டை.

இலக்கணமாக திகழ்ந்தவர்

என் பார்வையில் வெளியான 'தெற்கில் ஓர் இமயம்' கட்டுரை படித்தேன். அதிகம் படிக்காவிட்டாலும் வாழ்க்கையில் உலகப் புகழ் பெற முடியும் என்பதற்கு இலக்கணமாக திகழ்ந்தவர் காமராஜர். காமராஜர் இறப்பிற்கு பின் அவரது வீட்டில் 5 கதர் வேட்டிகளும், துண்டுகளும் தான் இருந்தன என்ற செய்தி அருமை.-என்.எஸ்.முத்து, ராஜபாளையம்.

இலக்கியப் பார்வை

என் பார்வையில் வெளியான 'தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை சிந்தனை' கட்டுரை படித்தேன். தன்னம்பிக்கை சிந்தனை தமிழ் இலக்கியங்களில் பரவி கிடப்பதை அறிந்து கொள்ள முடிந்தது. சங்க இலக்கிய நுால்களில் தொடங்கி பக்தி இலக்கியம், புதுக் கவிதை வரை தன்னம்பிக்கை சிந்தனைகளை நிரம்பியிருக்கிறது என்பதைகட்டுரை படித்து தெரிந்து கொள்ள முடிந்தது.-த.கிருபாகரன், நிலக்கோட்டை.

தெளிவான விளக்கம்

என் பார்வையில் வெளியான 'துாங்காத இரவுகள் தரும் துயரம்' கட்டுரை படித்தேன். இரவு துாக்கம் இல்லை என்றால் உடல் ஆரோக்கியம் கெடும் என்பதை தெளிவாக விளக்கியது கட்டுரை. இரவு துாக்கம் குறைந்தால் கல்லீரலில் பாதிப்பு ஏற்படும் என்பதை படித்து அதிர்ந்தேன். துாக்கத்தை பற்றிய தெளிவான பார்வையை வழங்கியஎன் பார்வைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.- கே.கனகவிஜயன், மதுரை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X