கவிமணி தமிழ் கவிதை கண்மணி:இன்று பிறந்த நாள்

Added : ஜூலை 27, 2015 | கருத்துகள் (3)
Advertisement
 கவிமணி தமிழ் கவிதை கண்மணி:இன்று பிறந்த நாள்

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை உலகில் தடம் பதித்த கவிஞர்கள் நால்வர். இவர்கள் ஒவ்வொருவாருக்கும் தனிச்சிறப்பு உண்டு. நால்வருள் மோனையைப் போல் முன்னிற்பவர் பாரதியார். இவர் 39 ஆண்டுகளே வாழ்ந்து கவிதை உலகில் சாதனை படைத்தவர். பாரதியாருக்கு அடுத்த நிலையில் புகழ் பெற்று விளங்கியவர் பாரதிதாசன்; பாரதியாருக்கு ஒன்பது ஆண்டுகள் இளையவரான இவர் 73 ஆண்டுகள் வரை வாழ்ந்தவர்.
கவிமணி சி.தேசிக விநாயகம் பிள்ளை (1876--1954) பாரதியாரை விட ஆறு ஆண்டு மூத்தவர். தமிழில் குழந்தைப் பாடல் என்னும் இலக்கிய வகையைத் தொடங்கி வைத்த பெருமை இவருக்கு உரியது; எனவே 'குழந்தைக் கவிஞர்' என்னும் சிறப்புப் பெயர் வாய்த்தது. பாரதியாருக்கு ஆறு ஆண்டுகள் பின்னவரான நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை 84 ஆண்டுக் காலம் வாழ்ந்தார்.
பாரதியும் கவிமணியும் : பாரதிக்கு நிகரான சொல்லாற்றல் படைத்தவராகக் கவிமணி விளங்கினார். எனினும் இருவருக்கும் இடையே பெரிய வேறுபாடும் இருந்தது. அறிஞர் சி.தில்லைநாதன் இப்படி கூறுகிறார்... “பாரதியின் சொற்கள் பகைவர்களைத் தாக்கும் போர் வீரர்களைப் போலவோ வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகளைப் போலவோ செயலாற்றுகின்றன. கவிமணியின் சொற்கள் சாத்வீக நெறியில் சேவை செய்யப் புகுந்த தொண்டர்களைப் போல அமைதியாகவும் சாந்தமாகவும் தம் பணியைச் செய்கின்றன”.
கவிமணி எந்த ஒரு கருத்தினையும் மென்மையான சொற்களைக் கையாண்டு அமைதியாகவும் சாந்தமாகவுமே பாடுவார். 'ஐயா' 'அப்பா' 'அம்மா' என்பன போன்ற சொற்களே அவரது மொழி நடையில் பயின்று வரும். “பாடுபடுவருக்கே இந்தப் பாரிடம் சொந்தம் ஐயா!” என்றும் “ஏழை என்று ஒருவர் உலகில் இருக்கல் ஆகாது ஐயா!” என்றும் “மங்கைய ராகப் பிறப்பதற்கே - நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா!” என்றும் “ஊக்கம் உடையவர்க்குத் - துன்பம் உலகில் இல்லை அம்மா!” என்றும் பாடுவது கவிமணியின் முத்திரைப் பண்பு.
கவிமணியின் வாழ்க்கை அமைதி, இனிமை, இரக்கம், எளிமை, கருணை, பொறுமை ஆகிய நற்பண்புகள் பொருந்தியது. அவர் பாடிய கவிதைகளிலும் இப் பண்புகள் கொலுவிருக்கக் காணலாம். “நீண்ட காலமாகப் பெண்கள் கலாசாலையில் ஆசிரியராக இருந்தமையால் இக் குணங்கள் சிறந்து விளங்குவதற்கு இடமிருந்தது.
ஆவேசம் பரபரப்பு முதலியன சிறிதளவும் கிடையாது. கவிமணியோடு நாற்பது ஆண்டுகளாகப் பழகியுள்ளேன்; என்றாலும் ஒரு முறையாவது யாரோடும் அவர் கோபங்கொண்டதை நான் பார்த்ததே இல்லை” எனக் குறிப்பிடுவார் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை.
'உள்ளத்தில் உள்ளான் இறைவன்!': முற்போக்கான சீர்திருத்தக் கருத்தினையும் இனிய வடிவில் படைத்துத் தரும் வல்லமை பெற்றவர். இதனை விளக்க 'கோயில் வழிபாடு' என்னும் கவிதை ஒன்றே போதும்.“கோயில் முழுதும் கண்டேன் - உயர்கோபுரம் ஏறிக் கண்டேன்தேவாதி தேவனை யான் - தோழி!தேடியும் கண்டிலனே”எனத் தொடங்கும் அக் கவிதை அற்புத மூர்த்தியினை, -ஆபத்தில் காப்பவனை - கோயில் முழுவதும் தேடி அலைவதைச் சொல்கிறது. தெப்பக் குளத்திலோ சுற்றித் தேரோடும் வீதியிலோ சிற்பச் சிலையிலோ நல்ல சித்திர வேலையிலோ இறைவனைக் காண முடியவில்லையாம். இறைவன் உண்மையில் எங்கே தான் இருக்கிறான்? அவனை எப்படி காண்பது? இவ்வினாக்களுக்கு கவிமணி இக் கவிதையின் நிறைவுப் பகுதியில் தரும் விடை:
“ உள்ளத்தில் உள்ளான் அடி! -அது நீஉணர வேண்டும் அடிஉள்ளத்தில் காண்பாய் எனில் - கோயில்உள்ளேயும் காண்பாய் அடி!”'இறைவன் உண்மையான அன்பு கொண்ட அடியவர்களின் உள்ளத்தில் உள்ளான்; இந்த அடிப்படையான உண்மையை உணர்ந்து கொண்டால் போதும். உள்ளத்தில் இறைவனைக் காணக் கற்றுக் கொண்டால் கோயில் உள்ளேயும் அவனைக் கண்டு கொள்ளலாம்' என்ற முற்போக்கான ஆன்மிகச் சிந்தனையை எவ்வளவு எளிய தமிழில் தெளிவாகச் சொல்லி விட்டார் என்று பாருங்கள்!
குழந்தைப் பாடல்: கவிமணி குழந்தைகளுக்கு என்றே பல பாடல்களை எழுதியுள்ளார். அவை 'குழந்தைச் செல்வம்' என்ற பெயரால் தனி நூலாக வெளியிடப் பெற்றுள்ளன. அதில் மிகச் சிறந்தது 'பசுவும் கன்றும்' பாடல்:“தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு - அங்கேதுள்ளிக் குதிக்குது கன்றுக் குட்டி.அம்மா என்குது வௌ்ளைப் பசு - உடன்அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி.நாவால் நக்குது வள்ளைப் பசு - பாலைநன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி.முத்தம் கொடுக்குது வெள்ளைப் பசு - மடிமுட்டிக் குடிக்குது கன்றுக்குட்டி.”இதில் கடினமான சொல் ஒன்று கூட இல்லை. பாடலின் தொடக்கமும் முடிவும் அற்புதமாக அமைந்துள்ளன.மொழிபெயர்ப்புத் துறைக்கும் நிலையான பங்களிப்பினை நல்கியுள்ளார். 'ஆசிய ஜோதி'யும் 'உமார் கய்யாம் பாடல்களும்' அவரது மொழி பெயர்ப்புத் திறனுக்கு சான்று.“வெய்யிற் கேற்ற நிழலுண்டு;வீசும் தென்றல் காற்றுண்டு;கையில் கம்பன் கவியுண்டு;கலசம் நிறைய மதுவுண்டு;தெய்வ கீதம் பலவுண்டு;தொடர்ந்து பாட நீயுமுண்டு;வையந் தரும்இவ் வனமன்றிவாழும் சொர்க்கம் வேறுண்டோ?”இத்தகைய பாடல்களைப் படிக்கும் போது மொழி பெயர்ப்பு தழுவல் என்ற எண்ணங்களே தோன்றாது; தமிழ் மொழி கவிதைகளைப் பாடி இன்புறுவது போன்ற உணர்வே ஏற்படும். இதுவே மொழி பெயர்ப்பாளர் என்ற முறையில் கவிமணி பெற்ற இமாலய வெற்றி.வெண்பாவிற்கோர் கவிமணி:வெண்பா இயற்றுவதிலும் வல்லவர் கவிமணி. அவரது வெண்பாக்களின் நடையும் எவ்வகையான சிக்கலும் இல்லாமல் உணர்ச்சியும் ஓசையும் கருத்தும் கற்பனையும் கை கோத்துச் செல்லும்; படிப்பவர் நெஞ்சில் நேரடியாகச் சென்று தெளிவாகப் பதியும். ரசிகமணி டி.கே.சி.யின் ஒரே மகனான தீபன் என்னும் தீக்காரப்பன் 32 வயதிலேயே மறைந்த போது கவிமணி டி.கே.சி-க்கு அனுப்பிய வெண்பா இவ் வகையில் குறிப்பிடத்தக்கது.“ எப்பாரும் போற்றும் இசைத்தமிழ்ச் செல்வா! என்அப்பா! அழகியசெல்லையா! - இப்பாரில்சிந்தை குளிரச் சிரித்தொளிரும் நின்முகத்தைஎந்தநாள் காண்பேன் இனி?”இவ் வெண்பாவைப் படித்து உள்ளம் உருகிய ரசிகமணி “தங்கள் உள்ளத்தின் கனிவு வெண்பாவில் தெளிந்து கிடக்கிறது. தமிழுலகில் இந்த வெண்பா எழுத ஒருவர்தான். அது தாங்கள் தான்... கவிக்கு உயிரையே கொடுக்கலாம் என்று சொல்லுவது நம்மவர் மரபு. தங்கள் கவி உயிரைக் கொடுத்து வந்த மாதிரியே இருக்கிறது. தாங்களும் தமிழுமாகச் சேர்ந்து எவ்வளவோ ஆறுதலைத் தருகிறீர்கள்” எனக் கவிமணிக்கு மறுமொழி எழுதினார். 'இப்படி ஒரு அற்புதமான கவிதை தமிழுக்குக் கிடைக்குமானால் உயிரைக் கொடுத்துக்கூட அதைப் பெறலாம்' என ரசிகமணியைச் சொல்ல வைத்த அற்புதமான வெண்பா இது!“மக்களுக்கு நல்வாழ்வு வாழும் வழிகள்எல்லாம்சிக்கலறக் காட்டும் தினமலர் -எக்கணமும்வாடாது தெய்வ மலர்போல வாழ்ந்திடுகநீடாழி சூழும் நிலத்து”என்பது 'தினமலர்' இதழை வாழ்த்திக் கவிமணி படைத்த அழகிய வெண்பா.'எது கவிதை?' என்ற வினாவுக்குக் கவிமணி தரும் விடை...“ உள்ளத்து உள்ளது கவிதை - இன்பம்உருவெடுப்பது கவிதை;தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மைதெரிந்து உரைப்பது கவிதை”கவிதைக்கு இங்ஙனம் வரைவிலக்கணம் வகுத்துத் தந்ததோடு நின்றுவிடவில்லை; அதன் படியே தெள்ளத் தெளிந்த தமிழில் - கவிதைகளைப் படைத்துத் தந்து நம் உள்ளத்தில் நிலைத்த இடத்தினைப் பெற்றவர் கவிமணி.-முனைவர் இரா.மோகன்எழுத்தாளர், பேச்சாளர்94434 58286

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramarao Ramanaidu - Kuala Lumpur,மலேஷியா
28-அக்-201514:01:06 IST Report Abuse
Ramarao Ramanaidu கவிமணி சி.தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் கவிதைகளில் மூழ்கித் திளைத்தவன் நான். இலக்கியத் தேர்வில் முனைவர் இரா.மோகன் ஐயா குறிப்பிட்டப் பாடல்களுக்கு நான் எழுதிய விளக்கங்கள் எனக்கு A கிடைக்கச் செய்தது.
Rate this:
Share this comment
Cancel
ulaganathan.maa - Thiruneelakudi ,இந்தியா
28-ஜூலை-201508:40:51 IST Report Abuse
ulaganathan.maa கிட்டத்தட்ட இலக்கிய உலகம் மறந்தே போன அந்த கருவூலக் கவிமணியைப் பற்றிய கட்டுரை என் மனத்தைக் கவர்ந்தது. பெண்ணுலகைப் பேணிய பெருமகன்.தமிழுக்குக் கிடைத்த நன்மணி என்றெல்லாம் சான்றோர்களால் போற்றப்பட்டவர் அல்லவா?
Rate this:
Share this comment
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
27-ஜூலை-201523:58:14 IST Report Abuse
Matt P அன்றைய கேரளத்தின் கடைசி முனையில் இருந்து கொண்டு ,தன் தாய் மொழி தமிழ் மீது பற்று கொண்டு,தமிழுக்காக இவர் ஆற்றிய தொண்டு அளவில்லாதது. பாரதி என்றொரு புலவனடா?அவன் பாட்டை கேட்டு கிரு கிருத்து போனேனடா ..என்று பணிவோடு,உயர்ந்த உள்ளத்தோடு பாடியவரா அவர்...திரை துறைக்கு ஒரு என்.எஸ்.கே ,arasiyalukku jeeva...ilakiyatthukku இவர் ...அந்த கால கட்டத்தில் ...கேரளத்திலிருந்து தமிழுக்கு கிடைத்த 3 செல்வங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X