நான் நல்லாயிருவேன்ல...
கோவையில் இருந்து பெங்களூரு நோக்கி அந்த வேன் சென்று கொண்டு இருந்தது.
வேனிற்குள் மனநலம் பாதிக்கப்பட்ட 28 பேர் இருந்தார்கள்,அவர்களில் ஆண்களும் உண்டு பெண்களும் உண்டு.
பிறந்த இடம் வளர்ந்த இடம் இருந்த இடம் இப்போது போகும் இடம் என்று எதுவும் தெரியாதவர்கள்.
இதில்
பலரை பார்த்தால் இவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களா?என்று
நினைக்குமளவிற்கு தௌிவான முகத்துடனும் அமைதியாகவும் காணப்படுகின்றனர்.
எதனாலோ யாரோலா ஏற்பட்ட மனஅழுத்தம் தாங்காமல் மனநோயாளியானவர்கள் இவர்கள்.
கோவையில் பல இடங்களில் சுற்றித்திரிந்த இவர்களை ஈரநெஞ்சம் அமைப்பினர் கோவை மாநகராட்சி காப்பகத்தில் தங்கவைத்து பராமரித்துவந்தனர்.
நிரந்தரமாக அவர்களை மாநகராட்சி காப்பகத்தில் மற்றவர்களுடன் வைத்து பாரமரிக்கமுடியாத நிலை.
போதுமான
ஆதரவு இல்லாததால் தமிழகத்தில் பல மனநல காப்பகங்கள் மூடப்பட்டுவிட்டன.
சென்னை கீழ்பாக்கம் மனநல அரசு ஆஸ்பத்திரியில் கூட பாதிக்கப்பட்டவர்களை
நேரிடையாக சேர்த்துவிடமுடியாத சூழ்நிலை.
இப்படி ஊரும் உறவும் மனதையும் வீட்டையும் பூட்டிக்கொண்டு துரத்தினால் அவர்கள் எங்கேதான் போவார்கள்.
இந்த
நிலையில் பெங்களூருவில் உள்ள ஆர்விஎம் பவுன்டேஷன் அமைப்பு மனநலம்
பாதிக்கப்பட்டவர்களை சிறப்பாக பராமரித்து வருகின்றனர் என்று கேள்விப்பட்டு
பலமுறை முயற்சித்ததன் விளைவாக இந்த 28 பேரையும் சிகிச்சைக்கு அழைத்து
வரச்சொல்லிவிட்டனர்.
அங்கே தங்கி சிகிச்சை பெறுவதற்காகத்தான்
வேனில் போய்க்கொண்டு இருந்தனர், ஈரநெஞ்சம் மகேந்திரன் பொறுப்பாளராக
அவர்களுடனேயே சென்று கொண்டு இருந்தார்.
எங்களை அடிக்கமாட்டாங்கள்ல?
கடலைமிட்டாய் வாங்கித்தரீயா?நீ என்கூடவே இருக்கணும்! பசிக்குது ஏதாவது
சாப்பிட தா, அங்கே தோசை தருவாங்களா? என்றெல்லாம் ஏகப்பட்ட கேள்விகள்
கேட்டபடி பயணம் செய்தவர்கள் கொஞ்சநேரத்தில் கேள்விகளை துறந்து துாக்கத்தில்
ஆழ்ந்தனர்.
விடிவதற்கும் பெங்களூரு ஆர்விஎம் பவுன்டேஷனை
அடைவதற்கும் சரியாக இருந்தது., ஊழியர்கள் இரக்கத்துடனும் புன்முறுவலுடனும்
வரவேற்று அன்றே அவர்களுக்கான சிகிச்சையை ஆரம்பித்துவிட்டனர்.
இரண்டு
நாள் தங்கியிருந்து அவர்களுக்கான சிகிச்சையில் நம்பிக்கை வந்தபிறகு
மகேந்திரன் கோவை திரும்புவதற்காக ஆஸ்பத்திரியைவிட்டு கிளம்பும் போது உயரமான
ஒருவர் ஒடிவந்து, 'மகேந்திரன் என்னைவிட்டுட்டு கிளம்பிட்டீங்களா?' என்று
கேட்டார்.
மூன்று வருடங்களாக எதுவுமே பேசாதவர் இப்போது இப்படி
தௌிவாக பேசவே ஆச்சரியப்பட்ட மகேந்திரன் ஆமாம் இப்ப போறேன் நீங்க குணமானதும்
திரும்பவந்து கூட்டிட்டு போறேன் என்று பதில் தந்திருக்கிறார்.
'ஆமாம்
இப்ப சொல்லுங்க நீங்க யாரு?' என்றதும் 'நான் எம்பில் முடிச்சுருக்கிறேன்
வேலை பார்த்த இடத்துல ஒரு பிரச்னை மண்டைக்குள்ளேயே வைச்சுருந்ததால அப்பப்ப
குழம்பிடுவேன் தெளிவா இருக்கும் போது உங்களை படிச்சுக்கிட்டேன் எனக்கு
சரியாயிடும்னு நினைக்கிறேன் அப்பவந்து கூட்டிட்டு போங்க' என்று
சொல்லிவிட்டு அவர் தனது பெயரைக்கூட சொல்லாமல் உள்ளே ஒடிவிட்டார்.
கொஞ்சம்
மருந்தும் நிறைய அன்பும் ஆறுதலும் பாசமும் கொடுத்தால் மனநலம்
பாதித்தவர்களை ஆரம்ப கட்டத்திலேயே எளிதில் குணப்படுத்திவிடலாம் என்பது
மருத்வர்களின் கூற்று..அந்த அன்பும் பாசமும் ஆறுதலும்தான் எந்த கடையில்
கிடைக்கும் என்பது தெரியவில்லை...
-எல்.முருகராஜ்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE