காக்க காக்ககல்லீரல் காக்க : இன்று சர்வதேச ஹெபடைட்டிஸ் தினம்| Dinamalar

காக்க காக்ககல்லீரல் காக்க : இன்று சர்வதேச ஹெபடைட்டிஸ் தினம்

Added : ஜூலை 28, 2015
Advertisement
 காக்க காக்ககல்லீரல் காக்க : இன்று சர்வதேச  ஹெபடைட்டிஸ் தினம்

உடலின் மிகப் பெரிய சுரப்பி கல்லீரல். கொழுப்பு உணவுகளைச் செரிமானம் செய்ய பித்தநீர் தேவை. அந்தப் பித்தநீரைச் சுரப்பது கல்லீரல். ரத்தம் உறைவதற்குத் தேவையான புரோத்திராம்பின் எனும் பொருளை உருவாக்குவதும் இதுதான்; உடலுக்குள் நுழைந்துவிட்ட நச்சுப்பொருள்களை வெளியேற்றுவது. உடலுக்குத் தேவையான ஆற்றலை சேமித்து வைப்பது, உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு வேதிப்பொருள்களை உருவாக்குவது, இரும்புச் சத்து, வைட்டமின் - ஏ, டி போன்றவற்றுக்குச் சேமிப்புக் கிடங்காகச் செயல்படுவது, நாம் சாப்பிடும் மருந்துகள் சரியாக வேலை செய்கிறதா என்பதைக் கண்காணிப்பது என ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணிகளைச் செய்கிறது கல்லீரல்.ஆனால் இதய நோய், சிறுநீரக நோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவற்றைத் தடுக்க நாம் தருகின்ற முக்கியத்துவத்தை கல்லீரல் நோய்களுக்குத் தருவதில்லை.
மஞ்சள் காமாலை உடலில் கல்லீரல் பாதிக்கப்பட்டால் முதலில் தோன்றும் அறிகுறி மஞ்சள் காமாலை. வயதாகிப்போன ரத்த செல்கள் மண்ணீரலில் அழிக்கப்படும்போது, 'பிலிருபின்' எனும் மஞ்சள் நிற வேதிப்பொருள் வெளிவருகிறது. இது கல்லீரல் சுரக்கின்ற பித்தநீர் வழியாக உடலிலிருந்து வெளியேற்றப்படுகிறது. கல்லீரல் ஆரோக்கியமாக இருந்தால், ரத்தத்தில் இதன் அளவு சரியாக இருக்கும். கல்லீரல் பாதிக்கப்படுமானால், இதன் அளவு அதிகரிக்கும். அப்போது சிறுநீரிலும் இது வெளியேறும். இதனால்தான் கல்லீரல் பாதிக்கப்படும்போதெல்லாம் கண், நாக்கு, நகம், தோல் ஆகியவை மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன. சிறுநீரும் மஞ்சளாகப் போகிறது.
கல்லீரல் வீக்கம்
மது, மருந்துகளின் பக்கவிளைவு, நச்சுப்பொருள்கள் மற்றும் வைரஸ் கிருமிகளின் பாதிப்பால் கல்லீரல் வீங்குவதை 'கல்லீரல் அழற்சி' (Hepatitis) என்கிறோம். இந்த நோயின்போது கல்லீரலின் பணிகள் பாதிக்கப்படும் அல்லது அதன் திறன் குறையும். பொதுவாக, ஹெபடைடிஸ் ஏ, பி, சி. டி. இ வைரஸ் கிருமிகள் கல்லீரலைப் பாதித்து அழற்சியை ஏற்படுத்துவது அதிகம்.
இவற்றில் ஹெபடைடிஸ் ஏ, இ என்பது அசுத்தமான தண்ணீர், உணவு மூலம் பரவக்கூடியது. நோயாளியுடன் நெருங்கிப் பழகுபவர்களுக்கும் இது பரவலாம். இது பரவியுள்ள இடங்களுக்கு அண்மையில் பயணம் செய்திருந்தால், அவர்களுக்கும் இந்த நோய் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.
ஹெபடைடிஸ் ஏ, இ கிருமிகள் கல்லீரல் செல்களைத் தற்காலிகமாக பாதித்து, மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும். இது அவ்வளவாக உயிருக்கு ஆபத்து தருவதில்லை. சில வாரங்களில் தானாகவே சரியாகிவிடும். கீழாநெல்லி மருந்து இந்த நோயைக் குணப்படுத்த
உதவுகிறது.
ஹெப்படைடிஸ் பி, சி. டி வைரஸ் கிருமிகள் ஏற்படுத்துகின்ற கல்லீரல் அழற்சி நோய்கள்தான் ஆபத்தானவை. இந்த நோய்கள் தொற்றுள்ள ரத்தம் மூலம் பரவுகின்றன. ஒருவர் ரத்த தானம் செய்யும்போது அந்த ரத்தத்தில் ஹெபடைடிஸ் பி, சி கிருமிகள் இருக்குமானால், அந்த ரத்தத்தைப் பெற்றுக்கொள்பவருக்குக் காமாலை பரவிவிடும். இந்த நோயாளிக்குப் போட்ட ஊசியைத் தொற்றுநீக்கம் செய்யாமல், அடுத்தவருக்குப் போடும்போது அவருக்கும் இந்த நோய்கள் வந்துவிடும். போதை ஊசிப் போட்டுக் கொள்கிறவர்கள் ஒரே ஊசியைப் பலரும் பகிர்ந்துகொள்ளும்போதும் பச்சை குத்திக்கொள்ளும்போதும், பாலுறவு மூலமும் இந்த நோய்கள் பரவுகின்றன. கர்ப்பமாக இருக்கும் தாய்க்கு இந்த நோய்கள் இருந்தால், கருவில் வளரும் குழந்தைக்கும் பரவிவிடும். என்றாலும் பாதுகாப்பற்ற ரத்தம் மூலம் பரவுவதே அதிகம்.
பொதுவாக, இந்த நோய்களின் தொடக்கத்தில் நோயாளிக்கு எந்தவித அறிகுறியும் தெரிவதில்லை. நாட்கள் ஆக ஆகத்தான் இதன் குணம் காட்டும். அதிக களைப்பு, காய்ச்சல், குமட்டல், வாந்தி, வயிற்றுவலி, பசியின்மை, உடல் வலி, எலும்பு மூட்டுகளில் வலி, மஞ்சள் காமாலை ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகள். இந்த நோயாளிகளுக்கு நாட்கள் ஆக ஆக கல்லீரல் சுருங்கும்.
இதைத் தொடர்ந்து புற்றுநோய் வரும். இறுதியில் மரணம் ஏற்படும். இதனால்தான் இவற்றை உயிர்க்கொல்லி காமாலை என்கிறோம்.
மதுவும் கல்லீரல் நோயும்
மதுப்பழக்கம் உள்ளவர்களுக்குக் கல்லீரல் சீக்கிரத்தில் கெட்டுவிடும். தினமும் 80 மி.லி.,க்கு மேல் மது குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இரண்டு வருடங்களுக்குள் கல்லீரல் அழற்சி அடைந்துவிடும். இவர்கள் மதுப்பழக்கத்தைத் தொடர்ந்தால் அடுத்த ஐந்து வருடங்களில் கல்லீரல் சுருங்கிவிடும். இதைத்தான் 'லிவர் சிரோசிஸ்' என்று சொல்லுகிறார்கள். இது வந்துள்ளவர்களுக்கு வயிற்றில் நீர் கோத்து பானை மாதிரி ஊதிவிடும். இது உயிருக்கு ஆபத்து தருகின்ற நோய். எனவேதான் மதுவை மறக்க வேண்டும் என்று சொல்கிறோம்.
தடுப்பது எப்படி?
ஹெபடைட்டிஸ் ஏ மற்றும் பி வகை மஞ்சள் காமாலையைத் தடுக்க தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும். குடிநீரைக் கொதிக்கவைத்து ஆற வைத்துக் குடிக்க வேண்டும்.
சுகாதாரமான முறையில் தயாரான உணவு மற்றும் நன்கு பாதுகாக்கப்பட்ட உணவுகளை மட்டுமே எப்போதும் உண்ண வேண்டும். உணவைச் சாப்பிடும் முன்பும் சாப்பிட்ட பின்பும் கைகளை நன்றாக கழுவிச் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.
சுத்தம், சுகாதாரம் குறைந்த உணவு விடுதிகளில், சாலையோரக் கடைகளில் அடிக்கடி சாப்பிடக்கூடாது.
ஒருவருக்கு ரத்தம் தேவைப்படும்போது தானமாகப் பெறப்படும் ரத்தத்தில் ஹெபடைட்டிஸ் - பி, சி வைரஸ் கிருமிகள் இல்லை என்று பரிசோதனையில்உறுதியான பிறகே செலுத்தப்பட வேண்டும்.தசை ஊசிகள் மற்றும் சிரை ஊசிகளைப் போட்டுக்கொள்ளும்போது ஒருவருக்கு பயன்படுத்தியவற்றை அடுத்தவர்களுக்குப் போடக்கூடாது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஊசிக்குழல்களைப் பயன்படுத்த வேண்டும்.இந்த நோய் உள்ளவர்களுடன் பாலுறவு கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும் சாப்பிடாதீர்கள். கொழுப்பு மிகுந்த உணவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். அதீத கொழுப்பு கல்லீரல் திசுக்களைப் பாதிக்கும் என்பதால் இந்த யோசனை.-டாக்டர் கு. கணேசன்,பொதுநல மருத்துவர்,ராஜபாளையம்.gganesan95@gmail.com

வாசகர்கள் பார்வை

வாழ்க்கை ரகசியம்

என் பார்வையில் வெளியான 'வாழ்வை ரசிப்போம் நிறைவாய் வசிப்போம்' கட்டுரை படித்தேன். வாழ்க்கையின் ரகசியத்தை தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறார் கட்டுரையாளர். வாழ்வை ரசிக்க தெரிந்து கொண்டால் மலையளவு பிரச்னைகள் வந்தாலும் நம்மை ஒன்றும் செய்யாது. அதனால் தான் நம் முன்னோர்கள் எல்லா நிகழ்வுகளையும் கடவுளின் செயலாக கண்டனர். கடவுள் மீது பாரத்தை இறக்கி வைத்து விட்டு இன்பமாக வாழ வழிகாட்டியது கட்டுரை.
- ரா.ரங்கசாமி, வடுகப்பட்டி.

குழந்தைகளின் நிலை

என் பார்வையில் வெளியான 'ஏ.டி.எம்., இயந்திரமா பெற்றோர்கள்' கட்டுரை படித்தேன். தற்காலத்துக் குழந்தைகள் இயந்திரமாக மாற்றப்படுவதை இக்கட்டுரை விரிவாக
விளக்கியது. இக்கால குழந்தைகளின் உண்மை நிலையை என் பார்வை மூலமக விளக்கிய கட்டுரையாளருக்கு பாராட்டுக்கள்.- ஈஸ்வரி பிரியா, மதுரை.

நுகர்வோர் விழிப்புணர்வு

என் பார்வையில் வெளியான 'நுகர்வோரே தட்டிக் கேட்க தயக்கம் ஏன்' கட்டுரை படித்தேன். நுகர்வோர் விழிப்புணர்வு பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வாய்ப்பாக
அமைந்தது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இருந்தும் அதை சிலர் பயன்படுத்த தயங்குகின்றனர். நாம் வாங்கும் பொருட்களுக்கு பல ஆயிரம் செலவு செய்து வழக்கு போட வேண்டுமா என பலர் நினைக்கின்றனர். நிபந்தனைகளை மீறி வாடிக்கையாளர்களை ஏமாற்றும் எந்த நிறுவனத்தின் மீதும் நாம் வழக்கு தொடரலாம் என்ற தகவலை அறிந்து கொண்டோம்.
- த.கிருபாகரன், நிலக்கோட்டை.

இலக்கிய சுவை

என் பார்வையில் வந்த 'அறநெறி உணர்த்தும் இலக்கியங்கள்' கட்டுரை படித்தேன். பழந் தமிழ் சங்கத் தமிழ் மொழி 'பக்தி மொழி' என்றும், ஒழுக்கம் பற்றியும், இலக்கினை இயம்புவதே இலக்கியம் என்றும் குறிப்பிட்டது அருமை. மிக ஆழமாக சிந்தித்து கட்டுரையை தொகுத்து வழங்கிய என் பார்வைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். தொடரட்டும் இலக்கியம் சுவையுள்ள கட்டுரைகள்- கே.வி.செண்பகவல்லி, காரைக்குடி.

குழந்தைகளுக்கான கட்டுரை

என் பார்வையில் வெளியான 'ஏ.டி.எம்., இயந்திரமா பெற்றோர்கள்' கட்டுரை படித்தேன். நம் செல்லக் குழந்தைகளை நல்லவர்களாக, நாணயமுள்ளவர்களாக வளர்க்க தேவையான ஆலோசனைகளை கூறியுள்ளார் கட்டுரையாளர். சிறு வயதில் நம் பிள்ளைகளை பிறரிடம் இருந்து பாராட்டு பெற வைக்க வேண்டும் என்று நினைக்க கூடாது. திறனை வளர்க்க ஊக்கப்படுத்தல் அவசியம். . குழந்தைகள் கேட்டதை வாங்கித் தரும் ஏ.டி.எம்., இயந்திரம் போல் பெற்றோர் செயல்படக் கூடாது என்பதை சுட்டிக்காட்டியது கட்டுரை.- த.கிருபாகரன், நிலக்கோட்டை.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X