அஞ்சு லட்சம் கொடுத்தா வேலை... - அஞ்சாம எடுக்கறாங்க ஆளை| Dinamalar

அஞ்சு லட்சம் கொடுத்தா வேலை... - அஞ்சாம எடுக்கறாங்க ஆளை

Added : ஜூலை 28, 2015
Share
இன்னும் மித்ராவின் கையில் கட்டு அவிழ்க்கப்படவில்லை. வண்டியை சித்ரா ஓட்ட, பின்னால் உட்கார்ந்து வந்தாள். புட்டுவிக்கி ரோட்டில் சென்ற வண்டி, பேரூர் குளக்கரைக்கு வந்ததும் நின்றது. இருவரும் இறங்கி, குளத்தை ரசிக்க ஆரம்பித்தார்கள்.அகன்ற சாலைக்கும், குளத்துக்கும் நடுவிலுள்ள இடத்தில், உக்கடம் பெரியகுளம் கரையில் அகற்றப்பட்ட 'பேவர்ஸ் பிளாக்' கற்களைப் பதிக்கும் வேலை
அஞ்சு லட்சம் கொடுத்தா வேலை...  - அஞ்சாம எடுக்கறாங்க ஆளை

இன்னும் மித்ராவின் கையில் கட்டு அவிழ்க்கப்படவில்லை. வண்டியை சித்ரா ஓட்ட, பின்னால் உட்கார்ந்து வந்தாள். புட்டுவிக்கி ரோட்டில் சென்ற வண்டி, பேரூர் குளக்கரைக்கு வந்ததும் நின்றது. இருவரும் இறங்கி, குளத்தை ரசிக்க ஆரம்பித்தார்கள்.
அகன்ற சாலைக்கும், குளத்துக்கும் நடுவிலுள்ள இடத்தில், உக்கடம் பெரியகுளம் கரையில் அகற்றப்பட்ட 'பேவர்ஸ் பிளாக்' கற்களைப் பதிக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது. சோலார் மின் விளக்கு கம்பங்கள், இருபுறமும் அணி வகுத்து நின்றன. லேசான சாரல், மிதமான காற்றுடன், படு ரம்மியமாய் இருந்தது குளக்கரை.
''ஹைய்யோ...என்னடி மித்து! ஏரியாவே செமையா இருக்கு'' என்று விழிகளை விரித்தாள் சித்ரா.
''இதெல்லாம் சும்மா...கோவைப்புதூர்ல, ஒவ்வொரு வீதியிலயும் ரோடு, பூங்கான்னு ஏரியாவே சூப்பரா மெரட்டும்'' என்றாள் மித்ரா.
''என்னத்த... ஊரு நல்லா இருந்தாலும், மக்களுக்கு பாதுகாப்பு இல்லியே. பட்டப்பகல்ல 'அசால்ட்'டா, 'பைக்'ல வந்து செயினைப் பறிச்சிட்டுப் போறாங்க. மக்களெல்லாம் பயந்து கெடக்குறாங்க'' என்றாள் சித்ரா.
''கோவைப்புதுாருக்குன்னு தனியா ஒரு போலீஸ் ஸ்டேஷன் அமைச்சாதான் சரி வரும்.
அதுவும் அமைச்சர் நினைச்சா...வரும்!'' என்றாள் மித்ரா.
''போலீஸ் ஸ்டேஷன்னு சொன்னதும், எனக்கு நம்ம கஞ்சாபாளையம்....சாரி...கவுண்டம்பாளையம் ஸ்டேஷன் ஞாபகம் வந்துச்சு. போன வாரம், கஞ்சா விக்கிறதை பகிரங்கமா பேப்பர்ல போட்டும், ஒரு நடவடிக்கையும் எடுக்கலையே'' என்றாள் சித்ரா.
''அதெப்பிடி எடுப்பாங்க. நம்மூர்ல பல ஸ்டேஷன் போலீஸ்காரங்களுக்கு கஞ்சா வியாபாரிகள் தான் 'ஏடிஎம்' மாதிரிங்கிறாங்க''
''கஞ்சா மட்டுமில்லை மித்து...டி.கே.மார்க்கெட், இடையர்பாளையம், அண்ணா மார்க்கெட்ன்னு பல இடங்கள்ல, 'ஆன்லைன்' லாட்டரி வியாபாரம், பட்டையக் கெளப்புது. காலையில 12 மணிக்குள்ள நம்பர் வாங்கிட்டா, ரெண்டு டூ நாலுக்குள்ள 'ரிசல்ட்' வந்துரும். ஏழை வியாபாரிங்க, கூலிக்காரங்க, எக்கச்சக்கமா காசை விடுறாங்க''
''ஒரு காலத்துல... உழைப்புக்குப் பேரு போன நம்ம ஊரு...கஞ்சா, லாட்டரி, வழிப்பறி, வீதிக்கு வீதி... விடிய விடிய 'டாஸ்மாக்'ன்னு... மாறிட்டு இருக்கு'' என்று விரக்தியாய்ப் பேசினாள் மித்ரா.
''சம்பாதிக்கிறது மட்டும் தான் நோக்கம்னு இருக்கிற அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கூட்டணி போட்டா, அப்புறம் ஊரு எப்பிடி உருப்படும்?'' என்றாள் சித்ரா.
''உண்மைதான்க்கா... மத்த ஊர்லயாவது, சொசைட்டிக்கு, சட்டத்துக்குக் கொஞ்சம் பயப்படுவாங்க. இங்க எதுவுமே கிடையாது. நம்மூரு ஆர்.டி.ஓ., ஆபீஸ்ல நடக்குற ஒரு வேலை தான், இதுக்கு சாட்சி''
''ஆர்.டி.ஓ., ஆபீஸ்னாலே, சம்பாதிக்கிற இடம் தானே. இதுல நம்ம ஊரு ஆபீசுங்களை மட்டும் குறை சொல்ற....!''
''நீ சொல்றது சரி தான். ஆனா, மத்த ஊர்ல நடக்காத தப்பு, இங்க நடக்குது. மேக்ஸி கேப் வேன்கள்ல, கூடுதல் 'சீட்' அமைக்கிறதுக்கு, எந்த ஊர் ஆர்.டி.ஓ., ஆபீஸ்லயும் இப்ப அனுமதிக்கிறதில்லை. ஆனா, போலி ரேஷன் கார்டை வச்சு, நம்மூரு ஆர்.டி.ஓ., ஆபீஸ்கள்ல அனுமதி வாங்கிர்றாங்க. ஏகப்பட்ட வரி ஏய்ப்பு பண்றாங்க. எல்லாமே புரோக்கர்க வேலை தான்''
''வெளி மாவட்டத்தைச் சேர்ந்த எத்தனை வண்டிகளுக்கு, இப்பிடி 'பர்மிஷன்' கொடுத்தாங்கன்னு 'ஆர்டிஐ'ல வாங்குனாலே விஷயம் வெளிய வரப்போகுது''
''ஆனா, எத்தனை 'ஆர்டிஐ' பெட்டிஷன் போட்டாலும், நம்மூரு கார்ப்பரேஷன்ல 41 ஜூனியர் அசிஸ்டென்ட் போஸ்ட்டிங்குக்கு, எவ்ளோ லஞ்சம் வாங்குனாங்கன்னு கண்டு பிடிக்கவே முடியாது'' என்றாள் மித்ரா.
''ஏன்டி....அப்பாயின்மென்ட் கமிட்டில மேயரு, கமிஷனரு, நியமனக் குழுத் தலைவர் எல்லாம் இருக்காங்களே. அவுங்களுக்குத் தெரிஞ்சு தான், வசூல் நடக்குதா?'' என்றாள் சித்ரா.
''அது தெரியலை...41 போஸ்ட்டிங்குக்கு 480 பேரு, இன்டர்வியூவுக்கு வந்தாங்க. ஆனா, அதெல்லாம் வெறும் 'ஐ வாஷ்'தான். ஏற்கனவே, எங்கேயோ 'லிஸ்ட்' ரெடியாயி, வந்துருச்சாம். ஒரு போஸ்ட்டிங்குக்கு அஞ்சு லட்சம் பேசிருக்கிறதா தகவல்'' என்றாள் மித்ரா.
''இவுங்க வேலைக்கு வந்தா, முதல்ல வேலையக் கத்துக்குவாங்களா? என்னென்ன தப்புப் பண்ணுனா, எவ்ளோ சம்பாதிக்கலாம்கிறதைக் கத்துக்குவாங்களா?'' என்றாள் சித்ரா.
''எப்பிடியெல்லாம் தப்புப் பண்ணலாம்கிறதை கத்துக்கொடுக்கிறதுக்கே, நம்ம ஊருல ஒரு பல்கலைக்கழகம் நடத்துறாங்களே'' என்றாள் மித்ரா.
''ஆமா மித்து... அச்சமில்லா யாசகர், இன்னும் ரெண்டு மாசத்துக்குள்ள பெரிய 'அமவுன்ட்' அடிக்கிறதுக்காக, பத்து கோடி ரூபாய்க்கு ஒரு 'சாப்ட்வேர்' தயாரிக்கிறாராம்'' என்றாள் சித்ரா.
''யுனிவர்சிட்டி அக்கவுன்ட்டுக்கு வர்ற பணம், இவரோட அக்கவுன்ட்டுக்கு போறது மாதிரியா?'' என்றாள் மித்ரா.
''வரவர உனக்கு கிண்டல் அதிகமாயிருச்சுடி...தொலைதூரத்துல இருந்து படிக்கிறவுங்களுக்கு, 'ஆன்லைன்'ல பரீட்சை வைக்கிறது மாதிரியான 'சாப்ட்வேர்' தயாரிக்கிறாராம். இந்த மாதிரி 'சாப்ட்வேர்' பண்ண வேண்டாம்னு அண்ணா யுனிவர்சிட்டிக்கே யுஜிசி தடை விதிச்சிருச்சு. ஆனா, இவரு அந்த வேலையை இன்னும் பண்றாராம்''
''எல்லாம் நம்ம நூத்தி ஒண்ணாவது வார்டு கவுன்சிலர் தர்ற தைரியம்தாங்கிறாங்க.''
''யாரு... நம்ம வாசமுள்ள ரோசாவா... நம்மூரு பல்கலையில அவரு தான் முக்கியமான பொறுப்புல இருக்காரு. ஆனா, அங்க நடந்த பட்டமளிப்பு விழாவுல கலந்துக்கலை. அதேநாள்ல, இங்க வந்து, பிரைவேட் காலேஜ்கள்ல நடந்த நிகழ்ச்சிகள்ல ரிப்பன் வெட்டிட்டுப் போயிட்டாரு. ஒரு விழாவுல கலந்துக்கிறதுக்கு நாலு லட்ச ரூபாயாம். மத்த செலவுகள் தனியாம்'' என்றாள் சித்ரா.
'நம்ம கார்ப்பரேஷன் இளவட்ட ஆபீசர் மேல, ஆளும்கட்சி வி.ஐ.பி., தரப்பு, கோபமா இருக்காமே'' என்று மேட்டரை மாற்றினாள் மித்ரா.
''எதுக்கு...செல்வபுரம் பை-பாஸ் ரோட்டுல, 'சேம்பிள்' எடுத்து, வேலையில தரமில்லைன்னு சொன்னதுக்கா? அதான...உண்மை. ஆனா, அவருக்குக் கீழ வேலை பாக்கிற இன்ஜினியர்க, அதே ரோட்டுல, ஆய்வு பண்ணி, 'கமிஷனர் சேம்பிள் எடுத்த இடத்துல தான் சரியில்லை. மத்த இடத்துல எல்லாம் நல்லாத்தான் இருக்கு'ன்னு 'ரிப்போர்ட்' கொடுத்து அவரையே மெரட்டிட்டாங்களே''
''அந்த மெரட்டலை விடு...நம்மூர்ல சைபர் கிரைம்ல புகார் கொடுத்த பொண்ணுங்களோட, அந்தரங்க விஷயத்துல ஒரு போலீஸ் தலையிட்டு மெரட்டுறாராமே''
''ஏற்கனவே, இதே மாதிரி ஒரு 'கம்பிளைன்ட்' வந்து, அங்கயிருந்த கிரேடு 1 போலீசை, அங்கியிருந்து துாக்கி, கிரைம்ல போட்டாங்களே'' என்றாள் சித்ரா.
''அந்த 'சோக்'கான போலீஸ் தான்...மறுபடியும் இங்க வந்து, 'என்கொயரி, நேர்ல பார்க்கணும்'னு கண்ட நேரத்துலயும் பொண்ணுங்களை 'டார்ச்சர்' பண்றாரு'' என்றாள் மித்ரா.
''இதெல்லாம் என்ன டார்ச்சர்...நம்ம சிட்டில இருக்கிற சேர்மன் அண்ணாச்சி, அவரோட சொந்தத் தம்பியை, ஊரை விட்டே ஓடிப்போகச் சொல்லி 'டார்ச்சர்' பண்றாராம்'' என்றாள் சித்ரா.
''ஏன் அவரு என்ன தப்புப் பண்ணுனாராம்?'' என்றாள் மித்ரா.
''அவரு பாவம்...39 வயசாச்சு. கல்யாணம் நடக்கலை. லேசா, மனநிலை பாதிக்கப்பட்டவராம். இப்போ, கடை வீதியில அண்ணாச்சி கடைகள்ல கிடைக்கிற வேலையப் பாத்துக்கிட்டு, தாமஸ் வீதி கார் பார்க்கிங் பக்கத்துல இருக்கிற கோவில்ல தான் ராத்திரியில படுத்துக்கிறாரு. பாக்கிறதுக்கு, இவரை மாதிரியே இருப்பாரு. அதனால, தனக்கு அவமானம்னு நினைச்சு, போலீசை வச்சு, ஊரை விட்டே துரத்த முயற்சி பண்றாராம்'' என்றாள் சித்ரா.
''உடன் பிறப்புன்னதும், எனக்கு நம்மூரு ஜி.எச்., பிரசவ வார்டு ஞாபகம் வந்துச்சு. அங்க 'எச்ஓடி'யா இருந்தவுங்க, யு.எஸ்., போயிட்டாங்க. அதுக்குப் பதிலா இன்சார்ஜா, ஒரு டாக்டரைப் போட்ருக்காங்க. அவுங்க, ஜி.எச்.,க்கு வந்தே, ரெண்டு மாசமாச்சாம். சம்பளம் மட்டும் போகுதாம். விசாரிச்சா, சொந்தமா ஆஸ்பத்திரி கட்ற பிஸியில இருக்காங்களாம்'' என்றாள் மித்ரா.
''இப்பல்லாம், லேடீஸ் தான் தைரியமா எல்லாம் செய்யுறாங்க. பத்திர ஆபீஸ்ல, டிரான்ஸ்பர்ல பதினைஞ்சு லட்ச ரூபா கைமாறுனதா பேசுனோமே. அது, இருபதைத் தாண்டிருச்சாம்'' என்றாள் சித்ரா.
''அந்த மேடம் இருக்கிற அதே ஆபீஸ்ல, இன்னொரு லேடி ஆபீசர் இருக்காங்க. இவுங்களை விட, தைரியமா காசு கேட்டு வாங்குறது அவுங்கதானாம். ரெண்டு பேரும், ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள் போல அப்பிடி ஒரு நட்புல இருக்காங்களாம். ஏகப்பட்ட 'கம்பிளைன்ட்' போயும், துறைத்தலைவரு, ஏன் கண்டுக்கிறதில்லைன்னு யாருக்குமே புரியலை'' என்றாள் மித்ரா.
பேசிக்கொண்டிருக்கும்போதே, மழைச்சாரல் வலுக்கவும், வண்டியை எடுத்துக் கொண்டு, இருவரும் பறந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X