""கொழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தரும், ஆசிரியர்களே இவ்ளோ கேவலமா நடந்துக்கிட்டா, மத்தவங்களை பத்தி என்ன சொல்றது?,'' என அங்கலாய்த்தபடி, இஞ்சி டீ, முந்திரி பக்கோடா கொடுத்து உபசரித்தாள் சித்ரா.
டீயை வாங்கி உறிஞ்சிய மித்ரா, ""போன வாரம் நாலு ஆசிரியர்களை "சஸ்பெண்ட்' செஞ்சாங்களே, அதை தானே சொல்றீங்க?'' என, கேட்டாள்.
""அதைத்தான் சொல்றேன். ஆசிரியர்களை நம்பித்தான், கொழந்தைங்களை ஸ்கூலுக்கு அனுப்புறாங்க. அங்க, ஒழுங்கீனமா நடந்தா, பெத்தவங்க எப்படி நிம்மதியா இருக்க முடியும்? விசாரணைக்கு போன கல்வித்துறை அதிகாரிகள், மாணவியரிடம், வாத்தியாரை பத்தி, "ரிப்போர்ட்' எழுதி தரச் சொல்லி இருக்காங்க. அவங்களும் பக்கம் பக்கமா எழுதிக் கொடுத்திருக்காங்க. "அடிஷனல்' பேப்பர் கேட்ட வேகத்தை பார்த்து, அதிகாரிகள் தரப்பு உறைஞ்சு போயிருக்கு,'' என்றாள் சித்ரா.
முந்திரி பக்கோடாவை மென்றபடி, அன்றைய நாளிதழை புரட்டிய மித்ரா, ""மதுவிலக்கு அறிவிப்பாங்களா? இல்லையான்னு தெரியலை. இருந்தாலும், நம்ம வேலையை பார்த்திருவோம்னு, மதுக்கடை பார்களுக்கு ஏலம் நடத்தியிருக்காங்க. வழக்கம்போல, ஆளுங்கட்சிக்காரங்கதான் எடுத்திருக்காங்க. நம்மூர்ல மட்டும், 109 கடை இருக்கு. கட்சி நிதின்னு, ஒவ்வொரு கடைக்கும் தலா, 50 ஆயிரம் நிர்ணயிச்சு, "அட்வான்சா' வசூலிச்சதா, கட்சி ஆபீசில் தொண்டர்கள் ரெண்டு பேர் பேசிக்கிட்டாங்க,'' என்றாள்.
""ஆளுங்கட்சின்னாலே, எப்பவுமே வசூலில் மும்முரமா இருப்பது வழக்கம்தானே. நானும் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். வருவாய்த்துறையில, 35 ஓ.ஏ., "போஸ்டிங்' காலியா இருக்கு. ஊழியர் நியமிக்க, நேர்காணல் நடத்தியிருக்காங்க. ஆளுங்கட்சியை சேர்ந்த வட்டம், மாவட்டம், வி.ஐ.பி.,க்கள், "மாஜி'க்கள் என பல தரப்பிலு<ம், பரிந்துரை போயிருக்கு. என்ன செய்றதுன்னு தெரியாம, மாவட்ட நிர்வாகத்தினர் புலம்பிக்கிட்டு இருக்காங்க. பரிந்துரைகளை கண்டுக்காம விட்டுட்டு, திறமை அடிப்படையில், ஊழியர் நியமிச்சிடலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்காங்க. ஆனா, சிலரோ, மூன்று லட்சம் ரூபாய் வரைக்கும் பேரம் பேசிக்கிட்டு இருக்காங்க,'' என்றாள் சித்ரா.
உடனே, ""மாநகராட்சி அதிகாரிங்க, ரொம்ப "அப்செட்' ஆகிட்டாங்க,'' என, அடுத்த சப்ஜெக்ட்டுக்குள் நுழைந்தாள் மித்ரா.
""ஏன்? எதுக்கு? எந்தவொரு விஷயத்துக்கும் சளைச்சுக்க மாட்டாங்களே,'' என, சித்ரா ஆச்சரியத்துடன் கேட்க, ""வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்துற விஷயம் தொடர்பா, அனைத்து கட்சி பிரதிநிதிகளை வரவழைச்சு பேசுனாங்க. ஒவ்வொருத்தருக்கும் "சிடி' கொடுத்தாங்க. அவங்களும், கூடுதல் அவகாசம் கேட்டாங்க. அப்பத்தான், "இ-மெயில்' வந்திருக்கு. அதில், "பட்டியலில் இருந்து வாக்காளர் பெயரை நீக்க வேண்டாம்'ன்னு தகவல் இருந்துச்சு. இத்தன நாள் பட்ட கஷ்டம் வீணாப்போச்சே. எல்லாம் அரசியல் சூழல் என, மனம் நொந்தபடி, கூட்டத்தை முடிச்சிட்டாங்க,'' என, விரிவாக சொன்னாள் மித்ரா.
""எஸ்.எஸ்.ஐ., ஒருத்தர், அடிக்கடி வம்புல சிக்கிக்கிறாராமே,'' என, சித்ரா கேள்வி கேட்க, ""ஆமாக்கா, "செகண்ட் ஷோ' சினிமாவுக்கு போயிட்டு, ரெண்டு பேர் வந்திருக்காங்க. அனுப்பர்பாளையத்துல ரோந்து போன அவர், அவங்களை நிறுத்தி, வம்பு இழுத்திருக்கார். கூடவே, அவங்க தங்கியிருந்த ரூமில் இருந்து, ரெண்டு பேரை வரச்சொல்லி, ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போயிட்டார். விஷயம் கேள்விப்பட்டு, இந்து முன்னணிக்காரங்க திரண்டு வந்துட்டாங்க. அப்புறம், சமாதானம் பேசி விட்டுட்டாங்க. காவல் துறையில் சர்ச்சையில் சிக்கினா, உடனே, கன்ட்ரோல் ரூமுக்கு மாத்துறது வழக்கம். இவரோ, ஏற்கனவே ரெண்டு மாசம், வேறொரு பிரச்னையில, அங்க இருந்துட்டு, இப்பத்தான், வெளியே வந்திருக்கார். மறுபடியும் பிரச்னை. என்ன செய்யலாம்னு அதிகாரிங்க யோசிச்சுக்கிட்டு இருக்காங்க,'' என்றாள் மித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE