சூரியக் கட்டடக்கலை தெரியுமா| Dinamalar

சூரியக் கட்டடக்கலை தெரியுமா

Added : ஆக 04, 2015 | கருத்துகள் (5)
 சூரியக் கட்டடக்கலை தெரியுமா

சூரிய ஆற்றல் நாம் வாழும் வீடுகளில் இதமான சுற்றுப்புற சூழ்நிலையை ஆண்டு முழுவதும் உண்டாக்கி தர வல்லது. வீடுகள் கட்டும் போதே சில அமைப்புகளை திட்டமிட்டுக் கொண்டால் வீடுகள் சூரிய ஆற்றிலினால் இதமான சூழ்நிலையை பெறும். இதை சூரியக் கட்டடக்கலை என்கின்றனர்.பூமி தன் அச்சில் சூழல்வதால் இரவு, பகல் காலநிலை மாற்றம் ஏற்படுகிறது. இதனால் நம்மைச் சுற்றியுள்ள காற்று மண்டல வெப்ப நிலை பத்து சென்டி கிரேடு அளவு ஏற்ற இறக்கம் பெறுகிறது. ஒரு ஆரோக்கிய மனிதனின் உடல் வெப்ப நிலை 37 டிகிரி செல்சியஸ் என்பது நிலையானது.
உடல் ஓய்வாக உள்ள போதுவினாடிக்கு 50 ஜூல் வெப்பத்தையும், கடின உழைப்பின் போது 400 ஜூல் வெப்பத்தையும் உற்பத்தி செய்கிறது. இந்த வெப்பம் உடலில் தங்காமல் வெளியேறி கொண்டிருந்தால் உடல் இதமான உணர்வு பெறும். மனிதனும் அப்போது சுறுசுறுப்பாக ஆனந்தமாக வேலை செய்ய முடியும். பல ஆய்வுகளுக்கு பின் கண்ட முடிவு என்ன என்றால் மனிதன் உடலின் வெப்பத்தை தொடர்ந்து வெளியேற்றிக் கொண்டிருக்க அவனை சுற்றியுள்ள காற்று சுமார் 27 டிகிரி செல்சியஸிலும், அதன் ஓட்டம் நொடிக்கு ஒரு செ.மீ., அளவிலும் ஈரப்பதம் 50 விழுக்காடும் கொண்டிருந்தால் சாத்தியமாகும்.37 டிகிரி செல்சியஸ் உள்ள மனித உடல் 27 டிகிரியில் உள்ள காற்று மண்டலத்திற்கு வெப்பத்தை கடத்தல் மூலம் இழக்கும். உடலை சுற்றி ஓடும் காற்றும் இதற்கு துணை செய்யும். 50 விழுக்காடு காற்றின் ஈரப்பதம் தோல் காய்ந்து விடாமல் பாதுகாக்கிறது. இம்மூன்று காற்றின் நிலைகளும் (வெப்பம், வேக, ஈரப்பதம்) நமக்கு தொடர்ந்து இதமான சூழ்நிலையை கொடுக்கிறது.மின்சாரத்தின் உதவியினால் இந்த மூன்று தன்மை கொண்ட காற்றோட்டத்தை வீட்டிற்குள் பெறுகிறோம். ஆனால் இலவச சூரிய ஆற்றலை கொண்டுவீட்டிற்குள் இதமான காற்றோட்ட சூழ்நிலையை பெற முடியும். சூரிய ஆற்றலினால் மாறுபடும் காற்றின் வெப்ப நிலையிலிருந்து நம்மை காப்பது வீடுகளின் உள் அமைப்பே. வீட்டின் சுவர்கள் சூரிய வெப்பம் அளவிற்கு மேல் வீட்டிற்குள் புகாமல் காக்கிறது. இருந்தாலும் வீட்டின் மேல் தளத்தில் வெயில் படும் போது அது அதிகமாக சூடாகி வீட்டிற்குள் வெப்பம் கடத்தப்படலாம். இதை கட்டுப்படுத்த வழிகள் உள்ளன.வெயில் விழும் மாடித்தளத்தின் மீது வெள்ளை நிறத்தில் பளபளப்பான சதுர ஓடுகளை பதித்து விட வேண்டும். ஓடுகளின் மீது படும் வெயில் வெப்பம் 70 விழுக்காடு பிரதிபலிக்கப்பட்டு வெப்பச்சூடு வீட்டிற்குள் புகாது.மாடித்தளத்தின் மூலம் சூரிய வெப்பம் வீட்டிற்குள் நுழையாது. இதனால் உள் அறையில் வெப்பநிலை 3 லிருந்து 5 டிகிரி செல்சியஸ் வரை குறையும், மேலும் கீழுள்ள அறையின் மேல் பகுதியில் பால்ஸ்சீலிங் என்ற முறையில் வெப்பம் கீழ் இறங்குவதை தடுக்கலாம். இதனால் மேலும் 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உள்அறையில் குறைய வாய்ப்புள்ளது.டைல்ஸ் பதிக்க முடியாத நிலையில் வெயில் படும் தளத்தில் நல்ல வௌ்ளை நிற பெயின்ட் பூச்சு கொடுக்கலாம். ஆண்டுக்கு ஒரு முறையாவது பூச்சை புதுப்பிக்க வேண்டும். இந்த முறையிலும் சூரிய வெப்பம் பிரதிபலிக்கப்பட்டு வெப்பம் வீட்டிற்குள் நுழைவது குறையும். மாடித்தோட்டங்கள் மாடித்தரையின் சூரிய வெப்ப கடத்தலை தடுக்க மாடித்தோட்டங்கள் அமைக்கலாம். மண் தொட்டிகளால் மாடித்தரையை நிரப்பி அதில் காய்கறி, மலர்ச்செடிகள் வளர்க்கலாம். இந்த வகையிலும் சூரிய வெப்பம் வீட்டிற்குள் நுழைவது குறையும். வெயில் நேரத்தில் வீட்டிற்குள் காற்றோட்டம் தொடர்ந்து இருக்க வேண்டும். இதற்கும் பல வழிகள் உள்ளன.ஒரு மீட்டர் அகலமும் 2 மீட்டர் நீளமும் கொண்ட செவ்வக சூரிய வெப்பக்காற்று கருவிகள் சந்தையில் உள்ளன. இவைகளை வெயில்படும் மாடியிலோ தரையிலோ பொருத்தலாம். சூரிய ஒளி இதில் பட்டு வெப்பக்காற்று ஒரு குழாய் மூலம் வெளியேறும் மறுமுனையில் குளிர்காற்று உறிஞ்சப்படும்.காற்றை உறிஞ்சும் குழாயுடன் வீட்டின் அறைகளை தனி பி.வி.சி., குழாயுடன் இணைத்து விட வேண்டும். வெப்பக்காற்று வெளியேறும் போது வீட்டிலுள்ள காற்று உறிஞ்சப்பட்டு வீட்டிற்குள் காற்றோட்டம் உண்டாகும். இதனால் வீடு முழுவதும் மெல்லிய காற்றோட்டம் இதமாக சூழலும். இதை சூரியக்கூண்டு(சேலார் சிம்னி) என்பர். வீட்டின் அளவிற்கேற்ப கூண்டின் அளவும் நிர்ணயிக்கப்படும். வீடு கட்டும் போதே இதை சேர்ந்தே திட்டமிடுவர். காற்றின் ஈரப்பதம்*வீட்டின் அறைகளில் உள்ள காற்று 50 விழுக்காடு ஈரப்பதமுள்ளதாக இருக்க வேண்டும். இதற்கும் பல வழிகள் உள்ளன.
*அறைகளில் சிறிய செடிகள் கொண்ட பூந்தொட்டிகளை அமைக்கலாம்.
* ஆகாயத்தாமரை போன்ற தாவரங்களை நீர் நிரம்பிய கண்ணாடி தொட்டிகளில் அமைக்கலாம்.
*சின்னநீர் ஊற்றுகளை வீட்டின் மையப்பகுதியில் அமைக்கலாம். நீர்த்திவலைகள் காற்றில் கரைந்து ஈரப்பதத்தை பாதுகாக்கும்.*அறைகள்தோறும் வெப்பமானியும் ஈரப்பதமானியும் இருந்தால் காற்றின் தன்மையை மேற்பார்வையிடலாம்.
வீட்டில் உட்காற்றின் வெப்பநிலையை கட்டுப்படுத்த மற்றொரு இயற்கை வழியும் உள்ளது. கருங்கற்களால் கட்டப்பட்ட கோயிலில் உட்புறக்காற்று சுமார் 25 டிகிரி செல்சியஸிலிருந்து 28 டிகிரி செல்சியஸியற்குள் தான் இருக்கும். இயற்கையான கருங்கற்கள் நாம் இன்று பயன்படுத்தும் ஏர்கண்டிஷனர் போல செயல்படுகின்றன.இயற்கையான கருங்கற் சுவர்களில் நுண்ணிய துளைகள் உண்டு. அவைகளில் இரவு நேரங்களில் காற்றில் உள்ள ஈரம், நீர்த்திவலைகளாகி படிந்து விடுகின்றன. பகலில் சிறிய வெப்பம் ஏற்றத்தால்அத் திவலைகள் மறுபடியும் ஆவியாகின்றன. அதற்கு வேண்டிய சிறு வெப்பத்தை பாறைகளிலிருந்து எடுப்பதால் பாறை குளிர்கிறது. அதையொட்டியுள்ள காற்றும் குளிர்கிறது. வெப்பம் குறைக்க வழி சூரிய கட்டடக் கலையில் வீட்டின் வெப்ப நிலையை 27 டிகிரி செல்சியசுக்குள் கீழ் வைக்க மற்றொரு வழியும் உள்ளது.வீடு கட்டப்பட்டுள்ள அஸ்திவாரத்தின் வெப்ப நிலையும் கீழே செல்லச் செல்லக்குறையும். அதனால் வீட்டை திட்டமிடும் போது மண் தளத்தின் கீழும் அறைகளை அமைக்க வழிவகுப்பர். இதை பேஸ்மென்ட் கீழ்தளம் என்பார்கள். இங்கு காற்றின் வெப்பநிலை ஏற்றதாக (27-29 டிகிரி செல்சியஸ்) இருக்கும். இந்தக்காற்றையும் மற்ற அறைகளுக்கு குழாய் மூலம் சூரியக்காற்று கருவியினால் செலுத்தலாம். இம்முறை வெளிநாடுகளில் பிரபலம்.வீட்டிற்கு அடுத்தபடியாக மிக வேண்டப்படுவது வெளிச்சம்.
கண்ணாடியிலான உள்ளீடற்ற பெரிய, செவ்வக வடிவிலான அமைப்புகள் இன்று சந்தையில் கிடைக்கின்றன. இவைகள் வழியாக ஒளி ஊடுருவும். வீடு செங்கல்களை வைத்து கட்டும் போது இக்கண்ணாடி பிளாக்குகளையும் திட்டமிட்டு இடையில் வைத்து கட்டலாம்.
இவைகள் மேல் சிமென்ட் பூச்சு பூசக்கூடாது. பகலில் சூரிய ஒளி திட்டமிட்ட அளவு உட்புகுந்து அறையை வெளிச்சமாக்கும். இக்கண்ணாடி கட்டிகளை திட்டமிட்டு அமைத்தால் உட்பக்கம் போதிய சூரிய வெளிச்சம் கிடைக்கும். வரவேற்பு அறைகளில் கண்ணாடி பிளாக்குகளை சுவற்றில் கீழ் இருந்து மேல் வரை தூண் போல அமைக்கலாம்.வீட்டின் பல பகுதிகளில் இந்த கண்ணாடி அமைப்பு கொண்டு இயற்கையான வௌிச்சம் பெற முடியும்.சூரியக் கட்டட கலையில் இன்னும் பல தொழில் நுட்பங்கள் உள்ளன. அமெரிக்காவில் பாலை வன பிரதேசமான நேவடா பகுதியில் சூரிய கட்டட கலை பிரபலம். பாலைவன வீடுகள் இந்த தொழில் நுட்பத்தால் சொர்க்கப்புரிகளாக மாறி வருகின்றன. இதுகுறித்து விழிப்புணர்வு நம் நாட்டிலும் வர வேண்டும். மின்செலவற்ற வீடுகள் அமையும். மின் தேவை குறைந்தால், நிலக்கரி வழியாக வரும் மின்சாரமும் குறையும்.சுற்றுச்சூழல் மேன்மையுறும். சூரிய ஆற்றலே வற்றாத மூலதனம்.-முனைவர் சி.இ.சூரியமூர்த்திஓய்வு பெற்ற ஆற்றல் துறை தலைவர்மதுரை காமராஜ் பல்கலை,மதுரை. 97913 76681.We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X