சர்ட்டிபிகேட் போலி... - சரக்கு கடை வேலை காலி!| Dinamalar

சர்ட்டிபிகேட் போலி... - சரக்கு கடை வேலை காலி!

Added : ஆக 04, 2015 | கருத்துகள் (1)
Share
உக்கடம் பெரியகுளம் கரை அருகில், பிரமாண்டமான பேனரில், கலாம் கையசைத்துக் கொண்டிருந்தார். அதிலிருந்த வாசகங்களை வாசித்துக் கொண்டிருந்தாள் மித்ரா. அவளை தோள் தொட்டுத் திருப்பினாள் சித்ரா.''ஏய் மித்து! என்ன...ஒரு மாதிரியா இருக்க. கலாம் சாரோட, கடைசிப் பயண ஞாபகமா? இந்த இடத்துக்கு வந்தா, அவரோட ஞாபகம் வர்றதை இனிமே தவிர்க்கவே முடியாது. இதே இடத்துல, அவருக்கு நினைவு அஞ்சலி
சர்ட்டிபிகேட் போலி... - சரக்கு கடை வேலை காலி!

உக்கடம் பெரியகுளம் கரை அருகில், பிரமாண்டமான பேனரில், கலாம் கையசைத்துக் கொண்டிருந்தார். அதிலிருந்த வாசகங்களை வாசித்துக் கொண்டிருந்தாள் மித்ரா. அவளை தோள் தொட்டுத் திருப்பினாள் சித்ரா.
''ஏய் மித்து! என்ன...ஒரு மாதிரியா இருக்க. கலாம் சாரோட, கடைசிப் பயண ஞாபகமா? இந்த இடத்துக்கு வந்தா, அவரோட ஞாபகம் வர்றதை இனிமே தவிர்க்கவே முடியாது. இதே இடத்துல, அவருக்கு நினைவு அஞ்சலி செலுத்துனது, நல்ல விஷயம். நம்மூரு மக்கள், நல்ல விஷயத்துக்கு ஒண்ணு கூடுறவுங்கங்கிறதை நேத்தும் நிரூபிச்சிட்டாங்க''
''ஆமாக்கா! ரொம்பவே உணர்ச்சிப்பூர்வமா இருந்துச்சு. கலாம் சார், நம்ம மக்களை எவ்ளோ ஈர்த்திருக்கார்ங்கிறதை நல்லாவே பார்க்க முடிஞ்சுச்சு'' என்றாள் மித்ரா.
''அதெல்லாம் சரி மித்து...அவரோட உறுதிமொழியை வாசிச்சாப் போதுமா...அவரை மாதிரி, கொஞ்சமாவது மாற வேண்டாமா? நம்மூர் ஹாஸ்பிடல்ல, ஒரு முறை கலாம் சார் பேசுறப்ப, 'வர்ற பேஷண்ட்களை 'டயக்னாஸ்' பண்றோம்கிற பேர்ல அலைக்கழிக்காதீங்க'ன்னு சொன்னாரு. பல காலேஜ்கள்ல பேசுறப்ப, 'வருஷத்துக்கு 10 ஏழைப் பசங்களையாவது இலவசமா படிக்க வைங்கன்னு கேட்ருக்காரு. இதெல்லாம் நடக்குதா?'' என்றாள் சித்ரா.
''சொல்லப் போனா, அவரை வர வைச்சு, தங்களோட நிறுவனங்களுக்கு பேரு எடுத்துக்கிட்டாங்களே தவிர, யாரும் அவரோட வார்த்தைகளுக்காக, கொஞ்சமும் மாறுனதாத் தெரியலைக்கா'' என்றாள் மித்ரா.
''நீ சொல்றது உண்மை தான். நம்மூர்ல சில ஹாஸ்பிடல்கள்ல, டாக்டர்களுக்கு வைக்கிற 'டார்கெட்'டைப் பத்தி கேள்விப்பட்டா, நமக்கும் 'ஹார்ட் அட்டாக்'கே வந்துரும்'' என்றாள் சித்ரா.
''டாக்டர்ன்னு சொன்னதும், நம்ம ஜி.எச்.ல, ஹவுஸ் சர்ஜன் குடிச்சிட்டுப் பண்ணுன அலும்பு தான் ஞாபகத்துக்கு வந்துச்சு. அவர் மேல இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கலையாமே''
''ஆமா...அதைப் பத்தி விசாரிக்க, ரெண்டு டாக்டர்களைப் போட்ருக்காங்க. அதுல ஒருத்தரு, பகல்லயே, 'உற்சாகமா' மிதக்கிறவரு. அப்புறம் என்னத்த நடவடிக்கை எடுத்து...''
''அக்கா...இந்த கொடுமையக் கேளு. ஆக்சிடென்ட் ஆகி, 108 க்கு போன் பண்ணுனா, அந்த வண்டி வர்றதுக்குள்ள, ஒண்டிப்புதுார்ல இருக்கிற ஆர்த்தோ ஹாஸ்பிடல் ஆம்புலன்ஸ் வந்து, ஆளுங்களை அள்ளிட்டுப் போகுதாம். அங்கயிருந்து, மேல் சிகிச்சைக்கு வெளிய போக நினைச்சாலும், மெரட்டி, காசைப் புடுங்கிர்றாங்க'' என்றாள் மித்ரா.
''என்ன கொடுமை சரவணன்?'' என்று கண்ணடித்தாள் சித்ரா.
''கார்ப்பரேஷன்ல நடக்கிற கொடுமைய விடவா...குப்பையில கொள்ளையடிச்ச ரெண்டு இன்ஜினியர்கள்ல ஒருத்தரை 'சஸ்பெண்ட்' பண்ணி, துாத்துக்குடிக்கு துாக்கியடிச்சாங்க. இன்னொருத்தரு 'சஸ்பெண்ட்' ஆகி, இங்கேயே வந்துட்டாரே. அவரை, மறுபடியும் 'சாலிட் வேஸ்ட் மேனேஜ்மென்ட்'லயே போட்டுட்டாங்க''
''மறுபடியும் கொடுமை 'டயலாக்'கா...மித்து...நம்ம கார்ப்பரேஷன்ல முக்கியப் பொறுப்புல இருக்கிற இன்ஜினியரை, கவுன்சில் மீட்டிங்ல, மேயர் காய்ச்சி எடுத்துட்டாரு தெரியுமா? ஒரு வேலையும் தெரியாத ஆளு நமக்கு வேண்டாம்; வேற எங்கேயாவது மாத்தி விடுங்கன்னு சொல்லிருக்காரு''
''அது தான உனக்குத் தெரியும். ஏற்கனவே அவரை மாத்தச் சொல்லி, ரெண்டு லெட்டர், கவர்மென்ட்டுக்குப் போயிருச்சு. ஆனா, யாரு 'சப்போர்ட்'டுன்னே தெரியலை. இங்கயே உட்கார்ந்து, 'டைகர்' பிஸ்கட் சாப்பிட்டு பொழுதை ஓட்றாரு'' என்றாள் மித்ரா.
''ஒரு வேளை உளவு வேலைய மட்டும், கரெக்டா பாக்குறாரோ என்னவோ?'' என்றாள் சித்ரா.
''உளவு வேலைன்னு சொன்னதும், பெங்களூரு பொண்ணை மெரட்டுன உளவு அதிகாரி ஞாபகம் வந்துச்சு. ஏகப்பட்ட வேலைகளைப் பண்ணிட்டு, சத்தமே இல்லாம 'ரிட்டயர்டு' ஆயிட்டாரு. இப்பவும், அவருக்கு வேண்டப்பட்ட ஒருத்தரை, அவரு இடத்துல உக்கார வைக்க முயற்சி பண்றாராம்'' என்றாள் மித்ரா.
''அந்தப் பொண்ணை மெரட்டுனதுக்கு, ஒரு நடவடிக்கையும் இல்லையா? அப்டின்னா, அதிகாரத்துல இருக்கிறவுங்க என்ன வேணும்னாலும் பண்ணலாமா?'' என்றாள் சித்ரா.
''அதுவும்...போலீஸ்ன்னா என்ன வேணும்னாலும் செய்யலாம். சரவணம்பட்டியில, ஸ்டேஷன் பக்கத்துல ஒரு ஆவின் பார்லர் இருக்கு. அதுக்குப் பின்னால இருக்கிற 'கிரவுண்ட்'ல ராத்திரியானா ஒரே சரக்குக் கச்சேரி தான். ஸ்டேஷன் காக்கிச் சட்டைக, யூனிபார்ம் போட்டே, அங்க போடுற ஆட்டத்தை, ஏரியாவே பேசுது'' என்றாள் மித்ரா.
''சரக்குன்னதும் டாஸ்மாக்ல நடக்குற ஒரு மோசடி, ஞாபகம் வந்துச்சு. டாஸ்மாக் சூபர்வைசருக்கு 'டிகிரி' குவாலிபிகேஷன் வேணும். ஆனா, இங்க வேலை பாக்குற 15 சூபர்வைசர்களோட சர்ட்டிபிகேட்டை 'வெரிஃபை' பண்ணுனதுல, எல்லாமே போலி சர்ட்டிபிகேட்ன்னு தெரிஞ்சிருக்கு''
''இதுலயும் 'மிக்ஸிங்'கா...?''
''போலி சர்ட்டிபிகேட் கொடுத்து, ஜாலியா சம்பாதிச்சது மட்டுமில்லை. டிகிரியே முடிக்காம, 'கோர்ஸ் கம்ப்ளீஷன் சர்ட்டிபிகேட்' கொடுத்து, வேலையில சேர்ந்திருக்காங்க. சேல்ஸ்மேனுக்கு, 'டென்த்' முடிச்சிருக்கணும். பல பேரு, வேற பசங்களோட சர்ட்டிபிகேட்டை கொடுத்து, ஆள் மாறாட்டம் பண்ணிருக்காங்க. 30, 35 பேரு மாட்டிருக்காங்க. அநேகமா வேலை காலி தான்'' என்றாள் சித்ரா.
''அறநிலையத்துறையிலயும், இதே கூத்து நடந்திருக்கு. லஞ்சம் கொடுத்தா, இதெல்லாம் யாரு பாக்குறாங்க. அங்கேயும் இதைக் கண்டு பிடிச்சு, புதுசா வேலைக்குச் சேர்ந்தவுங்களோட 'சர்ட்டிபிகேட்'டை எல்லாம், கல்வித்துறைக்கு அனுப்பி வச்சிருக்காங்க. அங்க பல பேரு வேலை போகும்னு பேசிக்கிறாங்க'' என்றாள் மித்ரா.
''வேலை போறதை விடு... பதவி பறி போன கரூர்க்காரரோட ஆளுங்க ரெண்டு பேரு, இங்கயிருந்து துாக்கிருவாங்களோன்னு பயத்துல இருக்காங்க'' என்றாள் சித்ரா.
''யாரு... ரெண்டே ரெண்டு கை வச்சுக்கிட்டு, நாலஞ்சு மாவட்ட ஆர்.டி.ஓ., ஆபீஸ்கள்ல கலெக்ஷன் பாக்க...கஷ்டப்படுறாரே...அவரா?'' என்றாள் மித்ரா.
''அவரே தான்...அவரை மாதிரியே, அரசு பஸ்களைக் கவனிக்கிற முக்கியமான பொறுப்புல இருக்கிற 'மணி'யான அதிகாரி...ரெண்டு பேரும்தான், 'தில்'லான 'ஜி'க்கு, இந்த ஏரியா கலெக்ஷனெல்லாம் பாத்துட்டு இருந்தாங்க. இப்போ, அவரு பதவி போனதும், இவுங்க அரண்டு கெடக்குறாங்க'' என்றாள் சித்ரா.
''அதென்னவோ தெரியலைக்கா. நம்மூருக்கு வேலைக்கு வர்ற பல வெளியூரு அதிகாரிங்க, நல்லா சம்பாதிச்சு ருசி கண்டுக்கிறதால, இங்கயிருந்து நகர்றதேயில்லை'' என்றாள் மித்ரா.
''அப்டின்னா, இந்த ஊர்க்காரங்க, தப்புப் பண்ணி சம்பாதிச்சா தப்பில்லையா?'' என்றாள் சித்ரா.
''அச்சச்சோ...நான் அப்டிச் சொல்லலைக்கா. நம்மூர்ல தென் மாவட்டத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஒருத்தரு இருக்காரு. கட்டப்பஞ்சாயத்து 'கிங்'குன்னு பேரு வாங்குனவரு. இப்போ 'நம்பர் ஒன்' ஸ்டேஷன்ல இருக்காரு. அவரு, இங்க வந்ததுலயிருந்து
19 வருஷமா, சிட்டிக்குள்ளயே தான் சுத்திட்டு இருக்காரு. இடையில, சூலுார் மட்டும் கொஞ்ச
நாள் போயிட்டு வந்திருக்காரு'' என்றாள் மித்ரா.
''அவருக்குப் பக்கத்து ஸ்டேஷன்ல இருக்கிற இன்ஸ்பெக்டரும், சிட்டியை விட்டு நகர்றதேயில்லையே''
''ஓ...சக்கரையாப் பேசுவாரே....அவரா? ரெண்டு பேரோட ஏரியாவுல தான், ஒரு நம்பர் லாட்டரி வியாபாரம், பட்டப்பகல்ல
பகிரங்கமா நடக்குது''
''யாரு சொன்னா, அப்ப அண்ணா மார்க்கெட், எம்.ஜி.ஆர்., மார்க்கெட்ல நடக்குறதுக்கு என்ன பேரு? சிட்டி முழுக்கவே, கஞ்சாவுக்கும், லாட்டரிக்கும் குறைவேயில்லை'' என்றாள் சித்ரா.
''எங்கெங்க தப்பு நடக்குதுன்னு, போலீஸ் அதிகாரிகளுக்கு நல்லாவே தெரியுது. அப்புறம் ஏன் கண்டுக்கவே மாட்டேங்கிறாங்கன்னு தெரியலை'' என்றாள் மித்ரா.
''கண்டுக்காம இருக்கிறதுல, நம்ம போலீசை அடிச்சுக்க முடியாது மித்து...ஹெல்மட் போடலைன்னு, தினமும் சிட்டிக்குள்ள ஆயிரம் பேரைப் பிடிச்சு, 'ஃபைன்' போடுறாங்க. ஆனா, உக்கடம், கரும்புக்கடை, குனியமுத்துார், போத்தனுார் ஏரியாவுல, நுாத்துக்கு 10 பேரு கூட ஹெல்மட் போடுறதில்லை. அந்த ஏரியாவுல யாரையுமே பிடிக்கிறதில்லை. ஏன்...அவுங்கெல்லாம் சட்டத்துக்கு அப்பாற்பட்டவங்களா?'' என்றாள் சித்ரா.
''அங்கேயும் சட்டத்தை மதிக்கிறவுங்க இருக்காங்க. ஆனா, பெரும்பாலானவங்க, ஹெல்மெட் போடாம, போலீஸ் முன்னாலயே 'மொபைல்'ல பேசிட்டே வண்டி ஓட்டிட்டுப் போறாங்க. அவுங்க யாரும் போலீசுக்குப் பயப்பட வேணாம். அவுங்கவுங்க குடும்பத்தை நினைச்சுப் பயந்தா போதும்'' என்றாள் மித்ரா.
நடந்து கொண்டே இருவரும், உக்கடம் குளக்கரையின் கிழக்குப் பகுதிக்கு வந்து விட, 'சரி! இதுக்கு மேல, போக வேண்டாம். திரும்பிருவோம்' என்று சித்ரா சொல்ல, இருவரும் திரும்பி நடக்க ஆரம்பித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X