திண்டுக்கல்: திண்டுக்கல்லில் புனித செபஸ்தியார் சர்ச் திருவிழாவில் 2 ஆயிரம் கோழி, 800 ஆடுகள் சமைத்து அனைத்து மதத்தினரும் பங்கேற்ற சமபந்தி விருந்து நடந்தது.திண்டுக்கல் முத்தழகுபட்டி புனித செபஸ்தியார் திருவிழா கடந்த ஆக.2ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை 6 மணிக்கு பாதிரியார் ஆரோக்கியசாமி தலைமை யில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்பட்டது.ஊர் பொதுமக்கள் சார்பாகவும், சங்கங்கள், குடும்பங்கள், வெளியூர் பொதுமக்கள் சார்பாக செபஸ்தியாருக்கு ஆடு, கோழி, அரிசி காணிக்கையாக அளிக்கப்பட்டது. இதில் 2 ஆயிரம் கோழிகள், 800 ஆடுகள், 130 மூடை அரிசி கிடைத்தது. அனைத்து மதத்தினரும் ஆடு, கோழி, அரிசியை காணிக்கையாக செலுத்தினர். இதில் வந்த மாடு மற்றும் சில பொருட்கள் உடனடியாக ஏலம் விடப்பட்டு, அந்த தொகை சர்ச் நிதியில் சேர்க்கப்பட்டது. திண்டுக்கல் அருகேயுள்ள கிராமத்தினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.சமபந்தி விருந்து: நேற்று மாலை 6 மணிக்கு சமபந்தி விருந்து துவங்கியது. முதல் கட்டமாக 800 கோழி, 135 ஆடுகள் அறுக்கப்பட்டு பொது விருந்து விடிய, விடிய நடந்தது. இன்று பகல் 1 மணி வரை நடக்கிறது. பகல் 2 மணிக்கு தேர்பவனி நடக்கிறது. ஏற்பாடுகளை பாதிரியார் சேவியர் ராஜ், ஊர் பொதுமக்களும் செய்துஉள்ளனர்.