கலப்படமற்ற தூய்மையான உணவு தாய்ப்பால் : ஆக., 8 வரை தாய்ப்பால் வார விழா

Added : ஆக 05, 2015
Advertisement
 கலப்படமற்ற  தூய்மையான உணவு தாய்ப்பால்  : ஆக., 8  வரை தாய்ப்பால் வார விழா

ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரம் தாய்ப்பால் வாரமாக கொண்டாடப்படுகிறது. தாய்ப்பாலின் அவசியம் குறித்து தொடர் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. இந்தாண்டு தாய்ப்பால் வாரம் 'தாய்ப்பாலும், வேலையும்' என்ற தலைப்பில் கொண்டாடப்படுகிறது.
உணவே மருந்து... மருந்தே உணவு... என்ற வாக்கியத்தின் முதல் அத்தியாயம் தாய்ப்பால். குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்கள் கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
விடுப்பு அவசியம்
பேறுகாலத்திற்கு முன்பே டாக்டரை அணுகி தாய்ப்பால் எப்படி கொடுக்க வேண்டும் என ஆலோசனை பெற வேண்டும். குழந்தைகளின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு தாய்ப்பால் அருமருந்து. நோய்தாக்குதல் இன்றி எதிர்ப்பு சக்தி பெறவும், ஒவ்வாமையை தடுக்கவும் உதவுகிறது. பேறுகாலத்திற்கு பின் குழந்தைக்கு பாலுாட்ட தேவையான அளவு கட்டாயம் விடுப்பு எடுக்க வேண்டும். முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். வேறு இணை உணவு தேவையில்லை.
பாலை பாதுகாக்கலாம்
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு போதிய விடுப்பு கிடைக்காத நிலையில் குழந்தைக்கு பாலுாட்டாமல் விடக் கூடாது. வேலைக்கு செல்வதற்கு முன்னும், வந்தவுடனும் இடையில் நேரம் கிடைத்தாலும் புகட்ட வேண்டும். இரவில் குழந்தையின் தேவைக்கேற்ப பாலுாட்டுவது நல்லது. வெளியே செல்லும் போது தாய்ப்பாலை பாத்திரத்தில் பீய்ச்சி, அறையின் இயல்பான வெப்பநிலையில் அப்படியே வைத்தால் ஆறுமணி நேரத்திற்கு கெடாது. பாலை பீய்ச்சி பிரிட்ஜில் வைத்தால் ௨௪ மணி நேரம் கெடாது. இதை வெளியில் எடுத்து தண்ணீர் ஊற்றிய மற்றொரு பாத்திரத்தின் மீது வைத்து மிதமான சூடுபடுத்தி குழந்தைக்கு தரலாம். பிரிட்ஜில் இருந்து எடுத்தவுடன் தரக்கூடாது.
வேலைக்குச் சென்ற இடத்தில் வாய்ப்பு கிடைத்தால் பாதுகாப்பான தனியறையில் பாலை பீய்ச்சி பாத்திரத்தில் சேகரித்து வீடு திரும்பியவுடன் குழந்தைக்கு தரலாம். அல்லது பாலை பீய்ச்சி வெளியேற்ற வேண்டும். அப்படி செய்தால் தான் குழந்தைக்கு தேவையான அளவு பால் தொடர்ந்து ஊறும்.
சீம்பால் தான் சிறந்தது
குழந்தை பிறந்தபின் சுரப்பது தான் சீம்பால். இது மிக சத்து நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. விட்டமின் ஏ, கே அதிகம். இதை கொடுத்தால் குழந்தைக்கு கெடுதல் என சிலர் அறியாமையால் வெளியேற்றுகின்றனர். முதல் மற்றும் இரண்டாவது நாட்களில் ஊறும் பாலை கண்டிப்பாக குழந்தைக்கு புகட்ட வேண்டும்.
சீனி, தேன் தண்ணீர் வேண்டாம்
குழந்தை பிறந்தவுடன் சீனித்தண்ணீர் அல்லது தேன் தண்ணீர் அல்லது வைரமோதிரம் ஊறிய தண்ணீரை குழந்தைக்கு தருவர். இது மிக தவறான பழக்கம். தாய்ப்பால் கொடுப்பதற்கு இடையூறாக அமைந்து விடும். குழந்தை பிறந்தநிலையில் நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருக்கும். இதுபோல செய்வதால் குழந்தைக்கு நோய்தொற்று எளிதாக ஏற்படும்.
மார்பகங்களும் பால்சுரப்பும்
சிறிய மார்பகத்தில் பால் கொஞ்சமாக சுரக்கும்; பெரிய மார்பகத்தில் நிறைய சுரக்கும் என்பது கட்டுக்கதை. பெரிய மார்பகம் என்பது கொழுப்பின் அளவை வைத்து தீர்மானிக்கப்படுகிறது. தாய்ப்பால் சுரப்பதற்கு சுரப்பிகள் தான் காரணம். சுரப்பிகளுக்கும் மார்பகத்தின் அளவிற்கும் தொடர்பில்லை. சுரப்பியின் அளவு ஒரே மாதிரி தான் இருக்கும். எனவே பால் சுரப்பதும் ஒரே மாதிரி தான் இருக்கும்.
கர்ப்பிணிகள் பாலுாட்டலாமா
குழந்தை கையில் இருக்கும் போது சிலர் கர்ப்பமாக இருப்பர். இந்நிலையில் முதல் குழந்தைக்கு பாலுாட்டக் கூடாது என சிலர் சொல்வதுண்டு. கர்ப்பத்தின் ஏழு மாதங்கள் வரை முதல் குழந்தைக்கு பாலுாட்டலாம். அதன் பின் பாலுாட்டினால் சில நேரங்களில் குறைபிரசவம் நிகழ வாய்ப்புண்டு.ஊட்டச்சத்து குறைபாடுள்ள பெண்ணால் சரியான அளவில் தாய்ப்பால் கொடுக்க முடியுமா என கேட்கலாம். உடல்நலம் சரிஇல்லையென்றாலும் குழந்தை பால் குடிக்கும் போது, அதற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கண்டிப்பாக பாலில் இருக்கும். எனவே பயப்பட தேவையில்லை.
உடல்நலமில்லையா
தாய்க்கு இருமல், சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, டைபாய்டு, மஞ்சள்காமாலை இருக்கும் போதும் தாராளமாக தாய்ப்பால் கொடுக்கலாம். காசநோய் இருந்தால் 'மாஸ்க்' அணிந்து பால் கொடுக்கலாம். ஏனென்றால் தாய்ப்பால் குடிக்காத நிலையில் குழந்தைகளுக்கு வரும் நோய்களுடன் ஒப்பிடுகையில் இதனால் பெரிய கேடு வரப்போவதில்லை. புற்றுநோய், எய்ட்ஸ் நோய் இருந்தால் டாக்டரின் ஆலோசனையை பெற வேண்டும்.குழந்தையின் அழுகை என்பது பொதுவான மொழி. பசிக்கு மட்டுமல்ல... சிறுநீர் கழித்தாலும், இருமல், சளி, காய்ச்சல், வலி இருந்தாலும் அழும். தினமும் ஆறு அல்லது ஏழு முறை சிறுநீர் கழிப்பதுடன் மாதம் ௫௦௦ முதல் ௮௦௦ கிராம் எடை கூடினால், குழந்தைக்கு தேவையான தாய்ப்பால் கிடைக்கிறது என அர்த்தம். குழந்தை அடிக்கடி அழுகிறான் என்பதற்காக பால் போதவில்லை என நினைக்க கூடாது.
கோடை வெப்பத்தில் குழந்தை பிறந்தாலும், முதல் ஆறு மாதங்கள் வரை குழந்தைக்கு தண்ணீர் கொடுக்க வேண்டாம். தாய்ப்பாலில் குழந்தைக்கு தேவையான அளவு தண்ணீர் இருப்பதால் முதல் ஆறு மாதங்களுக்கு தண்ணீர் அவசியமில்லை.
சுத்தம் செய்வது நல்லதா
ஒவ்வொரு முறை பாலுாட்டுவதற்கு முன்னும் மார்பகங்களை சோப்புத் தண்ணீரால் சுத்தம் செய்வது நல்லதல்ல. இதனால் மார்பகங்கள் உலர்ந்து, காம்பு பகுதியில் விரிசல் ஏற்படும். குழந்தை பால் குடிக்கும் போது தாய்க்கு வலி அதிகமாகும். குளிக்கும் போது மார்பகங்களை சுத்தம் செய்தால் போதும்.குழந்தை பிறந்த பின் இந்த உணவு சாப்பிடக்கூடாது என்று எதுவும் இல்லை. உணவில் அலர்ஜி இருந்தால் அதை மட்டும் தவிர்க்கலாம். தானியம், பருப்பு, கீரை, காய்கறி, பழங்கள், அசைவம் உட்பட அனைத்தையும் சாப்பிடலாம்.
இரட்டை குழந்தைகள் பிறந்தால் இருவருக்கும் பால் போதவில்லை என பாட்டில் பாலுக்கு செல்ல வேண்டாம். இரு குழந்தைகளும் ஆறுமாதங்கள் பால் குடிக்கும் வரை நன்றாக பால் சுரக்கும். குழந்தை பிறந்த இரு வாரங்கள் வரை மஞ்சள்காமாலை வருவது சாதாரண விஷயம். அதற்கும் தாய் சாப்பிடும் உணவுக்கும், தாய்ப்பாலுக்கும் சம்பந்தம் இல்லை.
குழந்தைகளுக்கான கலப்படமற்ற, துாய்மையான, முழுமையான உணவு தாய்ப்பால். இதை ஒவ்வொரு தாயும் உணர்ந்தால் வருங்காலம் நோயற்ற சமுதாயமாக மாறும்.
- டாக்டர் முருகன் ஜெயராமன்,குழந்தைகள் நல நிபுணர், மதுரை, muruganillam@gmail.com,
94864 67452.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X