வேலூர்: ஆம்பூர் கலவர வழக்கில், 'சஸ்பெண்ட்' ஆன, இன்ஸ்பெக்டரிடம், மூன்று நாள் போலீஸ் காவலில் விசாரிக்க, சி.பி.சி.ஐ.டி.,க்கு, நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்த பவித்ரா மாயமானது தொடர்பாக, ஆம்பூரைச் சேர்ந்த வாலிபர் ஷமில் அகமது என்பவரை, கடந்த ஜூனில், பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர், மார்ட்டின் பிரேம்ராஜ், விசாரணைக்காக அழைத்துச் சென்றார்.பின், ஜூன், 26ம் தேதி, ஷமில் திடீரென இறந்தார். இதனால், மறுநாள், 27ம் தேதி, ஆம்பூரில் கலவரம் வெடித்து, பொது சொத்துக்கள் நாசப்படுத்தப்பட்டன; 50க்கும் மேற்ட்ட போலீசார் காயமடைந்தனர்.இந்த வழக்கில், மார்டின் பிரேம்ராஜ், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். வாலிபர் இறந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டதும், விசாரணையில் ஆஜராகுமாறு, இன்ஸ்பெக்டருக்கு போலீசார் உத்தரவிட்டனர். ஆனால், பிரேம்ராஜ் தலைமறைவானார்.இந்நிலையில், கடந்த ஜூலை, 31ம் தேதி, கன்னியாகுமரி மாவட்டம், கீரிப்பாறை அருகே, மாறாமலை காட்டுப்பகுதியில், நண்பர்கள் மூவருடன் சேர்ந்து, கடமானை வேட்டையாடிய வழக்கில், பிரேம்ராஜ் சிக்கினார்.நாகர்கோவில் சிறை யில் அடைக்கப்பட்டு இருந்த இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ், நேற்று முன்தினம் நள்ளிரவு, 11:00 மணிக்கு, வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.சி.பி.சி.ஐ.டி., போலீசார், நேற்று, வேலூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பிரேம்ராஜை ஆஜர்படுத்தி, ஐந்து நாள், போலீஸ் காவல் விசாரணைக்கு அனுமதி கேட்டனர். மாஜிஸ்திரேட் ரேவதி, நேற்று முதல், மூன்று நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார்.