சினிமா சூழ் தமிழுலகு : என் பார்வை| Dinamalar

சினிமா சூழ் தமிழுலகு : என் பார்வை

Added : ஆக 07, 2015 | கருத்துகள் (12)
சினிமா சூழ்  தமிழுலகு : என் பார்வை

காட்சி ஊடகங்களில் மிக முக்கிய
அங்கமாக திகழ்வது சினிமா. ஆம், சுதந்திர போராட்ட காலம் தொட்டு இன்றுவரை பல்வேறு விஷயங்களில் மக்களிடம்
விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் திரைப்
படங்கள் பெரும்பங்கு வகித்துள்ளன.
சினிமா எந்த அளவிற்கு தமிழக மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு, அது தமிழகத்திற்கு கொடுத்திருக்கும் இத்தனை முதலமைச்சர்களே உதாரணம். மிக இளம் வயதில், முதல் முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றுள்ள அருண்ராஜ், கடந்த வாரம் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், நேர்முகத் தேர்வுக்கு போகும் முன், இளைஞர்கள் அரசியல் மற்றும் அதிகார பணிக்கு செல்வது போன்ற நிறைய திரைப்படங்களை பார்த்தேன் என்று கூறியுள்ளார்.
நல்லதோ கெட்டதோ, நமது அன்றாட வாழ்க்கையில் நடந்தேறும் ஒவ்வொரு நிகழ்விற்கும் வள்ளுவனிடம் இருந்து படிப்பினைகளை தேடிய நாம் இன்று வடிவேலுவின் வசனங்களில் தேடிக்கொண்டிருக்கிறோம்.
இது இருண்டகாலம்
தமிழ் சினிமாவிற்கென்று இருண்டகாலம் ஒன்று உண்டெனில் அது நிகழ்காலமாகத்தான் இருக்க முடியும். ஏனெனில் நிகழ்கால திரைப்படங்களில், அவற்றை வெற்றியடையச் செய்ய ஒரு சூத்திரம் பயன்படுத்தப்படுகிறது. அது என்னவெனில், திரைப்படத்தில் பெண்களை மோசமாகத் திட்டி ஒரு பாடல் இருக்கவேண்டும். பின்னர் தவறாமல் சாராயக்கடையில் நண்பர்களோடு, குடித்துக்கொண்டும் புகைத்துக் கொண்டும் ஆடிப்பாடும் காட்சி இடம்பெற வேண்டும். சில சினிமாக்களில் திருநங்கைகளை இழிவுபடுத்தும் காட்சிகள் அல்லது உறவுகளை மிக மோசமாக சித்தரிக்கும் காட்சிகளும் இடம்பெறுகிறது. இவையெல்லாம் ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் பட்சத்தில், அந்த சினிமா வெற்றியடைத் தேவையான எல்லா தகுதிகளை பெற்றுவிட்டதாகக் கருதப்படுகிறது. எல்லா சினிமாக்களிலும் இதுபோன்ற காட்சிகள் இடம்பெறுவதில்லை என்பது உண்மைதான். ஆனால், ஓரளவு ரசிகர் வட்டத்தைக் கொண்டுள்ள பெரும்பாலான நடிகர்களின் திரைப்படங்கள் இதுபோன்ற காட்சிகளைக் கொண்டே வெளிவருகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.
கெட்டவன் கதாநாயகன்
திரைப்படத்தில் கதாநாயகர்களை நல்லவர்களாகக் காட்டி, சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் எதிரிகளை அவர்கள் அழிப்பது போல காட்சிகளை அமைத்து வந்த காலம்போய், “நான் கெட்டவன், அனைத்து கெட்ட செயல்களையும் செய்வேன்” என்பதை கதாநாயகன் பெருமையாக கூறுவதை போன்ற திரைப்படங்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன. அது அதனை பார்க்கும் இளைஞர்கள் மத்தியில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவருவதை கண்கூடக் காண்கின்றோம். மேலும் அவ்வப்போது குறிப்பிட்ட ஜாதிகளை துாக்கிபிடிக்கும் விதமாக வெளிவரும் திரைப்படங்கள் சமூகத்தில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தியதை கண்டிருக்கிறோம். இதுபோல சமூக அக்கறையில்லாத நபர்கள், தாங்கள் வெளியிடும் திரைப்படங்களினால் ஏற்படும் விளைவினை கருத்தில் கொள்ளாமல் லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவது வேதனையான ஒன்று.
எங்களது பணி நடிப்பது மட்டுமே. நாங்கள் ஏன் மக்களைப்பற்றி கவலைப்பட வேண்டும் என்று கேட்கலாம். அதற்கு காரணமிருக்கிறது. அது 2006-ல் கொண்டுவரப்பட்ட ஒரு அரசாணை. அதன்படி தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி ரத்து செய்யப்படும். மற்றபடி படத்திற்குள் என்னென்ன விஷயங்கள் இருந்தாலும் பரவாயில்லை. ஒரு திரைப்படத்திற்கு கேளிக்கை வரி ரத்து செய்யப்படும் பட்சத்தில், அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் கிடைக்கும் வசூல் தொகையில் அரசுக்கு செலுத்தவேண்டிய 30% வரிப்பணத்தை செலுத்த தேவையில்லை. அரசின் இந்த முடிவினால் ஜூலை 2006 முதல் டிசம்பர் 2010 வரை மட்டும் தமிழக அரசிற்கு தோராயமாக 300 கோடி இழப்பு ஏற்பட்டதாக 'கோயம்புத்தூர் கன்சூமர் காஸ்' என்ற அமைப்பு கூறுகிறது.
அரசின் பதில் என்ன
இந்த அரசாணை வெளியிடப்படுவதற்கு முன்னால் அரசு எவ்வளவு வருமானம் ஈட்டியது என்பதனை அறிய, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி நான் கேட்ட கேள்விகளுக்கு தமிழக அரசு அளித்த பதிலில், 2003 முதல் 2006 வரை மட்டும் அரசுக்கு 177.73 கோடி ரூபாய் வருமானம் வந்ததாக கூறியுள்ளது.
அக்காலகட்டத்தில் வெளிவந்த திரைப்படங்களின் தோராய எண்ணிக்கை 309. இந்த கணக்கின்படி பார்த்தால் இன்றுவரை அரசிற்கு ஏற்பட்டுள்ள வருமான இழப்பு பல நுாறு கோடிகளை தாண்டியிருக்கும். உதாரணத்திற்கு 01.01.2011—லிருந்து 05.12.2014 வரை 343 திரைப்படங்கள் வரிவிலக்கு பெற்றுள்ளதாக தமிழக அரசு பதிலளித்துள்ளது. தற்போதைய விலையேற்றத்தின் படி பார்த்தால் கடந்த நான்கு வருடங்களில் தோராயமாக அரசுக்கு 300 கோடியாவது இழப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். அது அவ்வளவும் மக்களின் பணம்.
2006-ல் வெளியான அரசாணையில் திருத்தம் செய்து 2011-ஆம் ஆண்டு அரசு வெளியிட்ட அரசாணையின்படி கேளிக்கைவரி விலக்கு பெற ஒரு திரைப்படத்தின் பெயர் தமிழில் இருந்தால் மட்டும் போதாது. அத்திரைப்படம் 'யு' சான்றிதழ் பெற்றிருப்பதோடு தமிழ் பண்பாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கவேண்டும். மேலும் வசனங்களில் முடிந்தவரை பிற
மொழிகளை தவிர்த்து, வன்முறை, ஆபாச காட்சிகள் இடம்பெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிறது அந்த அரசாணை. தற்காலத்தில் கேளிக்கை வரிவிலக்கு பெற்று வெளிவரும் திரைப்படங்கள் மேற்கூறிய நிபந்தனைகளை பூர்த்திசெய்துதான் கேளிக்கை வரிவிலக்கு பெறுகிறதா? படங்களை பார்க்கும் நீங்களே புரிந்து கொள்ளலாம்.
குடிக்கச் சொல்லாதீர்
ஈரானிய இயக்குனரான மக்மால்பப் தனது 'ஆப்கன் ஆல்பபட்' என்ற ஆவணப்படத்தின் மூலம், ஆப்கானிய நாட்டு அகதி குழந்தைகளுக்கு ஈரானில் கல்வி மறுக்கப்படும் விதமாக அமைந்த ஈரானிய சட்டத்தையே மாற்றும்படி செய்தார். அவரின் செயலினால் ஐந்து லட்சம் ஆப்கானிய குழந்தைகள் பள்ளி சென்று பயின்றனர்.
அதற்காக தமிழக இயக்குனர்களையும் அவரைப்போல ஆவணப்படம் எடுத்து சட்டத்தை மாற்ற சொல்லவில்லை. சட்டத்தை மீறுவதுதான் இளைஞர்களுக்கு அழகு என்று அவர்கள் மனதில் பதியவைப்பதையாவது நிறுத்துங்கள். நீங்கள் படிக்கச்சொல்லி கொடுக்கவேண்டாம். ஆனால் குடிக்கச் சொல்லி துாண்டாமலிருந்தால் அதுவே போதும். பெண்மையை போற்றாவிட்டாலும் பரவாயில்லை தயவுசெய்து துாற்றாதீர்கள்.
இறுதியில் நாட்டு நடப்பினைத்தான் சினிமாவாக எடுக்கின்றோம் என்று நீங்கள் செய்யும் காரியங்களுக்கு நியாயம் கற்பிக்காதீர்கள். சினிமா ஒரு வலுவான காட்சி ஊடகம். அது பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய அம்பு போன்றது. அதனை சமூகத்தின் தரப்பில் இருந்து
தீவினைகளை எதிர்த்து எய்யுங்கள். சமூகத்தின் மீதே எய்ய வேண்டாம்.
-தினகரன் ராஜாமணிஎழுத்தாளர், திருநெல்வேலி097388 19444We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X