சேலம் : சேலம், அரிசிபாளையம், சத்திரம் தெப்பக்குளத்தில், குடிபோதையில், குளிக்கச் சென்ற பெயின்டர், மகனுடன் நீரில் மூழ்கினார். மூன்று மணி நேர போராட்டத்துக்கு பின், இருவருடைய உடலையும், தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.சேலம், அரிசிபாளையம் சத்திரம் பகுதியில், பழமையான தெப்பக்குளம் உள்ளது. மோசமான நிலையில் கிடந்த, இந்த தெப்பக்குளத்தை, தனியார் அமைப்பினர், தூர்வாரி சீரமைத்தனர். மழைக்காலத்தின்போது, இங்கு அதிகப்படியான நீர் நிரம்பி, குளம் அழகாக காட்சியளிக்கும். அந்த பகுதியில் உள்ளோர், துணி துவைப்பதற்கும், குளிப்பதற்கும், தெப்பக்குளத்தை பயன்படுத்தி வருகின்றனர். 30 அடி ஆழம் உள்ள, அந்த குளத்தைச் சுற்றிலும், சுவர் ஏதுமில்லை. இதனால், பலர் தவறி குளத்தில் விழும் அபாயம் உள்ளது.நேற்று மாலை, 2.30 மணியளவில், அரிசிபாளையம், சின்னப்பன் தெருவைச் சேர்ந்த பெயின்டர் கோபாலகிருஷ்ணன், 47, தன்னுடைய மகன்கள் கோபி, 10, தமிழ்செல்வன், 8, ஆகியோருடன் சத்திரம் தெப்பக்குளம் சென்றார். அப்போது, அவர், குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. அங்கு, குளித்து விட்டு, மகன்களுக்கு நீச்சல் கற்றுகொடுத்து கொண்டிருந்தார். அப்போது, பெரிய மகன் கோபியை, அங்குள்ள படிக்கட்டில் அமர வைத்து விட்டு, இளைய மகன், தமிழ்செல்வனை முதுகில் சுமந்தபடி, தண்ணீரில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தார். திடீரென, இருவரும் தண்ணீரில் மூழ்கினர்.நீண்ட நேரமாகியும், தந்தையும், தம்பியும் தண்ணீரில் இருந்து வெளியே வராததால், அதிர்ச்சியடைந்த சிறுவன் கோபி, வீட்டுக்கு ஓடிச்சென்று, தாய், மயிலிடம், 40, நடந்த சம்பவத்தை கூறினார். அவர், தன்னுடைய மகள் தமிழ்செல்வி, 14, மகன் கோபி மற்றும் உறவினர்களை அழைத்துக் கொண்டு, தெப்பக்குளத்துக்கு ஓடி வந்தார்.பள்ளப்பட்டி போலீஸாருக்கும், செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், மாலை, 3.30 மணி முதல், தண்ணீரில் மூழ்கிய இருவரையும் தீவிரமாக தேடினர். குளத்தில் நீர் அதிகப்படியாக இருந்ததால், உடல்களை தேடுவதில் சிரமம் ஏற்பட்டது. பின், நவீன சாதனங்களை கொண்டு, மாலை, 5.30 மணிக்கு, அவர்களுடைய உடலை வெளியில் எடுத்தனர்.நீச்சல் நன்றாக தெரிந்த கோபாலகிருஷ்ணன், குடிபோதையில் இல்லாதிருந்தால், உயிர் பிழைத்திருப்பார். அவருடைய மகனும், இறந்திருக்க மாட்டார். தெப்பக்குளம் சுற்றுச்சுவர் இல்லாமல் ஆபத்தானதாக உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள், அங்கு பாதுகாப்பு சுவர் எழுப்ப வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE