வாழ்விடம் காப்போம்என்பார்வை!| Dinamalar

வாழ்விடம் காப்போம்என்பார்வை!

Updated : ஆக 10, 2015 | Added : ஆக 10, 2015 | கருத்துகள் (5)
Advertisement
 வாழ்விடம் காப்போம்என்பார்வை!

வாழ்விடம் காப்போம்
சிங்கம் தான் 'விலங்குகளின் அரசன்' என்று வேண்டுமானால் கூறிக் கொள்ளலாம். ஆனால், காடு என்று எடுத்துக் கொண்டால் அதற்கு அரசன் சாட்சாத் புலிதான். பழுப்பு, கருப்பு, கருப்பு மற்றும் வெள்ளை நிற கோடுகளுடன் ராஜநடை நடந்து வரும் புலிகளை பார்ப்பதே அலாதி சுகம் தான்.
பதுங்கி, பாய்ந்து வேட்டையாடுவதில் புலிக்கு நிகர் புலி தான். 'க்க்ர்ர்ர்' என்ற அடித் தொண்டையில் இருந்து வரும் உறுமல் சத்தத்துடன் ஒரே பாய்ச்சலில் மான், மாடு என எதுவாயினும் சரி 'சப்ப்...' என ஒரே அடி தான்.
அடுத்த நிமிடம் கொல்லப்பட்ட பிராணி ஸ்வாகாதான். அதே போல் சாப்பிடுவதிலும் புலி 'பக்கா டீஸன்ட்'. சிறுத்தை, சிங்கத்தை போல குதறி போட்டு தின்னாது. அழகாக சாப்பிட்டு விட்டு பின் அந்த இடத்தை விட்டு சென்று விடும்.
வனத்தில் நல்லபடியாக வாழும் புலிதான் உணவுச்சங்கிலியின் ஆர்தர்ஷ நாயகன். புற்கள் அதிகமாக இருந்தால் தான் அந்த இடங்களில் மான்கள் அதிகமாக இருக்கும். நல்ல மழை வரும் இடத்தில் தான் புற்களின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். அங்கு தான் மான்கள் அதிகமாக இருக்கும். அப்புறம் என்ன? புலிகளின் வாழ்க்கை செழுமையாக தானே இருக்கும்.


ஏன் தேசிய விலங்கு :

கடந்த சில ஆண்டுகள் வரை இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை பெருவாரியாக குறைந்து காணப்பட்டது. எனவே புலிகளை அழிவில் இருந்து காப்பாற்றவும், அதன் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அடர்ந்த வனம், வறண்ட காடுகள், இலையுதிர் காடுகள், பசுமை மாறாக் காடுகள் மற்றும் சதுப்பு நிலப்பகுதிகளில் புலிகள் வாழ்கின்றன.
இந்தியாவில் சிவாலிக் மலை, வடகிழக்கு மாநிலங்கள், மத்திய இந்தியா, கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகள் சூழ்ந்த வனக்காடுகள் ஆகிய முக்கிய நிலத்தோற்றங்களில் புலிகள் வசிக்கின்றன. இவ்வாறு இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் புலிகள் வசிப்பதால் நாம் தேசிய விலங்காக அறிவித்துள்ளோம்.உலகளவில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையில் இந்திய இனம் 60 சதவீதம். இந்திய இன புலிகள் இந்தியா, நேபாளம், பூட்டான் மற்றும் வங்கதேசத்தில் காணப்படுகின்றன. இதில் இந்திய காடுகளில் மட்டுமே 75 சதவீதம் இந்திய இனப்புலிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே தற்போதுள்ள சூழ்நிலையில் மற்ற நாடுகளில் உள்ள புலிகள் அழிந்தாலும் இந்திய காடுகளில் உள்ள புலிகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது.


புலிகள் திட்டம் :

இதற்காக 1972ம் ஆண்டு புலிகள் பாதுகாப்புத் திட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி இந்தியா முழுவதும் 41 புலிகள் காப்பகங்கள் அமைக்கப்பட்டன. இதில் 12 காப்பகங்கள் மேற்கு தொடர்ச்சி மலையில் இருப்பதால் புலிகள் வாழ்வதற்கு ஏற்ற இடம் இந்த மேற்கு தொடர்ச்சி மலை தான் என்பது குறிப்பிடத் தக்கது. தமிழகத்தில் 1988ல் களக்காடு, முண்டந்துறை காப்பகம் தொடங்கப்பட்டது.
தற்போது நான்கு புலிகள் காப்பகங்களாகிய களக்காடு, முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை மற்றும் சத்தியமங்கலம் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் உள்ள முக்கியமான ஆறுகள், நீரோடைகள் அனைத்தும் மேற்கண்ட 41 புலிகள் காப்பகங்களில் தான் உருவாகின்றன.


புலி வேட்டை குறைப்பு :

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதன் மூலம் புலிகளை வேட்டையாடுவது பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. 2010ம் ஆண்டை விட 2014ல் புலிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 2010ம் ஆண்டு 534 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2014ம் ஆண்டு 778 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


எப்படி இது சாத்தியமாயிற்று?

வனத்துறையால் மட்டுமின்றி இயற்கை ஆர்வலர்கள், வன உயிரினங்கள் சார்ந்த தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் கூட்டு முயற்சியே இது. பத்து ஆண்டுகளுக்கு முன் வரை புலிகள் கணக்கெடுப்பு என்றால் யாருக்கும் அவ்வளவாக தெரியாது. வனத்துறை ஊழியர்களும், அதிகாரிகளும் கணக்கெடுப்பு நடத்தி வந்தனர்.
ஆனால், தற்போது வன விலங்கு கணக்கெடுப்பு என்பது மிகப்பெரும் திருவிழா போல் நடத்தப்படுகிறது.தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள், வன உயிரின ஆர்வலர்கள், கல்லுாரி மாணவர்கள் என்று பல்வேறு தரப்பினர் இதில் பங்கேற்கின்றனர்.
அதனால், புலிகள் பற்றிய எண்ணிக்கை துல்லியமாக இல்லாவிட்டாலும் ஓரளவிற்கு சரியாகவே கணக்கிடப்படுகிறது. மற்ற மாநிலங்களை விட தென்னிந்தியாவில் புலிகள் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தி. அதற்கு மேற்கு தொடர்ச்சி மலை பகுதி தான் முக்கிய காரணம். இங்கு தரைக்காடுகள், புதர்காடுகள், பசுமை மாறாக் காடுகள், சோலைக்காடுகள், புல் பிரதேசங்கள் என அனைத்து வகையான வனங்களும் உள்ளன. இந்த வன வகைகள் அனைத்திலும் வாழும் தன்மை கொண்டது புலி.
தரைக்காடுகள் மற்றும் புதர் காடுகளில் மான்களையும், அடந்த வனப்பகுதியில் மிளா எனப்படும் மான் வகை மற்றும் காட்டு மாடுகள், புல் பிரேதசங்களில் வாழும் வரையாடு போன்றவை புலிக்கு ஏற்ற உணவினங்கள் ஆகும்.
மரம் வெட்டுவது தடுக்கப்படுவதால் வனத்திற்குள் மனித நடமாட்டம் குறைக்கப்படுதல் மட்டுமின்றி வேட்டையாடுதல் முற்றிலும் தடுக்கப்பட்டதும் புலிகள் வளர்ச்சிக்கு முக்கிய காரணம். இவை போக, புலி ஒரு நீர் விரும்பும் விலங்கு. விலங்குகளில் யானைக்கு அடுத்து அதிக நீர் அருந்தும் உயிரினம் புலி தான். கோடைக்காலத்தில் நீரில் படுத்துகிடந்து தனது உடலை குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ளும் வழக்கம் புலிகளிடம் உண்டு.
புலிகளை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கோடு அரசு பெரும் முயற்சிகள் மேற்கொண்டது. வனத்திற்குள் சிறிய குளங்கள், தடுப்பணைகள், கசிவு நீர்க்குட்டைகள் போன்றவைஅமைக்கப் பட்டுள்ளன. புலிகள் தங்கள் வாழ்விடத்தை வளமாக வைக்க இது போன்ற பணிகள் உதவின. இது தவிர புலிகள் கணக்கெடுப்பும் வழக்கமான முறையில் இல்லாமல் மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டன.
புலிகளின் வாழ்விடம் குறித்தும், அங்கு தொடர்புள்ள மற்ற உயிரினங்கள் வாழ்வதற்கும் ஏற்ற காரணிகள் மற்றும் மர வகைகள் உள்ளதா என்று ஆராயப்பட்டன. இறுதியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகள் அனைத்தும் தேசிய வன விலங்கு மையத்திற்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட பின் கிடைத்த தகவல்கள் உண்மையானதா என அவர்கள் பரிசோதித்து பார்த்து பின் அறிக்கையாக வெயிடப்படுகிறது.
புலிகள் வாழும் வாழ்விடங்களை முறையாக பாதுகாத்தால் மட்டுமே புலிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க முடியும். எனவே, புலிகளின் வாழ்விடங்களை அதாவது காடுகளை காப்போம் என்று உறுதி எடுப்போம்.
-டி.வெங்கடேஷ்மாவட்ட வன அலுவலர்கொடைக்கானல். 94425 27373

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
18-செப்-201514:42:37 IST Report Abuse
JeevaKiran அரசியல் வியாதிகளின் கொட்டத்தை அடக்கினாலே, இயற்கை வளம் தானாகவே வளர்ச்சியடையும். நாட்டில் நடக்கும் அத்தனை குற்றங்களுக்கும் அடிப்படை அரசியல் வியாதிகளின் ஆசியும், நிர்வாகத்தில் குறுக்கீடும். மரம் கடத்துபவரை பிடித்துக்கொண்டு போலீஸ் வரும். கேடுகெட்ட அரசியல் வியாதி, இவன் நமக்கு வேண்டியவன், விட்டுவிடு என்றதும், போலீஸ் அவனை விட்டுவிடும். பிறகு எப்படி தேசம் வளம் படும். நாடு முன்னேற்றமடையும்.
Rate this:
Share this comment
Cancel
rajarajan - bangalore,இந்தியா
10-ஆக-201523:08:05 IST Report Abuse
rajarajan எல்லாம் பொய். பந்திப்பூர் புலிகள் சரணாலயம். 30 வருடமாக அங்கே இருப்பவர், வன அலுவலராக இருந்தவர், தற்போது country club ல் வேலை பார்ப்பவர் கூறுகிறார் நான் இதுவரை ஒரு புலியைக்கூட இங்கே பார்த்ததில்லை என்று. அரசு பொய் சொல்லுவதில் பெயர் பெற்றது.
Rate this:
Share this comment
Cancel
Azee - Jeddah,சவுதி அரேபியா
10-ஆக-201512:40:10 IST Report Abuse
Azee புலி வளர்ப்பு திட்டமெல்லாம் சரிதான் நீங்க என்னா கூட்டுகுள்லையா வளக்கிரீங்க , இப்பெல்லாம் காடு என்று ஒரு சில இடம்தான் தற்போது 80 % சதவிதம் அணைத்து இடத்திலும் மனிதன் வசிகின்றான், ஒரு பாதுகாப்பும் இல்ல, ஏன் செய்திகளெல்லாம் படிபதில்லையா, புலி அடித்து அநேக மக்களை நாசம் பண்ணினது ? புலி உனக்கு முன்னாடி வந்து நிண்டால் நீ ஏன்னா பண்ணுவாய் அதை கொஞ்சம் அந்த கொடைகானல் வெங்கடேஷ் சொல்லட்டும், புலி என்றால் என்னா அது ஏன்னா செய்யும் என்பதை கொஞ்சமாவது யோசிகிரனுகளா ? ? நான் பெரியகுளத்தில் வசிகின்றென் சரியா , கும்பக்கரை பகுதியில் இரவில் வீடுகளை நோட்டமிட்ட புலி தவறுதலாக கிணற்றில் விழுந்தது ஓகேவா , அதை புடிக்க யாரும் வரவே இல்லை, அதை ஊசி அடித்து தான் புடிப்பார்கள் அந்த பொருத்தப்பட்ட கன் வந்தவர்களிடம் இல்லை கடைசியில் நெட் வைத்து தான் புடிதார்கள், அதன் பிறகு அந்த புலி அங்கிருந்து தூக்கி செல்லும் பாதையிலே இறந்தது, புலியை வளர்கவும் தெரியாது புடிக்கவும் தெரியாது நமக்கெல்லாம் எதற்கு இந்த வீனான் மரண விளையாட்டுக்கள் தேவையா ? ? ?
Rate this:
Share this comment
Madhav - Chennai,இந்தியா
10-ஆக-201518:59:04 IST Report Abuse
Madhavநம்மை தொந்தரவு செய்யும் எல்லாவற்ரையும் ஒழித்து கட்ட முடியாது நண்பரே, உங்கள் அளவுக்கு அந்த புலிக்கும் வாழும் உரிமை உள்ளது. மேலும் நம்மை விடவும் இயற்கைக்கு தேவையானது புலியே. நமது வருங்கால சந்ததி வாழ, இயற்கையை பாதுகாப்போம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X