"பிரதமர் மோடியும், முதல்வர் ஜெ.,வும் நேரில் சந்தித்துக் கொண்ட விஷயத்தை, தொழில் துறை வட்டாரத்தில் ரொம்ப மகிழ்ச்சியா பேசிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.
""அவுங்க, ரெண்டு பேரும், நீண்ட நாளைய நெருங்கிய நண்பர்கள். ரொம்ப நாள் கழிச்சு சந்திச்சு பேசியிருக்காங்க. இதுக்கும், தொழில்துறைக்கும் என்ன சம்பந்தம்?,'' என, மித்ரா அப்பாவியாய் கேட்க, ""புரியாம பேசாதடி, தொழில் துறை மீது மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்திட்டு இருக்கு. பிரதமரிடம், 21 பக்கங்கள் அடங்கிய, கோரிக்கை மனு ஒன்றை, முதல்வர் கொடுத்திருக்கார். அதுல, முக்கியமான ரெண்டு கோரிக்கை, திருப்பூர் சம்பந்தப்பட்டது. ரெண்டும் நிறைவேறிடுச்சுன்னு, திருப்பூர்க்காரங்கள பிடிக்க முடியாது. அதுனால, ரொம்ப ரொம்ப சந்தோஷத்துல இருக்காங்க,'' என்ற சித்ரா, மினி ஜிலேபி, முந்திரி பக்கோடா, காபி கொடுத்தாள்.
ஜிலேபியை எடுத்து ருசித்த மித்ரா, ""அஸ்திவார வேலை முடியும் வரைக்கும், வெளியே தெரியக்கூடாதுன்னு சொல்லி யிருக்காங்க,'' என, பேச்சை மாற்றினாள்.
""அதான், கலெக்டர் ஆபீஸ் கட்டி முடிச்சிட்டாங்களே? அப்புறம் என்ன?,'' என, கேட்டாள் சித்ரா.
""தெற்கு தாலுகா ஆபீஸ் கட்டடத்தை சொன்னேன். கே.செட்டிபாளையம் பள்ளி மைதானத்துல, தாலுகா ஆபீஸ் கட்டுறதுக்கு கோர்ட் ஒத்துக்கல. செவந்தாம்பாளையத்துல இடம் தேர்வு செஞ்சு, வெளியே சொல்லாம, வேலையை ஆரம்பிச்சிட்டாங்க. "இடம் தேர்வு செஞ்சாச்சா?'னு யாராவது கேட்டா, "அரசுக்கு கருத்துரு அனுப்பியிருக்கோம்'னு பொத்தாம் பொதுவா பதில் சொல்றாங்க. ஆனா, அஸ்திவாரம் வேலை மும்முரமா நடந்துக்கிட்டு இருக்கு. முத்தணம்பாளை யம் கோவிலுக்கு போனப்ப, நேர்ல பார்த் தேன். ஜன்னல் மட்டம் வர்ற வரைக்கும் வெளியே தெரியக்கூடாதுன்னு "கண்டிசன்' போட்டிருக்காங்க. இல்லேன்னா, யாராவது ஒருத்தர் கோர்ட்டுக்கு போயி, வேலைய நிறுத்திடுறாங்க. அதனால, யாருக்கும் தெரியாம வேலை நடக்குது,'' என்ற மித்ரா, ஜிலேபி நல்லா இருக்கு என சர்ட்டிபிகேட் கொடுத்தாள்.
முந்திரி பக்கோடா எடுத்து மென்றபடி, "டிவி'யை "ஆன்' செய்தாள் சித்ரா. பிளாஸ்டிக் ஆதார் அட்டை கொடுப்பது தொடர்பான, விளம்பரம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
""ஒங்களுக்கு ஆதார் அட்டை கெடைச்சிருச்சா,'' என மித்ரா கேட்க, ""நல்லவேளையா, வீடு தேடி வந்திருச்சு. இ-சேவை மையத்தில், ஏ.டி.எம்., கார்டு மாதிரி, சின்னதா கார்டு கொடுக்குறாங்க. அதுவும் வாங்கப் போறேன்,'' என்றாள் சித்ரா.
""ஒங்களுக்கு என்ன? கார்டு கெடைசிருச்சு. உடல்கூறு பதிவு செய்யாதவங்க, மாநகராட்சி அலுவலகத்துக்கு இன்னும் நடையாய் நடக்குறாங்க. ஆனா, காஸ் ஏஜன்சிக்கு போயி, ஆதார் படிவம் வாங்கி, பூர்த்தி செஞ்சிட்டு வாங்கன்னு அலைக்கழிக் கிறாங்க. அங்க போனா, இலவசமா கொடுக்க வேண்டிய படிவத்துக்கு, 10 ரூபாய் பறிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.
""அதெல்லாம் சரி, மாநகராட்சியை சேர்ந்த முக்கிய புள்ளி, "கிடா வெட்டு' விருந்து வச்சாராமே,'' என சித்ரா கேட்க, ""ஆமாக்கா, ஒரு வருஷம் விட்டு ஒரு வருஷம் ஆடிக்கிருத்திகை அன்னைக்கு தடபுடலா விருந்து வைப்பார். சட்டசபை தேர்தல் வரப்போறதால, இந்த தடவை, கல்யாண மண்டபத்துல விருந்து நடந்துருக்கு. சிக்கன், மட்டன் வருவல், பிரியாணி, இட்லி, புரோட்டா, பூசணி அல்வா, சைவம் சாப்பிடுறவங்களுக்கு, இட்லி, ஊத்தாப்பம், புரோட்டா, தயிர் சேமியானு அமர்க்களம் பண்ணிட்டாங்க. நண்பருக்கு, பறிக்கப் பட்ட பதவி திரும்ப கெடைச்ச சந்தோஷம் வேற,'' என்றவாறு, "ஏப்பம்' விட்டாள் மித்ரா.
""அதான், ஏப்பம் விட்ட பணத்தை, மேலிடத்துல, "கணக்கு' கேட்டு, பறிமுதல் செஞ்சிட்டாங்கள்ல,'' என்றவாறு, ""பத்திரப்பதிவு அலுவலகத்துல முத்திரைத்தாளுக்கு தட்டுப்பாடு நிலவுது. பல்லடம் போயி, வாங்கிட்டு வந்து கொடுக்கணும். இது, பத்திரப்பதிவு அலுவலர்களோட வழக்கமான வேலை.
இதை செய்றதுக்கும், நெறைய்யா எதிர்பார்க்குறாங்க. அதனால, முத்திரைத் தாளுக்கு செயற்கையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கு,'' என, அங்கலாய்த்தாள் சித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE