கோவை:'சாகித்ய அகாடமி' விருது பெற்ற கோவையை சேர்ந்த எழுத்தாளர் மீனாட்சி சுந்தரம், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும், ஆர்.எஸ்.புரத்தில் நடத்த விழாவில், விருது பெற வந்தது, பெருமிதமாக உள்ளது.கோவை மாவட்டம், வெள்ளக்கிணறு பகுதியில் பிறந்தவர் க.மீனாட்சி சுந்தரம். இவர் தமிழாசிரியராகவும், உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதன்மை அலுவலர் ஆட்சியராகவும் பணிபுரிந்துள்ளார். தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில், 18 நுால்களை எழுதியுள்ளார்.
இவர் பல்வேறு பட்டங்களையும், விருதுகளையும் பெற்றிருக்கிறார். இவர் எழுதிய, 'சிலம்பில் பாத்திரங்களின் பங்கும் பண்பும்' என்ற நுால், தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின், 2007ம் ஆண்டுக்கான சிறந்த நுால்களில் திறனாய்வு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.கடந்த 2013ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின், 'பாஷா சம்மன் விருது'க்கு தேர்வு செய்யப்பட்டார். பழங்கால, இடைக்கால இலக்கியங்கள் குறித்து அவர் வழங்கிய பங்களிப்புகள், திருக்குறள் பற்றிய இவருடைய கட்டுரைகள், கம்பர் பற்றிய இலக்கிய படைப்புகள் ஆகியவற்றுக்காக விருது வழங்கப்படுகிறது என்று, கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது.
இவருக்கு 90 வயதாகி விட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால், டில்லியில் சென்று விருது வாங்க இயலவில்லை. அதனால், நேற்று முன்தினம், ஆர்.எஸ்.புரம் பாரதிய வித்யா பவன் கலையரங்கில் நடந்த நிகழ்ச்சியில், இவ்விருது வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE