வருவாய்த்துறை சார்பில், சுதந்திர தின விழா, திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி வளாகத்தில் கோலாகலமாக நடந்தது; அவ்விழாவுக்கு சென்று வந்திருந்தாள் சித்ரா.
களைப்புடன் வந்த சித்ராவுக்கு குளிர்பானம் கொடுத்து உபசரித்த மித்ரா, ""சுதந்திர தின கொண்டாட்டம் எப்படி இருந்துச்சு,'' என, ஆரம்பித்தாள்.
""வழக்கம்போல் உணர்ச்சிகரமா இருந்துச்சு. ஸ்கூல் பசங்க நல்லா "டான்ஸ்' ஆடி அசத்திட்டாங்க. ஆனால், கலெக்டர் "டென்ஷனா' இருந்தார். வழக்கமா, ஒவ்வொரு வருஷமும், தேனீர் விருந்து கொடுப்பார். இந்த தடவை சமபந்தி விருந்துல கலந்துக்கிட்டதால, அன்னைக்கு நைட்டு முகாம் அலுவலகத்துல முக்கியமானவங்களுக்கு மட்டும் "டின்னர்' கொடுத்திருக்கார். விழாவுல, முக்கியமான அதிகாரிகளுக்கு மட்டும், சிறந்த ஊழியர்னு சான்றிதழ் கொடுத்து கவுரவிச்சிருக்காங்க. செய்தி-மக்கள் தொடர்பு துறையை சேர்ந்தவங்களுக்கு கொடுக்கலையேன்னு "அப்செட்' ஆகிட்டாங்க,'' என, இழுத்தாள் சித்ரா.
""அதெல்லாம் சரி. கலெக்டர் எதுக்கு "டென்ஷனா' இருந்தார்னு சொல்லவே இல்லையே?'' என, கொக்கி போட்டாள் மித்ரா.
""தேசியக்கொடி சரியா பறக்காம, கம்பத்துல சிக்கின மாதிரி இருந்தது. அணிவகுப்பை பார்க்க, திறந்தவெளி ஜீப்பில் சென்ற கலெக்டர், தேசியக்கொடியையே திரும்பி திரும்பி பார்த்துட்டே இருந்தார். 15 நிமிஷத்துக்கு பிறகுதான், கொடி நல்லா பறந்துச்சு. கலெக்டரும் சரி; மேடையில இருந்தவங்களும் சரி, அதுக்கு அப்புறமாத்தான் நிம்மதியானாங்க,'' என்றாள் சித்ரா.
""பறக்கும் படை இருக்குதா? இல்லையானு தெரியலையே?'' என, சந்தேகம் எழுப்பினாள் மித்ரா.
""அரசு அலுவலங்களில் பல படைகள் இருக்கு; நீ எந்த படையை சொல்ற?'' என, கேட்டாள் சித்ரா.
""குடிமைப்பொருள் வழங்கல் பிரிவுல, டி.எஸ்.ஓ.,வுக்கு தனியா "ஜீப்' இருக்குது; அதுமட்டுமில்லாம, பறக்கும் படை பிரிவுக்கும் "ஜீப்' இருக்குது. இரவல் வாங்கி, ஒவ்வொருத்தரா ஓட்டிட்டு இருந்தாங்க. ஏனோ தெரியல, போன ஆறு மாசமா கலெக்டர் ஆபீசுலயே ஓரம் கட்டி நிறுத்திட்டாங்க. டி.ஆர்.ஓ., கார் நிக்கிற இடத்துல நின்னுட்டு இருந்துச்சு. போன வாரம், அதை தள்ளிட்டு வந்து, பி.ஆர்.ஓ., ஆபீஸ் பக்கத்துல ஓரம்கட்டி நிறுத்தியிருங்காங்க. "ஜீப்' எப்படியோ போகுது? பறக்கும் படை எப்படி பறந்து போயி, அரிசி கடத்தல், ரேஷன் பொருள் கடத்தலை தடுக்க முடியும்? அரிசி மூட்டை காணாம போன மாதிரி, பருப்பு மூட்டை, சக்கரை மூட்டை காணாம போன பிறகுதான், பறக்கும் படை என்னாச்சுனு கேட்பாங்க போல,'' என்றாள் மித்ரா.
""அம்மா திட்ட முகாமுக்கு போனா, செலவு அதிகமா ஆகுதுனு, ஊராட்சி தலைவர்களும், கவுன்சிலர்களும், தலையை காட்டாம "எஸ்கேப்' ஆகிடுறாங்க,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.
""அம்மா திட்ட முகாம் நல்லாத்தானே நடந்திட்டு இருக்கு?'' என்றாள் சித்ரா.
""முகாம் ஒவ்வொரு வாரமும் நடந்துட்டுத்தான் இருக்கு. கல்யாண மண்டப வாடகை, டீ செலவு, மதிய உணவு செலவுனு, ஒவ்வொரு வாரமும் செலவு பழுத்துடுது. முகாம் நடக்கற கிராமத்தோட வி.ஏ.ஓ., பொறுப்பா செலவு செய்யணும். எப்படி சமாளிக்கறதுனு தெரியாம, ஊராட்சி தலைவர், கவுன்சிலர்களை சிக்க வச்சாங்க; ஆரம்பத்துல, அவுங்களும் செலவு செஞ்சாங்க. இப்ப, தலையை காட்டாம நழுவிடுறாங்க. அதனால, தாலுகா ஆபீசுல இருக்கற அலுவலருங்க, "முகாம் செலவுக்குன்னு தனியா பங்கு போட வேண்டியிருக்குது' என, பகிரங்கமா புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க,'' என்றாள் மித்ரா.
"பங்குன்னு சொன்னதும், எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது,' என்ற சித்ரா, ""மங்கலம் ரோட்டுல இருக்கிற தியேட்டர் பக்கத்து, "டேன்டீ' பூத் வைக்கிறதுக்கு, நெடுஞ்சாலைத்துறை தரப்புல அனுமதி கொடுத்துட்டாங்க. ஆளுங்கட்சி தரப்புல இருந்து நெருக்கடி கொடுத்ததால, திடீரென, அந்த அனுமதியை ரத்து செஞ்சிட்டாங்க. கேட்டா, வேற இடம் பார்த்துக்குங்கன்னு, "அசால்ட்'டா சொல்றாங்க,'' என்றாள்.
""பங்கு கெடைக்காத கோபமா இருந்துருக்கும்; "அரசியல்' செஞ்சி, முட்டுக்கட்டை போட்டுட்டாங்க. இதெல்லாம், நம்மூர்ல சகஜம்தானே,'' என்றாள் மித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE