கடைக்கு முன்னே தடைகலெக்ஷனில் கலக்கும் புதுப்படை!| Dinamalar

கடைக்கு முன்னே தடைகலெக்ஷனில் கலக்கும் புதுப்படை!

Added : ஆக 18, 2015
Share
கோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சியில், புத்தக வேட்டையில் இருந்தார்கள் சித்ராவும், மித்ராவும்.''நம்ம ஊர்ல, இவ்ளோ பெரிய புத்தகக்கண்காட்சி முத முதலா நடக்குறது சந்தோஷமா இருக்குக்கா.'' என்றாள் மித்ரா.''நிஜமாவே, பிரமாண்டமா இருக்கு மித்து…ரெண்டு கோடி ரூபா 'டார்கெட்' வச்சிருக்காங்க. கூட்டம், சேல்ஸ் நல்லாவே இருக்கு. பெரிய எழுத்தாளர்களைக் கூப்பிட்டு வந்து, பேச வச்சா
கடைக்கு முன்னே தடைகலெக்ஷனில் கலக்கும் புதுப்படை!

கோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சியில், புத்தக வேட்டையில் இருந்தார்கள் சித்ராவும், மித்ராவும்.
''நம்ம ஊர்ல, இவ்ளோ பெரிய புத்தகக்கண்காட்சி முத முதலா நடக்குறது சந்தோஷமா இருக்குக்கா.'' என்றாள் மித்ரா.
''நிஜமாவே, பிரமாண்டமா இருக்கு மித்து…ரெண்டு கோடி ரூபா 'டார்கெட்' வச்சிருக்காங்க. கூட்டம், சேல்ஸ் நல்லாவே இருக்கு. பெரிய எழுத்தாளர்களைக் கூப்பிட்டு வந்து, பேச வச்சா இன்னும் நல்லாயிருக்கும்'' என்றாள் சித்ரா.
''ஈரோடு புத்தகத் திருவிழாவை விட, வாடகை 'கம்மி'தா. ஆனா, உள்ளூர் பதிப்பகத்துக்காரங்க, இதுல கலந்துக்கலை. ஏதோ பாலிடிக்ஸ் நடந்துருக்கு''
''காலம் காலமா, இந்த ஊர்ல பதிப்பகம் நடத்துறவுங்களுக்கு கொஞ்சம் முன்னுரிமை கொடுத்திருக்கலாம். அவுங்களும், 'ஈகோ' பார்க்காம, நம்மூர்ல நடக்கிற பிரமாண்டமான முதல் புத்தகத் திருவிழான்னு கலந்திருக்கலாம்''
''சேர்ந்தே இருப்பது, இலக்கியமும், அரசியலும். அதை விடு… நம்மூர்ல மாடுகளை வச்சு, பெரிய அளவுல பாலிடிக்ஸ் நடக்குது, தெரியுமா?'' என்றாள் மித்ரா.
''மாடுகள் பாதுகாப்பு அமைப்புகளுக்கும், மாட்டு வியாபாரிகளுக்கும் நடக்குற மோதலைச் சொல்றியா'' என்று கேட்டாள் சித்ரா.
''அது தான் ஊருக்கே தெரிஞ்ச விஷயமாச்சே. இதே மாட்டுப் பிரச்னைய வச்சு, ரூரல் போலீசுக்கும், சிட்டி போலீசுக்கும் இடையில 'க்ளாஷ்' ஆயிட்ருக்கு'' என்றாள் மித்ரா.
''மாடுகளைப் பிடிக்கிறது, கோசாலைக இருக்கிறது ரூரல் லிமிட்ல. ஆனா, இதுக்கு எதிரா, போராட்டம் நடக்கிறதெல்லாம் சிட்டி லிமிட்ல'' என்றாள் சித்ரா.
''அதுக்கப்புறம் ரெண்டு நாள் கழிச்சு தான், கோசாலை நடத்துறவரோட ஜவுளிக்கடையோட ரெண்டு பக்கமும் திடீர்னு 'ஒன் வே' பண்ணி, ஆடி மாச வியாபாரத்துல கை வச்சிருக்காங்க'' என்றாள் மித்ரா.
''நான் கேள்விப்பட்ட வரைக்கும், பெரிய ஆபீசருக்குத் தெரியாம, டிராபிக் போலீஸ்காரங்க பண்ணுன வேலைன்னு சொல்றாங்க. மாட்டுப் பிரச்னைக்கும், அதுக்கும் சம்மந்தம் இருக்கிறதாத் தெரியலை. இது முழுக்க முழுக்க வசூல் விவகாரமாத் தெரியுது'' என்றாள் சித்ரா.
''இதையே தான், 'எல் அண்ட் ஓ' போலீஸ்காரங்களும் சொல்றாங்க. வெஸ்ட்ல டிராபிக்கை கவனிக்கிற ஒரு ஆபீசர் தான், இதுக்குக் காரணமாம். டிபி ரோட்ல, பிரபலமான பழக்கடை முன்னால, திடீர்னு ராத்திரியோட ராத்திரியா, 'டிவைடர்', பெரிய பெரிய கல்லை வச்சுட்டாங்க. நடுராத்திரி வரைக்கும், அந்த ஆபீசரே நின்னு, இதெல்லாம் பண்ணிருக்காரு'' என்றாள் மித்ரா.
''என்ன தான் வேணுமாம் அவருக்கு?'' என்றாள் சித்ரா.
''வேறென்ன…தீபாவளி வசூல் தான்….அதிரடியா ஆரம்பிக்கிறாரு. ரொம்பவே 'வெயிட்'டா ஏதோ எதிர்பார்க்குறாராம். இவருக்கு முதுகெலும்பே, டிராபிக்ல இருக்கிற பெரிய தலையாம்'' என்றாள் மித்ரா.
இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, இடையில் ஓடி வந்த குழந்தையைத் துரத்திக் கொண்டு வந்த பாட்டி, 'ராஜா…கண்ணா, ஓடாதடா' என்று கெஞ்சிக் கொண்டிருந்தார்.
''மித்து! மாட்டைப் பத்திச் சொன்னியே…நம்மூர்ல ரோட்ல திரியுற மாட்டை எல்லாம், தேவாங்கப்பேட்டையில இருக்கிற கார்ப்பரேஷன் தொழுவத்துக்குப் பிடிச்சிட்டுப் போறாங்கள்ல. அதெல்லாம், அங்கயிருந்து நைசா, கசாப்புக் கடைக்குப் போயிருதாம்''
''என்னக்கா சொல்ற….மாடுகளை 'வாலண்டியரா' போயி, தற்கொலையா பண்ணிக்குது'' என்று விழி விரித்தாள் மித்ரா.
''லூசு… லூசு…ஒரு வாரத்துக்கு யாரும் வந்து கேக்கலைன்னா, அப்பிடியே வித்துர்றாங்க. அதுக்குன்னு ஒரு பதிவேடு எதுவும் 'மெயின்டெயின்' பண்றதில்லையாம்'' என்றாள் சித்ரா.
''ஒனக்கு வ.உ.சி., ஜூவுல நடக்குற கொடுமை தெரியுமா… அங்க இருக்கிற முயலு, புறா, வாத்து, வாத்து முட்டையெல்லாம் வித்துர்றாங்களாம். ஏதாவது பறவைக அடிபட்டுக் கிடக்குதுன்னு, அங்க கொண்டு வந்து கொடுத்தா, அதையும் சத்தமில்லாம கறிக்கடைக்கு அனுப்பிர்றாங்களாம்'' என்றாள் மித்ரா.
''ரொம்ப நாளா அங்கயிருக்கிற ரெண்டு பேர் மேல, ஏற்கனவே ஏகப்பட்ட 'கம்ப்ளைன்ட்' இருக்கு'' என்றாள் சித்ரா.
''அதே ரெண்டு பேரு மேல தான், இப்பவும் புகார் சொல்றாங்க. மேயராகுறதுக்கு முன்னாடி, ராஜ்குமார் இந்த பூங்காவுக்கு அடிக்கடி வருவாரு. இப்பல்லாம் எட்டியே பாக்கிறதில்லை போல'' என்றாள் மித்ரா.
''உண்மை தான். ஜூவுக்குள்ள நுழையவே முடியலை. அப்பிடி ஒரு நாத்தம். க்ளீன் பண்றதே இல்ல போலிருக்கு'' என்றாள் சித்ரா.
''அங்க மட்டுமா நாறுது? ஊருல பாதி இடம், அப்பிடித் தான் நாறுது. அதான், தூய்மையான நகரங்கள் பட்டியல்ல 196வது இடம் கிடைச்சிருக்கே. அது ஒண்ணு போதாதா, நம்ம கார்ப்பரேஷன் லட்சணத்தைத் தெரிஞ்சுக்க'' என்று கொதித்தாள் மித்ரா.
''மித்து! நானும் எல்லா 'வெப்சைட்'லயும் தேடு தேடுன்னு தேடிப்பாத்துட்டேன். அப்பிடி ஒரு 'சர்வே' நடந்ததாவே தெரியலை. இனிமே நம்ம சுந்தர்பிச்சைட்ட சொல்லித் தான் தேடணும்''
''அட… ஆமாக்கா! எந்த 'மீடியா'வுலயுமே, இந்த 'சர்வே' எப்போ, எங்க, யாரு பண்ணுனாங்க, எந்த மாதிரியான விஷயங்களை கணக்குல
எடுத்தாங்கன்னு எந்த டீட்டெயிலுமே இல்லை''
''அதுலயும் திருச்சிக்கு ரெண்டாவது இடம், நம்ம ஊருக்கு 196வது இடம்னு பார்த்ததும் எனக்கு தலை சுத்திருச்சு. திருச்சிக்கு நான் இப்பக்கூட போயிருந்தேன். அந்த ஊரைப் பார்த்தா, நம்ம ஊரு 'பெட்டர்'னே சொல்லலாம். அந்த பட்டியல்ல ஒரு 'லாஜிக்'கே இல்லை மித்து'' என்றாள் சித்ரா.
''இப்பிடி ஒரு 'சர்வே' பத்தி, எந்தத் தகவலுமே வரலைன்னு கார்ப்பரேஷன் கமிஷனரும் சொல்லிருக்காரு. ஆனா, நிஜமா எடுத்தாலும், நம்ம ஊரு 50க்கு மேல வரும்'' என்றாள் மித்ரா.
''இங்க இருக்கிற 'குப்பை' இன்ஜினியர்களை வச்சிக்கிட்டு, அந்த பட்டியல்ல வர்றதே பெருசுதான்'' என்று விரக்தியை வெளிப்படுத்தினாள் சித்ரா.
''நம்மூர்ல எங்க பார்த்தாலும் குப்பை ஆபீசர்கதான். திருப்பூர்ல டாஸ்மாக்ல இருந்துட்டு, இங்க ரேஷன் கடைகளைக் கவனிக்க வந்திருக்கிற ஒரு ஆபீசரம்மா பண்ற வசூலுல, மத்த ஆபீசரெல்லாம் மெரண்டு கெடக்குறாங்க'' என்றாள் மித்ரா.
''என் பேரைக் கெடுக்கிறவுங்களா? அவுங்க, கோயம்புத்தூர் டாஸ்மாக்ல பெரிய பொறுப்புக்கு வர்றதுக்கு, 40 லட்ச ரூபா கொடுக்கத் தயாரா இருந்தாங்களாம். ஆனா, கூட அஞ்சு லட்ச ரூபா கொடுத்த வேற ஒரு ஆபீசர், அந்த 'செம்பை' லவட்டிட்டுப் போயிட்டாராம்'' என்று சிரித்தாள் சித்ரா.
''அது தெரியலை. ஆனா, அந்த மேடம், சிவில் சப்ளை தாசில்தாருக்கும், ஏ.ஆர்.ஓ.,க்களுக்கும் கொடுத்திருக்கிற வசூல் 'டார்கெட்' பயங்கரம்னு கேள்விப்பட்டேன்'' என்றாள் மித்ரா.
''இதெல்லாம் என்ன டார்கெட்? மருதமலை அடிவாரத்துல, ஒரு காம்பவுண்ட்லயிருந்து 152 டன் பழைய பேப்பர், பத்து பைசா கட்டாம வெளிய போயிருக்கு. மொத்தம் 23 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் பேப்பரை கடத்திருக்காங்க. இதுக்காக 'அங்க' ஒரு சாமி இருக்காராம்'' என்றாள் சித்ரா.
''அக்கா…கோயம்புத்தூர் ஹவுசிங் போர்டுல, பெரிய ஆபீசர் மாறுன பிறகு, பத்திரம் கொடுக்கிறதுக்கு பணம் புடுங்குறது நிக்கலை. என்ன ஒரு சேஞ்சுன்னா, இப்போ இருக்கிற பெரிய ஆபீசர், நல்லவர்ங்கிறாங்க. கணக்குப் பாக்குற ஆபீசர் ஒருத்தர் தான், மார்க்கெட்டிங்ல இருக்கிற ஆபீசரை மெரட்டி, ஏகப்பட்ட 'கோல் மால்' வேலை பண்றாராம்'' என்றாள் மித்ரா.
''அவருக்கு யாரு சப்போர்ட்டாம்?''
''ஹவுசிங் போர்டுல தீயா புரோக்கர் வேலை செய்யுற கொமாரு ஒருத்தரும், இந்த கொமாரும் சேர்ந்து, ஏகப்பட்ட போலி டாக்குமென்ட் தயார் பண்ணி, மார்க்கெட்டிங் ஆபீசரை மெரட்டி, கிரயப்பத்திரத்துல கையெழுத்துப் போட வைக்கிறாங்க. ஆனா, அவரு மட்டும், வெவரமா எந்த பத்திரத்துலயும் கையெழுத்துப் போடுறதில்லையாம்''
''கலெக்டராபீஸ்ல பத்திர மதிப்பைக் கணக்குப் பண்ண வேண்டிய ஒரு ஆபீசரைப் பத்தி கேள்விப்பட்ட விஷயம் ஞாபகத்துக்கு வந்துச்சு. பாக்கிறதுக்கு சாது முகம் காட்டுற அவரு, சொத்து மதிப்புல கமிஷன் வாங்குறதுல நுாறு முகம் காட்றாராம்'' என்றாள் சித்ரா.
''அக்கா! நம்ம ஊருல காக்கிச் சட்டை ஒருத்தரு, ஓட்டல்ல போயும், 'நான் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட். என்கிட்டயே காசு கேக்குறீங்களான்னு மெரட்டுறாராம்'' என்றாள் மித்ரா.
'பேரறிஞரா இருப்பாரோ?' என்று சிரித்த சித்ரா, 'மித்து, நாளைக்கு திரும்ப வரலாம். பசிக்குது' என்று முணுமுணுக்க, இருவரும் புத்தகங்களுடன் நடையைக் கட்டினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X