வரும் தலைமுறை வாழ பூமியை காப்போம்| Dinamalar

வரும் தலைமுறை வாழ பூமியை காப்போம்

Added : ஆக 19, 2015 | கருத்துகள் (1)
Advertisement
வரும் தலைமுறை வாழ  பூமியை காப்போம்

டில்லியில் இருந்து 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் மத்திய அமைச்சரவையில் சூரியசக்தி துறையில் புதிதாக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சூரிய சக்தி பயன்பாடுகள் பற்றி அறிவதற்கு அதில் அதிக அனுபவம் உள்ள ஒருவரை பார்க்க விரும்புவதாகவும், அதனால் உங்களை அழைக்கிறேன் என்றும் தொலைபேசியில் அழைத்தவர் கூறினார். நான் அமைச்சரை சந்தித்தேன். அவர் என்னிடம், 30 ரூபாய்க்கு வாங்க வேண்டிய ஒரு 40 வாட்ஸ் பல்பினை ஏன் 4000ம் ரூபாய்க்கு வாங்க வேண்டும் என்றார். இன்றும் இதே கேள்வியை பலர் கேட்கின்றனர். இதற்கான பதிலை பார்ப்போம்.
இன்றைய நாகரிகத்தின் அச்சாணியாக விளங்குவது எரிசக்தி. மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் அவசியமாகிப்போனது. அதிகமான அளவில் நமது பயன்பாட்டில் உள்ள எரிசக்தியின் மூலக்கூறுகள், பூமியின் அடியில் இருந்து கிடைப்பதால், அதனை புதைபடிவ எரிமம் என்று கூறுகிறோம். இறந்த தாவர, விலங்குகளின் உடல்கள் மண்ணுக்குள் புதைக்கப்பட்டு, அங்குள்ள அதிகமான அழுத்தம் மற்றும் அதிக வெப்பத்தால் நிலக்கரியாகவும், குரூடு ஆயில் ஆகவும், இயற்கை எரிவாயுவாகவும் மாறுகிறது. இந்த மாற்றத்திற்கு அதிக கால அளவு தேவைப்படுகிறது. மனிதன் 18ம் நுாற்றாண்டில் உண்டாக்கிய இயந்திர வாழ்க்கை முறைக்கு தேவையான நிலக்கரி மற்றும் குரூடு ஆயிலை தோண்டி எடுக்க ஆரம்பித்தனர்.
குரூடு ஆயில் காலி தொடர்ந்து 200 ஆண்டுகள் நாகரிக வளர்ச்சியின் காரணமாக பல கோடி ஆண்டுகளில் உண்டான மூல ஆற்றலை நாம் 100 ஆண்டிற்குள் அதிகளவு பயன்படுத்தி விட்டோம். இப்போதும் அதிகம் பயன்படுத்தி வருகிறோம். இன்னும் 50 முதல் 60 ஆண்டுகளில் பெட்ரோல், டீசலுக்கு மூல ஆயிலாக உள்ள குரூடு ஆயில் உலகில் தீர்ந்து விடும். ஆனால் அமெரிக்கா, சீனாவில் மேலோட்டமாக மணலில் உள்ள ஸெல் ஆயில் ஐ பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. இதற்கு அதிக செலவாகும். இதுவும் சில ஆண்டுகளுக்குள் தீர்ந்து விடும்.
அதேபோல் அதிக பயன்பாடு காரணமாக நிலக்கரியும் குறைந்து கொண்டே வருகிறது. இது மட்டுமின்றி இந்த எரிபொருட்களை கடந்த 50 ஆண்டுகளாக அதிகளவில் பயன்படுத்துவதால் இவை வெளியிடும் காற்று பூமியின் வெப்பத்தை அதிகரிக்க செய்கிறது. வளிமண்டலங்களோடு சூழப்பட்டிருக்கும் நமது பூமியை ஒரு தாயின் வயிற்றில் வளரும் கருவோடு ஒப்பிடலாம்.இந்த பூமி சீர்மையாக செயல்பட சரியான வெப்பநிலை மிக அவசியம். பல ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பூமியோடு ஒப்பிட்டு பார்க்கும் போது, தற்போது வெப்பநிலை அதிகரித்துள்ளது. இன்னமும் அதிகரித்துக் கொண்டு வருகிறது என்பதை திட்டவட்டமாக கூற முடியும். ஒரு பக்கம் தீர்ந்து விடும் அபாயம். மற்றொரு பக்கம் பல்வேறு தீங்குகள் என புதுப்பிக்க முடியாத எரிபொருட்கள் இருக்கிறது.
வெப்பமயமாதல் தரும் அழிவு உலகின் வெப்பமயமாதல் காரணமாக மிகப்பெரிய அழிவுகளை அது சந்திக்க வேண்டியிருக்கும். பருவநிலை மாறுதல் பல இடங்களில் சூறாவளி தாக்குதல், கடல் மட்டம் உயர்ந்து பல கடற்கரை நகரங்கள் கடலுக்குள் புகும் அபாயம் என இது தொடர்ச்சியான விளைவுகளை உருவாக்கும் அபாயம் உள்ளது.
எனவே இந்த பேரழிவில் இருந்து, பூமியை காக்க நமக்கு கடமை உள்ளது. இத்துடன் இன்னும் ஒரு முக்கியமான செய்தி ஒன்று உள்ளது. நமக்கு பின்பு வரும் நம் சந்ததியினர் அதாவது, 21, 22 ம் நுாற்றாண்டு மக்கள், 'நீர் வளம் உட்பட எல்லா மூலக்கூறு வளங்களையும், ஆற்றல்களையும் பயன்படுத்தி அழித்து விட்டனர்' என்று நம்மீது பழிச்சொல் சொல்வார்கள். அந்த நிலைக்கு நாம் ஆளாகப்போகிறோம். இந்த இடர்குழியில் இருந்து பூமி விடுபட மாற்று வழி என்ன உள்ளது? பல ஆராய்ச்சியாளர்கள் 'கவலைப்படாதீர்கள்; நமக்கு அணுசக்தி உள்ளது. அதனை கொண்டு பூமியை பாதுகாக்கலாம்' என்கின்றனர். ஆனால் இது கொள்ளிக்கட்டையை கொண்டு நம் தலையை நாமே சொறிந்து கொள்வதற்கு சமமாகி விடும்.
அணுசக்தி மின்சாரம் தயாரிக்க மிகுந்த பொருட்செலவு மற்றும் நீண்டகால திட்டமிடுதல் தேவைப்படும். குறிப்பாக அணுமின்நிலையங்களில் இருந்து வெளியேறும் கழிவுகளை நிரந்தரமாக அழிக்க இன்னும் வழிமுறை கண்டறியப்படவில்லை. இந்த பிரச்னை காரணமாக ஜெர்மனி போன்ற அறிவியல் நாடுகள், தங்கள் நாடுகளில் உள்ள அணு உலைகளை மூட தொடங்கி விட்டன.
சரியான மாற்று சூரிய ஆற்றலை பயன்படுத்துவதே, இந்த இடருக்கு தீர்வு காண சரியான மாற்று ஆகும். இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளன. பூமிக்கு வரும் பேராபத்தை தடுத்து, அதனை காப்பாற்ற சிறந்த வழி சூரிய ஆற்றல் என்பதை ஒப்புக்கொண்டுள்ளன. இதனால் தான் மத்திய அரசு, மாநில அரசுகளுடன் சேர்ந்து 20 இடங்களில் சூரிய மின்பூங்காக்கள் அமைத்து, ஒரு லட்சம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை தொடங்கி உள்ளது. 2020ல் மொத்த பயன்பாட்டில் 15 சதவீதத்தை சூரியசக்தி மற்றும் காற்று சக்தி மூலமாக பெற இலக்கு நிர்ணயித்து உள்ளனர்.கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் மிக அதிக விலை விற்ற சூரிய ஆற்றல் தகடுகள் தற்போது 50 சதவீதம் வரை குறைந்த விலைக்கு கிடைக்கிறது.
சூரிய மின்சாரத்தை பயன்படுத்தும் முறையும் இரண்டு வகையாக உள்ளது. அதிக அளவு மின்தடை இல்லாத இடங்களில் பேட்டரி இல்லாமலேயே சூரிய தகடுகள் நிறுவி, அதன் மூலம் மின்சார பயன்பாட்டை குறைக்கலாம். இதன் விலையும் குறைவு. அதிக அளவில் மக்கள் இந்த சூரிய கலன்களையும், சூரிய சுடுநீர் கலன்களையும் தங்கள் வீடுகளில் நிறுவ வேண்டும். இப்படி சூரிய ஆற்றலை பயன்படுத்த தொடங்கும் போது, புவி வெப்பமயமாதலை தடுக்கும் புரட்சியில் நாமும் பங்கேற்ற பெருமை யாரும் சொல்லாமலேயே நமக்கு வந்து சேரும். எதிர்கால தலைமுறை வாழ நாம் இந்த பூமியை காக்கும் முயற்சிகளில் இறங்கலாம்.-முனைவர் சி.பழனியப்பன்சூரிய ஆற்றல் விஞ்ஞானிதேனி, 099940 94400வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raju - madras,இந்தியா
19-ஆக-201511:05:59 IST Report Abuse
raju அப்போ பல்புக்கு பதில்..?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X