பெண்மையைப் போற்றுவோம் :இன்று மகளிர் சமத்துவ தினம்| Dinamalar

பெண்மையைப் போற்றுவோம் :இன்று மகளிர் சமத்துவ தினம்

Updated : ஆக 26, 2015 | Added : ஆக 26, 2015 | கருத்துகள் (1)
பெண்மையைப் போற்றுவோம் :இன்று மகளிர் சமத்துவ தினம்

கடலின் உப்பெனவும், காற்றின் இசையெனவும் ஆனவள். குடும்பம் தழைக்க அன்பின் உரமிடுபவள் பெண். தன்னை உருக்கி, சிறுமைப்படுத்தி, வலி ஏற்று, முற்றுமாய் தான் சார்ந்த குடும்பத்தினை வளப்படுத்தத் தன்னுள் பெரும் தேய்தலை ஏற்றவளாகவே காணப்படுகிறாள். தன் சுக சந்தோஷங்களை அடக்கி, தன்னைச் சுற்றி இருப்போர் வாழ்ந்திருக்கவே விரும்புகிறாள் பெண்.பெண்ணைத் தலையாய்க் கொண்டது நம் பண்பாடும், வழிபாடும். சிவபெருமான் இடப்பாகத்தில் உமையாளை சரிக்குச்சரியாக ஏற்றுள்ளார். செந்திருவைத் தன் நெஞ்சில் வைத்தவராகத் திருமாலும், கலைமகளைத் தன் நாவில் கொண்டோனாகப் பிரமனும் காணப்படுகின்றனர்.
உரிமைக்கான தேவை ;ஒவ்வொரு துறைகளிலும் பெண்ணின் முன்னேற்றம், தொடுவானின் செந்தணலென மின்னும் போது, பெண்ணின் சமத்துவம் போற்றுவது அவசியமாகிறது. பெண்கள் மீதான வன்முறை நிகழ்வுகளை நிமிடக்கணக்கிலும், நொடிக்கணக்கிலும் புள்ளிவிவரங்கள் பட்டியலிடுகின்றன. உலகில் சரிபாதியாகப் பரவியிருக்கும் பெண்குலம் தனக்கான உரிமையை முன் வலியுறுத்தக் காரணம் என்ன, ஆழியாகப் பரந்தும், நீராவியாகச் சுருங்கியும்,பனியாக உருகியும் வார்க்கப்படும் பெண்ணை இயல்பு நிலையினின்று விலக்கி வைத்து, இழிவு பாராட்டும் போதே உரிமைக்கான அவசியம் ஏற்படுகிறது.
போற்றுதலுக்கு உரியவள் பெண், இந்த உலகிற்கான வாரிசுகளைப் படைப்பது முதல், உடல் ரீதியாகவும், சமுக பொருளாதார ரீதியாகவும், மன அளவிலும் ஆணில் இருந்து பெண் வேறுபட்டே காணப்படுகிறாள். சிந்தித்துச் செயலாற்றுதல், சகித்துப்பணியாற்றுதல், ஒருமுகப்படுத்தும் திறன் போன்றவற்றில் பெண்ணுக்குச் சிறப்பான இடமுண்டு. ஆண் மையப் பார்வையிலிருந்து விலகி, தனக்கான உலகைச் சுயபார்வையோடு அணுகும் பெண்கள், தங்களுக்கான சமத்துவத்தைப் புதிய தேடல்களோடு அமைத்துக் கொள்கிறார்கள்.வரலாற்றில், தனக்கெதிரான ஒரு சூழலில் தன்னை முன்னெடுத்துச் செல்வது, விடுதலையின் செயற்களமாகிறது, தாவரம் செழிக்க உதவும் நீரெனப் பாய்ந்து, வளமாக்கும் முடிவுகளால், சமத்துவத்தின் கரைதனில் பிரவேசிக்க இயன்றிருக்கிறது.
பெண்ணின் முகங்கள் :ஜான்சி ராணியிலிருந்து, இரோம் சார்மிளா வரையிலான பெண்களின் உரிமை மீட்கும் போர்கள் பெண்ணின் சமத்துவத்தைப் பகரும் சான்றுகளாக நம்முன் விரிந்து கிடக்கின்றன.சந்தா கோச்சர் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் முதன்மை நிர்வாக அதிகாரி. ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் 25 ஆற்றல் மிக்க பெண்களில் ஒருவராகத் தேர்வானவர். 2010ல் தனது வங்கி குறித்த சேவைகளுக்காக பத்ம பூஷன் விருதுபெற்ற சாதனையாளர்.
சாந்தி டிகா, 35 வயதே நிரம்பிய இளம் தாய், இந்திய ராணுவத்தில் ஜவானாகப் பணி புரிந்தவர். இந்தியத் தாய்த்திரு நாட்டிற்காகத் தன் உயிரினையும் துறந்தவர்.காய்கறி விற்பனையாளாரின் மகளாகப் பிறந்த ஆஷாராய், ஓட்டப் பந்தய வீராங்கனையாக தேசிய அளவில் சாதனை படைத்த பெருமைக்கு உரியவர்.
விண்வெளிக்குப் பயணித்து உயிரிழந்த இந்தியப்பெண் கல்பனா சாவ்லா, எஸ்.பி.ஐ.,யின் உயரதிகாரி அருந்ததி போன்றோர் பெண்ணின் சமத்துவத்தை நினைவூட்டித் தங்களுக்கான உழைப்பின் துளிகளை இந்திய நதியோட்டத்தில் கலந்த பெருமைக்கு உரியவர்.துர்கா சக்தி, ஒன்றை மனுஷியாக உத்தரப்பிரதேச அரசை, லஞ்ச ஒழிப்பிற்கான நடவடிக்கையில் எதிர் கொண்டவர். லஞ்சத்திற்கு எதிராகப்போராடிய இவருக்கு உத்தரப்பிரதேச அரசு பணி இடைநீக்கத்தை பரிசாகத் தந்தது. பொதுமக்களும், ஊடகங்களும் இவருக்கு ஆதரவாகத் துணை நின்றன.2014 ன் சாதனைப் பெண்ணாக வணிகத்தில் சாதித்து வரும் பெப்சிகோ நிறுவனத்தின் முதன்மை அதிகாரி இந்திரா நுாயி, குடும்பப் பொறுப்புகளோடு, சமூகத்தின் வணிக ஓட்டத்திலும் தன்னை ஈடுபடுத்தி வெற்றி கண்டவர்.
லட்சியம்- தங்களது லட்சியத்தில் சற்றும் தொய்வோ, சலிப்போ இன்றிச்செயல்படும் பெண்கள், முன்னேற்றத்துடிப்புடன் இயங்கும் பெண்கள், தேவையற்றுத்தடைகளை, சார்ச்சைகளை ஏற்க வேண்டியது, அவள் பெண் என்பதாலா எனச் சிந்திக்க வைக்கிறது, சமீபமாக நடந்த விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்று உலகச்சாதனை நிகழ்த்திய சானியா, இரட்டையருக்கான பிரிவில் முதல்நிலை வீராங்கனையாக உருவாகியிருக்கிறார். தன் சொந்த விருப்புகள், வீரர்கள் தொந்தரவு, உடை சார்ந்த எதிர்ப்புகள் துரத்தியபோதும், தன் நோக்கத்தை விடாமல் தொடர்ந்து டென்னிசில் புதிய உச்சம் தொட்டிருக்கும் சானியா மிர்சா, முக்கியமான புரிதலைத் தன் வெற்றியின் வழியே முன் வைக்கிறார்.மணமான பெண்களின் உழைப்பைக்குறித்த மனோபாவம் எல்லா இடங்களிலும் ஒன்று போலவே உள்ளது. பெரும்பான்மையாக திருமணமான பெண்களை பணிக்கு வைத்துகொள்வது தவிர்க்கப்பட்டே வருகிறது.
பெண்கள் பல்துறை சார்ந்தும், சமூக அக்கறையோடும் செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். பெண்ணும் குடும்பமும் குடும்பம், சமூகம், பணி என்று பெண் இயங்கினாலும், அவள் தன் மீதான வன்முறையை எதிர் கொண்டபடி இருக்கிறாள் என்பதும் ஏற்க வேண்டிய உண்மை. பெண்ணுரிமை என்பதே ஆணுக்கு எதிரானது என்ற கருத்தாக்கம் உடைபடுகையில், மனித உரிமைக்கான புதிய பார்வையை பெண்ணுக்கான புதிய கோணம் பிரதிபலிக்கும்.ஒவ்வொரு கொண்டாட்டமான சூழலும், அதற்கு எதிரான ஒடுக்கப்படும் குரலும் இயல்பானதென்றாலும், ஒடுக்கப்படும் பிரதியைக் குறைத்து மதிப்பிட இயலாது, அதற்கான புதிய திறப்புகளை ஏற்படுத்தி சமத்துவத்தை பிரகாசிப்பிக்க வேண்டியது இன்றைய தேவை.
பல்துறையில் பெண்கள் தங்கள் சாதனையை நிகழ்த்திக் காட்டிய வண்ணம் உள்ளனர். வீட்டில் இருந்தபடியேயும் அவர்களுக்கான உலகைப் படைத்தும், அதன் வழியாக தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கட்டமைக்கும் ஒவ்வொரு தாயும் பெண் சமத்துவத்தின் ஓட்டத்தில் தங்களை இணைக்கத்துடிக்கும் பெரு நதிகளே.கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார சுதந்திரம் போன்றவற்றோடு இணைந்து, குடும்ப வன்முறை, பாலியல் ரீதியான ஒடுக்குதல்களிலிருந்தும் பெண்ணைக் காக்க வேண்டியது இன்றைய சூழலின் தேவை.- அ. ரோஸ்லின்ஆசியை, அரசு மேல்நிலைப்பள்ளி,தா. வாடிப்பட்டிkaviroselina997@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X