அரசியலுக்கு ஒரு முகம்... ஆவின் பூத்துக்கு வேறு முகம்!| Dinamalar

அரசியலுக்கு ஒரு முகம்... 'ஆவின் பூத்'துக்கு வேறு முகம்!

Added : ஆக 26, 2015
Share
மெல்லிய வெளிச்சம் பரவியிருந்த அந்த அறையில், கத்ரி கோபால்நாத்தின் 'ராஹ் ரங்' செவிகளை நிரப்பிக் கொண்டிருந்தது. சர்க்யூட் ஹவுஸ் அருகிலுள்ள அந்த உயர்தர ரெஸ்டாரன்ட்டில், தோழி தரப்போகும் 'ட்ரீட்'டுக்காக சித்ராவும், மித்ராவும் காத்துக் கொண்டிருந்தார்கள்.''அக்கா! அவ வர இன்னும் கொஞ்ச நேரம் ஆகுமாம். இந்த ரோட்டுல காலார நடந்து போயிட்டு வருவோமா?'' என்று மித்ரா அழைக்க,
அரசியலுக்கு ஒரு முகம்... 'ஆவின் பூத்'துக்கு வேறு முகம்!

மெல்லிய வெளிச்சம் பரவியிருந்த அந்த அறையில், கத்ரி கோபால்நாத்தின் 'ராஹ் ரங்' செவிகளை நிரப்பிக் கொண்டிருந்தது. சர்க்யூட் ஹவுஸ் அருகிலுள்ள அந்த உயர்தர ரெஸ்டாரன்ட்டில், தோழி தரப்போகும் 'ட்ரீட்'டுக்காக சித்ராவும், மித்ராவும் காத்துக் கொண்டிருந்தார்கள்.
''அக்கா! அவ வர இன்னும் கொஞ்ச நேரம் ஆகுமாம். இந்த ரோட்டுல காலார நடந்து போயிட்டு வருவோமா?'' என்று மித்ரா அழைக்க, 'ம்' கொட்டினாள் சித்ரா. இருவரும், வெளியே வந்து, நடக்க ஆரம்பித்தனர்.
''மித்து! முன்னெல்லாம் நம்மூருக்கு எந்த வி.ஐ.பி., வந்தாலும், சர்க்யூட் ஹவுஸ்ல தான் தங்குவாங்க. இப்பல்லாம், யாரும் தங்குறதில்லை. மனித உரிமை ஆணைய விசாரணை மட்டும் தான் நடக்குது.
வர்றவுங்க எல்லாம், 5 ஸ்டார் ஓட்டல்ல தங்கிட்டுப் போறாங்க. ஆனா, இங்க வந்து அதிகாரிங்க, அரசியல் வி.ஐ.பி.,ங்க தங்குனதுக்கு செலவானதா, இஷ்டத்துக்கு கணக்கு எழுதுறாங்களாம்'' என்றாள் சித்ரா.
''எப்பிடி பொய்க்கணக்கு எழுதுறதுன்னு கத்துக் கொடுக்கத்தான், நம்மூர்ல யுனிவர்சிட்டியே நடத்துறாங்களே''
''டாய்லெட் கட்டிட்டு, இனிமே கட்டப்போறதா 'டெண்டர்' விட்டாங்களே, அதைச் சொல்றியா?''
''அது தான் ஊரறிஞ்ச விஷயமாச்சே. நான் நம்ம கார்ப்பரேஷனைத்தான் அப்பிடிச் சொன்னேன்''
''என்ன மித்து...அப்பிடிச் சொல்லிட்ட. சென்ட்ரல் கவர்மென்ட்டோட 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துக்கு, தேர்வாகிறதுக்கு, இ-கவர்னன்ஸ், குடிநீர் சப்ளை, ரோடு, பாதாள சாக்கடை வசதின்னு பல விஷயங்களை வச்சு, மார்க் போடுவாங்க. அதுல, நம்ம கார்ப்பரேஷனுக்கு 95 மார்க் கெடைச்சிருக்கு...தெரியுமா?''
''கிடைச்சு என்ன பண்றது. நம்மூர்ல நடக்கிற ஊழலைப் பத்தி, மோடிக்கே தெரிஞ்சிருக்கே'' என்றாள் மித்ரா.
''என்னடி உளர்ற...நம்ம பிரைம் மினிஸ்டரையா சொல்ற?'' என்று சத்தமாய்க் கேட்டாள் சித்ரா.
''அப்புறமென்ன லலித் மோடியவா சொல்றேன். நம்மூரு வி.ஐ.பி.,ங்க, மோடியை 'மீட்' பண்ணுனப்ப, கோயம்புத்துாருக்கு சில திட்டங்களுக்கு நிதி ஒதுக்கணும்னு கேட்டதுக்கு, 'நிதி ஒதுக்குறது பிரச்னையில்லை. ஆனா, உங்க ஊருக்கு நிதி ஒதுக்குனா, அது யாருக்குப் போகும்னு எனக்குத் தெரியும்'னு சொன்னாராம்'' என்றாள் மித்ரா.
''அப்பிடின்னா, இங்க நடக்குற விஷயத்தையெல்லாம் யாரோ அவருக்குப் போட்டுக்கிட்டே இருக்காங்க
போலிருக்கு'' என்றாள் சித்ரா.
''வர்ற எலக்ஷன்ல, கூட்டணி மட்டும் இல்லைன்னா, அவரே இங்க வந்து இந்த விஷயங்களையெல்லாம் போட்டுத் தாக்குவார்ன்னு நினைக்கிறேன்'' என்றாள் மித்ரா.
''தாக்குன்னு சொன்னதும், நம்மூர்ல நகைக்கடையில வேலை பார்த்த காது கேட்காத ஊமை ஒருத்தரைப் போட்டு, அநியாயமா அடிச்சது தான் ஞாபகத்துக்கு வருது மித்து. அந்த 'டப் அண்ட் டெம்'மோட போட்டோ, பேஸ்புக், வாட்ஸ்அப் எல்லாத்துலயும் பரவிருச்சு.
நீ பார்த்தியா?'' என்றாள் சித்ரா.
''அன்னிக்கே பாத்துட்டேன்க்கா. ரொம்பக் கொடுமையா இருந்துச்சு. அதே நகைக்கடையில, 25 வருஷமா 'டிசைனரா' வேலை பாத்ததுக்கு, கேக் வெட்டி, பாராட்டுப்பத்திரம் கொடுத்து அனுப்பி வச்சிருக்காங்க. அப்புறம் ஏன் இப்பிடி அடிச்சாங்க?''
''பாவம்...ஏழை பிரமாணக் குடும்பம். அடியை வாங்கிட்டு, அவ்ளோ பெரிய குரூப்பை எதிர்க்க முடியாம குமுறிட்டு இருக்காங்க. போலீசும் காசை வாங்கிட்டு, இந்த கேசை அமுக்கப் பாக்குறாங்க''
''வெளியில, சோஷியல் சர்வீஸ் பண்றது மாதிரி பெருசா விளம்பரம் பண்ணிக்கிறாங்க. ஆனா, இப்பதான், அவுங்களோட கீர்த்தி வெளிய தெரிஞ்சிருக்கு'' என்றாள் மித்ரா.
''மித்து! சிக்னல்ல இருந்த விளம்பரங்களை எல்லாம் எடுத்தாங்களே. மறுபடியும், 'சிக்னல்'களைப் பராமரிக்க, இன்னிக்கு 'டெண்டர்' நடக்குது. குறிப்பிட்ட சில பேருக்கு மட்டுமே கிடைக்கிறது மாதிரி, அதுல சில நிபந்தனைகளை வச்சிருக்காங்க. அநேகமா, ஏற்கனவே முடிவு பண்ணுன ஒரு கம்பெனிக்கு தான், அந்த 'டெண்டர்' போகும்னு சொல்றாங்க'' என்றாள் சித்ரா.
''அது மட்டுமா...யுஜிடி, பி.எஸ்.யு.பி., திட்டத்துல அடுக்கு மாடிக் குடியிருப்பு கட்டுறது, இந்த ரெண்டு வேலையத் தவிர்த்து, சிட்டிக்குள்ள 120 கோடி ரூபா ரோடு போடுற வேலையிலயிருந்து கார்ப்பரேஷன் கட்டிடம் கட்டுறது, பாலம், சாக்கடை, குடிநீர்க்குழாய் ரிப்பேரு, குப்பை லாரி, துப்புரவுப் பணி, சாப்ட்வேர் மெயின்டெனன்ஸ் எல்லா வேலையையுமே, ஒரே கான்ட்ராக்டர் தான் பண்றாரு'' என்றாள் மித்ரா.
''அதெல்லாம் பேசிப்பிரயோஜனமில்லை மித்து. ஏதோ வேலை நடக்குதேன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்'' என்றாள் சித்ரா.
''எங்க வேலை நடக்குது...காந்திபுரம் பாலம் கட்றதுக்கு, அங்க இருக்கிற கோவிலையும், கடைகளையும் எடுக்கணும். ஆனா, எப்போ கேட்டாலும், ஏதாவது ஒரு காரணம் சொல்றாங்களே தவிர, வேலை நடக்கலையே. கலெக்டர் என்ன தான் பண்றாங்கன்னே தெரியலையே''
''கார்ப்பரேஷன், எச்.ஆர்.என்.சி.,ன்னு ஒரு டிபார்ட்மென்ட்டும் ஒத்துழைக்கலைன்னா, அவுங்களும் என்ன தான் பண்ணுவாங்க?''
''அநேகமா, சீக்கிரமே அவுங்களுக்கு டிரான்ஸ்பர் வந்துரும்கிறாங்க. அவுங்க கலெக்டராகி ஆறு வருஷம் முடிஞ்சு போச்சு. டில்லி டிரெயினிங் போயிட்டு வந்துட்டாங்க. புரமோஷன் வரப்போகுதாம். இப்பவே, இந்த டிஸ்ட்ரிக்ட்டுக்கு வர்றதுக்கு ஏகப்பட்ட போட்டியா இருக்காம்'' என்றாள் மித்ரா.
''டி.ஆர்.ஓ., போஸ்ட்டிங்குக்கும் ஏகப்பட்ட போட்டியாமே'' என்றாள் சித்ரா.
''அவரு வந்தே, ஒரு வருஷம் தான ஆகுது. அதுக்குள்ள அவரை எப்பிடி மாத்துவாங்க?'' என்றாள் மித்ரா.
''ஆனா, ஆளும்கட்சி, எதிர்க்கட்சின்னு ரெண்டு எம்.எல்.ஏ.,க்களுக்கு ஏதோ உதவி பண்ணுனதுல பிரச்னையாயிருச்சாம்'' என்றாள் சித்ரா.
''அந்த ரெண்டு எம்.எல்.ஏ.,வுக்கு ஒரே நம்பர்ல பேரு வருமே...கரெக்டா?''
''கரெக்ட் மித்து. அதனால, அவரையும் மாத்திருவாங்கன்னு பேச்சா இருக்கு. அவரு இடத்துக்கு வர்றதுக்கு, இதே ஊருல இருக்கிற ஒரு டி.ஆர்.ஓ.,வும், ஒரு லேடி ஆபீசரும் தீவிரமா முயற்சி பண்ணிட்டு இருக்காங்க''
''அக்கா! கலெக்டர், எம்.எல்.ஏ.,ன்னு சொல்லவும், ஒரு 'இன்ட்ரஸ்ட்டிங்' மேட்டர் ஞாபகத்துக்கு வந்துச்சு'' என்றாள் மித்ரா.
''சொல்லு சொல்லு' என்று
அவசரப்பட்டாள் சித்ரா.
''ஒரு பிரச்னை சம்மந்தமா, கம்யூ.,
கட்சிக்காரங்க, கலெக்ட்ரம்மாவைப் பார்க்கப்போயிக்காங்க. அப்போ, அவுங்க ''நான் கம்யூனிஸ்ட்களைப் பத்தி நிறையா 'புக்' படிச்சிருக்கேன். நிறையா தியாகம் பண்ணுவாங்கன்னு கேள்விப்
பட்ருக்கேன். ஆனா, உங்க கட்சி
எம்.எல்.ஏ., எந்த பொதுப்பிரச்னைக்கும் என்னைத்தேடி வர்றதில்லை. எதுக்கு எடுத்தாலும் ஆவின் பூத் வைக்க பர்மிஷன் கேட்டே வர்றாரு'ன்னு சொல்லிருக்காங்க''
''அச்சச்சோ...காம்ரேட்க கலங்கிப் போயிருப்பாங்களே''
''அவுங்க எதுக்கு கலங்குறாங்க. எல்லாத்தையும் கேட்டுட்டு, 'அவரு எங்க கட்சி எம்.எல்.ஏ.,வே இல்லை. நாங்க வேற கம்யூனிஸ்ட்'ன்னு சொல்லிருக்காங்க'' என்றாள் மித்ரா.
''அப்டின்னா, ஆவின்னு சொன்னதும், உனக்கு பல முகம் ஞாபகத்துக்கு வரும்னு சொல்லு'' என்று சிரித்தாள் சித்ரா.
''கரெக்டா சொல்லிட்டியேக்கா...அவருக்கு மட்டும், சிட்டிக்குள்ள அஞ்சோ, ஆறோ ஆவின் பூத் 'பினாமி' பேர்கள்ல இருக்காம். ஒவ்வொரு கடையிலயும் மாசத்துக்கு 15 ஆயிரம், 20 ஆயிரம்னு வாடகை வருதாம். இதை வசூல் பண்றதுக்குன்னே சந்திரன்னு ஒருத்தரைப் போட்ருக்காராம்'' என்றாள் மித்ரா.
''எப்பிடியும் அடுத்த எலக்ஷன்ல 'சீட்டு' கிடைக்காது. அது கிடைச்சாலும், 'ஓட்டு' கிடைக்காது. அதனால, கிடைக்கிற வரைக்கும் 'நோட்டு' சேர்க்கிறாரு போல'' என்றாள் சித்ரா.
''நீயும் வரவர டி.ஆர்., மாதிரி பேச ஆரம்பிச்சிட்டக்கா''
''டி.ஆர்.,ன்னு சொன்னதும், எனக்கு ஏ.ஆர்., ஞாபகம் வந்துச்சுடி. அங்க இருக்கிற ஒரு 'பேச்லர்' போலீஸ், பேங்க்ல 'ஒர்க்' பண்ற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லி ஏமாத்திட்டாரு. அந்தப் பொண்ணு, கோர்ட்டுக்கு முன்னாலயே விஷம் குடிச்சிட்டா. பக்கத்துல இருக்கிறவுங்க காப்பாத்திட்டாங்க. ஆனா, அந்த போலீஸ் மேல எந்த நடவடிக்கையுமே எடுக்கலை''
''பதிமூணு வயசுப் பொண்ணை பாலியல் தொந்தரவு பண்ணுன ஏட்டய்யா, லவ்வரை துரத்தி விட்டுட்டு, பொண்ணை 'ரேப்' பண்ணுன ஹெட்கான்ஸ்டபிள், விசாரணைங்கிற பேருல காலேஜ் பொண்ணை மெரட்டுன சைபர் க்ரைம் போலீசுன்னு, கோயம்புத்துார் போலீஸ்ல இந்த மாதிரி 'கம்ப்ளைன்ட்' நிறையா வருதுக்கா'' என்றாள் மித்ரா.
'போலீஸ் மட்டுமா...' என்று சித்ரா ஆரம்பிப்பதற்குள், 'ஹாரன்' சத்தம் பலமாய்க் கேட்க, திரும்பிப் பார்த்தபோது, காரில் வந்து நின்றாள் தோழி. இருவரும் ஏறிக்கொள்ள, வேகமெடுத்தது கார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X