""மதுரையில இருந்து சித்தி வந்திருந்தாங்க; அவங்கள, அழைச்சிட்டு வர்றதுக்காக, புது பஸ் ஸ்டாண்ட் போயிருந்தேன். "கப்' வாடை தாங்க முடியலை; எங்க பார்த்தாலும், துர்நாற்றம் வீசுது,'' என, புலம்பினாள் சித்ரா.
""அக்கா, அதெல்லாம் பெரிய கதை,'' என, நீட்டினாள் மித்ரா.
""இதுல என்ன கதை இருக்கு,'' என, தெரியாமல் சித்ரா கேட்க, ""கொஞ்ச நாளைக்கு முன்னாடி, பஸ் ஸ்டாண்டில், குழந்தைகளுக்கு பாலூட்டும் மையம் அமைக்கும் பணி நடந்துச்சு. வேலை ஒழுங்கா நடக்குதான்னு பார்க்கறதுக்கு, மாநகராட்சி உதவி கமிஷனர் வாசுக்குமார் போயிருந்தார். அங்க இருந்த கழிப்பிடத்துக்கும் போயிருக்கார். அங்கிருந்த ஊழியர், அவரை தடுத்து நிறுத்தி, அஞ்சு ரூபா கேட்டிருக்கார். "என்னப்பா, சிறுநீர் கழிக்க ஒரு ரூபாய்னு தானே போட்டிருக்கு? எதுக்கு அஞ்சு ரூபா வாங்குறீங்க'னு கோபமா கேட்டிருக்காரு. "அதெல்லாம் எனக்கு தெரியாது; அஞ்சு ரூபா கொடுத்தா உள்ளே போங்க, இல்லேன்னா வெளியே போங்க'னு சொல்லிருக்கார். வேற வழியில்லாம, அஞ்சு ரூபா கொடுத்திருக்கார்.
""நடவடிக்கை எடுக்க வேண்டிய அந்த அதிகாரிக்கே இந்த நெலமைன்னா, சாதாரண பொதுஜனம் எவ்ளோ கஷ்டப்படுவாங்க. அதனால, யாரும், எதைப்பத்தியும் கவலைப்படாம, திறந்தவெளியை பயன்படுத்துறாங்க. இதுல, என்ன "ஜோக்'குன்னா, திறந்தவெளி கழிப்பிடமற்ற பகுதின்னு, 33 ஊராட்சிகளை, மாவட்ட நிர்வாகம் அறிவிக்கப்போகுது,'' என, அங்கலாய்த்தாள் மித்ரா.
""அதெல்லாம் சரி, காசு கொடுக்க கோபப்பட்டாரே, நடவடிக்கை எடுத்திருக்கலாமே,'' என, "உலகம்' புரியாமல் கேட்டாள் சித்ரா.
""புது பஸ் ஸ்டாண்ட் கழிப்பிடத்தை, "சிட்டி மம்மி'க்கு வேண்டிய வி.ஐ.பி., ஏலத்துல எடுத்திருக்காரு. அவரு வச்சதுதான் சட்டம். மேலிடத்துக்கு வேண்டியவருங்கறதால, கமிஷனர் உட்பட யாருமே கண்டுக்காம விட்டுடுறாங்க. இந்த அநியாயத்துக்கு யாரு "நீதி' வழங்கறதுன்னு, தெரியலே,'' என்றாள் மித்ரா.
""சம்பளம் கொடுக்கறதிலும், "கமிஷன்' அடிச்சிட்டாங்களாமே? என்றாள் சித்ரா.
""அதுவாக்கா?, டெங்கு கொசு ஒழிப்பு பணிக்காக, மூணு மாசத்துக்கு தற்காலிகமாக ஆளுங்கள வேலைக்கு எடுத்தாங்களே? கலெக்டர் நிர்ணயிச்சபடி, 250 ரூபாய் தினக்கூலி கொடுத்து, இரண்டு அல்லது மூணு மாசத்துக்கு "அபேட்' மருந்து தெளிக்க வச்சுக்கலாம்னு உத்தரவு வந்திருக்கு. வார்டுக்குள்ள இருந்த பெண்களை, தினக்கூலி கொடுக்கறோம்னு, வேலைக்கு கூப்பிட்டு, "அபேட்' மருந்து தெளிக்க வச்சாங்க. ஆனா, 160 ரூபா கணக்கு போட்டு கொடுத்திருக்காங்க. இதிலும், "கமிஷன்' எடுத்துட்டாங்களான்னு, தற்காலிக பணியாளருங்க புலம்பிட்டு இருக்காங்க,'' என்றாள் மித்ரா.
""மாவட்டம் முழுவதும் தாசில்தாரை மாத்தியிருக்காங்களே; மேலிடத்துல இருந்து உத்தரவு வந்துச்சா,'' என, கேட்டாள், சித்ரா.
""கலெக்டர் ஆபீசுல, "பவர்' மையமா இருந்த, "பிஏ' பதவி உயர்வுல கௌம்பிட்டாங்க. அதுக்கு முன்னாடி, தாசில்தார்களை இடமாற்றம் செஞ்சி, கச்சிதமா முடிச்சிருக்காங்க. மூணு தாசில்தார்களுக்கு, துணை கலெக்டர் பதவி உயர்வு கெடைச்சிருக்கு. இரண்டு பேர், "ரிலீவ்' ஆகிட்டாங்க. உடுமலை தாசில்தாருக்கு, திருச்சி தாட்கோ மாவட்ட மேலாளராக பதவி உயர்வு கெடைச்சிருக்கு. ஆனா, உடுமலை தாசில்தார் பணிக்கு யாரையும் நியமிக்காம இருக்கறதால, பதவி உயர்வு கெடைச்சும்,"ரிலீவ்' ஆக முடியாம, புலம்புறாரு. ஆனா, ரெண்டெழுத்து பெண் அதிகாரி கௌம்பியதால, கலெக்டர் ஆபீஸ் வளாகமே கலகலப்பா மாறியிடுச்சு,'' என்றாள் மித்ரா.
""திருப்பூரை பசுமையா மாத்துறத்துக்கு, மரக்கன்று நடுற திட்டம் துவக்கியிருக்காங்களே; விழாவுக்கு போனீயா,'' என, கடைசி மேட்டருக்கு தாவினாள் சித்ரா.
""ஆமாக்கா, நானும் போயிருந்தேன்; விழா, சிறப்பா நடந்துச்சு. அமைச்சர், மேயர், துணை மேயர், கலெக்டர், கமிஷனர், துணை கமிஷனர், வன அலுவலர் உட்பட பலரும் கலந்துக்கிட்டாங்க. நகரிலுள்ள முக்கியமான தொழில் நிறுவனங்களின் உரிமையாளர் களும் இருந்தாங்க. திட்டத்தை துவக்கிய தோடு, கல்லூரி வளாகம் முழுவதும் மரக்கன்று நட்டுருக்காங்க. இனி, வார்டு வார்டா வரப்போறாங்க. இது, "மைக்ரோ லெவல்' திட்டம். ஆண்டிபாளையம் குளம் மாதிரி, "சக்சஸ்' ஆயிருச்சுன்னா, நகரமே, பசுஞ்சோலையா மாறிடும்,'' என, பெருமிதத்துடன் சொன்னாள் மித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE