மதுரை:மதுரை மாவட்டத்தில் மானாவாரி விளைநிலங்களில் விவசாயம் செய்யவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் 1200 பண்ணை குட்டைகள் அமைக்கும் முயற்சிகளில் ஊரக வளர்ச்சி முகமை தீவிரமாக உள்ளது. முதற்கட்டமாக சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம் தாடையம்பட்டியில் விவசாயிகள் ஒதுக்கிய நிலங்களில் 101 குட்டைகள் அமைக்கப்படுகின்றன.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ், வறுமையில் வாடும் விவசாயிகள் நலனுக்காக பண்ணை குட்டை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மழைநீரை தேக்கி, மழையில்லாத காலங்களில் பயன்படுத்துவது திட்ட நோக்கம்.
இதன் மூலம் குறைந்து வரும் நிலத்தடி நீர் மட்டத்தையும் உயர்த்த முடியும். தொடர்ந்து தண்ணீர் தேக்கும் போது, மீன் வளர்ப்பு தொழில் செய்யவும் முடியும்.முதற்கட்டமாக சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம் தாடையம்பட்டியில் இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்கள் நிலங்களில் இடங்களை ஒதுக்கி கொடுத்துள்ளனர். அந்த நிலங்களில் ஆங்காங்கு பண்ணை குட்டைகள் அமைக்கும் பணி துவங்கியுள்ளது.
ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரோகிணி கூறியதாவது: நடப்பாண்டு மட்டும் மாவட்டத்தில் 1200 குட்டைகள் அமையவுள்ளன. இதற்காக ஆயிரம் விவசாயிகளின் நிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 500 பேருக்கு நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 386 குட்டைகள் அமைக்க முடிவு செய்து, 101 குட்டைகள் அமைக்கும் பணி துவங்கியுள்ளது.
மழை காலங்களில் வீணாகும் தண்ணீரை குட்டைகளில் தேக்கி, வறட்சியான காலங்களில் பயன்படுத்தலாம். மீன் வளர்ப்பு தொழில் செய்யலாம். கால்நடைகளுக்கு குட்டை தண்ணீர் பயன்படும். குட்டைகள் அருகில் செல்லும் நீர்வரத்து கால்வாய்களுடன் இணைக்கப்படும். மழை காலங்களில் கண்மாய்களிலிருந்து வெளியேறும் உபரிநீரையும் குட்டைகளில் சேமிக்க முடியும். இதன் மூலம் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டத்தையும் உயர்த்த முடியும்.தற்போது குட்டைகள் அமைக்கப்படும் இடத்தின் நிலத்தடி நீர் மட்டும் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. தண்ணீரை தேக்கிய பிறகு கணக்கெடுக்கப்பட்டு, ஒப்பிடப்படும். முந்தைய காலங்களில் ஆங்காங்கு கண்மாய், குளங்கள், ஏரிகள், ஊரணிகளில் ஆண்டுமுழுவதும் தண்ணீர் இருந்ததால் விவசாயம் செழித்திருந்தது. பரவலாக பண்ணை குட்டை அமைக்கும் போது அத்தகைய நிலையை மீண்டும் ஏற்படுத்த முடியும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE