uratha sindhanai | குடியாட்சி முறை இற்றுப் போய் விடாதா?| Dinamalar

குடியாட்சி முறை இற்றுப் போய் விடாதா?

Added : ஆக 30, 2015 | கருத்துகள் (11)
குடியாட்சி முறை இற்றுப் போய் விடாதா?

குடியாட்சி முறைக்கு வெள்ளைக்காரன் தான் நம்மைப் பழக்கப் படுத்தினான். பஞ்சாயத்து, நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள், சட்டசபை, பார்லிமென்ட், தலைமைச் செயலகம், உச்ச நீதிமன்றம் என, அனைத்து வகைப்பாடுகளும் அவன் நமக்குக் கற்பித்து விட்டுச் சென்றவையே. நாடாள்வோரை மக்கள் தெரிவு செய்வதால், 'நாம் எல்லாரும் இந்நாட்டு மன்னர்' என்று பெருமிதங் கொள்கிறான் பாரதி. அவன் இன்று வாழ்ந்து, ஒரு குடிநீர்க் குழாய் இணைப்புப் பெற, மாநகராட்சி உறுப்பினர் வீட்டில் தவமிருந்து, (ஏ.இ., அங்கே தான் வீட்டு வேலை செய்து கொண்டிருப்பார்.) 'அண்ணன்' வெளியே வருகிற நேரத்தில், குனிந்து வணக்கம் வைத்து, 'கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால் தான்' குழாயும் வரும்; குழாயில் தண்ணீரும் வரும். இந்த உண்மை தெரியும்போது, 'நாம் இந்நாட்டு மண்புழுக்கள்' என்று மாற்றிப் பாடியிருப்பான்.குடியாட்சியை நான்கு தூண்களின் மீது நிறுத்தினான் வெள்ளையன். தேர்வு செய்யப்பட்ட ஆட்சியாளர்கள், நிலையான அதிகார வர்க்கம், சுதந்திரமான பத்திரிகைகள், அரசியல் நிர்ணயச் சட்டத்தைப் பாதுகாக்கிற நீதியமைப்பு தான் அவை.

ஆட்சியினரே மேலானவர்கள் எனினும், ஆட்சியின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு அதிகார வர்க்கத்தின் கையில் இருக்கிறது.அதிகாரிகளை நியமனம் செய்வது, இடம் மாற்றுவது போன்ற அதிகாரங்கள் ஆட்சியாளர்கள் கையில் இருப்பது, ஒரு முதலாளி மனப்பான்மையை ஆட்சியாளனுக்கு உண்டாக்கினாலும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஆட்சியாளர்களுக்கு இணையாக மறுபக்கத்தில் பூட்டப்பட்ட இணை மாடுகளே.அரசு நினைத்தால், எந்த அதிகாரியையும் பந்தாடி விட முடியும் என்னும் நிலை இனியும் தொடருமானால், நியாயமான அதிகாரிகள் பணியாற்ற முடியாமல் போகும். நியாயத்தின் வழியில் செயல்படுவதற்காக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அரசியல் நிர்ணயச் சட்டத்தின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை இடமாற்றம் மட்டுமே செய்ய முடியும்; வேலையை விட்டு அவர்களை பந்தாடி விட முடியாது.

ஒரு கோப்பில், இறுதிக் கையெழுத்து மந்திரியின் கையெழுத்துத்தான் என்றாலும், நிதிநிலை அறிக்கை குறிப்பிடும் லட்சக்கணக்கான கோடி ரூபாய்களைக் கையாளும் அதிகாரம், காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம், கருவூலத்தைக் கட்டுப்படுத்துகிற அதிகாரம் என்று, அனைத்து அதிகாரங்களும் அதிகாரிகளுக்கே உண்டு.இத்தகைய ஏற்பாட்டின் மூலம், சட்டத்தின் கட்டை மீறிப் போய் விடாதபடி, ஆட்சியாளர்களை அதிகார வர்க்கமும், அதிகார வர்க்கத்தை ஆட்சியாளர்களும் எதிரெதிர் நிலையில் இழுத்துப் பிடித்துக் கொள்வர்.ஒருவரை ஒருவர் கண்காணிக்கும் நிலையில், எந்தத் தவறும் நடக்க வாய்ப்பில்லை.ஒருவேளை அப்படி அல்லாமல், தன் சொந்த நலனை அடிப்படையாகக் கொண்டு, தன்னை வளர்த்துக் கொள்ள, ஆட்சியாளரோ, அதிகாரியோ, சட்டத்தை வளைப்பார்களே ஆனால், அந்த முறைகேட்டை வெளிப்படுத்தி, மக்களிடம் விழிப்பை உண்டாக்குவதற்குத்தான் பத்திரிகை சுதந்திரத்தை, அரசியல் நிர்ணயச் சட்டம் உறுதி செய்திருக்கிறது.

கடைசி நம்பிக்கை நீதித் துறை. பிரதமராக இருந்த இந்திராவைக் கூடத் தன் பேனாவின் கீறலால் அசைத்துப் பார்த்த, தடம் பிறழாத நீதிபதிகளும் உண்டு. நெருக்கடி நிலை போன்ற குடியாட்சிக் கவிழ்ப்பு நிலை, தன் தீர்ப்பின் விளைவால் ஏற்படும் என, அந்த நீதிபதி எண்ணிப் பார்த்திருக்க மாட்டார். நீதியின் வலிமை அத்தகையது.இருக்கையில் அமர்வு பெறுகிற மனிதர்களைப் பொறுத்ததுதான் நீதி என்றால், சட்டத்தைப் பொறுத்தது இல்லையா என்று கேட்கத் தோன்றாதா? சட்டம் என்பது விளக்குவோரைப் பொறுத்து வேறுபடும் என்றால், எளியவர்கள் திகைக்க மாட்டார்களா?கடந்த கால கட்டத்தில், ஒரு வலிமையான மத்திய அமைச்சர், தேர்தலில் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றார் என்று, தோற்றவர் வழக்குத் தொடர்ந்தார்.மிகக் குறைந்த ஓட்டு வேறுபாடு எப்படி வலிமையானவர் பக்கம் மாறியது என்று, தோற்றதாக அறிவிக்கப்பட்டவரின் சார்பாக, அந்தக் கட்சியின் தலைவர், அதுவும் மாநிலத்தில் பெரிய பதவிக்கு அந்தத் தேர்தலுக்குப் பின்னால் வந்தவர், விளக்கங்களோடு, எடுத்து வைத்தும், அந்த வழக்கு, அவர் மத்திய அரசுப் பதவியில் இருந்த ஐந்து ஆண்டுகளும் விசாரிக்கப்படவே இல்லை. அதற்குப் பின்னால், என்ன ஆனால் என்ன என்று மக்கள் கேட்க மாட்டார்களா? சல்மான் கான் துவங்கி, வலிமை மிக்க யார் மீதும் நீதி பாய்வதற்குத் தயக்கம் காட்டுகிறது என்னும் கருத்துப் படிப்படியாக, நாட்டில் வளர்ந்து வருகிறது.

மகாத்மா காந்தியின் வெற்றி என்பது, நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தந்ததில் இல்லை. எத்தனையோ அடிமைப்பட்ட நாடுகள், எந்தெந்த வழிகளிலோ காந்தி போன்ற ஒரு தலைமை இல்லாமலேயே விடுதலை அடைந்திருக்கின்றன.காந்தியினுடைய இணை சொல்ல முடியாத முதன்மைப் பணி, ஆயிரம் ஆண்டுகளாக அழுக்கேறிக் கிடந்த இந்திய சமூகத்தைத் தூய்மைப்படுத்தி, விடுதலையின் சுமையைத் தாங்கும் பொறுப்புடையவர்களாக அவர்களை ஆக்கியது தான்.அப்படி ஒரு தலைவனின் முன் தயாரிப்பு இல்லை என்றால், ஜின்னாவின் பாகிஸ்தானைப் போல அலங்கோலப்பட்டு இன்றளவும் பெயருக்கு நவாசாலும், உண்மையில் ராணுவத்தினராலும் ஆளப்பட்டு அலைக்கழிவது போல, இந்தியாவும் அலைக்கழிந்து கொண்டிருக்கும். மக்களிடையே சமூக மதிப்பீடுகளை மாற்றி அமைத்தார் காந்தி.சமூகத்தில் அதுவரை, 'பணம்' செலுத்தி வந்த ஆதிக்கத்தை, உடைத்தெறிந்தார். 'வாய்மை, நேர்மை, எளிமை' ஆகியவற்றை மதிப்புக்குரியவை ஆக்கினார்.

காந்தி காலத்திற்குப் பின், அவரால் உருவாக்கப்பட்ட நேரு, வல்லபாய் படேல், லால்பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், ராஜாஜி, காமராஜர் போன்றோரின் ஆட்சிகள், நிகரற்று விளங்கின.அதற்குப் பின் வந்த காலங்களில், பணத்தால் பதவியை அடைவது; பிறகு அந்தப் பதவியைக் கொண்டு, பணத்தைப் பெருக்குவது என்னும் நச்சுச் சுழற்சியில், நாடு சிக்கி விட்டது.இதற்கு ஆட்சியாளரும் விலக்கில்லை; அதிகார வர்க்கமும் விலக்கில்லை. '2ஜி' அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஒதுக்கீடு ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், மத்தியப் பிரதேச, 'வியாபம்' ஊழல், தூத்துக்குடி தாதுமணல் ஊழல், ஆறுகளை எல்லாம் கட்டாந்தரைகளாக்கும் ஆற்றுமணல் ஊழல், மலைகளைச் சமதளமாக்கும் கிரானைட் ஊழல், கர்நாடக ரெட்டி சகோதரர்களின் இரும்புத்தாது ஊழல் என, பல லட்சம் கோடிக்குப் புரியப்பட்ட ஊழல்கள் எல்லாம், ஆட்சியாளர்களால் மட்டுமே புரியப்பட்ட ஊழல்களா?

அதிகார வர்க்கத்தின் துணையின்றி ஒரு முடியையாவது உதிரச் செய்ய முடியுமா? எந்த அதிகாரியாவது இதுவரை தண்டிக்கப்பட்டது உண்டா? ஆட்சியாளரும், அதிகார வர்க்கமும் கூட்டணி அமைத்து போடுகிற பேயாட்டம், தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மேற்கண்காணிப்பு நிறுவனமான நீதியமைப்பில் ஒரு போர்க்கால விரைவு வேண்டும்.பாட்டன் காலத்துச் சிவில் வழக்கு, பேரன் காலத்தில் முடிவது போல் நிலைமை போனால் குடியாட்சி முறை, நம் கண் முன்னாலேயே இற்றுப் போய் விடும்.
இமெயில்: palakaruppiah@yahoo.co.in

பழ.கருப்பையா,
சட்டசபை உறுப்பினர்
,சமூக ஆர்வலர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X