உங்களுக்கு இரண்டாவது இதயம் வேண்டுமா? | Dinamalar

உங்களுக்கு இரண்டாவது இதயம் வேண்டுமா?

Added : செப் 01, 2015 | கருத்துகள் (7)
உங்களுக்கு இரண்டாவது இதயம் வேண்டுமா?

இன்றைய இயந்திர கதியிலான வாழ்க்கைச் சூழலில், உடலுழைப்பு அனைவருக்கும் குறைந்துவிட்டது. நம் உணவு முறையும் மாறிவிட்டது. இயற்கை உணவுகள் நம்மைவிட்டு ரொம்பவே விலகிவிட்டன. செயற்கை உணவுகளும், பதப்படுத்தப்பட்ட உணவுகளும் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டன.
இதனால் இளமையிலேயே உடற்பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் என்று நோய்களின் வரிசை நீள்கிறது. இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டுமென்றால் உடற்பயிற்சி செய்வதுதான் சிறந்த வழி.உடலுக்கு நன்மை செய்யும் உடற்பயிற்சிகளில் நடைப்பயிற்சி மிகவும் முக்கியமானது; சிரமமில்லாதது; எல்லோருக்கும் ஏற்றது. உச்சி முதல் உள்ளங்கால் வரை உடல் முழுமைக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி கொடுக்க வேண்டுமானால், அது நடைப்பயிற்சியால் மட்டுமே முடியும்.
வேறு எந்த உடற்பயிற்சியைச் செய்ய முடிவெடுத்தாலும் அதற்கெனப் பிரத்யேக கருவிகளும் பயிற்சியாளரும் பயிற்சி மையங்களும் தேவைப்படும். செலவும் ஆகும்; ஆனால் நடைப்பயிற்சிக்கு இவை எதுவும் தேவையில்லை. பணச் செலவும் இல்லை. இதனால்தான் நடைப்பயிற்சியை 'உடற்பயிற்சிகளின் அரசன்' என்கிறோம்.
1. சர்க்கரை நோய் கட்டுப்படும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த நடைப்பயிற்சி ரொம்பவே உதவுகிறது. சர்க்கரை நோயாளிகளின் தசைகளில் சோம்பலுடன் சுருண்டு கிடக்கும் மெல்லிய ரத்தக்குழாய்கள், நடைப்பயிற்சியின் போது பல கிலோ மீட்டர் அளவுக்கு விரிந்து கொடுக்கின்றன; புதிய ரத்தக்குழாய்கள் ஏராளமாகத் தோன்றுகின்றன. இதனால் தசைகளில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. ரத்தத்தில் மிகுந்திருக்கும் சர்க்கரையைப் பயன்படுத்த இப்பொழுது அதிக இடம் கிடைக்கிறது. இதன் மூலம் ரத்தச் சர்க்கரை குறைகிறது.
அடுத்து டைப் டூ சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இன்சுலின் தேவையான அளவுக்குச் சுரக்காது. அப்படியே சுரந்தாலும் அது முழுவதுமாக வேலை செய்யாது. இன்சுலினை ஏற்று சர்க்கரையைப் பயன்படுத்தி சக்தி தருவதற்கு இவர்கள் உடலில் 'இன்சுலின் ஏற்பான்கள்' தயாரில்லை. அதேவேளையில் 'இன்சுலின் ஏற்பான்கள்' முழு ஒத்துழைப்பு கொடுத்தால், இந்த நிலைமையைச் சரி செய்துவிடலாம். இதற்கு நடைப்பயிற்சிதான் உதவ முடியும்.
எப்படி என்றால் தினமும் நடைப்பயிற்சி செய்யும்போது உடலில் செயல்படாமலிருக்கும் இன்சுலின் ஏற்பான்கள் துாண்டப்படுவதால் மீண்டும் அவை புத்துயிர்பெற்றுச் செயல்படத் தொடங்குகின்றன. இதனால் இதுவரை பயன்படாமல் இருந்த இன்சுலின் இந்த ஏற்பான்களுடன் இணைந்து ரத்தச் சர்க்கரையைக் குறைத்து சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது.
2. மாரடைப்பு தடுக்கப்படும் நாற்பது வயதைக் கடந்த பெரும்பாலோருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது. ரத்தக் கொழுப்பும் அதிகமாக இருக்கிறது. இவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். இவர்கள் தினமும் நடைப்பயிற்சியை மேற்கொண்டால் மாரடைப்பிலிருந்து தப்பிக்கலாம். நடைப்பயிற்சி, ரத்தக்குழாய்களின் மீள்திறனை அதிகப்படுத்துவதால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுகிறது.
வேகமாக நடக்கும்போது இதயத்துடிப்பு அதிகரிப்பதால் இதயத்திசுக்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது; நடைப்பயிற்சியானது இதயத்துக்குத் தீமை செய்கின்ற எல்.டி.எல் கொலஸ்ட்ராலை குறைத்து இதயத்துக்கு நன்மை செய்கின்ற ஹெச்.டி.எல்., கொலஸ்ட்ராலை அதிகப்படுத்துகிறது. இதனால் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவை தாக்குவது குறைகிறது. 3. உடற்பருமன் குறையும் ஒரு மணி நேரம் வேகமாக நடக்கும்போது உடலில் 300 கலோரி வரை சக்தி செலவாகிறது. இந்தச் சக்தியைத் தருவது கொழுப்பு. இதன் பலனாக உடலில் தேவையற்ற கொழுப்பு கரைகிறது; ரத்த கொலஸ்ட்ரால் உடல்பருமன் ஆகிய பாதிப்புகளும் குறைகின்றன. 4. சுவாச நோய்கள் குறையும் நடைப்பயிற்சி என்பது காற்றை உள்வாங்கிக் கொள்ளும் 'ஏரோபிக் பயிற்சி' என்பதால் காற்றில் உள்ள ஆக்சிஜனை அதிக அளவில் பெற்று சுவாச மண்டலமும் இதய ரத்தநாள மண்டலமும் அதை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றன. இதன்மூலம் இதய இயக்கம் வலிமை பெறுகிறது. நுரையீரலின் சுவாசத்திறன் அதிகரிக்கிறது. ஆஸ்துமா, அலர்ஜி உள்ளிட்ட சுவாசநோய்கள் கட்டுப்படுகின்றன.
5. மன அழுத்தம் மறையும் :தினமும் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு 'என்டார்பின்' எனும் ஹார்மோன் சுரக்கிறது. இது மனஅழுத்தத்தைக் குறைத்து மனஅமைதிக்கு வழி செய்கிறது. நாள் முழுவதும் உற்சாகமாக உழைப்பதற்கு இது உதவுகிறது. 6. இரண்டாவது இதயம் :தினமும் முறையாக நடைப்பயிற்சி செய்கிறவர்களுக்குக் கால் தசைகள் இரண்டாவது இதயம் போல் செயல்படுகின்றன. வேகமாக நடக்கும்போது, கால்களில் ரத்தக்குழாய்களுக்குப் பக்கத்தில் உள்ள தசைகள் துாண்டப்பட்டு இதயம் செயல்படுவதுபோல் வலுவான அழுத்தத்துடன் ரத்தத்தை உடல் முழுவதும் அனுப்புகின்றன. ஆகவே நடைப்பயிற்சி செய்பவர்கள், இரண்டு இதயங்களுக்குச் சொந்தக்காரர்கள் ஆவதால் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள். நலம் தரும் நடை எது நடைப்பயிற்சி எளிமையான பயிற்சிதான் என்றாலும் இதற்கென்று சில விதிமுறைகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றினால்தான் இதன் பலன்கள் முழுமையாகக் கிடைக்கும்.அவை...* துாய காற்றோட்டமுள்ள திறந்த வெளிகளில் பூங்காக்களில் நடைப்பயிற்சி செய்வது ஆரோக்கியமானது.* அதிகாலை ஐந்து முதல் ஏழரை மணி வரை அல்லது மாலை ஐந்து முதல் ஆறரை மணி வரை நடைப்பயிற்சிக்கு ஏற்ற நேரங்கள்.* வெறுங்காலில் நடக்க வேண்டாம். சரியான அளவுள்ள மென்மையான ஷூவையும் வியர்வையை உறிஞ்சும் பருத்தித் துணியாலான காலுறைகளையும் அணிந்து நடக்க வேண்டும்.* தினமும் குறைந்தது 30 நிமிடங்கள், அதிகபட்சமாக 1 மணி நேரம் நடக்க வேண்டும். தினமும் நடக்க முடியாதவர்கள் உலகச் சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி குறைந்தது வாரத்தில் 5 நாட்கள் அல்லது 150 நிமிடங்கள் நடந்தாலும் நன்மைதான்.* 'பிரிஸ்க் வாக்கிங்' என்று சொல்லக்கூடிய கை, கால்களுக்கு வேகம் கொடுத்து நடக்கிற பாணியையும் பின்பற்றலாம். இளைஞர்கள் 'ஜாக்கிங்' செல்லலாம்.* நடைப்பயிற்சியின் போது நாடித்துடிப்பு நிமிடத்துக்கு 120 க்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.* உணவு சாப்பிட்டதும் நடக்கக் கூடாது; உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், நெஞ்சுவலி இருப்பவர்கள், அடிக்கடி மயக்கம் வருபவர்கள், முழங்கால் மூட்டுவலி, குதிகால் வலி போன்ற பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரிடம் ஆலோசனையைப் பெற்றுதான் நடக்க வேண்டும்.-டாக்டர் கு. கணேசன்,மருத்துவ இதழியலாளர்,(34 மருத்துவ புத்தகங்கள் எழுதியவர்)ராஜபாளையம். gganesan95@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X