அதிகாரிகள் உளவு.... ஆளுங்கட்சியிலே பிளவு....!| Dinamalar

அதிகாரிகள் உளவு.... ஆளுங்கட்சியிலே பிளவு....!

Added : செப் 01, 2015
Share
நகருக்குள் விளக்குகளின் வெளிச்சம் பரவிக்கொண்டிருந்த நேரத்தில், சித்ராவும், மித்ராவும் ஒண்டிப்புதுாரில் ஒரு ஒர்க்ஷாப்பில் டூவீலரை ரிப்பேருக்குக் கொடுத்து விட்டு, காத்துக் கொண்டிருந்தார்கள்.''திடீர்னு வண்டி இப்பிடி கழுத்தறுத்திருச்சே. பஸ்சுலயே வந்திருக்கலாம்'' என்று நொந்து கொண்டாள் மித்ரா.''அய்யோ... மித்து... அந்த வார்த்தையக் கூட சொல்லாதடி. இதே ரோட்டுல,
அதிகாரிகள் உளவு.... ஆளுங்கட்சியிலே பிளவு....!

நகருக்குள் விளக்குகளின் வெளிச்சம் பரவிக்கொண்டிருந்த நேரத்தில், சித்ராவும், மித்ராவும் ஒண்டிப்புதுாரில் ஒரு ஒர்க்ஷாப்பில் டூவீலரை ரிப்பேருக்குக் கொடுத்து விட்டு, காத்துக் கொண்டிருந்தார்கள்.
''திடீர்னு வண்டி இப்பிடி கழுத்தறுத்திருச்சே. பஸ்சுலயே வந்திருக்கலாம்'' என்று நொந்து கொண்டாள் மித்ரா.
''அய்யோ... மித்து... அந்த வார்த்தையக் கூட சொல்லாதடி. இதே ரோட்டுல, நடுரோட்டுல, 3 பேரை சுட்டு, வெட்டி, கழுத்தை அறுத்த கொடுமைய நினைச்சா, இன்னமும் உடம்பு நடுங்குது'' என்றாள் சித்ரா.
''ஆமாக்கா... அமைதியான நம்ம ஊர்ல வந்து, தெலுங்கு சினிமாவுல நடக்கிற மாதிரி, அராஜகம் பண்ணுனதை நினைச்சா, மனசு கொதிக்குது. கூலிப்படை தலைவன் மோகன்ராமைப் பிடிச்சிட்டதா பேசிக்கிறாங்க. ஆனா, ஏன் 'அரெஸ்ட்' காமிக்காம இருக்காங்கன்னு தெரியலை'' என்றாள் மித்ரா.
''போலீசோட திட்டமே வேறங்கிறாங்க. ஆனா, கவர்மென்ட்ல இருந்து 'சிக்னல்' கிடைக்கலையாம். வாளை எடுத்தவன், வாளால் மடிவான். துப்பாக்கி எடுத்தவனுக்கு, தோட்டாவுல தான் முற்றுப்புள்ளி'' என்றாள் சித்ரா.
''அது என்னவோ நடக்கட்டும்.
ஆனா, நம்மூர்ல ஐ.எஸ்.,காரங்க எல்லாம், ஐஸ் விக்கப் போயிட்டாங்களா என்ன... இந்த கும்பல், காந்திபுரம் லாட்ஜ்ல துப்பாக்கிகள் சகிதமா, 'ரூம்' போட்டு, 'பிளான்' போட்டு, இதைப் பண்ணிருக்காங்க. எதையுமே இவுங்க மோப்பம் பிடிக்கலையே''
''அவுங்களுக்கு, டாஸ்மாக் 'பார்'கள்ல, வசூல் பண்ணவே நேரமில்லை.
இதுக்கெல்லாம் ஏது நேரம்?''
''இத்தனைக்கும் அந்த லாலி மணிகண்டனை, கடலுார்ல போட்டுத்தள்ள முயற்சி நடக்குதுன்னுதான், கோயம்புத்துார் ஜெயிலுக்கு மாத்திருக்காங்க. அப்டின்னா, இங்க அவனுக்கு 'த்ரெட்' இருக்கான்னு கண்டுபிடிச்சிருக்கணும்ல'' என்றாள் மித்ரா.
''அதான்...வக்கீலு ஒருத்தரே, எல்லாத்தையும் 'பிளான்' போட்டு, அந்த
கும்பலுக்கே வழிகாட்டிருக்காரே'' என்றாள் சித்ரா.
''நம்மூர்ல, நல்ல விஷயத்துக்காக போராடுற வக்கீலுங்க நிறைய்யப் பேரு இருக்காங்க. இப்போ, வக்கீல் தொழில் பேரைக்கெடுக்குற, இந்த மாதிரி வக்கீல்களும் அதிகமாயிட்டு இருக்காங்க'' என்றாள் மித்ரா.
''ஆளும்கட்சி பேரைக்கெடுக்கிற மாதிரி, அதே கட்சி எம்.எல்.ஏ.,
ஒருத்தரே பண்றாருன்னா, உன்னால நம்ப முடியுதா?''
''ஆவின் பூத் ஆக்கிரமிப்பைச் சொல்றியா...அதுல ஆளும்கட்சி எம்.எல்.ஏ., பேரு எதுவும் அடிபடலையே''
''இது வேற...லாட்டரி மேட்டர். கவுண்டம்பாளையம், இடையர்பாளையம் ஏரியாவுல, ஒரு நம்பர், மூணு நம்பர் லாட்டரி, சக்கைப்போடு போடுது. விசாரிச்சா, பின்னணியில ஆளும்கட்சி எம்.எல்.ஏ., ஒருத்தரு இருக்காருன்னு சொல்றாங்க. இதைப்பத்தி, குட்டி குட்டியா நிறையா பெட்டிசன், கார்டனுக்குப் போயிருக்காம்'' என்றாள் சித்ரா.
''நீ கார்டன்னு சொல்லவும், எனக்கு இன்னொரு எம்.எல்.ஏ., ஞாபகம் வந்துச்சு. தொகுதி மக்கள்ட்ட தாறுமாறா பேசுறது மாதிரி, சட்டசபையிலயும் சிஎம் சங்கடப்படுற மாதிரிப்பேசி, சீனியர் மினிஸ்டர்கள்ட்ட வாங்கிக் கட்டினாரே. அவரைத்தான் சொல்றேன்'' என்றாள் மித்ரா.
''யாரு...எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., பேசுறது மாதிரியே, கவர்மென்ட் காலை வாருனாரே...சி.எம். கூட 'யாரு இவரு'ன்னு கேட்டாங்களே... அவரா?''
''அவரே தான்...ஒன்பது வருஷமா எம்.எல்.ஏ.,வா இருக்கிற அவரை, இப்ப வரைக்கும் 'அம்மா'வுக்குத் தெரியலைன்னா, அவரோட கட்சிப்பணி எப்பிடியிருக்குன்னு பாரு. யூனியன்ல முக்கியப் பொறுப்புல இருக்கிற அவரு, டிரைவர், கண்டக்டருக்கு ஆளு எடுக்கிறதுல அடிச்ச காசுக்கு அளவே இல்லைங்கிறாங்க. அதெல்லாம் பத்தி, இப்போ கார்டனுக்கு நிறையா பெட்டிஷன் பறக்குதாம்''
''ஆமா மித்து...மொத்தமா பதவியைப் பறி கொடுத்தாரே, பீலாஜி. அவருக்கு, இவர் ரொம்பவே 'க்ளோசா' இருந்திருக்காரு. அப்பல்லாம், 'இப்ப தான் அம்மாட்ட பேசுனேன். நேத்து தான் பாத்துட்டு வந்தேன்'னு சின்னச் சின்னதா 'பில்டப்' கொடுத்துட்டே இருப்பாராம். ஆனா, அவரை யாருன்னே, அவுங்களுக்குத் தெரியலைங்கிறது இப்பத்தான வெளிச்சத்துக்கு வந்துருக்கு...என்ன உலக நடிப்புடா சாமி'' என்று சிரித்தாள் சித்ரா.
''அப்டின்னா, இவுங்க ரெண்டு பேருக்குமே, மறுபடியும் 'சீட்' கிடைக்காதுன்னு சொல்லு'' என்றாள் மித்ரா.
''தெரியலை...ஆளும்கட்சியில, எதுவும் நடக்கலாம். ஆனா, அடுத்த தடவை, பல பேருக்கு 'சீட்' கிடைக்கக்கூடாதுங்கிற ஒரே காரணத்துக்காகவே, இப்பவே ஒருத்தரை ஒருத்தரு போட்டுக் கொடுக்கிறதுல, ஆளும்கட்சிக்காரங்க ரொம்ப தீவிரமாயிட்டாங்க. அதனால, ஆளுக்கு ஆளு பயந்து கெடக்குறாங்க'' என்றாள் சித்ரா.
''யாரு பயந்து இருக்காங்களோ இல்லியோ, நம்மூரு 'மாண்புமிகு டாக்டர்' ரொம்பத்தான் பயந்து கெடக்குறாரு. அவரு பங்களாவுக்கு யார் யாரு வர்றாங்கன்னு வாட்ச் பண்றதுக்குன்னே, ஆள் போட்டு வச்சிருக்காங்களாம். ஆபீசுல, அவரை யாரு பார்க்க வர்றாங்கன்னு, ஒரு லேடி ஆபீசரும், ஒரு இன்ஜினியரும் பாத்துப் பாத்து, யார் யாருக்கோ 'ரிப்போர்ட்' அனுப்புறாங்களாம்'' என்றாள் மித்ரா.
''மித்து...அவரோட மொபைல் போனையும் 'டேப்' பண்றாங்களாம். அதனால தான், யார்ட்டயும் பேசவே பயப்புடுறாராமே. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா'' என்று சிரித்தாள் சித்ரா.
''ஆக மொத்தத்துல, கார்ப்பரேஷன்ல 'கங்காணி' வேலை தான் நடக்குது. வேற வேலை நடக்குறதாத் தெரியலை''
''கரெக்ட்...இவுங்க காலத்துலயும் பாதாள சாக்கடை வேலை முடியாதுங்கிறது உறுதியாயிருச்சு. திருச்சி ரோட்டுல, நடுரோட்டுல தோண்டக்கூடாதுன்னு என்.எச்.காரங்க சொல்லிட்டாங்க. அதுக்கு மாற்று வழி என்னன்னு தெரியலை. நஞ்சுண்டாபுரம் எஸ்.டி.பி.,க்கு அனுமதி தர முடியாதுன்னு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் கை விரிச்சிட்டாங்க. இப்போ, அதுக்கும் வேற இடம் பார்க்கணும்''
''கார்ப்பரேஷன்ல திட்டமிடலே இல்லைங்கிறதுக்கு இதை விட உதாரணம் வேணுமா?'' என்றாள் மித்ரா.
''நம்மூருக்கு நல்ல ஆபீசர்களே கிடைக்க மாட்டாங்களா மித்து?'' என்று விரக்தியாய்ப் பேசினாள் சித்ரா.
''கண்டிப்பா இப்போதைக்கு இல்லை. ஏன்னா... எத்தனை 'கம்ப்ளைன்ட்' வந்தாலும், ஆளும்கட்சி மேலிடம் நினைச்சா மட்டும் தான், பெரிய ஆபீசர்களை மாத்த முடியும். நம்ம டிஸ்ட்ரிக்ட்ல இருக்கிற பெரிய மேடம் மேல, ஐகோர்ட்ல 21 'கன்டம்ட் பெட்டிஷன்' இருக்காம். ஆனாலும், ஆறு வருஷமா, அந்த 'சீட்'ல இருந்து, அவுங்களை மாத்தலையே. ஏன்னா...அவுங்க செல்வாக்கு அப்பிடி'' என்றாள் மித்ரா.
''நல்லதுக்கு காலமில்லை மித்து. உடம்புக்கு சரியில்லாம ஜி.எச்.,ல, சேர்த்த ஒரு ஏழைக்குழந்தைய, 'இனிமே காப்பாத்த முடியாது'ன்னு, அங்கயிருந்த ஒரு லேடி டாக்டரும், இன்னொரு டாக்டரும் சேர்ந்து சொல்லிட்டாங்க. இன்னொரு டாக்டர் பார்த்துட்டு, அந்தக் குழந்தைக்கு 'ட்ரீட்மென்ட்' கொடுத்து காப்பாத்திட்டாரு. உடனே, அந்த ரெண்டு டாக்டர்களும் கொந்தளிச்சிட்டாங்க''
''மனிதாபிமானத்தோட ஒரு உசுரைக் காப்பாத்துனது குத்தமா?''
''முழுசாக் கேளு...குழந்தைய காப்பாத்துன டாக்டர் மேல, அந்த ரெண்டு டாக்டரும் என்ன பழி போட்டாங்க தெரியுமா? அந்த குழந்தையோட அம்மாவுக்கும், டாக்டருக்கும் தப்பான உறவுன்னு கதை கட்டி விட்ருக்காங்க. அதை அவுங்க ஹஸ்பெண்டும் நம்பி, 'கம்ப்ளைன்ட்' பண்ணிட்டாரு''
''அடப்பாவிகளா... அப்புறம் என்ன தான் ஆச்சு?''
''வேறென்ன பண்றது...அந்த டாக்டர், கஷ்டப்பட்டு, கேசை நடத்தி, தான் நிரபராதின்னு நிரூபிச்சிட்டாரு. குழந்தையோட அப்பாவும் அதைப் புரிஞ்சிக்கிட்டாரு. இப்போ, அந்த ரெண்டு டாக்டர்கள் மேலயும் 'பூமராங்' திரும்பிருச்சு. அவுங்க மேல, மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்திட்டு இருக்கு. மெடிக்கல் கவுன்சிலுக்கும் புகார் போயிருக்கு'' என்றாள் சித்ரா.
''அக்கா! நம்ம ஜி.எச்.,ல இலவச அமரர் ஊர்திக்கு, மறுபடியும் காசைப்புடுங்க ஆரம்பிச்சிட்டாங்க. எடுத்த எடுப்புல, ரெண்டாயிரம் கேக்குறாங்க. குறைந்தபட்சம் ஆயிரம் ரூபா தரலைன்னா, ஏதாவது காரணம் சொல்லி, வண்டியை எடுக்கிறதில்லை. அங்க இறந்த ஒரு குழந்தைய எடுத்துட்டுப் போக, ஆயிரம் ரூபா கேட்ருக்காங்க. குழந்தையோட அம்மா, 'காசில்லை'ன்னு சொன்னதுக்கு, 'பஸ்சுல துாக்கிட்டுப் போ'ன்னு சொல்லிருக்காங்க''
''கேக்கவே மனசு கொதிக்குது மித்து. அப்புறம் என்ன ஆச்சு?''
''வேற பொணத்தைக் கொண்டு போற வண்டியில, இந்த குழந்தை உடம்பையும் எடுத்துட்டுப் போனாங்களாம்'' என்றாள் மித்ரா.
'இவுங்களையெல்லாம்...' என்று சித்ரா ஆரம்பிக்கும்போதே, ஒர்க்ஷாப்காரர், 'மேடம்! வண்டி ரெடி' என்று சொல்ல, பணத்தைக் கொடுத்து விட்டு, வண்டியைக் கிளப்பினர் இருவரும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X