"டிவி'யில் இலங்கை முன்னாள் அமைச்சர் கருணா பேட்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதைப்பார்த்துக் கொண்டிருந்த சித்ரா, ""தொழில் துறையை சேர்ந்தவங்க, பொது சேவையில் களமிறங்கிட்டாங்க. ஒரு பக்கம், மரக்கன்று நடும் பணி படுமும்முரமாக நடந்துக்கிட்டு இருக்கு; இன்னொரு பக்கம், நொய்யல் கரையோரம், ரோடு போடுற வேலைக்கு பூமி பூஜை போட்டிருக்காங்க,'' என்றாள்.
""ஆமாக்கா, அதே நேரத்துல, கந்து வட்டிக்காரங்க, கொடுமையும் அதிகமாயிடுச்சுன்னு நெனைக்கிறேன்.நகை அடகு கடைக்காரர் குடும்பத்தோடு தற்கொலை செஞ்சாரில்லையா. அவருக்கு, வெளியே, ஒரு கோடி ரூபாய் பணம் வசூலாக வேண்டியிருக்கு. கடன் கொடுத்தவங்க தரப்புல, ஏகத்துக்கும்நெருக்கடி கொடுத்திருக்காங்க. தற்கொலை செஞ்ச அன்னைக்கு, மூணு தடவை வீட்டுக்கு வந்திருக்காங்க. நைட், 8:00 மணிக்குள்ள கடனை "செட்டில்' பண்ணனும்னு சொல்லியிருக்காங்க.
நெருக்கடி தாங்கமா, யார் யாருக்கு எவ்ளோ பணம் கொடுக்கணும்; எவ்ளோ பணம் வரணும்னு லெட்டர் எழுதி வச்சிட்டு, உயிரை விட்டுட்டாரு.லெட்டரில், எல்லோரது பேரும் தெளிவா இருக்கு. அதனால, லெட்டரை வெளியே காண்பிக்க, போலீஸ்காரங்க தயங்குறாங்க,'' என்றாள் மித்ரா.
""இவங்க மட்டுமல்ல; வட்டிக்கு பணம் வாங்கி, ஏராளமான குடும்பத்தினர் சிக்கித் தவிக்கிறாங்க. கொஞ்ச பேர் சொத்தை இழந்து, ஊரையே காலி செய்துட்டு போயிட்டாங்க,'' என்ற சித்ரா, ""ஆதரவற்ற ஒரு அப்பாவி பெண்ணை, லேடி எஸ்.ஐ., அடிச்சு காயப்படுத்திட்டாங்களாமே,'' என, கேட்டாள்.
""ஆமாக்கா, நானும் கேள்விப்பட்டேன். வீரபாண்டி பக்கத்துல வசிக்கிற, கணவனை இழந்த ஒரு பெண், தவணை முறையில் சேலை விக்கிறாங்க. 600 ரூபாய்க்கு அந்த எஸ்.ஐ., சேலை வாங்கியிருக்காங்க; 100 ரூபாய் பாக்கி வைச்சிட்டு, தராம இழுத்தடிச்சிருக்காங்க. பாக்கித்தொகையை கேட்க போன அந்த பெண்ணை, வழக்கு போட்டு, ஜெயிலில் போட்டுருவேன்னு மிரட்டியதோடு, அடிச்சு காயப்படுத்திட்டாங்க. அதுக்கப்புறம்தான், அவங்க எஸ்.ஐ.,ங்கற விவரம் அந்த பெண்ணுக்கு தெரிஞ்சிருக்கு. அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அந்த பெண்ணிடம், கவுன்சிலர் முதல் போலீசார் வரை சமரசம் பேசி, வழக்குப்பதிவு செய்யாமல், "ஆப்' பண்ணிட்டாங்க,'' என்ற மித்ரா, இஞ்சி டீ கொடுத்து உபசரித்தாள்.
அதை வாங்கிய உறிஞ்சிய சித்ரா, ""குப்பை பிரச்னையும் பெரிசாகிட்டே போகுது; என்ன செய்றதுன்னு தெரியாம, மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிக புலம்புறாங்க,'' என்றாள்.
""என்னாச்சுக்கா? குப்பை அள்ளுற கான்ட்ராக்ட்டுல ஏதேனும் பிரச்னையா?,'' என, கேட்டாள் மித்ரா.
""அதெல்லாம் இல்லை. பாறைக்குழியில் குப்பை கொட்டக்கூடாதுன்னு பசுமை தீர்ப்பாயம் இடைக்கால தடை விதிச்சுருக்கு. குப்பையை அள்ளிட்டு போயி, எங்க கொட்டுறதுன்னு தெரியாம முழிக்கிறாங்க. கொஞ்ச நாளைக்கு முன்னால, ஒரு கெணத்துல கொட்டுனாங்க. குப்பையை மேய்ந்த ஆடுகள் இறந்துருச்சு. பயந்துபோன அதிகாரிகள், கொஞ்ச நாளைக்கு குப்பையை அள்ளாம விட்டுட்டாங்க. இப்ப, நகருக்கு வெளியே இருக்கிற உரக்கிடங்குல கொட்டுறாங்க. இந்த பிரச்னைக்கு எப்படி தீர்வு காணுறதுன்னு தெரியாம, ஒவ்வொருத்தரிடமும் ஆலோசனை கேக்குறாங்க; ரெண்டு நாளைக்கு ஒருக்கா, "மீட்டிங்' போட்டு பேசுறாங்க,'' என்றாள் சித்ரா.
""புது கலெக்டர் ஆபீசை திறந்ததும், வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை விவசாயிகளிடம் ஒப்படைக்கணும்னு கோரிக்கை வச்சிருக்காங்களே? ஏன்? எதுக்கு?,'' என, புரியாமல் கேட்டாள் மித்ரா.
""அதுவா, மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வாடகை கட்டடத்துல இயங்குது. அதனால, ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, ஆபீசை மாத்தலாம்னு, உயரதிகாரிகள் முடிவு பண்ணியிருக்காங்க. இந்த விஷயம் தெரிஞ்சதும், விவசாயிகள் கொந்தளிச்சிட்டாங்க. அதனால, இப்பவே கோரிக்கையை வச்சிட்டாங்க,'' என்றாள் சித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE