அச்சம் என்கிற மடமை

Updated : செப் 07, 2015 | Added : செப் 07, 2015 | கருத்துகள் (1)
Advertisement
 அச்சம் என்கிற மடமை

நண்பர் ஒருவர் அரசுப் பணியில் இருக்கிறார், பெரிய பதவிகள் வகித்திருக்கிறார். பிள்ளைகளெல்லாம் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். தன்னை, தம் பிள்ளைகள் குறித்து பெருமையுறுவதற்குப் பெரிதும் தகுதியுள்ளவர்.
அவை எல்லாவற்றையும் பெருமையாகக் குறிப்பிட்டு மகிழும் அவர் கூடவே, தன்னுடைய உறவினர் ஒருவர் தொழிலதிபர் என்றும் அரசியலில் தொடர்புடையவர் என்றும், முரடர் என்றும், மோசமானவர் என்றும் கூடுதலாக தகவலை விருந்து நிகழ்ச்சி ஒன்றில் தேவையில்லாமல் குறிப்பிட்டார்.
''என்னை நீங்கள் மதிப்பதெல்லாம் இருக்கட்டும், கூடவே என்னுடைய பலம், பின் புலம் குறித்தும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்'' என்பது தான் அவர் சொல்ல வருகிற செய்தி. இவர் மட்டுமல்ல, இன்று நாட்டில் பலருக்கு இந்த மன நோய் பெரிய அளவில் பிடித்திருக்கிறது.
யாருக்கும் துணிச்சல் இல்லை: பயமுறுத்தியும், பயந்தும் வாழ்வது என்பது நம்மில் பலருக்கு வாழ்க்கையாகி விட்டது. 'அச்சமில்லை அச்சமில்லை' என்ற, பாரதியின் பாட்டு வரிகளைப் படித்திருப்போம். பாடவும், கேட்டிருப்போம். ஆனால், அந்த துணிச்சலை யாரும் துளி கூடப் பெறவில்லை. பயம் என்பது பெரும்பலும் நிஜமாக இருப்பதைக் காட்டிலும் கற்பனையாக இருக்கிறது என்பது கசப்பான உண்மை. 'அச்சம் என்பது மடமையடா' என்ற பட்டுக் கோட்டையாரின் பாட்டுவரிகள் உண்மை.
அச்சம் குறித்தும் அதை தவிர்ப்பது குறித்தும் சற்று சிந்திப்போம்.இளம் வயதில் தேர்வு குறித்த பயமும், நடுத்த வயதில் வாழ்க்கை குறித்த பயமும், முதுமையில் மரணம் குறித்த பயமும் தான் பெரும்பாலும் பலருக்கு வருகிற பயம். இந்த பயங்கள் எல்லாம் நிஜமாகவே ஒருவருக்கு இருக்க வேண்டும் என்பதில்லை. பெரும்பாலும் இவை கற்பனை.
தெளிவாகவும், தயார் நிலையில் இருக்கிற மாணவர்கள் தேர்வுகள் குறித்து அஞ்சுவதில்லை. விவரம் தெரிந்த பெற்றோர்களும், கல்வியாளர்களும் மாணவர்களைத் தேர்வுக்கு முன்பே தயாராக்கிவிட்டு, தேர்வு காலங்களில்உற்சாகப்படுத்துவதிலும் உடல் நலம் பேணுவதிலும் கவனம் செலுத்துவர். படித்து, பட்டம் பெற்று வாழத் தொடங்கும் இளைஞர்களுக்கு நம்பிக்கை நிறைந்திருக்கும் பட்சத்தில் வாழ்க்கை குறித்த அச்சமே இருக்காது. மரணம் குறித்து அஞ்சத் தேவையில்லை.
நிரந்தரமற்ற வாழ்வு குறித்து தெளிவு நமக்கிருந்தால், இரவலாய்க் கிடைத்த இந்த உயிரை, எப்போது வேண்டுமானாலும் இறைவன் எடுத்துக் கொள்ளட்டும் என்று தயாராக இருக்கத் தோன்றும். மரணத்துக்கான காரணங்களால் இறப்பவர்களைக் காட்டிலும், மரண பயத்தால் இறப்பவர்களே அதிகம்.
ஒரு கதை :எப்போதோ கேட்ட ஒரு கதை. ஒரு ஊரில் 500 பேர் இறக்க வேண்டும் என்பது விதிப்பயன். ஒரே நேரத்தில் 500 பேரைக் கொல்வது எப்படி என்று யோசித்த மரண தேவன், அந்த ஊரில் ஒரு கொடிய நோயைப் பரவ விடுகிறான். 500 பேருக்கு பதிலாக 5000 பேருக்கு அதிகமானோர் இறந்து போயினர். மரண தேவன் மீது அந்நாட்டு அரசன் ஆத்திரப்பட்ட போது, 500 பேர் மட்டுமே அக்கொடிய நோயால் இறந்ததாகவும், மீதமுள்ளோர் அச்சத்தால் செத்துப் போனதாகவும் கூறுகிறான் மரண தேவன்.
''மரண பயம் எனக்கு கிடையாது. நான் உயிரோடு இருக்கும் வரை மரணம் என்னை நெருங்காது. இறந்த பின் மரணத்திற்கு என்னிடம் எந்த வேலையும் இல்லை'' என்று மாவீரன் நெப்போலியன் கூறியதாகச் சொல்வதுண்டு.
வீரர்கள் ஒரு முறை தான் சாகிறார்கள். கோழைகள் தினந்தோறும் பயந்து, பயந்து சாகிறார்கள்.நாம் இழக்க அஞ்சுகிறவற்றுள் பதவி, பணம், புகழ் என்று, பலவற்றைப் பட்டியலிடலாம். பெரும்பாலும் இவை பிறரால் நமக்குப் வந்ததென்றால் கொடுத்தவரே பறித்துக் கொள்வார் என்ற அச்சத்தில் நாம் உழன்று கொண்டிருப்போம். இப்படிப் பறிக்கப்படுகிற உயரங்களுக்கு ஆசைப்படுவதிலிருந்து, நம்மை தழுவிக் கொள்கிற உயர்வுகளுக்காக உழைக்கும் போது, எவரிடத்தும் நமக்கு எந்த எதிர்பார்ப்பும் இருக்காது. பறித்து விடுவார்களோ என்கிற பயமும் வராது.
யார் பயப்படுவார்கள் :இன்று அதிகமாக வைத்திருக்கிறவர்கள் தான் அதிகமாக பயப்படுகின்றனர். வந்த வழி தெரியாமல் வாங்கிக் குவித்திருக்கிறவர்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள். பணத்தாலும், பதவியாலும் எந்த நேரமும் பாதுகாப்பைத் தேடிக் கொள்ள முடியாது. பல நேரங்களில் பணத்தைப் பாதுகாப்பதே பெரும்பாடாக இருக்கும்.அச்சமின்றி வாழ்வதற்கு பல வழி உண்டு. அவற்றுள் மிக முக்கிய மூன்றினை மட்டும் மனதில் பதிய வைத்துக் கொள்வது நல்லது.
முதலில் எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இன்று பலர் எதிர்பார்த்து ஏமாந்து போகிறார்கள். ஒன்றை நமக்குத் தருகிறவர்கள் கூட வேறு ஒன்றை பிரதிபலனாய் எதிர்பார்க்கும் போது, யாரையும் எதிர்பாராமல் தன் காலில் நிற்கிற பலத்தைப் போல, சுகமானதாக வேறு எதுவும் இருக்காது. எதையோ எதிர்பார்த்து தான் பழகுகிறார் என்று நம்மைக் கணித்து விட்டால், எப்படி எல்லாம் ஆட்டிப் படைக்கலாம், அச்சுறுத்தி வைக்கலாம், மிரட்டி வைத்திருக்கலாம் என்று, விவரமான பேர்வழிகள் வலைகளோடு காத்திருப்பார்கள்.
இரண்டாதாக எது நமக்குக் கிடைத்தாலும் அது வந்த வழி கவுரமானதாக இருக்க வேண்டும். மாதச் சம்பளம் 30 ஆயிரம் தருகிற மனநிறைவையும், மகிழ்ச்சியையும் லஞ்சமாக வருகிற லட்ச ரூபாய் தருமென்று சொல்ல முடியாது. மாதச் சம்பளக் கணக்கில் வரும். அதற்கான வரியையும் கட்டுவோம். ஆனால், மாமூல் என்பது கணக்கில் வராது. கறுப்பாக இருந்து மிரட்டும். யாருக்கும் தெரியாமல் எப்படி வாங்குவது, எங்கே பதுக்கி வைப்பது என்ற பயத்தில் வியர்த்துப் போவோம்.
இதுவும் கணக்குப்பாடம் :கணக்குப் பாடத்தில் கடைசிப் பக்கத்தில் விடை இருக்கும் என்றாலும், அதை அப்படியே எழுதிவிட்டால் மதிப்பெண் கிடையாது. எப்படி விடை வந்ததென்று செய்முறை முக்கியம். சில நேரங்களில் கணக்குப் பரிட்சையில் தவறான விடை வந்தாலும், செய்முறை சரியாக இருந்தால் பாதி மதிப்பெண்களாவது கிடைக்கும். அது போன்றது தான் வாழ்க்கையும், எதைப் பெற்றாலும் நேர்மையான கவுரவமான வழிகளில் பெற்றால் அச்ச உணர்வோடு வாழ வேண்டிய அவசியமே இருக்காது.
மூன்றாவதாக மிக முக்கியமான பகையை அணுகவிடக்கூடாது. சுற்றிப் பகையை வளர்த்துக் கொள்ளும் போது தான் அதிகமாக பயம் ஏற்படுகிறது. நம்மைச் சுற்றியிருப்பவர்களை நல்ல நண்பர்களாகப் பார்த்துக் கொண்டால் பயத்திற்கு அவசியமில்லை. நல்ல நண்பர்களைப் பெறுவது எப்படி? நாமும் அவர்களுக்கு நல்ல நண்பர்களாக வேண்டும், அன்பு பாராட்ட வேண்டும். அச்சம் அகற்றுகிற அருமருந்து அன்பு. அடுத்தவரை நேசிக்கிற போது நாமும் நேசிக்கப்படுகிறோம். அன்பு பாராட்டுகிறவர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் பயப்படத் தேவையில்லை என்பதோடு அந்த அன்பே நமக்கு அரணாகவும் விளங்கும்.
மகிழ்ச்சி மந்திரம் :நிறைவாக நம்மில் பலர் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள பணம், பதவி, அரசியல், சாதி, போன்ற கவசங்களோடும், கேடயங்களோடும் தான் திரிந்து கொண்டிருக்கிறார்களே தவிர யாரையும் தாக்குவதற்கான ஆயுதம் தாங்கும் திராணி உள்ளவர்களாக இருக்கமாட்டார்கள். யாருக்கும் அதற்கெல்லாம் நேரமும் கிடையாது. தம்மைப் பாதுகாத்துக் கொள்வதிலேயே பெரும்பாலும் பொழுதைக் கழிப்பவர்களிடம் நாம் ஏன் பயப்பட வேண்டும்?நேர்மையான வழிகளில் பெறுபவர்களையும், தகுதியை வளர்த்துக் கொண்ட தன்னம்பிக்கை மிக்கவர்களாக இருப்பவர்களையும், எல்லாவற்றிருக்கும் மேலாக சக மனதிர்களை மதிப்பவர்களையும், பயம் என்கிற பேய் அணுகாது. மொத்தத்தில் மனித நேயம், மாண்புமிகு வாழ்க்கை, மண்ணில் எவர்க்கும் அஞ்சாமை இவை மூன்றும் தான் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான மந்திரங்கள்.-- - ஏர்வாடி. எஸ். ராதாகிருஷ்ணன், எழுத்தாளர். 94441 07879

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Srinivasan - Theni,இந்தியா
07-செப்-201513:48:06 IST Report Abuse
R.Srinivasan பாராட்டுக்கள் எழுத்தாளர் அவர்களே. ஆனால் இந்தக் காலத்தில் அன்பு கூட எதையோ எதிர்பார்த்து கொடுக்கப்படுவதாக சித்தரிக்கப்படுகிறது. தந்தை கொடுக்கவில்லை என்றால் அவர் மீது வெறுப்பு வருகிறது. தமையன் வளர்ந்து விட்டால் சொத்து பிரிக்கப்படுமோ என்ற பயம் வருகிறது. எதுவும் இல்லாதவனுக்கு அன்பு கூட கடைச் சரக்காகி விடுகிறது. முதியோர் இல்லங்களில் கூட காசு இருந்தால்தான் அன்பு கிடைக்கிறது. அன்பை விற்று இவர்கள் காசு பார்க்கிறார்கள். மனம், பணம் இரண்டும் உச்சரிப்பில் ஒத்துப் போவது போல வாழ்க்கையிலும் ஒத்துப் போய்விட்டன. எதுவும் இல்லாதவனுக்கு எதிலும் பயம் இல்லை. பணக்காரன் வீட்டுக்கு பார்த்த இடத்திலெல்லாம் பூட்டு. பாதையில் உறங்குபவனுக்கு படைத்தவனே பூட்டு. அவனுக்கு உறக்கம் இல்லை. இரக்கமும் இல்லை. இவனுக்கு உறக்கமும் உண்டு. இரக்கமும் உண்டு. ஆனாலும் பணம் படுத்தும் பாடு இருக்கிறதே. அப்பப்பா. இதனால் தாங்கள் குறிப்பிட்ட மனித நேயம், மாண்புமிகு வாழ்க்கை, அஞ்சாமை மூன்றும் பணத்திற்கு அடிமை ஆகி விட்டன இவற்றை இதைப் படிக்கும்போது மட்டுமாவது நினைவில் கொண்டால் வெற்றிதான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X