ஐ.ஏ.எஸ்., ரிசார்ட்ஸ் ரெடி... - ஆசிய யானைகளுக்கு வெடி!| Dinamalar

ஐ.ஏ.எஸ்., ரிசார்ட்ஸ் ரெடி... - ஆசிய யானைகளுக்கு வெடி!

Added : செப் 08, 2015
Share
மருதமலைக்குப் படிகளின் வழியே ஏறாமல், சாலையின் வழியே நடந்து கொண்டிருந்தார்கள் சித்ராவும், மித்ராவும். ரம்மியம் சேர்த்த 'க்ளைமேட்'டுக்கு, எங்கிருந்தோ தவழ்ந்து வந்த பாடல் கூடுதல் சுகம் சேர்த்தது.இரு பறவைகள் மலை முழுவதும் எங்கோ...எங்கோ...பறந்தன...''இந்த க்ளைமேட், இந்த லொகெஷன், இந்த பாட்டு....செமையா இருக்குல்லக்கா!'' என்று பரவசமானாள் மித்ரா.'அதனால தான் மித்து, எல்லா
ஐ.ஏ.எஸ்., ரிசார்ட்ஸ் ரெடி... - ஆசிய யானைகளுக்கு வெடி!

மருதமலைக்குப் படிகளின் வழியே ஏறாமல், சாலையின் வழியே நடந்து கொண்டிருந்தார்கள் சித்ராவும், மித்ராவும். ரம்மியம் சேர்த்த 'க்ளைமேட்'டுக்கு, எங்கிருந்தோ தவழ்ந்து வந்த பாடல் கூடுதல் சுகம் சேர்த்தது.
இரு பறவைகள் மலை முழுவதும் எங்கோ...எங்கோ...பறந்தன...
''இந்த க்ளைமேட், இந்த லொகெஷன், இந்த பாட்டு....செமையா இருக்குல்லக்கா!'' என்று பரவசமானாள் மித்ரா.
'அதனால தான் மித்து, எல்லா ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஆபீசர்களும் 'ரிட்டயர்டு' ஆன பிறகு, இங்க வந்து 'செட்டில்' ஆகணும்னு துடிக்கிறாங்க. எனக்குத் தெரியவே, ஏகப்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஆபீசருங்க, இங்க இடம், வீடு, ஃப்ளாட் வாங்கிப் போட்ருக்காங்க'' என்றாள் சித்ரா.
''அது பழசு. இப்போ, இங்கயே 'பிஸினஸ்' பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. அதுக்காக, ஐ.ஏ.எஸ்., பவரையும் பயன் படுத்துறாங்க''
''மித்து! நீ சொல்றதைப் பார்த்தா, எங்கேயோ ஏதோ நடக்குது போலிருக்கே''
''எங்கேயோ இல்லக்கா. இதே மருதமலை பக்கத்துல, ஒரு பிரமாண்டமான 'ரிசார்ட்ஸ்' ஒண்ணு ரெடியாகுது. டிஎம்கே பீரியட்ல, ஸ்டாலினுக்கு நெருக்கமா இருந்த ஒரு ஐ.ஏ.எஸ்., ஆபீசர் தான், அதை அமைக்கிறாராம். அதுக்குப் பக்கத்துல இருக்கிற விவசாயி, தன்னோட நிலத்தைத் தர மாட்டேன்னு சொன்னதால, அவர் மேல பொய்க்கேசு போட்ருக்காங்க''
''கவர்மென்ட் மாறுன பிறகும், அவரு இன்னும் அதே மாதிரி 'பவர்'ல இருக்காரா?''
''அவர் 'ரிட்டயர்டு' ஆகி, காத்தைப் புடுங்குன 'பந்து' மாதிரியாயிட்டாரு. ஆனா, அவருக்கு, நம்ம 'டிஸ்ட்ரிக்ட்'ல இருக்கிற முக்கியமான ஆபீசரம்மா தான், உதவி பண்றாங்களாம். தாசில்தாரை வச்சு, அந்த விவசாயி குடும்பத்தை மெரட்டிருக்காங்க. ஒத்துக்கலைங்கவும், வேலியெல்லாம் உடைச்சுப் போட்டு, இவுங்க மேல பொய்க்கேசைப் போட்டாங்க''
''ஸ்டாலினுக்கு நெருக்கமான ஆபீசருக்கு, இவுங்க ஏன் உதவுறாங்க?''
''அது தான் புரியலை. ஐ.ஏ.எஸ்.,களுக்காகவே அந்த 'ரிசார்ட்ஸ்' ரெடியாகுதான்னு தெரியலை. ஆனா, அங்க 'ரிசார்ட்ஸ்' வந்தா, ஆசிய யானைகளோட 'காரிடார்'க்கு வெடி வச்சது மாதிரி தான்'' என்றாள் மித்ரா.
''நிஜமாவே சில தாசில்தார்க ஆட்டம் தாங்கலை மித்து. பாலக்காடு ரோட்டுல இருக்கிற ஒரு தாசில்தாரைப் பத்தி, பயங்கர 'கம்பிளைன்ட்' குவியுது. காசு, காசுன்னு அரிச்சு எடுக்குறாராம். ராத்திரியானா, அவரும், ஆர்.ஐ., ஒருத்தரும் சேர்ந்து, மணல் லாரிகளை துரத்தித் துரத்திப் பிடிக்கிறாங்களாம்'' என்றாள் சித்ரா.
''கேரளா போற மணல் லாரியா...அதைப் பிடிச்சா என்ன தப்பு?''
''பிடிச்சு பறிமுதல் பண்ணுனா சரி. இவுங்க, மணல் லாரியைப் பிடிச்சு, 15 ஆயிரம் வாங்கிட்டு, வண்டியை அனுப்பிர்றாங்க. ஒரு கையெழுத்துக்கு, இரு நூறு இல்லாம, அவரு பேனாவையே திறக்கிறதில்லையாம்''
''பேருக்கேத்தது மாதிரி, செல்வத்தைச் சேக்குறாரோ?'' என்றாள் மித்ரா.
''ஏற்கனவே, மேல புகார் போயிருச்சாம். விஜிலென்ஸ்காரங்களும் 'வார்ன்' பண்ணிட்டுப் போயிருக்காங்க'' என்றாள் சித்ரா.
''தப்புப் பண்ற ஆபீசர்களை, அப்பப்போ தூக்குனா, கவர்மென்ட்டுக்கு எதுக்கு கெட்ட பேரு வரப்போகுது'' என்றாள் மித்ரா.
''கரெக்ட் மித்து! கார்ப்பரேஷன்ல தண்ணியத் தெளிச்சு விட்டாங்க''
''யாருக்குக்கா...ஆபீசர்களுக்கா...கவுன்சிலர்களுக்கா?''
''குப்பை மேல...வெள்ளலூர்ல மறுபடியும் ஈத்தொல்லை அதிகமாகி, பேப்பர்ல பெருசா நியூஸ் வந்ததும், கலெக்டர், கமிஷனர், மேயரு எல்லாரும் பார்க்கப் போனாங்களே. ஆர்.ஏ.எப்.,ட்ட இருக்கிற 'வருண்'கிற வண்டியில, இ.எம்.சொல்யூஷனைக் கலந்து தெளிக்கிறதா 'ப்ளான்' இருந்துச்சு''
''அன்னிக்குத் தெளிச்சாங்களே. படமெல்லாம் பார்த்தேனே''
''அது வெறும் தண்ணி. இவுங்க வந்தப்போ, இ.எம்.சொல்யூஷன் ரெடியாகலையாம். போட்டோவுக்காக, வெறும் தண்ணியத் தெளிச்சிருக்காங்க.
அதனால தான், அப்புறமும் ஈத்தொல்லை குறையவேயில்லை'' என்றாள் சித்ரா.
''இப்பவாவது ரெடி பண்ணிட்டாங்களா?'' என்றாள் மித்ரா.
''ஆறு மாசத்துக்கான 'சொல்யூஷன்'க்கு, ஒரு நிறுவனம் 8 லட்ச ரூபா கேக்குதாம். அக்ரி யுனிவர்சிட்டியில, அதை விட ரொம்ப ரொம்பக் குறைவான விலைக்கு, இந்த சொல்யூஷனைப் பண்ணித் தர்றேன்னு சொல்றாங்களாம். அவுங்களை உள்ளேயே விட மாட்டேங்கிறாரு, அந்த 'குப்பை' இன்ஜினியரு'' என்றாள் சித்ரா.
''நீ 'குப்பை' இன்ஜினியர்ன்னு சொன்னதும், தீயா வேலை செய்யணும் கொமாருங்கிறது மாதிரி, குப்பைக்கு தீ வச்சே, கணக்கு எழுதுவாரே...அவரு ஞாபகம் வந்துருச்சு'' என்றாள் மித்ரா.
''அவரே தான். அப்போ தீ வச்சவரு, இப்போ, மருந்தே கலக்காம தண்ணியத் தெளிச்சு, எல்லாத்தையும் முட்டாளாக்கிருக்காரு'' என்றாள் சித்ரா.
''செம்மொழி மாநாடு நடந்தப்போ, ரோட்டுல இருக்கிற மண்ணை அள்ளுறதுக்கு, ஒரு கோடியே 10 லட்ச ரூபாய்க்கு மூணு மெஷின் வண்டி வாங்குனாரே இந்த இன்ஜினியரு. ஞாபகம் இருக்கா ஒனக்கு?'' என்றாள் மித்ரா.
''நல்லா ஞாபகம் இருக்கே. ஸ்டாலின் கொடியசைச்சு துவக்கி வச்சாரே'' என்றாள் சித்ரா.
''அதே வண்டிங்க தான். அதுல ரெண்டு வண்டிங்க பாரதி பார்க்ல பழைய இரும்பாக் கெடக்கு. உள்ளூர் கம்பெனியில வாங்குன ஒரு வண்டியும் ஒர்க்ஷாப்ல நிக்குது. இப்போ, மண் அள்ளுறதுக்காக இன்னொரு வண்டி வாங்கப்போறாங்களாம்'' என்றாள் மித்ரா.
''நல்லா இருக்கிற ரோட்டுல மட்டும் தான், அது மண் அள்ளுமாம். நம்மூர்ல அப்பிடி இருக்கிறது அவிநாசி ரோடு மட்டும் தான'' என்றாள் சித்ரா.
''அதை சுத்தம் பண்ணுனாலே போதும்னு சொல்றாராம் நம்ம கோயம்புத்தூரு கொமாரு'' என்றாள் மித்ரா.
''நீ சுத்தம்னு சொன்னதும், எனக்கு பாதாள சாக்கடை ஞாபகம் வந்துருச்சு. நம்ம கார்ப்பரேஷன்ல பாதாள சாக்கடை கனெக்ஷன் கொடுக்கிறதுக்கு முன்னாடியே, கவுன்சிலர் ஹஸ்பெண்ட் ஒருத்தரு, ஒரு வீட்டுக்கு பத்தாயிரம் வரைக்கும் வாங்கிட்டு, கனெக்ஷன் கொடுத்துட்டு இருக்காரு'' என்றாள் சித்ரா.
''எந்த ஏரியாவுலக்கா இந்த 'காட்டு' தர்பார் நடக்குது?'' ஆர்வமாய்க் கேட்டாள் மித்ரா.
''செல்வபுரத்துல தான். எல்லாமே ஏ.சி., இன்ஜினியர்க்கு தெரிஞ்சும் ஒண்ணுமே கண்டுக்கலை'' என்றாள் சித்ரா.
''ஏ.சி.,கண்டுக்கலைன்னு நீ 'கம்பிளைன்ட்' பண்ற...சிட்டிக்குள்ள வடக்க இருக்கிற ஏ.சி.யும், 'தில்'லான இன்ஜினியரும் சேர்ந்து, குடி தண்ணி 'பைப்'களை மாத்தித்தர்றதுக்கு, ஒரு மீட்டருக்கு 1,500 ரூபா லஞ்சம்னு புதுசா ஒரு திட்டத்தை 'அமல்' படுத்திருக்காங்களாம்''
''பிளம்பர்க எப்பிடி விட்டாங்க?''
''அவுங்க போர்க்கொடி தூக்குனதால, இப்போ, கார்ப்பரேஷனுக்கு பணம் கட்டுனது மாதிரி, போலியா 'ரிக்கார்டு' தயார் பண்றாங்களாம்'' என்றாள் மித்ரா.
''அந்த ஏ.சி., மேல இன்னொரு புகாரும் இருக்கு மித்து. பெரிய கட்டடம், அப்பார்ட்மென்ட்க்கு 'அசெஸ்மென்ட்'க்கு வந்தா, அவரே நோட்டைத் துாக்கிட்டு, 'ஒங்க பில்டிங்ல இவ்ளோ வயலேஷன் இருக்கு'ன்னு மெரட்டி, செம்ம வசூலு போடுறாராம்'' என்றாள் சித்ரா.
''சரவணம்பட்டியில, ஹெல்மெட் போடாம வந்த ரெண்டு காலேஜ் பசங்கள்ட்ட வசூல் பண்ணதோட நிக்காம, அவுங்க அம்மா, அப்பாவைத் திட்டுனாங்கன்னு ரெண்டு பேரை 'சஸ்பெண்ட்' பண்ணுனாங்களே. இப்போ என்ன நடக்குது தெரியுமா?''
''மொபைல்ல 'ரிக்கார்டு' பண்றாங்கன்னு தெரிஞ்சு, யாரையாவது நிறுத்துனா, உடனே மொபைலைப் புடுங்கிர்றாங்க...அதான''
''நீயும் பயங்கர 'அப்டேஷன்'லதான்க்கா இருக்கிற. ஆனா, அதே ஸ்டேஷன்ல, உளவு பாக்கிறேன்கிற பேருல, ரெண்டு போலீஸ்காரங்க, டாஸ்மாக், கஞ்சா, லாட்டரின்னு பல பேர்ட்ட மாமூல் வாங்குறாங்களே. அவுங்களை ஏன் மாத்தலைன்னு மத்த போலீஸ்காரங்க கொதிக்கிறாங்க'' என்றாள் மித்ரா.
''கொதிக்கிறதுன்னதும் பால் ஞாபகம் வந்துச்சு. ஆவின் பால் பாக்கெட்ல கரப்பான் பூச்சின்னு, பச்சாபாளையம் பேக்டரில, ஒரு ஆபீசர் போய் 'ரெய்டு' பண்ணுனாரு தெரியுமா. அங்க பார்த்தா, படுகேவலமா இருந்திருக்கு. அதை சரி பண்ணுங்கன்னு சொன்னதுக்கு, சென்னையில இருந்து அவரைக் கூப்பிட்டு 'ரெய்டு' விட்டாங்களாம்'' என்றாள் சித்ரா.
''அக்கா! ஜி.எச்.,ல திடீர் 'ரெய்டு' விட்டா, பல டாக்டர்ங்க மாட்டுவாங்க. பல பேரு, நேரத்துக்கு 'டூட்டி'க்கு வர்றதில்லை. வந்தாலும் கொஞ்ச நேரத்துல கிளம்பிர்றாங்க. பேருக்கு தான் பயோ மெட்ரிக் இருக்காம்'' என்றாள் மித்ரா.
''மித்து! ஜி.எச்.ல முக்கியமான டாக்டரோட பிரண்ட் 'பாய்'க்கு தான், எல்லா கான்ட்ராக்ட்டும் கொடுக்குறாங்க. அவர் ஆட்டம் 'ஓவரா' போகுதாம். டிரக் கமிட்டி மீட்டிங்ல எல்லாம் வந்து உக்காந்துக்கிறாராம்'' என்றாள் சித்ரா.
அதற்குள் கோவில் அடிவாரத்துக்கு இருவரும் வந்து சேர்ந்து விட, பேச்சை நிறுத்தி விட்டு, படியேறத்துவங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X