"எலியும், பூனையும்போல, எதிர் எதிரா இருந்தவங்க, ஓரணியில் நின்னு, தொழிலை பாதுகாக்கற காலம் பிறந்தாச்சு,'' என்றபடி, ஸ்கூட்டரை ஓரங்கட்டி நிறுத்தினாள் சித்ரா.
ஓடிவந்து வரவேற்ற மித்ரா, ""யாரு ஒரே அணியில் நிற்கப்போறாங்க; இன்னும் எலக்ஷனுக்கு நாள் இருக்கே. நீங்க சொல்றது ஒன்னுமே புரியலையே; புதிர்போடாம சொல்லுங்க,'' என்றாள்.
வீட்டுக்குள் நுழைந்ததும், மின்விசிறியை ஓட விட்ட சித்ரா, ""எல்லாம், நம்ம ஏற்றுமதியாளர்கள் சங்கத்துலதான். வெள்ளி விழா கண்ட அச்சங்கத்துல, 2013ல் தேர்தல் நடந்துச்சு. தொழில் வளர்ச்சிக்கு, "மாற்றம் தேவை' என, சிலர் போராடுனாங்க. தலைவர் பதவியை கைப்பத்த முடியலை; இருந்தாலும், நிர்வாக குழுவிலும், செயற்குழுவிலும் பொறுப்பு கெடைச்சுச்சு. இத்தன நாளாவும், ஒட்டும் உறவும் இல்லாம, செயல்பாடு போயிக்கிட்டு இருந்துச்சு. "பக்கபலமா' இருந்த துணை தலைவரும், பொது செயலாளரும் கூட, மனஸ்தாபத்துல பதவியை ராஜினாமா செஞ்சாங்க. அத பொருட்படுத்திக்காம, புது நிர்வாகிகளை நியமிச்சாங்க,'' என்றதும், ""அக்கா, அதெல்லாம் பழைய கதை. அதை எதுக்கு இப்ப கிளறுறீங்க,'' என மித்ரா, நொந்து கொண்டாள்.
""இருப்பா, சொல்றேன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி, இச்சங்கத்தோட பொதுக்குழு கூட்டம், ஐ.கே.எப்., அரங்கத்துல கூடுச்சு. அழைப்பிதழில், நிறைவு விழான்னு போட்டிருந்தாங்க. இதை படிச்சதுமே, எதிரணியில் இருந்தவங்க, பிரிவு உபசார விழானு புரிஞ்சுட்டாங்க; பங்ஷன்லயும் கலந்துக்கிட்டாங்க.
""யாரும் எதிர்பார்க்காத நேரத்துல, சங்கத்துக்காக, 25 ஆண்டுகள் ஒழைச்சிட்டேன். ஒங்களுக்கெல்லாம், நான் சொல்றது அதிர்ச்சியா இருக்கும். இளைஞர்களுக்காக வழிவிட்டு, அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன்னு, சங்க தலைவர் சொல்லியிருக்கார். அவரை யாரும் தடுக்கலை; இருந்தாலும், அவர் மனசை புரிஞ்சவங்க, கவுரவ தலைவரா இருக்கணும்னு சொல்லியிருக்காங்க. அவரும், சரின்னு சொல்லியிருக்கார். கூட்டத்துக்கு எல்லோரும் வந்திருந்தா, இன்னும் சிறப்பா இருந்திருக்குமேன்னு, சக ஏற்றுமதியாளர்களிடம் அவர் சொல்லியிருக்கார்.
""தலைவரோட இந்த முடிவு, எல்லோரையும் நெகிழ்ச்சி அடைய வெச்சிடுச்சு. இதுநாள் வரை இருந்த வேற்றுமையை மறந்து, எல்லோரும் இணைந்து கரம்கோர்த்து, தொழிலுக்காக பாடுபடணும்ங்கற மனநிலை உறுப்பினர்கள்ட்ட மேலோங்கியிருக்கு. அடுத்த தேர்தல், போட்டியில்லாம, நியமனமா இருக்கும்னு பேசிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.
""நல்ல விஷயம்தானே. எல்லோரும் இணைந்து செயல்பட்டால், தொழில் துறை மேம்படும்; ஊரும் நல்லாயிருக்கும்,'' என்றாள் மித்ரா.
""அதெல்லாம் சரி, ஊரெல்லாம் "ஆவின் பூத்' முளைச்சுகிட்டு இருக்கே, கவனிச்சியா,'' என்றாள் சித்ரா.
""அதுவா, "டாஸ்மாக்' பார் ஏலம் கெடைக்காதவங்களுக்கு, ஆவின் "பூத்' கொடுத்திருப்பாங்க போலிருக்கு. பொங்கலூருல வசிக்கிற "மாஜி' அமைச்சர், ஆவின் தலைவரா இருக்கார். கட்சிக்காரங்க யாராவது போயி கேட்டா, உடனே, அனுமதி கொடுத்திடுறாரு. இந்த பூத்துல, டீ, வடை அஞ்சு ரூபாய்ன்னு சொல்றாங்க. வெலை குறைவா இருக்குன்னு சாப்பிட்டால், தவிக்கிற வாய்க்கு தண்ணி தர மாட்டேங்கிறாங்க. வாட்டர் பாட்டில், 15 ரூபாய் சொல்றாங்க,'' என, அலுத்துக் கொண்டாள் மித்ரா.
""வேண்டப்பட்டவங்க, யாராவது, மினரல் வாட்டர் கம்பெனி நடத்துறாங்களோ, என்னவோ,'' என, சித்ரா சொல்ல, ""ஆமாக்கா, அவரோடதா? இல்லை, "பினாமி'யான்னு தெரியலை. எல்லா, "பூத்'திலும், வாட்டர் பாட்டில் இறக்கிட்டு போயிருக்காங்க. கண்டிப்பா விக்கணும்னு, கறாரா ஆர்டர் போட்டிருக்காரு, பல்லடம் வி.ஐ.பி.,'' என்றாள் மித்ரா.
""அதெல்லாம் சரி, வடக்கு பக்கம் இருக்கற தாசில்தாரை, அங்கிருக்கிற ஊழியர்கள் ஏகத்துக்கும் திட்டித்தீர்க்குறாங்களாமே,'' என, சித்ரா அடுத்த கேள்வி கேட்க, ""சேவை மையத்துல, "சர்ட்டிபிகேட்' கேட்டு மனு செஞ்சா, 15 நாள் "வெயிட்' பண்ண வேண்டியிருந்துச்சு. இந்த விஷயம் கேள்விப்பட்டதும், தெனமும் சாயங்காலம், "ஒர்க் பெண்டிங் ரிப்போர்ட்' வாங்குறார். மறுநாள் காலையில, 8:00 மணிக்கு, வி.ஏ.ஓ., - ஆர்.ஐ., மொபைல் போன்களுக்கு எஸ்.எம்.எஸ்., பறக்குது. இப்ப, வேலை ஸ்பீடாகிடுச்சு. ஆனா, அதிகாரியை திட்டித்தீர்க்குறாங்க,'' என்றாள் மித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE