குறைந்துவரும் குரு பக்தி!| Dinamalar

குறைந்துவரும் குரு பக்தி!

Updated : செப் 10, 2015 | Added : செப் 10, 2015 | கருத்துகள் (10)
குறைந்துவரும் குரு பக்தி!

மாதா, பிதா, குரு, தெய்வம் என நம் முன்னோர் வகைப்படுத்தியதில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. அன்று குருவை வணங்காத, போற்றாத மாணவர்கள் இல்லை. ஆனால், இன்றைய நிலையில் 'குரு பக்தி என்றால் கிலோ என்ன விலை?' என்று கேட்கின்றனர்.
"கல்வி போதிப்பவர் மட்டுமே குருவல்ல. கல்வியுடன் வாழ்க்கை கல்வியையும், ஒழுக்கத்தையும் ஒருசேர கற்றுத் தருபவரே குரு. ஒரு நொடியில் தம்மை ஆயிரம் பேராக மாற்றிக்கொள்ள யாரால் முடியுமோ அவர் தான் உண்மையான ஆசிரியர்" என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
மகாத்மா காந்தியோ ஆசிரியர்களை மற்றொரு கோணத்தில் பார்க்கிறார். "ஆசிரியர் என்பவர் மாணவர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் மனதில் ஒன்றிணையும்போது, அவர் கற்பிப்பதை விட மாணவர்களிடமிருந்து அதிகம் கற்றுக்கொள்பவரே ஆசிரியர். எதையும் கற்றுக்கொள்ளாதவர் ஆசிரியருக்கு தகுதியற்றவர்" என்கிறார்.

யார் சிறந்த குரு :
இப்படி ஒவ்வொருவரும் தங்களது கோணத்தில் ஆசிரியர்களுக்குத் தேவையான குண நலன்களை வரையறுத்து கூறியுள்ளனர். ஏன் ஆசிரியர் குணநலன்களை வரையறுக்க வேண்டும்? எதற்காக ஆசிரியர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்?
அந்த காலத்தில் தன்னிடம் பயிலும் மாணவர்களை, தங்கள் குழந்தைகளாக பாவித்து கல்வி போதித்தனர். குரு என்ற ஸ்தானத்தில் மாணவர்களின் மனங்களை செம்மைப்படுத்தும் கடமையும் அவர்களுக்கு இருந்தது. அப்பொழுதெல்லாம், ஆசிரியருக்கு குக்கிராமம் முதல் நகர்ப்புறங்கள் வரை முதல் மரியாதை கொடுக்கப்பட்டது. குருவின் வாக்கை, வழிகாட்டலை தேவவாக்காக பின்பற்றினர் மாணவர்கள்.
ஆசிரியரின் வழிகாட்டலை பின்பற்றியவர்களே உன்னத நிலையை எட்டியுள்ளனர். இன்றும் தனது ஆசிரியர்களின் போட்டோவை பூஜை அறையில் வைத்து பூஜிப்பவர்களும் உண்டு. இன்றைக்கு குரு பக்தி குறைகிறது ஏன்? சற்று சிந்திக்க வேண்டும்.
குழந்தையின் முதல் ஆசிரியர் அம்மா. அம்மாவின் கால்களை சுற்றித் திரிந்த குழந்தை பள்ளிக்கு சென்றவுடன் ஆசிரியரிடமும் அதே அன்பையும், அரவணைப்பையும் எதிர்பார்க்கிறது. ஆயிரம் குழந்தைகளுக்கு ஒருவர் அம்மா ஆக முடியுமா? முடியும்.
சுவாமி விவேகானந்தர் சொன்னது போல் நொடியில் தம்மை குழந்தைகளின் குணத்திற்கேற்ப மாற்றிக்கொள்கிறார்கள் ஆசிரியர்கள். அந்த வித்தையை அறிந்தவர்கள் அவர்கள் மட்டுமே. ஏதோ கல்வி கற்றுவிட்டால் மட்டும் ஒருவர் குருவாகிவிட முடியாது என்பதே அறிஞர்கள் வாதம்.
இயந்திரத் தனம் :
சீத்தலை சாத்தனார் வாழ்ந்த நாடு தானே இது? அவர் தனது மாணவர்கள் தவறு இழைக்கும் போதெல்லாம் தனக்கே தண்டனை கொடுத்துக்கொண்டவர். இன்றைய ஆசிரியர்கள் எல்லோரும் அப்படியெல்லாம் நடக்க முடியாது. ஆனால் மாணவர்களின் எண்ண ஓட்டங்களை அறிந்து சரிசெய்ய முயற்சிக்க வேண்டும்.
குருகுல முறை மறைந்து விட்டது. குலக்கல்வியும் ஒழிந்து விட்டது. இன்றைய கல்வியின் நிலை, பாடத்திட்டம், தேர்வு தேர்ச்சி சதவீதம் என்று இயந்திரத்தனமாக மாறிவிட்டது. ஆனால் குழந்தைகளோ பள்ளியில் மிகச் சிறிய வயதில் கிடைத்த அன்பையும், அரவணைப்பையும் தொடர்ந்து பெற முயல்கின்றனர். காலத்தின் கட்டாயம், கல்விச் சுமையும், கண்டிப்புடன் நடந்துகொள்ள வேண்டிய ஆசிரியரின் போக்கும் இருவரிடையே விரிசலை உண்டாக்குகிறது.
கூட்டுக்குடும்பங்கள் அறவே இல்லை. அதனால் பெரியவர்களுடன் வாழக்கூடிய சந்தர்ப்பங்களும் கிடைப்பது இல்லை. அநேக வீடுகளில் பெற்றோர் இருவரும் வேலை பார்க்கின்றனர். உடன் பிறந்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.
பெற்றோரும் குழந்தைகளுக்கு அளவுக்கு மீறி செல்லம் கொடுக்கின்றனர். ஆசைகள் நிறைவேறினால் மகிழ்ச்சி அடையும் குழந்தைகள், எதிர்பார்ப்பு பொய்க்கும்போது பிடிவாதம் பிடிக்கின்றனர். ஏமாற்றத்தை தாங்கி கொள்ளும் மனநிலை, அவர்களிடம் ஏற்படுவதில்லை. ஆகையால் ஆசிரியர்களும் தங்களிடம் விட்டுக் கொடுக்க வேண்டும் என நினைக்கின்றனர். இதுவே ஆசிரியர்- மாணவர் உறவின் சமநிலை பாதிப்புக்கான துவக்கம்.

குற்றமாகும் கண்டிப்பு :
முன்பெல்லாம் ஆசிரியர் நடந்துசெல்லும்போது எதிரே வருவதற்கு, மரியாதை நிமித்தமாக மாணவர்கள் தயங்குவர். சந்திக்க நேரும் சமயத்தில் ஆசிரியருக்கு பணிவுடன் தவறாமல் வணக்கம் செலுத்துவர். இன்றைக்கும் ஆசிரியர் நடக்கும் தெருவில் வர, மாணவர்கள் தயங்கத்தான் செய்கின்றனர். இவர்களுக்கு வணக்கம் சொல்ல வேண்டுமே என்று!
தவறிழைக்கும் மாணவர்களை கண்டிக்க முடிவதில்லை. கண்டித்தால் ஆசிரியர்கள் குற்றவாளியாகின்றனர். மாணவர் மன்னிப்பு கேட்பது மறைந்து வருகிறது. ஆசிரியர்களே மன்னிப்பு கேட்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
ஆகையால் ஒரு சமயத்தில் ஆசிரியர் பணி, அறப்பணி என்பதை மறக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தம் பணியை மட்டும் காப்பாற்றிக்கொண்டால் போதுமென்ற மனப்பான்மை ஏற்படுகிறது. கடமையை சரிவர ஆற்றாமல் ஆசிரியர்கள் ஏனோதானோ என்று பணிபுரியத் தொடங்கினால் சமுதாயச் சீரழிவே ஏற்படும்.

எண்ணங்கள் மாறவேண்டும்:
மகாபாரத அர்ச்சுனன் முதல் இன்றைய அப்துல்கலாம் வரை ஆசிரியர்கள் மீது வைத்திருந்த பக்தியை குழந்தைகளிடம் ஊட்டி வளர்க்க வேண்டும்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? ஆசிரியருக்கு மடங்காத பிள்ளை எவரையும் நாளை மதிக்காமல் போகலாம். அதனால் தான் முதியோர் இல்லங்கள் அதிகரிக்கின்றன. சட்டங்களை கொண்டே எதையும் சரிசெய்ய முடியாது. ஆசிரியர் மீது குற்றம் மட்டுமே காணும் பண்பை அனைவரும் மாற்றிக்கொள்ள வேண்டும். அதற்காக எல்லா ஆசிரிய பெருமக்களும் நல்லவர்கள் என வாதிடவில்லை. சில இடங்களில் சில தவறுகள் நடந்திருக்கலாம். இதனை களைய அனைவரும் முயற்சிக்க வேண்டும்.
உலகிற்கே வழிகாட்ட வேண்டிய ஆசிரியப்பெருமக்கள் மீது எவ்வித கரும்புள்ளியும் ஏற்பட அனுமதிக்கக் கூடாது. குழந்தைகளுக்கு அரணாகத்தான் விளங்க வேண்டும். தமது சொந்த பிரச்னைகளை மாணவர்களிடம் திணிக்க கூடாது.
தவறு செய்யும் மாணவரை ஆசிரியர் கண்டிக்கும் உரிமை தரப்பட வேண்டும். ஆசிரியர்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து கடமையாற்ற வேண்டும். இதன் மூலம் ஆசிரியர்- மாணவர் உறவு மேம்படுவதுடன் சமுதாயத்திற்கு நல்ல இளைஞர்களை கொடுக்க முடியும்.
அனைவரும் இணைந்து ஆசிரியர்களின் அடியொற்றி நடக்க முயற்சிக்க வேண்டும். ஆசிரியர்கள் அறிவாளிகளை மட்டுமல்ல நல்ல ஆன்மாக்களையும் உருவாக்குவார்கள்!
- வெ.சந்திரகலா, முதுகலை ஆசிரியை, மதுரை. 77082 18378.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X