எங்கே செல்கிறது மருத்துவ தொழில்?| Dinamalar

எங்கே செல்கிறது மருத்துவ தொழில்?

Added : செப் 12, 2015 | கருத்துகள் (8)
Share
எங்கே செல்கிறது மருத்துவ தொழில்?

எல்லாமே இயந்திரமயமாகி, மனிதநேயம் மற்றும் நேர்மை மறைந்து வரும் இந்த உலகில், மருத்துவத் துறையும் விதிவிலக்கல்ல. இறைவனுக்கு இணையாகக் கருதப்பட்ட மருத்துவர்கள் அடிவாங்கி சாலையில் ஓட வேண்டிய நிலையையும் பார்க்கிறோம். இதற்கு பல தரப்பட்ட காரணங்கள் உள்ளன.

காசு இல்லாமல் தொழில்நுட்பத்தை வாங்க இயலாது. சாதாரண கத்தியை வைத்து செய்து கொண்டிருந்த அறுவை சிகிச்சை, இன்று ரோபோக்களை வைத்து பண்ணக்கூடிய அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இதற்கெல்லாம் கோடிக்கணக்கில் செலவாகிறது. இவ்வளவு பணம் போடுபவர்களின் மனநிலை எப்படி இருக்கும். முன்பெல்லாம் அந்த டாக்டர் கைபட்டால் எல்லாமே குணமாகும் என்று சொன்னது போய், இனிமேல் அந்த டாக்டரின் இயந்திரம் பட்டால் எல்லாம் குணமாகும் என்ற நிலை வரும்.

முன்பெல்லாம் நன்கு படித்தவர்கள் மட்டும் தான் மருத்துவர்கள் ஆக முடிந்தது. இப்போது கோடிகள் இருந்தால் நீங்கள் எந்த துறையில் வேண்டுமானாலும் பட்டங்களை வாங்கலாம். இவ்வளவு பணத்தை முதலீடாக போட்டு படித்து வருபவர்கள், அந்த தொகையை வட்டியுடன் சேர்த்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சம்பாதிக்க முயற்சிப்பர். கொள்ளை லாபம் வைத்தால் தான் எல்லாவற்றையும் ஈடுகட்ட முடியும். இந்த தொழிலின் தலையெழுத்தை நிர்ணயிப்பதே இவர்கள் கையில் தான் இருக்கிறது.

ஒரு மருத்துவ முறையை நோயாளிக்கு செயல்படுத்தும் முன், பலவிதமான சோதனைகளையும், ஆராய்ச்சிகளையும் தாண்டி வரவேண்டும். இங்கு எந்த கட்டுப்பாடும் இல்லாமல், எந்த சோதனைகளும் இல்லாமல் தன் விருப்பம் போல் மருத்துவம் செய்பவர்கள் இருக்கின்றனர். இதில் மாற்று மருத்துவம் செய்பவர்களின் விளம்பரத்தை நம்பி, ஏமாந்து போனவர்கள் நிறைய உள்ளனர். இந்த தொழிலில் ஒருவர் எவ்வளவு பேருக்கு ஒரு நாளைக்கு வைத்தியம் செய்ய வேண்டும் என்ற எல்லை கிடையாது. எத்தனை பேர் வந்தாலும் பார்ப்பர். மற்றவருக்கு விட்டுக் கொடுக்க மாட்டார்கள். எல்லாமே தனக்கே வரவேண்டும் என்ற வெறி. வெவ்வேறு இடங்களிலும், வெவ்வேறு ஊர்களிலும் கிளைகளை திறப்பர். நம் நாட்டில் பகல் முழுவதும் வெளிநோயாளிகளை பார்த்துவிட்டு, இரவு முழுவதும் அறுவை சிகிச்சை செய்து, பேய் போல திரியும் பலர் இருக்கின்றனர்.

இன்னொரு வகையினர் பல ஊர்களுக்கும் சென்று அறுவை சிகிச்சை செய்து வருகின்றனர். அந்த நோயாளிகளை இவர்கள் திரும்பிக்கூட பார்ப்பதில்லை. வெளிநாடுகளில் எல்லாம் அவசரமில்லா அறுவை சிகிச்சைகளை இரவு நேரங்களில் செய்யக்கூடாது என்ற சட்டம் இருக்கிறது. இங்கு அப்படியொன்றும் கிடையாது. அப்படியே இருந்தாலும் நம்மவர்கள் கடைபிடிக்க மாட்டார்கள். ஒரு மருத்துவமனை ஒரு ஊரில் பிரபலமடைந்தால், மற்ற இடங்களுக்கும் அதன் பெயரை மட்டும் பயன்படுத்துகின்றனர். இதில், தரம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மருத்துவர்களும் அதே தகுதியுள்ளவர்களாக இருப்பதில்லை. இந்த முறை மற்ற தொழில்களுக்கு வேண்டுமானால் ஒத்துவரலாம். உயிர்காக்கும் மருத்துவத் தொழிலுக்கு உதவாது. இந்த தொழிலில் உள்ளவர்கள் தான் இப்படி இருக்கின்றனர் என்றால், நோயாளிகளும் குற்றமற்றவர்கள் அல்ல.

நோயாளியின் முதல் எண்ணம், நாம் செய்யும் செலவுக்கு ஏற்ற சிகிச்சை கிடைக்கவில்லை என்பது தான். ஒரு பக்கம் தொழில்நுட்பத்தால் அதிகரித்து வரும் மருத்துவச் செலவு, இன்னொரு பக்கம் என்ன விலை என்று கூட கேட்காமல் டாஸ்மாக்கில் சரக்கு வாங்கும் ஒருவர், மருத்துவமனைக்கு வரும்போது செலவே செய்யக்கூடாது என்ற எண்ணம். மருந்து, சாப்பாடு எல்லாம் இலவசமாக வரவேண்டும் சம்பாதிப்பதை தண்ணிக்கு செலவு செய்தால் போதும் என்ற மனநிலை வளர்ந்து வருகிறது. சமூக விரோதிகள் பலர் வெவ்வேறு போர்வைகளில், பாதிக்கப்பட்ட நோயாளிக்கு நியாயம் கேட்கிறேன் என்ற பெயரில் பணம் சம்பாதிக்க நினைக்கின்றனர். இவர்களுக்கு பயந்து தான் நிறைய பேர் தொழில் நடத்த வேண்டியிருக்கிறது. மற்றவர்களுக்கு பயந்து தான், இந்த தொழில் நடத்த வேண்டும் என்றால், அங்கு முழுமையான, நேர்மையான சிகிச்சை நடைபெறாது. சிகிச்சை நல்ல பலனை தரவில்லை என்றால், உடனே தவறான சிகிச்சை என்ற முத்திரையுடன் உரக்க கத்துகின்றனர்.

தினந்தோறும் இனம் புரியாத பல நோய்கள் தோன்றுகின்றன. இவை சிகிச்சை முறைக்கு கட்டுப்படுவதில்லை. மேலும் பல பழைய வியாதிகளும் புதுவிதமான போக்குடன் தென்படுகிறது. இதிலும் நாங்கள் கற்ற முறைகள் செல்லுபடியாவதில்லை. படித்தது ஒன்றாக இருக்கும். ஆனால், நாங்கள் நடைமுறையில் காண்பது முற்றிலும் வேறுவிதமாக இருக்கும். பிரச்னைகள் உருவாவதற்கு இதுவும் ஒரு காரணம்.மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்தவுடன் எடுத்துக்கொள்ளும் உறுதி மொழியில் ஒன்று, எந்த நோயும் கட்டாயம் குணமாகும் என்ற உத்தர வாதம் கொடுக்கக் கூடாது என்பது தான். ஆனால், எங்களில் பலர் இதை மறந்து விடுகின்றனர். எல்லா நோயாளியும் எங்களிடம் முதலில் கேட்பது உத்தரவாதம் தான். மருத்துவம் செய்வது, நோயை குணமாக்கும் ஒரு முயற்சியே தவிர, உத்தரவாதம் கிடையாது. நல்ல பலன் இல்லை என்றால், நோயாளிகள் மற்றும் உறவினர்களைவிட அதிக மனவேதனை அடைவது நாங்கள் தான்.

'பக்க விளைவுகளே இல்லாமல் மருத்துவம் பார்க்கிறேன்' என்று யாராவது சொன்னால் அது பச்சை பொய். மருந்து என்றாலே குறைவான அளவுள்ள விஷம் என்று தான் பொருள். எனவே, எல்லா வகையான மருந்துகளுக்கும், விளைவுகளும், பக்கவிளைவுகளும் உண்டு. பழுது பார்க்கும் தொழிலில் உள்ள மற்றவர்கள் எல்லாம் மனிதன் படைத்ததையே பழுது பார்க்கின்றனர். அதனால், அவர்களுக்கு எது எது எங்கெங்கே இருக்கிறது என்று தெளிவாக தெரியும். ஆனால், மருத்துவர்களாகிய நாங்கள், இறைவன் படைத்ததை பழுது பார்க்கிறோம். அவர் எதை எங்கே வைத்திருக்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம். இதில் தோல்விகள் வந்தால் துாற்றாதீர்கள். நாங்களும் உங்களைப் போல் மனிதர்கள் தான்.
இ-மெயில்:
ramasamy rajagopal drrams001@gmail.com

டாக்டர் ஆர்.ராமசாமி,
லேப்ராஸ்கோபிக்,அறுவை சிகிச்சை நிபுணர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X