ஈக்களும் புழுக்களும் குடியிருக்கும் சூழலில், கால்கள், கைகள், மர்ம உறுப்புகள் அழுகிய நிலையில், குடும்பத்தாரால் கைவிடப்பட்ட நிலையில், ஆதரவற்றுக் கிடப்போரை மீட்டு இல்லங்களில் சேர்க்கிறார், 'அகல் பவுண்டேஷன்' வெங்கடேஷ்.
வெங்கடேஷ், 42, தமிழக தலைமை செயலகத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையில் உதவியாளராக இருக்கிறார். 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், அரசு வேலைக்கு வருவதற்கு முன், கம்பி கட்டுதல், கட்டட வேலை, கூரியர் வினியோகம், மருத்துவ உதவியாளர், வார்டு பாய் என, பல்வேறு வேலைகள் பார்த்தும், சமூக சேவை காரணமாக, அந்த வேலைகளை உதறி விட்டவர்.இதுவரை, 500க்கும் மேற்பட்டோருக்கு மறுவாழ்வு அளித்திருக்கிறார். எத்தனையோ நண்பர்கள், இவரது சேவைக்கு பல்வேறு விதங்களில், உதவி செய்கின்றனர்.
பெண்கள் தொடர்பான சேவைகளுக்கு வசந்தி என்ற தன்னார்வலர் உதவி செய்கிறார்.பல ஆண்டுகளுக்கு முன், தன் தாயாரின் கண்களை தானமாக தந்தது, மனைவியுடன் இணைந்து உடல் தானம் செய்துள்ளது, பலமுறை ரத்த தானம் செய்தது என, பலருக்கு முன்னோடியாக உள்ளார், வெங்கடேஷ். கடந்த, 2012ம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த சமூக சேவகர் விருதை பெற்றுள்ளார். சென்னையின் அனைத்து காவல் நிலையங்களும், தொண்டு நிறுவனங்களும் இவருக்கு நற்சான்றிதழ்களையும், விருதுகளையும் அளித்துள்ளன. இவரை சந்தித்தோம். வெங்கடேஷ் தன் கையில், தலையணை உயரத்திற்கு 'பைண்ட்' செய்யப்பட்ட செய்தி, படங்கள், நற்சான்று பத்திரங்கள், விருதுகள் அடங்கிய குறிப்பேட்டை வைத்திருந்தார்.
அவற்றில் இருந்து, சில படக் காட்சிகள்...:
காட்சி 1:
பஞ்சடைத்த கண்கள், பதற வைக்கும் முதுமை, வழி தவறிய தவிப்பு... என, 80, 90 வயதினை கடந்த தம்பதி. சென்னையின் பிரசித்தி பெற்ற ஒரு கோவில் திருவிழா முடிந்த பின் தவித்துக் கொண்டிருக்கின்றனர். வெங்கடேஷிற்கு, போலீசார் மூலம் தகவல் பறக்கிறது. வெங்கடேஷ், அவர்களிடம் சென்று, உணவு கொடுத்து, ஆறுதல் கூறி, ஆட்டோ வரவழைத்து, கைப்பிடித்து அழைத்து செல்கிறார். ஆதரவற்றோர் இல்லங்களில் பேசி, அங்கு சேர்க்கிறார்.''பெற்ற மகன், சொத்துக்காக, எங்களை, திருவிழாவில் தவிக்க விட்டு சென்றுவிட்டான். நாங்கள் பெறாத நீ, எங்களுக்கு மறுவாழ்வு அளித்திருக்கிறாய். உன் குலம் வாழ்க!'' என, வாழ்த்துகின்றனர்.
காட்சி 2:
இருபதுக்கும் குறைவான வயது. எழில் சொட்டும் வாலிபம். திரும்பி பார்க்க வைக்கும் கண்கள் என, துறுதுறுப்பாக இருக்கிறாள் அந்த பெண். தன் மேனியில் இருந்து விலகிச் செல்லும் ஆடைகள் பற்றியோ, ஆடை விலகும் இடங்களில் பதியம் போடும் இளைஞர்களின் பார்வை பற்றியோ கவலைப்படாதவளாய், காற்றோடு பேசிக்கொண்டும், கனவோடு சிரித்துக்கொண்டும் திரிகிறாள். மகளிர் அமைப்புகள் மூலம், வெங்கடேஷிற்கு தகவல் பறக்கிறது. வசந்தியுடன் வரும் வெங்கடேஷ், ஆடை உடுத்தி விட்டு, ஆட்டோவில் ஏற்றி, இல்லத்திற்கு அனுப்புகிறார். காலம் கடக்கிறது; காதல் தோல்வியால், மனநிலை பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் மனம் தெளிகிறது. பழைய நினைவுகளை மறந்த நிலையில், இல்லத்தில், புதியவளாய் மாறி புதுவாழ்வு வாழ்கிறாள்.
காட்சி 3:
ஒரு குப்பை தொட்டி. பிசுக்கடைந்த உடையும் தலைமுடியுமாக, நாய்களுடன் சண்டையிட்டு உணவு உண்கிறான் ஒரு இளைஞன். அவனை அணுகி, உணவு கொடுத்தபோது தான் தெரிகிறது, அவன் நன்றாக படித்து, அரசு தேர்வெழுத வந்த போது, உடன் வந்த நண்பர்கள் கைவிட்டதால், மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று. அவனுக்கான சிகிச்சை அளித்து, வடமாநிலத்திற்கு அனுப்பி வைக்கிறார். கைகூப்பி நெகிழ்கிறது, அவனது குடும்பம். வெங்கடேஷுக்கு சில கனவுகள் இருக்கின்றன...தான், ஓய்வு பெற்ற பின், சாகும் நிலையில், ஆதரவற்ற நிலையில் இருக்கும் முதியோரை மீட்டு, தன் சொந்த செலவில் பராமரிக்க வேண்டும்; அதற்காக ஒரு இல்லத்தை, மருத்துவ வசதிகளுடன் துவக்க வேண்டும். தெரசாவை போல் இல்லையென்றாலும், தன்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என, தன் கனவை இவர் பகிர்ந்துகொள்ளும் போது, உறுதியுடன் வார்த்தைகள் வருகின்றன.
தொடர்புக்கு: 93801 85561
-நமது நிருபர்-