சேலம்: தள்ளாடும் வயதிலும், குறைந்த விலைக்கு வடை, பலகாரங்களை தயாரித்து விற்று, வாழ்க்கையை தலை நிமிர்ந்து எதிர்கொள்கின்றனர் சேலம் தம்பதியர்.
சேலம், லீபஜாரை சேர்ந்தவர் வரதராஜன்,75. இவரது மனைவி ஆதிலெட்சுமி,72. கடந்த, 1973 ல், மண வாழ்க்கையைத் துவக்கினர். குடும்பம் கடும் வறுமையில் வாடியது. வாழ்க்கை நடத்த ஏதாவது செய்யவேண்டிய கட்டாயம். அந்த நேரத்தில் லீபஜாருக்கு ஏராளமாக வியாபாரிகள், விவசாயிகள் வந்து சென்று கொண்டிருந்தனர். இவர்களை மையமாக வைத்து, பிழைப்பை நடத்த முடியுமா என, வரதராஜன் யோசித்தார். சுவையான பலகாரங்கள் தயாரிப்பதில் மனைவி வல்லவர். அதையே மூலதனமாக்கி வாழ்க்கையில் ஜெயிக்க முடியுமா என, மனைவியுடன் கலந்து ஆலோசித்தார்.
அவருக்கு, பூரண ஒத்துழைப்பு தருவதாக மனைவி கூறவே, தயங்காமல் வடை வியாபாரம் துவக்கினார்.
அப்போது, ஐந்து காசு விலையில், வடை உட்பட பலகாரங்களை தயாரித்து விற்கத் துவங்கினர். நிறைந்த சுவையில், தரமான பலகாரங்கள், லீபஜாருக்கு வந்தவர்களைத் சுண்டி இழுத்தது. கடையைத் தேடி வாடிக்கையாளர்கள் வருவது அதிகரித்தது.சாலையோரக் கடையாக துவங்கியது பெட்டிக் கடையாக உரு மாற்றம் அடைந்தது. அதன் அருகிலேயே பலகாரங்கள் தயாரிப்பும் நடந்தது.தினமும் காலை, 8 மணிக்கு துவங்கி, மாலை, 6 மணி வரை, வியாபாரம் இன்றும் தொடர்கிறது. வடைக்கடை வருவாயில், மூன்று குழந்தைகளை வளர்த்து, திருமணம் செய்து, தனித்தனி குடும்பங்களாக உருவாக்கி விட்டனர்.
இப்போதும் வியாபாரத்தை தொடர்கின்றனர். விண்ணை முட்டும் அளவு விலை வாசி உயர்ந்து விட்ட போதிலும், இவர்கள் தயாரிக்கும் உணவுப்பண்டங்கள் விலை, விண்ணை முட்டவில்லை. கட்டுக்குள் இருக்கிறது. உளுந்து வடை, பருப்பு வடை, மிளகாய் பஜ்ஜி, போண்டா என, அனைத்து சுவைமிகு பலகாரங்களும் தலா, ஒரு ரூபாய் விலையில் விற்கின்றனர். இவற்றை சுவைப்பதற்கு என, பிரத்யேக வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
புளி, தயிர், தக்காளி, லெமன் சாதம் தயாரித்து, காலத்தின் தேவைக்கு ஏற்ப அவற்றை தலா, 12 ரூபாய் விலையில் விற்கின்றனர். தாத்தா, பாட்டி கடைக்கு, வியாபாரிகள், விவசாயிகள், மூட்டைத்துாக்கும் தொழிலாளர்கள் என,பல தரப்பினரின் வரவேற்பைப் பெற்று உள்ளது.
வரதராஜன் கூறியதாவது:வியாபாரத்தில், லாப நோக்கம் என் குறிக்கோள் அல்ல. அதே நேரத்தில், எங்கள் வாழ்க்கையை நடத்த அது உதவ வேண்டும். குறைந்த விலையில், தரமான பலகாரங்களை தயாரித்து விற்கிறோம். எங்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்து பேரன், பேத்திகளை கண்டுவிட்டோம்.சொந்த காலில் வாழ வேண்டும்; யாரையும் எதிர்பார்த்து கையேந்தி நிற்க கூடாது என்பதால், தொழிலை தொடர்ந்து செய்து வருகிறோம்.மனதில் உறுதியும், உடலில் தெம்பும் இருந்தால், உழைக்க வயது தடையாக இருக்காது. எந்த வயதிலும், எதையும் சாதிக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார். வாழ விரும்பும் தலைமுறைக்கு, வழிகாட்டியாய் நிற்கின்றனர் இந்த தம்பதியர்.