பொருத்தம்... உடல் உறுப்பிலும் வேண்டும்! -என் பார்வை| Dinamalar

பொருத்தம்... உடல் உறுப்பிலும் வேண்டும்! -என் பார்வை

Added : செப் 17, 2015 | கருத்துகள் (1)
 பொருத்தம்... உடல் உறுப்பிலும் வேண்டும்! -என் பார்வைஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் உடல் உறுப்புகளில் ஏதாவது ஒன்று வேலை செய்யாத நிலையில் நோய்முற்றி உயிரிழக்கின்றனர்.
இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் ஒரு லட்சம் பேர் சிறுநீரகக் கோளாறுகளால் இறக்கின்றனர். சிறுநீரகம் வேலை செய்யாதவர்களின் உடலில் இருந்து யூரியா முதலான கழிவுப் பொருட்கள் டயாலிசிஸ் மூலம் நீக்கப்பட்டு தற்காலிகமாக சிகிச்சை கொடுக்கப்படுகிறது.
மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை மட்டுமே இந்நோயாளிகளுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும். 1900-ல் கார்ல் லாண்ட்ஸ்டீனா என்ற விஞ்ஞானி கண்டறிந்த ரத்த சிவப்பணு புரத வகைகளான ஏ, பி, ஓ முதலியவை குருதி தானத்துக்கு வழிகாட்டியது. குருதிதானம் மருத்துவ உலகில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்தது.
முதல் உறுப்பு மாற்று சிகிச்சை குருதிதானத்தை தொடர்ந்து உறுப்பு தானமும் இன்றைய மருத்துவத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப்போர் முடியும் தருவாயில் போர்க்களத்தில் உறுப்புகளை இழந்த வீரர்களுக்கு முதன் முதலில் உறுப்பு மாற்று சிகிச்சை பரிசோதனை முறையில் தொடங்கியது.
முதன் முதலில் தோல் பொருத்துதலை அவய மாற்று சிகிச்சையாக செய்துபார்த்து வெற்றி பெற்றனர். இந்தியாவில் முதல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை 1971-ம் ஆண்டு ------வேலுார் கிறிஸ்துவ மிஷன் மருத்துவமனையில் செய்யப்பட்டது.
திசுபொருத்தம் தேவை சமீபகாலமாக சிறுநீரகம் தவிர கண்ணின் கார்னியா, ரெட்டினா, இருதயம், இருதய வாழ்வுகள், கல்லீரல், எலும்பு மஞ்ஜை, நுரையீரல், கணையம், மண்ணீரல், குடலின் பகுதிகள் மற்றும் குரல்வளை முதலிய உறுப்புகளும் உறுப்பு தானத்தின் மூலம் நோயாளிகளுக்குப் பொருத்தப்படுகிறது. வெள்ளையணுக்களில் இருக்கும் 'எச்எல்ஏ' (ஹுயுமன் லுகோசைட் ஆண்டிஜென்கள்) எனப்படும் புரதங்களை பரிசோதனை செய்து உறுப்பு தானம் பெறுபவருக்கும், அதை கொடுப்பவருக்கும் பொருத்தம் (ஒற்றுமை) பார்க்கப்படுகிறது. இம்முறை திசு பொருத்தம் பார்த்தல் எனப்படும்.
'ஏச்எல்ஏ' ஒற்றுமை அதிகமாக இருக்கும் பட்சத்தில் மாற்றப்பட்ட உறுப்பு, நீண்ட நாட்கள் தன் பணியைச் செய்யும். பொருத்தம் குறைவாக இருந்தால் உறுப்புகள் வெகு விரைவில் செயலிழக்கும். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு 'சைக்ளோஸ்போரின்' என்ற நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுப்படுத்தும் மருந்து கொடுக்கப்படும். பொருத்தப்பட்ட உறுப்புகள் நீண்ட நாட்கள் செயல்படுமாறு பார்த்துக் கொள்ளப்படும்.
இலவசமாக பரிசோதனை மதுரை காமராஜ் பல்கலையின் நோய்த்தடுப்பாற்றல் துறை மூலம் 1980-ம் ஆண்டிலிருந்து, பல்வேறு மருத்துவமனைகளுக்கு 5000-க்கும் அதிகமான சிறுநீரக மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று உறுப்பு சிகிச்சைக்கான 'எச்எல்ஏ' திசு பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த உன்னத முயற்சிக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் இந்தாண்டு முதல், அரசு மருத்துவமனைகளுக்கும், மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கும் 'எச்எல்ஏ' பரிசோதனையை இலவசமாக செய்துதர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இப்போதுள்ள சூழலில், உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 2008-ல் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த மாணவன் ஹிதேந்திரனின்
உடலுறுப்புகள் தானத்துக்குப் பிறகு, விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. சாதாரணமாக உறுப்பு செயலிழந்த நோயாளிகளுக்கு அவரின் அம்மா, அப்பா, சகோதர, சகோதரிகள் மட்டுமே தானம் செய்ய
முடியும். இது இந்திய உடல்உறுப்பு தானச்சட்டம் 1994-ன் மூலம் நெறிபடுத்தப்படுகின்றது.
தமிழகம் முன்னிலை சமீபகாலமாக வாகன விபத்துகளில் சிக்கி மூளைச்சாவு அடைபவர்களிடம் இருந்தும் உறுப்புகள் தானமாக பெறப்படுகின்றன. தமிழகத்தில் மூளைச்சாவு உடலுறுப்பு மாற்றுத்திட்டம் 8 அரசு மருத்துவ
மனைகளிலும், 50-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் செயல்படுத்தப்படுகிறது.
தனியார் மருத்துவமனைகளே, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதில் முன்னணியில் உள்ளன. 2008-முதல் தற்போது வரை 700-க்கும் மேற்பட்டோர் மூளைச்சாவு அடைந்து உறுப்பு தானம் செய்துள்ளனர்.
தொழில்நுட்பவளர்ச்சி மற்றும் போக்குவரத்து வசதியால், பல்லாயிரம் மைல்கள் கடந்தும் உறுப்பு தானம் நடைபெறுகின்றது. இதுவரையில் தமிழகத்தில், மூளைச்சாவு அடைந்தவர்களின் 9 உறுப்புகள் வெளிமாநில நோயாளிகளுக்கும் பல்வேறு மாநிலங்களில் மூளைச்சாவு அடைந்தவர்களின் 13 உறுப்புகள், தமிழக நோயாளிகளுக்கும் பொருத்தப்பட்டுள்ளன.
கட்டணம் வாங்கக்கூடாது
மூளைச்சாவு நோயாளிகளிடம் இருந்து, உறுப்புகள் தானம் பெறும் போது அவரது சிகிச்சைக்கான கட்டணத்தை வசூலிக்கக்கூடாது. உறுப்புகள் தானம் பெறும் நோயாளிகளிடமிருந்து உறுப்புகளுக்காக எந்தவொரு கட்டணமும், மருத்துவமனைகள் வசூலிக்கக்கூடாது. இது சட்டபடி குற்றம். அதாவது உறுப்பு தானம் என்பது எந்தவித பணப் பறிமாற்றங்களும் இல்லாமல் நடைபெற வேண்டும் என்பதே இச்சட்டத்தின் மையக்கருத்து. ஆனாலும் இது முற்றிலுமாக கடைப்பிடிக்க முடியாத நிலையே இன்றளவும் உள்ளது.
அரசு மருத்துவமனைகளுக்கு தேவை உறுப்புதானம் மூலம் ஏழை, எளியோர் இன்னும் பெருமளவில் பயனடையவில்லை என்பது கசப்பான உண்மை. ஏழைகளுக்கும் இச்சிகிச்சை முறை சாத்தியப்பட வேண்டுமெனில், அரசு மருத்துவமனைகளிலும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான வசதிகளை அரசு அதிகளவில் செய்துதர வேண்டும். எல்லா அரசு மருத்துவமனைகளிலும், திசு பொருத்தம் பார்க்கும் 'எச்எல்ஏ' ஆய்வகங்களை நிறுவ வேண்டும். அப்போதுதான்
உறுப்புதானம் பெறுவதற்காக காத்திருக்கும் ஏழைகள், இத்திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும். தமிழகத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குறித்த செயல்பாடுகளை, டாக்டர் அமலோற்பவநாதன் தலைமையில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஒரு குழு நிர்வகித்து வருகிறது.
மனித மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை சட்டம் 1994-ன்படி, உறுப்புதானம் செய்ய உறுப்புதானம் தொடர்பான நேர்மறை சிந்தனை, மூளைச்சாவு அடைந்தவரின் உறவினர்களின் ஒப்புதல், மூளைச்சாவு அடைந்தமைக்கான டாக்டர்களின் அறிவியல்பூர்வ சான்றிதழ், உறுப்புகளை தேவையான மருத்துவமனைகளுக்கு உடனடியாக எடுத்துச் செல்லும் வசதி, மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய தேவையான வசதிகள், சிகிச்சைக்குப் பிறகான மாற்று உறுப்பு வேலை செய்யும் திறன் குறித்த தணிக்கை முதலியன கருத்தில் கொள்ளப்படவேண்டும்.
அண்மைக்காலங்களில், உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, தானம் செய்வோருக்கான பிரத்யேக உறுப்பு தான அட்டைகள் வழங்கப்படுகின்றன. எதிர்பாராமல் விபத்தில் சிக்குபவர்களின் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புதல் கொடுக்கும் 'உறுப்பு தான உறுதிமொழியை' ஓட்டுனர் உரிமத்துடன் இணைத்து வழங்கும் நடவடிக்கையை, 2009-ல் போக்குவரத்துத்துறை ஆணையர் மச்சேந்திரநாதன் அமலுக்கு கொண்டுவந்தார்.
உறுப்பு தானம் எனப்படும் இந்த உயரிய செயல், மேலும் சிறப்படைய வேண்டுமானால், பொதுமக்களிடம் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
-க. பாலகிருஷ்ணன், துறைத்தலைவர், நோய்த்தடுப்பாற்றல் துறை, மதுரை காமராஜ் பல்கலைகழகம்,
மதுரை - 21. 98421 14117.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X