திண்டுக்கல்: மாற்றுத் திறனாளிகளுக்கான 'ரிவர்ஸ் இ பைக்கை' திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லுாரி மாணவர்கள் கண்டுபிடித்தனர்.
மாற்றுத் திறனாளிகள் பெட்ரோலில் இயங்கும் 'பைக்கை' பயன்படுத்துகின்றனர். இதில் கூடுதலாக 2 சக்கரங்கள் இணைக்கப்படுவதால் கூடுதல் எரிபொருள் செலவாகிறது. ஒரு கி.மீ., ரூ. 2 செலவாகும்.
மேலும் மாற்றுத் திறனாளிகளால் தங்கள் பைக்கை 'ரிவர்சில்' இயக்க முடியாது. இதற்கு பிறர் உதவியை நாட வேண்டியுள்ளது. இதை தவிர்க்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 'இ பைக்' கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லுாரி ஆட்டோ மொபைல் பேராசிரியர் ராஜவேல் தலைமையில் மாணவர்கள் முகமது ஷகில், சப்தகிரி, நவீன்குமார், சரண்பாண்டியன், அஸ்வின்பாபு, நிஷாந்த் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர். இந்த 'பைக்கில்' சத்தம் வராது. சுற்றுச்சூழலை பாதிக்காது. ஒரு கி.மீ., க்கு 35 பைசா மட்டுமே செலவாகும். ஒருமுறை 'சார்ஜ்' செய்தால் 60 கி.மீ., செல்லும். மின்சாரமின்றி இடையில் நின்றாலும் 5 நிமிடங்கள் கழித்து இயங்கினால் கூடுதலாக 5 கி.மீ., வரை செல்லும். இந்த 'பைக்கிற்கு' தேசிய அளவில் முதல் பரிசு கிடைத்துள்ளது.
மாணவர்கள் கூறியதாவது: 'இ பைக்கை' ரிவர்ஸில் இயக்க முடியும். அலைபேசியை 'சார்ஜ்' செய்யும் வசதி உள்ளது. இந்த 'பைக்கை' ரூ.20 ஆயிரத்தில் தயாரிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் விரும்பினால் குறைந்த செலவில் தயாரித்து வழங்க தயாராக உள்ளோம், என்றனர். மாணவர்களை கல்லுாரி முதல்வர் பழனிச்சாமி பாராட்டினார்.