திண்டுக்கல்: தெருவோரங்களில் ஆதரவின்றி திரியும் மனநோயாளிகளுக்கு உணவு, உடை, மருத்துவ சிகிச்சை அளித்து, முடிவெட்டி பராமரிக்கும் இளைஞர் சேவை குழுவினர் திண்டுக்கல்லில் முகாமிட்டுள்ளனர்.
திருவண்ணாமலை தலையாம்பள்ளத்தை சேர்ந்தவர் பி.மணிமாறன்,30. இவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து, உலக மக்கள் சேவை மையத்தை கடந்த 2002ல் துவக்கினர். இந்த மையம் மூலம் தெருக்களில் ஆதரவற்று திரியும் மனநோயாளிகள், தொழுநோயாளிகள், ஆதரவற்றவர்களுக்கு உணவு, உடை, மருத்துவ உதவிகள் செய்கின்றனர். எண்ணெய் காணாமல் சடை முடியுடன் திரியும் சில மனநோயாளிகளுக்கு முடிவெட்டி, ஷேவிங் செய்தும் உதவுகின்றனர்.
முதல்வர் விருது:
இந்த மையத்தின் தலைவர் மணிமாறனின் சேவையை பாராட்டி கடந்த ஆக.15ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா, இளைஞர் விருது வழங்கினார். மணிமாறன் தலைமையிலான குழுவினர் நேற்று திண்டுக்கல் வந்துள்ளனர். இவர்கள் பலகுழுவாக பிரிந்து மாவட்டம் முழுவதும் ரோட்டோரம் தங்கி இருக்கும் ஆதரவற்றோருக்கு உணவு, உடை, மருத்துவ சிகிச்சை அளிக்கின்றனர்.
மணிமாறன் கூறியதாவது: இச்சேவை மையத்தை மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் துவக்கி வைத்தார். இதற்கு முதல்வரும் எனக்கு பரிசளித்துள்ளார். குறிப்பாக தொழுநோயாளிகளை தொடுவதற்கு கூட சிலர் அஞ்சுவர். நாங்கள் அவர்களின் கால்களில் உள்ள புழுக்களை அகற்றி, சிகிச்சை அளிக்கிறோம்.மனநோயாளிகளிடம் ஒரு மணிநேரம் பழகி சிகிச்சை அளிப்போம். மனநோயாளிகள் என்னை தாக்கியதில், முகத்தில் வடுக்கள் உள்ளது. இதற்காக நான் அஞ்சவில்லை. ரோட்டோரம் இறந்து கிடந்த 138 அனாதை பிணங்களை எனது சொந்த செலவில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்துள்ளேன். டில்லி,உ.பி., பீகார், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உட்பட 18 மாநிலங்களுக்கும் சென்று சேவை செய்துள்ளேன்.
1,300 மனநோயாளிகள், 50 ஆயிரம் தொழுநோயாளிகள் உட்பட ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு உதவிகள் செய்துள்ளேன். துணி ஏற்றுமதி செய்து, அந்த வருமானத்தில் கிடைக்கும் தொகையை சேவைக்கு பயன்படுத்துகிறேன். இதற்காக யாரிடமும் கையேந்தவில்லை, என்றார். இவரை 99656 56274ல் தொடர்பு கொள்ளலாம்.