குஜராத்தில், படேல் சமூகத்தை, இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு - ஓ.பி.சி.,யில் சேர்க்கக் கோரி நடந்து கொண்டிருக்கும் போராட்டம், பல விஷயங்களைப் பற்றி சிந்திக்க வைக்கிறது.
கடந்த,978ம் ஆண்டு மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது, 'சமூக நீதியைப் பெற வேண்டுமென்றால், இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்' என்று, வட மாநிலங்களைச் சேர்ந்த பார்லிமென்ட் உறுப்பினர்களும், அகில இந்திய அளவிலான பிற்படுத்தப்பட்டோர் நல அமைப்பினரும் கோரிக்கை வைத்தனர். இதன் காரணமாக மண்டல் தலைமையில் ஒரு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு, அது, 1980ல், தனது அறிக்கையை, மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. கல்வியிலும், சமூகத்திலும் பிற்படுத்தப்பட்டோர் நிலை அறிய, பல்வேறு சமூக, பொருளாதார அளவுகோல்களை வைத்து இக்குழு ஆய்வு செய்தது. இதற்கு முன் இடஒதுக்கீடு கொள்கையைப் பின்பற்றுவதற்கு, 1950ல் நடைமுறைக்கு வந்த அரசி யல் அமைப்பு சட்டத்தில், பல பிரிவுகள் இணைக்கப்பட்டன. சட்ட மேதை அம்பேத்கர், தாழ்த் தப்பட்டவர்களுக்காக தனி இடஒதுக் கீட்டை அளிக்கும் பிரிவினை அரசியலமைப்பு சட்டத்தில் ஏற்கச் செய்தார்.
தமிழகத்தில், 1921ல் இடஒதுக்கீடு ஆணை நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் பிறப்பிக்கப்பட்டது. 1927ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து இடஒதுக்கீடு தமிழகத்தில் காலத்திற்கு ஏற்ப, உரிய மாற்றங்களோடு பின்பற்றப்பட்டு வருகிறது. இது தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரது நலனை, சமுதாயத்தில் அவர்களது முன்னேற்றம் ஆகியவற்றை மனதில் கொண்டு செய்யப்பட்ட மாற்றங்கள்.
குஜராத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் படேல் சமூகம், தற்போது முற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ளது. இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தும், 22 வயது இளைஞர், ஹர்திக் படேல், கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு கோரி போராடுவதாக சொல்கிறார். இதற்காக இவர் பி.ஏ.ஏ.எஸ்., என்ற அமைப்பைத் துவங்கியிருக்கிறார். இடஒதுக்கீடு வேண்டும் என்பதற்கு ஹர்தீக் சொல்லும் காரணம், 'படேல் இன மக்களில் பலரும், வியாபாரங்களில் உழைப்பால் முன்னேறியிருக்கின்றனர். ஆனால், கல்வி வேலை வாய்ப்பில் நம் மக்கள் இன்னும் பின்தங்கியிருக்கின்றனர்.
அதாவது, 90 சதவீத மதிப்பெண் பெற்றாலும், படேல் மாணவனுக்கு மருத்துக் கல்லுாரியில், 'சீட்' கிடைக்காது. ஆனால், 40 சதவீதம் பெற்ற மற்ற இனத்தவருக்கு இட ஒதுக்கீட்டில் சீட் கிடைக்கிறது; இந்த நிலைமை மாற வேண்டும்' என்கிறார்.ஓ.பி.சி.,க்கு இருக்கும், 27 சதவீதத்தில் படேலை சேர்த்தால், ஏற்கனவே அங்கே உள்ளவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டர். ராஜஸ்தானில் ஜாட் இனத்துக்கு அப்படி ஒதுக்கீடு அளித்தபோது, அதை ஐகோர்ட் ரத்து செய்திருக்கிறது.
'பிறப்பால் ஒருவருக்கு அதிகமாக சலுகை கிடைப்பதையோ அல்லது தடுப்பதையோ ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படிச் செய்தால் மனித இனத்திற்கே செய்யும் அநீதி' என்று கூறியிருக்கிறார் மகாத்மா காந்தி.
நாகரிகம் காணப்படாத பழைய காலத்தில் இந்த இடஒதுக்கீடு பிரச்னை இல்லை. ஆனால், ஒரு குழு மனிதர்கள் வாழும் ஒரு பகுதிக்கு இன்னொரு பகுதியில் வாழும் மக்கள் அத்துமீறி செல்ல மாட்டர். இது அவர்கள் பின்பற்றிய நாகரிகம்.ஆனால், வரலாற்று பின்னணியுடைய அல்லது சம்பிரதாய காரணங்களால் நம் நாட்டில் சில வகுப்பினர்கள், சமுதாய பொருளாதார சிக்கல்களில் இருந்து விட முடியாமல் தவிக்கின்றனர். இதனால் பல விஷயங்களில் முன்னேறுவதற்கு சம வாய்ப்பு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்; கஷ்டப்படுகின்றனர். இந்த பிரச்னையை தீர்க்க பொருளாதாரம், கல்வியில் இவர்கள் முன்னேற அரசியல் சட்டம் இடஒதுக்கீட்டை ஏற்படுத்தி, அரசுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது. சிலருக்கு வறுமை காரணமாக கல்வியும், சமுதாயத்தில் அங்கீகாரமும் மறுக்கப்படுகிறது. கல்வி அறிவு கிடைக்காததால் வேலை வாய்ப்பும் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர்.
எல்லாருக்கும் சமுதாயத்தில் சம உரிமை கிடைக்காதபோது, அதன் காரணத்தை ஆராய்ச்சி செய்து, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் என்று பிரித்து அவர்களும் சமுதாயத்தில் தலை நிமிர்ந்து நிற்க, சம உரிமை பெற சதவீத அடிப்படையில் இடஒதுக்கீடு அரசால் ஏற்படுத்தப்பட்டது.மகாத்மா காந்தி, ஒரு சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு சலுகை ஒரு தலைமுறைக்குத் தான் கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இன்னொரு பக்கம், நன்றாக படிப்போர் உலக அளவில் போட்டி போடக்கூடிய திறமை உள்ளவர்கள். அவர்களுக்கு உரிய இடம் நம் நாட்டிலேயே இடஒதுக்கீடு காரணமாக, கிடைக்காமல் போய் விடக்கூடாது. ஆனால், இங்கு ஐ.ஐ.டி.,யில் தேர்வு பெறுபவர்களில் எத்தனை பேர் நம் நாட்டிலேயே தங்கி பணிபுரிய விரும்புகின்றனர். சில ஆண்டுகள் இருந்து விட்டு இங்கு திரும்பி வருபவர்கள் மறுபடியும் அமெரிக்காவிற்கோ அல்லது வேறு நாட்டிற்கோ சென்று விடுகின்றனர். இதைப் பற்றி நாம் சிந்தித்திருக்கிறோமா?
ஒருவரின் திறமைக்கும், அவர் செய்யும் வேலைக்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்தால் அது அவருக்கும் நல்லதல்ல. அவர் சார்ந்த நிறுவனத்துக்கும் நன்மை கிடைக்காது. இடஒதுக்கீடு காரணமாக, தான் நிர்வகிக்க முடியாது என்று தெரிந்தும், பதவிகளை பல பேர் ஏற்றுக் கொள்கின்றனர். இது சமுதாய முன்னேற்றத்திற்கும், தனி மனித அமைதிக்கும் உகந்ததல்ல.
மனித மனம் எப்போதும் சிறு முயற்சியில் பெரிய பலனை அனுபவிக்க ஆசைப்படும். நாம் ஏன் அதிக முயற்சி எடுத்துக் கொண்டு படிக்க வேண்டும்? நமக்கு தான் இடஒதுக்கீடு குறைவான அளவில் மார்க் வாங்கினாலும் அரசு வேலை கிடைத்துவிடுமே என்று நினைக்கும்போது, உபரி நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்று புரியாமல் விழிக்கிறான்.
இது, கொஞ்சம் கொஞ்சமாக சமுதாய சிக்கல்களையும், தனி மனித சிக்கல்களையும் விதைத்து விடுகிறது. இந்தப் போக்கை கட்டுப்படுத்த, இடஒதுக்கீட்டை அவ்வப்போது ஆராய்ந்து, எல்லாரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய இடஒதுக்கீடு கொள்கைகளை வகுக்க வேண்டும்.
*ஒரு பதவிக்கு சரியான திறமையுடைவர்களை நிர்வாகமோ, அரசோ தேர்வு செய்யும்போது, இடஒதுக்கீடு கொள்கை குறுக்கே வரக்கூடாது
*இடஒதுக்கீட்டில் ஒருவன் இருக்கிறான் என்பதற்காகவே, சலுகை காட்டக் கூடாது. சம்பந்தப்பட்டவருடைய பொருளாதார நிலைமையையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்
*அதேமாதிரி இடஒதுக்கீட்டில் இல்லாமல் இருந்தாலும், வறுமையில் இருப்பவனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்
*ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை இடஒதுக்கீடு சம்பந்தப்பட்ட விவரங்களை பரிசீலனை செய்து, ஏதாவது வில்லங்கம் இருந்தால் சரி செய்ய வேண்டும். இது ஒரு சாரார் அதிருப்தி அடைவதை நீக்கிவிடும்
* இடஒதுக்கீட்டில் தனி மனிதன் நலனும், நாட்டின் நலனும் முரண்படக் கூடாது.
இதைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் இடஒதுக்கீடு பிரச்னையை அணுக வேண்டும். அவசரம் காரணமாக ஏற்படும் உயிர், பொருள் இழப்புகளை இது குறைக்கும் அல்லது நிச்சயம் இல்லாமல் செய்துவிடும். அப்படி நடந்தால், அது ஒட்டுமொத்த நாட்டிற்கு நல்லது தானே.
lvvasudev@gmail.com
எல்.வி. வாசுதேவன்,
சமூக ஆர்வலர்